ஈழத்தமிழர் விவகாரத்தை அலட்சியம் செய்வது இந்தியாவிற்கு ஆரோக்கியமானது அல்ல

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in கட்டுரை
439Shares

'தவறு செய்வது தவறு இல்லை, ஆனால் தொடர்ந்து தவறிற்கு மேல் தவறு செய்வது மிக தவறு'

ஐ.நா.மனித உரிமை சபையின் 39வது கூட்டத்தொடர் வேளையில், செப்டம்பர் 14ம் திகதி, நாடுகளிற்கு இடையிலான 'பதில் கூறும் உரிமையை' அவதானித்து கொண்டிருந்தேன். 'பதில் கூறும் உரிமை' என்பது ஒரு நாட்டையோ அல்லது ஓர் அரச சார்பற்ற அமைப்பையோ குறை கூறுவதாகவே அமையும்.

செப்டம்பர் 14ம் திகதி இடம்பெற்ற 'பதில் கூறும் உரிமை' என்பது பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான சொற்போராக காணப்பட்டதுடன், இந்தியாவிற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் பாகிஸ்தானிய பிரதிநிதியின் குற்றச்சாட்டுக்கள் அமைந்திருந்தது.

ஐ.நா.மனித உரிமை அரங்கில் எனது இரண்டு தசாப்தங்களிற்கு மேலான பங்களிப்பில், நாடுகளிற்கு இடையிலான நூற்றுக்கணக்கான சொற்போரை கண்டுள்ளேன்.

இந்தியாவின் பிரதிநிதி பாகிஸ்தான் மீதான தனது குற்றச்சாட்டை கூறும் வேளையில், 'பாகிஸ்தான் கூறும் சுயநிர்ணய உரிமை என்பது, எல்லையை கடந்த பயங்கரவாதம் என்பதுடன் பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் இராணுவ, நிதி மற்றும் உதவிகளுடன் இந்தியாவிற்குள் ஊடுருவப்படுகின்றனர்' என கூறினார்.

இதனை தொடர்ந்து உரையாற்றிய பாகிஸ்தான் பிரதிநிதி, “இந்தியா கூறும் எல்லை கடந்த பயங்கரவாதம் என்பது முழு பொய் எனவும், தென் ஆசியாவை பொறுத்த வரையில் இந்தியாவே என்றும் பயங்கரவாதத்தை தனது சிறிய அயல் நாடுகளிற்கு வியாபித்து இருந்தது எனவும், இது சிலவேளைகளில் இந்தியா ராஜதந்திரிகளின் ஞாபகத்திலிருந்து மறைந்திருக்கலாம்” என கூறியுள்ளார்.

அத்துடன் இந்தியாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஒன்று கடற்படையை உருவாக்கியது எனவும், இவை இறுதியில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக் காரணமாக அமைந்ததாகவும், இன்றும் இந்தியா தனது பயங்கரவாதத்திற்கான ஆதரவை, தனது அயல் நாடுகளில் மேற்கொண்டுள்ளதாகவும்' கூறினார்.

பாகிஸ்தான் பிரதிநிதி, நாட்டின் அமைப்பின் பெயர்களை கூறுவதை தவிர்த்து இருந்தாலும் இவை ஸ்ரீலங்காவையும் தமிழீழ விடுதலைபுலிகளையும் குறிப்பிட்டார் என்பது யாவருக்கும் தெட்டதெளிவாகியது.

ஸ்ரீலங்காவின் இன்றைய நிலைக்கு- ஈழத்தமிழரும், சிங்களவரும் இந்தியாவை குறைகூறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது.

1980ல் இல்லையேல் அதற்கு முன்னைய காலப்பகுதிகளில் இந்தியா தனது ஸ்ரீலங்கா மீதான வெளிநாட்டு கொள்கையை, உண்மை நீதி ஆகியவற்றின் அடிப்படையில் ஓர் அரைநடுநிலையாக காணப்பட்டது.

அவ்வேளையில், இந்தியா வடக்கு மற்றும் கிழக்குவாழ் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையில் அக்கறை காட்டுவதாக சிங்கள பௌத்தவாதிகள் குறைகூறினார்கள்.

