மலையக மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றதில் ஒலிக்க வைக்க ஒரு தீக்குச்சி போதும்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

சந்தா கட்டாத தொழிலாளி ! பந்தா காட்டாத அரசியல்வாதி! என்ற கோசத்துடன் மக்கள் புரட்சி என்ற பயணத்தை நோக்கி மலையக மக்களின் இலக்காக களுத்துறை மாவட்ட தமிழ் இளைஞர்களை கொண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் சமூக அமைப்பான “மக்கள் நீதி மன்றம்” தனது அங்குரார்ப்பண கூட்டத்தினை களுத்துறை இங்கிரியவில் கடந்த வாரம் நடத்தியுள்ளது.

மன்றத்தின் தலைவராக ஊடகவியலாளர் ஆர். சிவராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.செயலாளராக கே. உதயகுமார் பொருளாளராக செல்வராஜ் , உபசெயலாளராக டி .தேவநாதன், தேசிய அமைப்பாளர் எஸ்.விமலனேசன் உபதலைவர் ஏ .பி சிவபெருமாள் ஊடகசெயலாளராக மணி ஸ்ரீகாந்த் ஆகியோரும் நிறைவேற்றுக் குழுவில் 10 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மலையக வாலிபர்கள் கொழும்பில்...

கொழும்பு நகரில் வர்த்தகம் மற்றும் வியாபார நிலையங்களில் 90 வீதமான பணியாளர்கள் மலையக வாலிபர்கள் மற்றும் யுவதிகளே உள்ளனர். காரணம் நம்பிக்கை, நாணயம், ஒழுக்கம், கடின உழைப்பு. அது சிங்கள வர்த்தகமாகட்டும் அல்லது முஸ்லிம் வர்த்தகமாகட்டும் அங்கு முக்கிய பணிகளில் இருப்பவர்கள் மலையக மக்கள்.

மலையக மக்களைப் பொறுத்த மட்டில் இந்த நாட்டில் ஒரு இனகக்லவரத்தை மதக்கலவரத்தை தூண்டியதோ துணை போனோதோ வரலாறு இல்லை. அந்தளவு சகல இன மக்களுடன் சகஜமாக வாழ்ந்து வரும் மக்கள் .

இந்த நாட்டின் முக்கிய பொருளாதாரம் மற்றும் வருமானம் என்பது மலையக மக்களின் வியர்வை மற்றும் கடின உழைப்பு மூலமாகவே. அன்று தொட்டு இன்று வரை உள்ளது . மலையக மக்களின் உழைப்பில் தான் இந்த நாட்டின் பொருளாதாரம் வருமானம் தங்கியுள்ளது.

ஆனால் அன்று தொட்டு இன்று வரை சிங்கள அரசு அந்த மக்களுக்கான ஒரு கௌரவத்தை இன்னும் கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அமரர் தொண்டமான் அவர்கள் இ.தொ.கா மூலமாக சில உரிமைகள் பெற்றுக் கொடுத்தாலும் வடகிழக்கு தமிழர்கள் போன்று இந்த நாட்டின் முஸ்லிகள் போன்று ஒரு சமநிலை கொண்ட மக்களாக மலையக மக்கள் இன்னும் இல்லை. அதற்குவறுமையும் ஒரு பிரதான காரணம். அந்த வறுமைக்கு முழுக் காரணம் அந்த மக்களுக்கு உழைக்கும் மக்களுக்கு அன்று தொட்டு இன்று வரை உழைப்புக்கான தகுந்த ஊதியம் இன்னும் கொடுக்கப்படவில்லை.

மலையக மக்கள்இன்னும் அடிமை போன்றுதான் தோட்டத் துரைமார்களால் நடத்தப்பட்டு வருகின்றார்கள். இந்த அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டுமானால் மலையக மக்கள் எழுச்சி பெற வேண்டும். விழிப்படைய வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் மலையக மக்கள் இந்த தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலை விட்டு இந்த நாட்டில் வடகிழக்கு தமிழர்கள் போன்று முஸ்லிகள் போன்று ஒரு சமநிலை கொண்ட மக்களாக மலையக மக்கள் மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.

லயன் வீடுகள் ஒழிக்கப்பட வேண்டும் அரசினால் வழங்கபட்டுள்ள வீடுகள் அந்த மக்களுக்கு சொந்தமாக்கப்பட வேண்டும் அதற்காக மலையக மக்கள் கல்வி மற்றும் வர்த்தகத்தை கையில் எடுக்கவேண்டும். அதற்கு உறுதுணையாக அரசியல் பக்க பலமாக அமைய வேண்டும். அரசியலில் மலையக மக்கள் ஜொலிக்க வேண்டும் கோலோச்ச வேண்டும்.

