மஹிந்தவுக்கு முளைத்திருக்கும் சிக்கல்

Report Print Sathriyan in கட்டுரை

ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரிகிறது, கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ என்ற ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்திருந்தாலும், கோத்தா விசுவாசிகள், பசில் விசுவாசிகள், என்று மாத்திரமன்றி, ராஜ பக்ஷ குடும்ப அரசியலுக்கு எதிரானவர்களும் கூட அதனுள் அடங்கியிருக்கிறார்கள்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிரணி அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்ற விவகாரம் இப்போது முன்னையதை விடவும் சிக்கலானதாக மாறியிருக்கிறது.

மஹிந்த ராஜபக் ஷ தனது சகோதரர்களில் ஒருவரை போட்டியில் நிறுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

குறிப்பாக, இரண்டு பேருமே அமெரிக்க குடியுரிமையைக் கொண்டவர்களாக இருந்தாலும், பசில் ராஜபக் ஷ மற்றும் கோத்தாபய ராஜபக் ஷ ஆகிய இருவரில் ஒருவரை, போட்டியில் நிறுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்றே பேசப்பட்டது.

ஆனாலும், இவர்கள் இருவரையும் விட சமல் ராஜபக் ஷவே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்பது மஹிந்த ராஜபக் ஷவின் இடதுசாரித் தோழர்களின் நிலைப்பாடு.

ஆனாலும், அடுத்த வேட்பாளர் யார் என்பதை கூறாமல் மஹிந்த உயர் இரகசியத்தை பாதுகாத்து வந்துள்ளார்.

இதற்குள்ளாகவே, 19 ஆவது திருத்தச் சட்டம், இதற்கு முன்னர் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களுக்குப் பொருந்தாது என்ற ஒரு “ஓட்டை” இருக்கிறது என்ற மிகவும் பலவீனமான வழியொன்றையும் கூட்டு எதிரணி கண்டுபிடித்து வைத்திருக்கிறது.

அந்த வழியின் ஊடாக மஹிந்தவினால் செல்ல முடியும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

19 ஆவது திருத்தத்தில் இருப்பதாக கூறும் ஓட்டையைப் பயன்படுத்தி, மீண்டும் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யவில்லை என்று மஹிந்த ராஜபக் ஷ கூறியிருக்கிறார்.

அதேவேளை, இன்னொரு பக்கத்தில், “தி ஹிந்து” வுக்கு அண்மையில் அளித்திருந்த செவ்வியில், தமது சகோதரர் நிச்சயம் போட்டியாளராக இருப்பார் என்பதையும் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“நாமல் ராஜபக் ஷவினால் போட்டியிட முடியாது. அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை அடையவில்லை. எனவே அவரைக் கவனத்தில் கொள்ள முடியாது.

எனது சகோதரர் நிச்சயமாக போட்டியாளராக இருப்பார். ஆனால் கட்சி மற்றும் பங்காளிக் கட்சிகளே யார் என்பதைத் தீர்மானிப்பவர்களாக இருப்பர்.” இது தான் அவர் “தி ஹிந்து”வுக்கு அளித்திருந்த செவ்வியில் கூறியிருந்த விடயம்.

அவர் இதனைக் கூறியதுமே, கோத்தாபய ராஜபக் ஷவை அடுத்த ஜனாதிபதியாக்கத் துடிக்கும் தரப்பினரும், ஊடகங்களும், கோத்தாபய ராஜபக் ஷ தான் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்று கொட்டை எழுத்துகளில் செய்தி வெளியிட்டன.

இங்கு தான் மஹிந்தவுக்கு பிரச்சினையே வெடித்தது. மஹிந்த ராஜபக் ஷ இதனைக் கூறியதும், அதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்கள் இரண்டு பேர்.

ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம. இன்னொருவர், பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார. இருவருமே, மஹிந்த ராஜபக் ஷவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவரது நல்ல விசுவாசிகளும் கூட.