துரதிஸ்டவசமாக, இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்தின் பின்னர், ராஜீவ் காந்தி பிரதமரானதை தொடர்ந்து, இந்தியாவின் ஸ்ரீலங்கா மீதான வெளிநாட்டு கொள்கை தலைகீழாக மாறியுள்ளது.

உண்மையை கூறுவதனால், இந்தியா பிரதமர், கொள்கை வகுப்பாளர், விசேடமாக கேராளாவை சார்ந்தவர் சிலரது பலவீனம் காரணமாக, சிங்கள பௌத்த அரசியல்வாதிகள் இந்தியாவின் முக்கிய புள்ளிகளை தமது அதிகார மையத்திற்குள் கையாண்டு, தமக்கு தேவையானவற்றை சாதித்து வருகின்றனர்.

ஒருவரது பலவீனத்தை பாவித்து தமது வெற்றியை அடைவதில் சிங்கள பௌத்தவாதிகளை தவிர வேறு யாரும் இவ்வுலகில் இருக்க முடியாது. மாற்றமடைந்த இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கை என்பது, இந்தியாவிற்கோ அல்லது ஈழத்தமிழர்களிற்கு நன்மை பயக்கும் விடயமாக காணப்படவில்லை.

இலங்கை-இந்திய ஒப்பந்தம்

இவ்கொள்கையின் அடிப்படையில் 1987ம் ஆண்டு ஜுலை 29ம் திகதி இலங்கை-இந்திய ஒப்பந்தமாகியது. இவ் ஒப்பந்தத்தின் பெறுபேறு என்பது மிகவும் மோசமான மனிதஉரிமை மீறல்களுடன், கோடிக்கணக்கான சொத்துக்களையும் வடக்கு மற்றும் கிழக்குவாழ் மக்கள் இழக்க நேரிட்டது.

முதலாவதாக, இலங்கை-இந்தியா ஒப்பந்தம் என்பது தமிழீழ மக்களது அரசியல் உரிமை போராட்டத்தின் அடிப்படை நோக்கத்தை அடக்கியதாக காணப்படவில்லை. ஆனால், இந்திய பிரதமரின் நெருக்குதல் காரணமாகவும், சில வாக்குறுதிகள் காரணமாகவும் தமிழீழமக்கள் இவ்ஒப்பந்தத்தை ஏற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இரண்டாவதாக, இவ்ஒப்பந்தம் கொழும்பில் கைச்சாத்திடுவதற்கு தயாரான வேளையில், கொழும்பு உட்பட தெற்கு முழுவதும் எரிந்து கொண்டிருந்தது.

மூன்றாவதாக, சிங்கள பௌத்தவாதிகளும் தெற்கின் அரசியல் கட்சிகள் யாவும் இவ் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தனர்.

நான்காவதாக, கொழும்பில் இவ் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட தினமான 1987 ஜுலை மாதம் 30ம் திகதி, இந்தியா பிரதமர் ராஜீவ்காந்தியின் அணிவகுப்பு மரியாதை பார்வையிட்டு சென்ற வேளையில், சிங்கள கடல்சிப்பாய் ஒருவர் இதனது துப்பாக்கியினால் இந்திய பிரதமரை கொலைசெய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இச்சம்பவத்தை மிகவும் விரைவாக காந்தி குடும்பமும் இந்திய மக்களும் மறந்து செயற்படுவது மிகவும் வியப்பிற்குரிய விடயம். இந்தியா பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்ய முயற்சித்த கடல்சிப்பாயை, அப்போதைய பிரதமர் ரணசிங்க பிறேமதாசா உட்பட பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் 'கதாநாயகனாக' வாழ்த்தியிருந்தனர்.

