ஐ.நா மனித உரிமை சபையின் 39 வது கூட்டத்தொடரில் தமிழர் இயக்கத்தினரின் செயற்பாடுகள்

Report Print Dias Dias in கட்டுரை

ஐ. நா மனிதவுரிமைகள் சபையின் 39வது மனித உரிமைகள் கூட்டத்தொடர் கடந்த 10.09.2018 அன்று ஆரம்பித்து 28.09.2018ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.

இக் கூட்டத்தொடரின் போது, தொடரும் தமிழின அழிப்பை மூடி மறைக்கவும், சிறீலங்கா அரசை அனைத்து விசாரணைப் பொறிமுறைகளிலும் இருந்து தப்ப வைக்கவும் இலங்கை அரசும், அதன் தமிழின அழிப்பிற்கு தன்நலன் சார் அடிப்படையில் முண்டுகொடுத்துச் செயற்படும் நாடுகளும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழீழம், தமிழ் நாடு உட்பட பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் இருந்து மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தமிழ் உரிமைச் செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், சமுக ஆர்வலர்கள், பேராசிரியர்கள், இத்துறையில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் என 35 பேரிற்கும் மேற்பட்ட குழுவொன்று இக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு பல காத்திரமான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

மனித உரிமைகள் சபைக்குள் நிலவும் நிகழ்காலச் சூழல் புதிதாக பதவியேற்ற சபையின் ஆணையாளர் தனது கன்னியுரையில் சிறீலங்காவில் நம்பிக்கை தரக்கூடிய முன்னேற்றங்கள் இடம்பெறுவதாக புகழாரம் சூட்டியுள்ளதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான அலுவலகம் தனது நிர்வாகத் திறனுடன் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ.நா மனித உரிமைகள் சபையின் கொத்துக்குண்டுகளிற்கு எதிரான உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள நாடுகளிற்கான 2019ம் வருடத்திற்கான தலைமைத்துவத்தை, அதே கொத்துக்குண்டுகளைப் பிரயோகித்து தமிழினப்படுகொலை புரிந்த சிறீலங்கா அரசு தலைமையேற்றுள்ளது.

எனினும், கடந்த மார்ச் மாதமே இலங்கை இவ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் அவசர அவசரமாக எதிர்வரும் ஆண்டிற்கான இத்தலைமைத்துவம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன?

இச் செயற்பாடுகள் யாவற்றிற்கும் கிரீடம் வைக்கும் செயலாக சுவிஸின் நீதியமைச்சர் Simorita Samaruka இலங்கை சென்று, சிறீலங்கா அரசின், சர்வதேசத்தையும் குறிப்பாக தமிழர்களையும் ஏமாற்றும் வித்தைகளான நிலைமாறு கால நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகம் மற்றும் அரசியல் யாப்பு மாற்றம் போன்றவற்றை வரவேற்று வாழ்த்து புகழாரம் சூட்டியுள்ளதுடன், அகதிகள் சார்ந்த கூட்டாண்மை எனும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டுள்ளார்.

இதன் பிரகாரம் பல தமிழர்கள் சுவிஸிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கொத்துக்குண்டுகளிற்கு எதிரான அவையின் தலைமைத்துவத்தை சிறீலங்காவிற்கு வழங்கியதை சுவிஸ் மற்றும், பிரித்தானியா நாடுகள் வாழ்த்தி வரவேற்றுள்ளது.

இச் சூழ்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைகின்றது. இத் தறுவாயில் அமெரிக்காவை தொடர்ந்து இலங்கை சார்ந்த பிரேரணையை பிரித்தானியா தலைமை ஏற்கவுள்ளது. தமிழர் தரப்பை பொறுத்த வரைக்கும் இவ் 39வது கூட்டத்தொடரானது சிறீலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய கூட்டத்தொடராகும்.

எனினும் தமிழரின் குரலை ஒடுக்கும் வகையில் தமிழீழத்திலிருந்து ஐ.நா மனிதவுரிமைகள் சபைக்கு வரவிருந்த பாதிக்கப்பட்ட உறவுகள், தமிழ் உரிமை ஆவலர்களின் விசா அனுமதியை சுவிஸ் அரசாங்கம் நயவஞ்சகமாக மறுத்துள்ளதுடன் சர்வதேச அரங்கில் சிறீலங்கா இன அழிப்பு அரசை காப்பாற்றுவதற்கு தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.

சமகாலத்தில் ஐ. நா மனிதவுரிமைகள் சபையில் தமிழர் இயக்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள எம்மைப் போன்ற போராடும் இனங்கள், மனித உரிமைகள் அமைப்புக்கள் போன்றவற்றுடனான கூட்டிணைவை இல்லாது ஒழிக்க சிறீலங்கா மற்றும் மேற்கத்தேய நாடுகளின் முகவர்கள் தீவீரமாக செயற்பட்டு வருகின்றனர்.