ஆனாலும், மஹிந்த ராஜபக் ஷவின் கருத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டு பேரினது எதிர்க் கருத்துக்களிலும் வேறுபட்ட நோக்கங்கள் இருந்தமையும் கவனிக்கத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்தவுடன் ஒன்றாகவே, வெளியே வந்தவர் குமார வெல்கம. அவரைப் பொறுத்தவரையில், மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாலும், அவருக்குப் பதிலாக, ராஜபக் ஷ குடும்பத்தில் இருந்து மற்றொருவர் வருவதை ஏற்கத் தயாரில்லை.

நிச்சயமாக, தனது சகோதரர் போட்டியாளராக இருப்பார் என்று மஹிந்த ராஜபக் ஷ கூறியது தான், குமார வெல்கமவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியது. அவர் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு எதிரான கருத்தைக் கொண்டவர்.

கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படக்கூடாது என்று ஏற்கனவே கருத்துக்களை வெளியிட்டு வந்தவர்.

2015இல் மஹிந்த ராஜபக் ஷ, தமது குடும்பத்தினரை முன்னிறுத்தியதால் தான் தோல்வி கண்டார், எனவே ராஜபக் ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதை ஏற்கமுடியாது என்று அவர் போர்க்கொடி உயர்த்தினார்.

அதேவேளை, வாசுதேவ நாணயக்காரவுக்கோ, ராஜபக் ஷவினரின் குடும்ப அரசியல் பிரச்சினையில்லை. அவரைப் பொறுத்தவரையில் கோத்தாபய ராஜபக் ஷவையோ, பசில் ராஜபக் ஷவையோ வேட்பாளராக நிறுத்தக்கூடாது.

சமல் ராஜபக் ஷவை நிறுத்த வேண்டும் என்பதே அவரது கருத்து. இவரது இந்தக் கருத்துடன் கூட்டு எதிரணியில் உள்ள திஸ்ஸ விதாரண போன்ற இடதுசாரித் தலைவர்களும் இணங்குகின்றனர்.

கோத்தாபய ராஜபக் ஷவை நிறுத்தினால் கூட்டு எதிரணிக்குள் பிளவு ஏற்படும், கட்சி உடையும் என்றெல்லாம் வாசுதேவ நாணயக்கார எச்சரித்தார்.

மஹிந்த ராஜபக் ஷ நாடு திரும்பிய போது, அவரது கருத்தினால் ஏற்பட்ட கொந்தளிப்பு அடங்கவில்லை.

அதனால் தான் அவர், கெபிற்றிகொல்லாவயில் செய்தியாளர்களிடம் பேசிய போது, கோத்தாபய ராஜபக் ஷவை வேட்பாளராக நிறுத்தப் போவதாக நான் கூறவேயில்லை. அப்படிக் கூறியதாக சொல்லப்படுவது முற்றிலும் பொய். இது சிலரது கற்பனை. என்று கூறியிருந்தார்.

மஹிந்த ராஜபக் ஷவின் இந்தக் கருத்து உண்மையானதே,

இந்தியாவில் இருந்தபோது, மஹிந்த ராஜபக் ஷ ‘தி ஹிந்து’ நாளிதழ், News X தொலைக்காட்சி, Strategic News International தொலைக்காட்சி மற்றும் தந்தி தொலைக்காட்சி ஆகியவற்றுக்குத் தான் செவ்விகளை அளித்திருந்தார்.

அதில், ‘தி ஹிந்து’ மற்றும் Strategic News International செவ்விகளில் தான், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பேசியிருந்தார்.

‘தி ஹிந்து’ செவ்வியில் தான், ‘நிச்சயமாக எனது சகோதரர் ஒரு போட்டியாளராக இருக்கிறார்’ என்று குறிப்பிட்டார். ஆனால் அதில் எந்த சகோதரர் என்பதை மஹிந்த கூறவில்லை.

அந்த சகோதரர் கோத்தாபய ராஜபக் ஷவாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை, அது பசில் ராஜபக் ஷவாகவோ, சமல் ராஜபக் ஷவாகவோ கூட இருக்கலாம். அந்த மர்மத்தை அவர் உடைக்கவில்லை. அது அவரது தந்திரமாகக் கூட இருக்கலாம்.