இச்சிப்பாய்க்கு 6 வருடகால சிறைதண்டனை தீர்ப்பிடப்பட்டது. ஆனால் அப்போதைய பிரதமர் ரணசிங்க பிறேமதாசா 1989ம் ஆண்டு ஸ்ரீலங்காவின் ஜனதிபதியாக கடமையேற்றவுடன், இச்சிப்பாய்க்கு ஜனாதிபதி மன்னிப்பு கொடுத்து, இரண்டரை வருட சிறைதண்டனையை மட்டுமே சிப்பாய் அனுபவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றும் இச்சிப்பாய், சிங்கள பௌத்த மக்களிடையே ஒர் 'கதாநாயகனாக' விளங்குகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவதாக, சமாதான படை என கூறி வடக்கு மற்றும் கிழக்கில் நிலைக்கொண்டிருந்த, இந்தியா படைக்கும் தமிழீழ விடுதலைபுலிகளிற்கும் இடையில் யுத்தம் ஆரம்பமாகியது.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் உட்பட நானும் கொலை, கொள்ளை, கைது, சித்திரவதை, பாலியல்வன்முறை என மிகவும் கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டடிருந்தனர். இவையாவும், இலங்கை-இந்தியா ஒப்பந்தந்தத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு வாழ்மக்கள் கொடுத்த விலையாகும்.

தமிழீழ மக்களின் இவ்வளவு அர்ப்பணிப்புகளின் பின்பும், பலதசாப்பதங்களாகியும் இன்றும் இவ் இந்திய-இலங்கை ஒப்பந்தம் நடைமுறைபடுத்தப்படாமை மிகவும் வெட்க கேடான விடயம்.

நாளுக்கு நாள், நாளாந்தம் இவ்ஒப்பந்தத்தின் சாரங்கள் வலுவிழந்து போகின்றன என்பதை இந்தியா உணருமா? பௌத்த சிங்களவாதிகள், ஆட்சியில் இருக்கும் இந்திய அரசை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள் என்பதை இன்னும் இந்தியா உணரவில்லையா? டெல்லியில் உள்ள முடிவெடுப்பாளர்களின் அணுகுமுறையில் மாற்றம் வரும் வரை, அதிஉயர்விலையை கொடுத்துள்ள இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்பது, ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்களது குப்பை தொட்டியில் தான் காணப்படும்.

ஈழத்தமிழர் கொடுத்த விலை

அப்படியானால், இவ் இந்திய- இலங்கை ஒப்பந்தந்தத்திற்காக ஈழத்தமிழர்கள் கொடுத்த மாபெரும் விலையும், அத்துடன் இந்தியா பிரதமரினால் இவ்ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் என்னவாயிற்று?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைகுற்றச்சாட்டுக் காரணமாக, தமிழீழ விடுதலைபுலிகள் மீது காந்திகுடும்பத்தினர் மிகவும் ஆத்திரம் கொண்டு, தமிமீழ விடுதலைபுலிகளை அழிக்க வேண்டும் என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்.

இதன் காரணமாக, தமிழீழ விடுதலைபுலிகளிற்கு எதிராக நடந்த 2008ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை நடைபெற்ற போரில், இந்திய இராணுவத்தின் சிறந்த பிரிவினர், ஸ்ரீலங்கா இராணுவத்துடன் இணைந்து போரிட்டு விடுதலைபுலிகளை அழித்தனர் என்பதே உண்மை.

உண்மையை பேசுவதனால், ராஜீவ்காந்தியின் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக இந்தியாவில் குற்றம் சாட்டப்பட்ட பல தனிநபர்கள், இன்று வரை விசாரணைக்கு உள்ளாக்கப்படாது சுதந்திரமாக நடமாடுவது மிக வியப்பிற்குரியது.

சிங்கள பௌத்த அரசியல்வாதிகளிடம், விசேடமாக ஸ்ரீலங்காவின் முன்னைய இன்றைய ஜனதிபதிகளிடம் நான் கேட்க விரும்பும் முக்கிய விடயம் என்னவெனில், 2008ம், 2009ம் ஆண்டுகளில் இந்தியா இராணுவம் ஸ்ரீலங்காவில் நின்று தமிழீழ விடுதலை புலிகளிற்கு எதிராக போராடிய வேளையில்,

நீங்கள் கூறும் 'ஸ்ரீலங்காவின் இறையாமை ஒருமைப்பாடு' என்பவை எங்குசென்றனர்? உண்மை என்னவெனில், ஸ்ரீலங்காவின் ராஜதந்திரிகள், இந்தியாவின் ராஜதந்திரிகளிற்கு மேலாக, பலமடங்கு கெட்டித்தனம் படைத்தவர்கள்.