இதன் விளைவாக ஐ.நா மனிதவுரிமைகள் சபையில் எமது பணிகள் பல வழிகளிலும் முடக்கப்பட்டு வருகிறது.

பல சதிவலைப் பின்னல்களுக்கு மத்தியிலும் தமிழீழ விடுதலைக்கான பணிகள் பல சவால்களை எதிர் நோக்கும் நிலையில் இவற்றை முறியடித்து முன்னகர்த்திச் செல்லும் கடப்பாடு தமிழர் இயக்கத்தின் முன்னால் பரந்து கிடக்கிறது.

39 வது கூட்டத்தொடரில் தமிழர் இயக்கத்தின் செயற்பாடுகள்

பக்கவறை நிகழ்வுகள்

இம் 39வது கூட்டத்தொடரில் ஈழத் தமிழர் பிரச்சனை சார்ந்து 11 பக்கவறை நிகழ்வுகள் நடாத்தப்பட்டிருந்தன. இதில் எம்மோடு இணைந்து செயற்படும் நாடுகளுடன்( Kurdistan,Western Sahara, Yemen, Southern Camaroon) கத்தலோனியா மற்றும் தென் அமெரிக்க நாடுகள் சிலவும் பங்கெடுத்திருந்தன.

அத்துடன் ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் காணாமலாக்கப்பட்டோரிற்கான விசேட குழுவின் செயலாளரும் கலந்துகொண்டு தம்முடன் இணைந்து வினைத்திறனாக செயற்படுவதற்கான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்திருந்தார்.

மேலும், ஐ.நா மனித உரிமைகள் சபையின் தலைமை அலுவலகம் மற்றும் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்தும் அதிகாரிகள் எமது பக்கவறை நிகழ்வுகளிற்கு வருகை தந்து அவற்றை பதிவெடுத்து சென்றனர்.

இவ்வாறான பதிவுகள், எழுத்து மூல அறிக்கைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே ஆணையாளர் மற்றும் துறைசார் நிபுணர்களின் அறிக்கைகள் வெளியிடப்படும்.

வாய்மூல அறிக்கைகள்

பிரதான அவையில் வாய்மூல அறிக்கைகள் கீழ் குறிப்பிடப்பட்ட தலைப்புக்களில் சமர்ப்பிப்பட்டுள்ளது.

Item 2

Annual Report of United Nations High Commissioner for Human Rights and

reports of the Office of the High Commissioner and the Secretary - General

5 Oral Statements

Item 3

Promotion and Protection of all Human rights, Civil, Political, Economic,

Social and Cultural Rights, including the Right to Development

6 Oral Statements

Item 4

Human rights situations that require the Council’s attention

13 Oral Statements

Item 5

Human rights Bodies and Mechanisms

11 Oral Statements

Item 6

Universal Periodic Review

4 Oral Statements

Item 8

Follow-up and implementation of the Vienna Declaration and Program of

Action

7 Oral Statements

Item 9

Durban Declaration and Program of Action – Racial Discrimination

12 Oral Statements

Item 10

Technical assistance and Capacity Building

11 Oral Statements

சந்திப்புக்கள்

தமிழர் இயக்கத்தினால் ஐ.நா சபையின் உப நிறுவனங்கள்( UNICEF, UNHCR, UNHRC), ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் விசேட குழுக்கள் மற்றும் பிரதிநிதிகள் (வலிந்து காணாமலாக்கப்பட்டோர், காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், சித்திரவதை) அனைத்துலக மனிதவுரிமை நிறுவனங்களுடனான சந்திப்பின் போது தமிழின அழிப்பு சார்ந்தும் தாயகத்தில் நிகழ்காலத்தில் இடம்பெறும் பிரச்சினைகள் சார்ந்தும் (வலிந்து காணாமலாக்கப்பட்டோர் போராட்டம், OMP, அரசியல் கைதிகள், சிங்கள குடியேற்றம், மகாவலி அபிவிருத்தி திட்டம்) எடுத்துரைக்கப்பட்டதுடன் அவை சார்ந்த அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சிறீலங்கா அரசிற்கு வழங்கப்பட்ட இரண்டு வருடகால அவகாசம் தொடர்பாக எமது அதிருப்தியை தெரிவித்ததுடன் இவ்விரண்டு வருட காலத்தில் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