Strategic News International தொலைக்காட்சியில் மஹிந்தவைச் செவ்வி கண்ட நிதின் கோக்ஹலே, “அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காமல் போனால், நீங்கள் ஒரு வேட்பாளரை பெயரிட வேண்டியிருக்கும், அது யார் என்று கேட்டிருந்தார்.

அதற்கு மஹிந்த, நான் அந்த வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்தபோது, நிதின் கோக்ஹலே இன்னொரு கேள்வியைத் தொடுத்தார்.

அந்த வேட்பாளர் உங்களின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பாரா? என்று, மஹிந்தவிடம் கேட்க அவர், ‘அதற்கு அவசியமில்லை’ என்றே கூறினார்.

அதாவது அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், ராஜபக் ஷ குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறியிருந்தார்.

ஏற்கனவே, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை வேட்பாளராக மஹிந்த நிறுத்தப் போவதாக செய்திகள் வெளியானதும் நினைவிருக்கலாம்.

அம்பாறையில் நடந்த கூட்டம் ஒன்றில், தமது கட்சி விமலவீர திசநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் கூட வெற்றி பெறும் என்று பசில் ராஜபக் ஷ கூறியிருந்தார்.

இதைவிட, அண்மையில் தமது பெயரும் கூட, ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் இருக்கிறது என்று வாசுதேவ நாணயக்காரவும் கூட குறிப்பிட்டிருந்தார்.

தமது அணியில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்ற பலர் இருக்கிறார்கள் என்று, கூட்டு எதிரணியினர் நம்பவைக்க முயன்றாலும், ராஜபக் ஷவினரை விலக்கிய ஒரு வேட்பாளரைக் கண்டுபிடிப்பது அவர்களுக்கு இயலுமானதா என்பது சந்தேகம் தான்.

ஏனென்றால், மஹிந்த ராஜபக் ஷவை மையப்படுத்தியே இந்தக் கூட்டு எதிரணி உருவானது. அவர் கையைக் காட்டும் ஒருவரை தாம் வேட்பாளராக ஏற்றுக் கொள்வோம் என்றும் அவரது சகபாடிகள் கூறி வந்தனர்.

ஆனால் இப்போது, மஹிந்த கைகாட்டக்கூடிய ஒருவரை ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் அவர்கள் இல்லை என்பது வெளிப்பட்டிருக்கிறது.

மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்தவரையில், தனது மகன் நாமல் ராஜபக் ஷவை அதிகாரத்துக்கு கொண்டு வருவதே அவரது இலக்கு. இந்தியப் பயணத்தில் அவரையும் அழைத்துக் கொண்டு சென்று அங்குள்ள தலைவர்களிடம் அறிமுகப்படுத்தியதற்கு அதுவே காரணம்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அவருக்கு வயது போதாது. இந்தநிலையில் ராஜபக் ஷவினரில் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் இறக்குவதா- அல்லது வெளியில் இருந்து ஒருவரை இறக்குவதா, தனது மகனின் அரசியல் எதிர்காலத்துக்கு துணையாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டே அவர் முடிவை எடுப்பார் என்று தெரிகிறது.

ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரிகிறது, கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ என்ற ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்திருந்தாலும், கோத்தா விசுவாசிகள், பசில் விசுவாசிகள், என்று மாத்திரமன்றி, ராஜபக் ஷ குடும்ப அரசியலுக்கு எதிரானவர்களும் கூட அதனுள் அடங்கியிருக்கிறார்கள்.

இதுதான் மஹிந்த ராஜபக் ஷ எதிர்கொள்ளப்போகும் சிக்கல். அவரது பலவீனமும் இதுதான். இந்தப் பலவீனத்தை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஐ.தே.க.வோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ முற்பட்டால், மஹிந்தவுக்கு பெரும் நெருக்கடி ஏற் படும்.

கிட்டத்தட்ட அவர் அத்தகையதொரு நிலையை நோக்கித் தான் நகர்ந்திருக் கிறார்.

Latest Offers