2008ம், 2009ம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைபுலிகளிற்கு எதிரான போரில் வெற்றிக்கண்டவர்கள் இந்தியா இராணுவத்தினர்.

இப்படியாக நிலைமைகள் காணப்பட்டாலும், ஸ்ரீலங்காவின் முன்னைய ஜனதிபதி, இராணுவதளபதி, பாதுகாப்புச்செயலாளர் தாமே யுத்தத்தில் வெற்றி பெற்றதாக எந்தவித வெட்கமும் அற்று கபடநாடகம் ஆடுவது மிகவும் வேடிக்கையானது.

இவ் பொய்யான நாடகங்கள் யாவும், தெற்கில் விடயங்கள் விளங்காது வாழும் அப்பாவி மக்களிற்கு திறமையாக காணப்படலாம், நிச்சயம் போரின் நிகழ்வுகளை நிமிடத்திற்கு நிமிடம் அவதானித்து கொணடிருந்தவர்களுக்கு அல்லவா?

வன்னிப்போர் மிகவும் அகோரமாக நடந்தவேளையில், ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள், தமிழீழ விடுதலைபுலிகள் அழிக்கப்பட்டதும், தாம் ஓர் நல்ல அரசியல் தீர்வை தமிழீழமக்களிற்கு முன்வைக்கவுள்ளதாக சர்வதேசத்திற்கு, இந்தியா உட்பட பல நாடுகளிற்கு கூறிவந்தனர்.

ஆனால், இன்று 9 வருடங்களாகியும் அங்கு எதுவுமே நடைபெறவில்லை. ஆனால், இவற்றிற்கு எதிர்மாறாக சிங்கள குடியேற்றம், பௌத்த விகாரைகள் யாவும் வடக்கு மற்றும் கிழக்கில் இரவோடு இரவாக இடம்பெறும் இவ்வேளையில், அரசாங்கமும் அவர்களது கையாட்களும், 'ஸ்ரீலங்காவில் இன முரண்பாடு என்று ஒன்றே இல்லை' என பரப்புரைகளை மேற்கொள்கின்றனர்.

வருடங்கள் கடத்தப்பட்டன

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முற்றுமுழுதாக சிங்களமயம் மற்றும் பௌத்தமயம் ஆக்கப்பட்ட பின்னர், தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சரிசமனாக வாழும் பொழுது, எதற்காக தமிழ்மக்களிற்கு என ஒர் பிரத்தியேக அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதை சிங்கள பௌத்தவாதிகள் கேட்கும் காலம் நெருங்கி வருகிறது.

சுருக்கமாக கூறுவதானால், இந்தியா-இலங்கை ஒப்பந்தம் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் தமிழ் அரசியல்வாதிகளினால் சமஸ்டிதீர்வு வருகிறது, அரசியல்தீர்வு வருகிறது என வருடங்கள் கடத்தப்பட்டதன் பலன் இவையாகதான் முடியுமா?

சிங்கள பௌத்த அரசுகளினால் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இறுதியுத்தத்தின் போது, நடைபெற்ற இனஅழிப்பின் பின்னணியில், நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்தியா இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை இன்று வரை இந்தியா அறியவில்லையா? இவ்குற்றச்சாட்டு நாளுக்கு நாள், சிங்கள பௌத்த அரசியல் வாதிகளினால், விசேடமாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் தலைவர்களினால் கூறப்படுவதை ஒரு பொழுதும் இந்தியா மறுத்ததில்லையே!

ஸ்ரீலங்கா மீதான வெளிநாட்டு கொள்கையை முன்பு இந்தியா, உண்மை நீதி ஆகியவற்றின் அடிப்படையில் ஓர் அரைநடுநிலையாகக் காணப்பட்டது.

பின்னர் அவர்களது கொள்கை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த அரசுகளிற்கு ஆதரவு கொடுக்க ஆரம்பமாகியது.