மேலும், இவ்விடயம் தொடர்பாக ஐ.நா சபை மற்றும் அங்கத்துவ நாடுகளால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்திருந்தோம். அவ்வேளையில் அவர்களால் இவ் விடயம் சார்ந்து நாம் செயற்படவேண்டிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் சபையில் ஈழத்தமிழர் பிரச்சினையானது பிரிவு 2 கீழ் ஓர் சிறிய விடயமாகவே தற்போது பேசப்படுகின்றது. இந்நிலையானது சர்வதேச நாடுகளின் ஈழத்தமிழர் பிரச்சினை சார்ந்த அக்கறையின்மையையே கோடிட்டுக் காட்டுகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தமிழர் இயக்கத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் பக்கவறை நிகழ்வுகள், வாய்மூல அறிக்கைகள், எழுத்துமூல அறிக்கைகள், இராஜதந்திர சந்திப்புக்கள் மூலமாகவே சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் பிரச்சினை தற்போதும் ஓர் பேச்சு பொருளாக நிலைநிறுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

எமது நிலைப்பாடு

சிறீலங்கா அரசின் ஆதரவுடன் அமெரிக்காவினால் ஏற்படுத்தப்பட்ட தீர்மானமானது தமிழின அழிப்பு சார்ந்தோ அல்லது குறைந்தபட்சம் இடம்பெற்ற மனிதப் பேரழிவுகள் தமிழர்கள் மீதானது தான் என்றோ திட்டவட்டமாக குறிப்பிடவில்லை. தமிழர் என்றொரு சொற்பதம் கூட குறிப்பிடப்படாத நிலையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.

இத்தீர்மானமானது சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை மூடிமறைப்பதற்காக அதன் தமிழின அழிப்பிற்கு முண்டுகொடுக்கும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட ஓர் தீர்மானமாகவே இனவழிப்பிற்குள்ளாக்கப்பட்ட தமிழர்களால் நோக்கப்படுகின்றது.

இதன் காரணமாகவே ஆரம்பத்திலிருந்தே இத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பான தமது அதிருப்தியையும் ஈழத்தமிழர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

எனினும், தாயகத்தின் பல தமிழ் அரசியல் கட்சிகளும் மற்றும் பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இத் தீர்மானத்தை வரவேற்று ஆதரவளித்திருந்ததுடன் இனவழிப்பைச் சந்தித்த எம்மினத்திற்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தனர். அத்துடன் நிற்காது, இத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட எந்தவொரு விடயத்தையும் நடைமுறைப்படுத்த எத்தணிக்காத சிறீலங்கா அரசிற்கு மேலும் கால அவகாசம் கொடுத்து தமிழின அழிப்பிற்கான நீதியை காலதாமதமாக்கல் உத்தி மூலம் நீர்த்துப்போகவைப்பத்தற்கு தமது ஆதரவையும் தெரிவித்திருந்தனர்.

இத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களில் ஒன்றையேனும் நிறைவேற்றாத சிறீலங்கா அரசு, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் எவ்வித கோரிக்கைகளையும் உள்வாங்காது, காணாமல் போனோரிற்கான அலுவலகத்தை நிறுவியுள்ளது. இந்த அலுவலகமானது பாதிப்பிற்குள்ளான இம் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

இவ்வாறான ஓர் தீர்மானத்தை நிறைவேற்றிய அமெரிக்கா தற்போது ஐ.நா.மனித உரிமை சபையிலிருந்து வெளியேறியுள்ள இந் நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 2019 மேற்கத்தேய நாடுகளின் ஆதரவுடன் பிரித்தானியாவே இவ்விடயத்தை கையாளப்போகின்றது. எனினும் ஐ.நா.மனித உரிமை சபையின் பிரிவு 2ல் மட்டுமே (Item 2) பேசப்படும் சிறீலங்கா விடயமானது அதிலிருந்தும் அகற்றப்படும் நிலைமையே காணப்படுகின்றது.

இவ்வாறான எமக்கு எதிரான இத் தீர்மானத்தை எமக்கு ஆதரவான தீர்மானம் எனக் கூறிக்கொண்டிருந்ததுடன், சர்வதேச அரங்கில் சிறிலங்காவை காப்பாற்றுவதற்கான கால அவகாசத்தை வழங்கிய தமிழ் அரசியற் கட்சிகளும், சில புலம் பெயர் தமிழ் அமைப்புகளும், தற்பொழுது தாம் தமிழின அழிப்பு, சர்வதேச நீதி விசாரணை, சுயநிர்ணய உரிமை சார்ந்து ஐ.நா விலும், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடனும் பேசி வருவதாக முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள முனைகின்றனர்.

சமபொழுதில் இத் தரப்புக்களே, தமிழின அழிப்பு, சர்வதேச நீதி விசாரணை, சுயநிர்ணய உரிமை சார்ந்து செயற்படும் ஈழத்தமிழர்களை தீவிரவாதிகள் என சர்வதேச அரங்கில் சித்தரித்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழர் இயக்கமாகிய நாம் தமிழின அழிப்பிற்கு எதிராகவும் எமது இறைமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்காகவும் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். இதில் எம்முடன் இணைந்து செயற்பட விரும்புவோர் அனைவரையும் உரிமையுடன் அழைத்து நிற்கின்றோம்.
Latest Offers