மலையக மக்கள் ஒரு ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்களாக இன்னும் உள்ள நிலையில்தான் எடுப்பார் கைப்பிள்ளைகளாக அரசியலில்பந்தாடப்பட்டு வருகின்றார்கள். இங்கிரியவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள "மக்கள் நீதி மன்றம்" முழு மலையகத்திற்கும் பரவ வேண்டும்.

தமிழ் வாக்குகள்...

களுத்துறை மாவட்டத்தில் 35 ஆயிரம் வாக்குகள் உள்ளன. சுமார் 35 வாக்குகள் மூலமாக ஒரு எம்.பியை அடைய முடியும். ஒரு எம்.பி போதும் முற்று முழுதான மலையக மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றதில் ஒலிக்க வைக்கலாம். ஒரு தீக்குச்சி போதும் மலையக மக்கள் அரசியல் பங்காளியாக மாறலாம்.

அங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுசேர்ந்தால் பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களிக்காமல் 2 எம்பிக்கள் பெறும் நிலை உள்ளது. நாம் சொந்தக் காலில் நிற்கும் நிலைக்கு வார வேண்டும்.

அதற்கான முதல் படிதான் இந்த மக்கள் நீதி மன்றம். இந்த மன்றத்தை களுத்துறை மாவட்ட தமிழ் மக்கள் வளர்த்து மலையகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டிய தேவை சுமந்து நிற்கின்றது .

சந்திரிக்கா அம்மையார் ஆட்சியில்...

கடந்த சந்திரிகா அம்மையார் ஆட்சியில் காலம் சென்ற அஷ்ரப் மற்றும் அமரர் தொண்டமான் ஆகியோர்கள் ஆதரவளிக்க முன் வந்த போதும் 112 எம்.பிக்களே சேர்ந்தார்கள். ஆட்சியமைக்க 1எம்பி தேவைப்பட்ட அமரர் பீ .சந்திரசேகரன் அவர்களின் ஆதரவு பெறப்பட்டு அவர்களுக்கு பிரதி அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனாலும் சந்திரசேகரன் முழு அமைச்சு கேட்டாலும் கொடுத்திருப்பார்கள் அவர் கேட்கவில்லை தனக்கு பிரதி அமைச்சு போதும் என்று இருந்து விட்டார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. சிங்கள மக்களின் வாக்குகள் என்றுமில்லாதவாறு எதிர்வரும் பொது தேர்தலில் 3 பெரும் கட்சிகளுக்கும் பிரிகின்றது.

இப்படிப்பட்ட நிலையில் சகல சிறுபான்மை கட்சி எம்.பிகளுக்கும் சிங்கள கட்சிகள் ஆட்சியமைக்க வலைவீசும் நிலை வரலாம்.

மலையக மக்கள் முன்னணி தலைவர் அமரர் சந்திரசேகரனின் ஒரு எம்.பி ஆட்சியமைக்க அமைந்தது போன்று மக்கள் நீதி மன்றம் கட்சி அமையலாம். அப்படியான இலக்கை நோக்கி களுத்துறை மாவட்ட தமிழ் மக்கள் ஒன்று சேர வேண்டும். அணி திரள வேண்டும்.

மலையக மக்களை நோக்கி யார் மணி கட்டுவது என்ற நிலை இருந்த போதுதான் ஊடகவியலாளர் சிவராஜா பூனைக்கு மணிகட்டியுள்ளார் ..

மலையகத்தில் கோலோச்சிய ஈரோஸ் அமைப்பு எதிர்வரும் பொது தேர்தலை நோக்கி மூதூரில் இருந்து தமிழ் மக்களிடத்தில் இருந்து மீள் எழுச்சி பெற்றுவருகின்றது.

வடகிழக்கில் தமிழ் கூட்டமைப்பை உடைக்க பிரிக்க பல பக்கத்தில் இருந்தும் அம்புகள் வீசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் சிங்களத்தால் ஏப்பமிடும் நிலை தோன்றும்.

அந்த நிலை மாற வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளை சிங்களம் ஏப்பமிடும் நிலையை தடுக்க வேண்டும் . அதனால் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று சேரும் நிலைக்கு வர வேண்டும்.

Latest Offers

loading...