இக்காலப்பகுதியில் ஏற்பட்ட தமிழீழ மக்களின் இனஅழிப்பு, இந்தியா சமாதானப்படையினால் மேற்கொள்ளப்பட்ட மோசமான மனிதஉரிமை மீறல்களுக்காக என்றோ ஒருநாள் இந்தியாவிடம் நியாயம் கேட்கும் காலம் வருவதை யாராலும் தடுக்க முடியாது.

ஆனால், இவற்றை நிச்சயம் ஈழத்தமிழர்கள் செய்ய போவதில்லை. இவற்றை செய்வதற்கு மிக ஆவலாக காத்து இருப்பவர்கள் சிங்கள பௌத்தவாதிகள் மற்றும் சீன,பாகிஸ்தான்.

இவையாவற்றையும் மனதில் கொண்டு, இந்தியா தமிழீழ மக்களிற்கு கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து தவறாது செயற்றிட்டத்தில் இறங்க வேண்டும்.

இந்தியா கொள்கை வகுப்பாளர், தமது தவறான கொள்கையினால், ஈழத்தமிழ்மக்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மனதில் கொண்டு எதிர்காலத்தை மனச்சாட்சி நிறைந்த செயற்றிட்டங்களுடன் செயற்பட வேண்டும்.

சிங்கள பௌத்தவாதிகளை பொறுத்தவரையில், இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட சில வரலாற்று தவறுகளை அவர்கள் மன்னிப்பதற்கு தயாராக இல்லை. இவை பற்றி பல கட்டுரைகள் கடந்த காலங்களில் எழுதியுள்ளேன்.

சில வரலாற்றுத் தவறுகள்

சிங்கள பௌத்தவாதிகளை பொறுத்த வரையில், புத்தர் பிறந்ததும், பௌத்த சமயம் உருவான இடமான இந்தியாவில், பௌத்த சமயத்தின் அந்தஸ்து, மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது அவர்களிற்கு திருப்தியாக காணப்படவில்லை.

அதேவேளை, தமிழீழத்திற்கான ஆயதபோராட்டத்தினை இந்தியாவே முன்னிலையில் நின்று நடத்தியது என்பது அவர்களது மனதுகளில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது. ஆகையால், சீனாவின் செல்வாக்கு இந்து சமூத்திர பிராந்தியத்தில் சீராக அமையும் வரை, சிங்கள பௌத்தவாதிகள் காலம் நேரம் பார்த்து இருக்கின்றனர் என்பதே உண்மை.

இவையாவற்றின் சாட்சியங்களாக ஸ்ரீலங்கா அரசினால் மிக அண்மையில் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளுடன் கைச்சாத்தான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் காணப்படுகின்றன.

இவை இந்தியாவிற்குள் உட்பிரவேசிக்கும் 'வாயில் வழி'யாக ஸ்ரீலங்காவே விளங்கவுள்ளது என்பதை தெளிவாக்கிறது.

வங்கள தேசத்தின் பிறப்பிற்கு வழிவகுத்த 1971ம்ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தின் போது, பாகிஸ்தான் போர் விமானங்கள் கொழும்பில் தங்கி எரிபொருளை நிரப்பி சென்றார்கள் என்ற சரித்திரத்தை இந்தியா கொள்கை வகுப்பாளர் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

இப்படியான சம்பவங்களிற்கு பின்னரும், சிங்கள பௌத்த தலைவர்கள் இந்தியாவிற்கு விசுவசமாக இருப்பார்கள் என இந்தியா நம்புவது முழு கேலிக்கூத்து.

மிக அண்மையில் ஐ.நா.மனிதஉரிமை சபைவேளையில், தமிழ்மக்கள் மீதான இன அழிப்பை நியாயப்படுத்துவதற்காக கொழும்பிலிருந்து ஜெனிவா வந்துள்ள ஒரு சிங்கள பௌத்த முன்னாள் இராணுவாய் சிப்பாயினால் முன்வைக்கப்பட்ட வினா, இவர்கள் இந்தியாவை பழிவாங்குவதற்கு தயாராகின்றனர் என்பதற்கு நல்ல உதாரணமாக அமைகிறது.

சர்வதேச பிரமுகர் ஜஸ்மீன்சுக்கா தமது அமைப்பினால் சேகரிக்கப்பட்ட சில சித்திரவதைகளின் ஆதாரங்கள் அறிக்கைகளை 39வது கூட்டத்தொடர் வேளையில் சமர்பித்த பொழுது- சிங்கள சிப்பாயின் கேள்வி என்னவெனில் - வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் பெண்கள் மீது இந்தியா சமாதானப்படையினர் மேற்கொண்ட பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் பற்றிய பட்டியல், ஜஸ்மீன்சுக்காவிடம் உள்ளதா என வினாவினார்.

இதனது அர்த்தங்களை இந்தியா புரிந்து கொள்ளுமா? இவையாவும், சிங்கள பௌத்தவாதிகள் என்றோ ஒரு நாள் இந்தியாவை குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவார்கள் என்பதற்கு நல்ல உதாரணமாக அமைகிறது.

மனவேதனைக்குரிய விடயம்

அடுத்து, 2006ம் ஆண்டு ஜுலை மாதம் சிங்கள பௌத்தவாதிகள் சிலர் - இணைந்திருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கான வழக்கு ஒன்றை தொடுத்து அதில் வெற்றியும் கண்டனர்.

இதில் மிக மனவேதனைக்குரிய விடயம் என்னவெனில், இவ்வழக்கை அன்று தொடுத்தவர்கள், தாங்கள் இந்தியாவின் வேண்டுகோளிற்கு இணங்கவே தொடுத்ததாக கூறி வருகின்றனர்.

காரணம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரிந்திருக்கும் வேளையில், தமிழீழ விடுதலைபுலிகளினால் தமிழீழ பிரகடனம் செய்ய முனைவது ஒர் தடை கல்லாக அமையும் என இந்தியா கூறியதாக கூறுகின்றனர்.

இந்தியா வடக்கு மற்றும் கிழக்கில் இன்று நடப்பவை பற்றிய நன்றாக அறிவார்கள். ஸ்ரீலங்கா அரசுகளை பொறுத்தவரையில், வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களது தாயக பூமி அல்ல என்பதை நிரூபிப்பதற்காக அங்கு மூலைமுடுக்குகள் யாவும் சிங்கள குடியேற்றம் பௌத்த சிலைகளை அசுரவேகத்தில் இடம்பெறுகின்றது.

ஸ்ரீலங்கா உண்மையில் பல்லின மக்கள் கொண்டு பல மதங்கள் இருமொழிகள் உள்ள நாடாக இருந்தால், 1948ம் ஆண்டு முதல் காதிர்காமத்திலிருந்து காங்கேசன்துறை வரை தீவைக்கப்பட்டு அழிக்கப்பட்டு கலைக்கப்பட்ட தமிழ்மக்களது இருப்புக்கள் கோவில்கள் பாடசாலைகளில் ஏதாவது ஒன்றையாவுதல், இன்று வரை ஸ்ரீலங்கா மீளநிர்ணயித்துள்ளதா? இவ் அலட்சியங்கள், சரித்திரங்கள் மீளப்படுவதற்கு நிச்சயம் வழிவகுக்கும்.

இந்தியா, தமிழீழ மக்களிற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது அலட்சியம் செய்வது, காலப்போக்கில் இந்து சமுத்திரத்தில் இவர்கள் ஓர் பேச்சுப்பொருளாக மட்டுமே காணப்படுவார்கள்.

சில நாட்களிற்கு முன் ஈழத்தமிழர் ஒருவரினால் வெளியிடப்பட்ட கேப்டன் வீட்டில் (“Dans la maison du Capitaine”) என்ற ஓர் பிரெஞ்சு திரைப்படத்தை பார்வையிட்டேன். இத்திரைபடத்தில் ஈழத்தமிழர்களிற்கு ஓர் செய்தி கூறப்படுவதாக புலப்படுகிறது. சந்தர்ப்பம் கிடைத்தால் பார்வையிடுங்கள்.