சம்பந்தனின் கருத்து ஒப்புதல் வாக்குமூலமா?

Report Print Habil in கட்டுரை

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீது எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரை இரு வேறுபட்ட விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்டம், சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றை பெரிதும் புகழ்ந்துரைத்த இரா.சம்பந்தன் 1977ம் ஆண்டில் அமைதி வழியில் போராட்டத்தை நடத்தியிருந்தால் சுயாட்சி கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியில் போராடியிருந்தால் சுயாட்சியை வென்றிருக்கலாம் என்பது அவரது நம்பிக்கையாக வெளிப்பட்டிருக்கிறது. அதுகூட அவருக்கு இப்போது தான் பேச வந்திருக்கிறது.

ஏனென்றால் 1977ல் அவரும் சேர்ந்தே ஆயுதப் போராட்டத்துக்கு துணையாக நின்றவர். ஆயுதப் போராட்டத்தைத் தூண்டுவதில் அவர் அங்கம் வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணி கணிசமான பங்கை வகித்திருந்தது.

ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட ஒரு சூழலில் அவரும் வயது முதிர்ச்சியடைந்துள்ள கட்டத்தில் தான் காந்தியின் வழி மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அஹிம்சை வழியில் போராடியிருந்தால் சுயாட்சி கிடைத்திருக்கும் என்ற அவரது நம்பிக்கை முற்றிலும் கற்பனையானது என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏனென்றால் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை விரும்பி ஏற்றுக்கொண்டவர்களல்ல என்பதற்கு வரலாறே சான்று. காலத்துக்குக் காலம் தமிழர்கள் மீது வன்முறை திணிக்கப்பட்டது. அதனையும் எதிர்கொண்டு தமிழர்கள் அஹிம்சை வழியில் தான் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள்.

தந்தை செல்வாவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டங்கள், ஒத்துழையாமை இயக்கங்களை அவரது வழியில் வந்த இரா.சம்பந்தன் அவ்வளவு இலகுவாக மறந்திருக்க முடியாது.

அஹிம்சை வழியில் போராட்டங்களை நடத்தியதால் தான் தந்தை செல்வா ஈழத்துக் காந்தி என்று அழைக்கப்பட்டவர். அப்படிப்பட்ட தந்தை செல்வா மரணமடைவதற்கு முன்னர் தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தான் கூறியிருந்தார்.

ஏனென்றால் அவர் தனது போராட்டத்தில் வெற்றியைப் பெற முடியவில்லை. அவை எல்லாம் பயனற்றுப் போன நிலையில் தான் தந்தை செல்வா கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

தமிழர்களுக்கு இம்மியளவும் உரிமைகளை விட்டுக் கொடுப்பதில்லை என்பதில் சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் உறுதியாக இருந்தனர். மூன்று தசாப்தங்களாக நீடித்த அஹிம்சைப் போராட்டத்தின் பின்னரும் எதுவும் கிடைக்காத நிலையில் தான் தனிநாடு, தமிழீழம், ஆயுதப் போராட்டம் என்று மாற்று வழியைத் தேடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர்.

தமிழ்த் தலைமைகள் தமக்கு வேறு வழியில்லை என்ற நிலையில் தான் ஆயுதமேந்த தமிழ் இளைஞர்களைத் தூண்டி விட்டனர். ஆயுதமேந்திய இளைஞர்களுக்கு ஆதரவு அளித்தனர். அதற்குப் பின்னர் ஆயுதப் போராட்டம் பல்வேறு பரிமாணங்களைத் தொட்டதும் உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் அது தொடர்ந்ததும் வரலாறு.

தற்கால உலக ஒழுங்கே ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்கு முக்கிய காரணியாயிற்று. அந்தத் தோல்வியே இரா.சம்பந்தன் போன்ற தமிழ்த் தலைவர்கள் இன்றும் அரசியலின் உச்சியில் நின்று கொண்டிருப்பதற்கும் காரணம் என்பதை மறுக்க முடியாது.

தந்தை செல்வா அஹிம்சைப் போராட்டத்தை உச்சிக்குக் கொண்டு சென்ற போதும் கூட இந்தியாவைத் தவிர வேறெந்த நாடும் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் இன்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும் ஐநாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச முன்வருகிறது என்றால் அதற்குக் காரணம் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தான்.

ஆயுதப் போராட்டம் தான் தமிழர்களை உலகத்தில் அடையாளப்படுத்தியது. இலங்கை என்ற நாடு எங்கே இருக்கிறது என்று அறியாமல் உலகின் மூலை முடுக்குகளில் இருந்தவர்களுக்குக் கூட அதனை அறிய வைத்தது ஆயுதப் போராட்டம் தான்.

ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களுக்கு சுயாட்சியையோ தீர்வு ஒன்றையோ தராமல் போயிருக்கலாம். ஆனால் ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது அது தான்.

சர்வதேச கவனிப்புக்குட்பட்டவர்களாக தமிழர்களை இன்று வரை வைத்திருப்பதும் அதுதான். இதனை சம்பந்தன் குறைத்து மதிப்பிட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

அஹிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் சுயாட்சியைப் பெற்றிருக்கலாம் என்ற அவரது கருத்து மறைமுகமாக ஆயுதப் போராட்டத்தை தவறானது என்ற கண்ணோட்டத்திலேயே அணுகுகிறது.

அஹிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் சுயாட்சி கிடைத்திருக்கும் என்ற அவரது கருத்து சிங்களத் தலைமைகள் அதனை வழங்கும் மனோநிலையில் இருந்தார்களா என்ற கேள்வியையும் எழுப்பும் வகையில் இருக்கிறது.

சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்கத் தயாராக இருந்ததில்லை. அது தமதும் தமது குடும்பத்தினதும் தமது கட்சியினதும் தமது இனத்தினதும் நலனுக்கு ஆபத்தான ஒன்றாகவே பார்த்தார்கள். இன்று வரை அப்படித்தான் பார்க்கிறார்கள்.

13வது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்களைக் கூட தர மறுக்கும் சிங்களத் தலைமைகளா தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தந்திருக்கப் போகிறார்கள்?

சுயாட்சியை வழங்கும் மனோநிலைக்கு சிங்களத் தலைமை எப்போது தயாராக இருந்தது என்பதையும் இரா.சம்பந்தன் வெளிப்படுத்துவது முக்கியம்.

இரா.சம்பந்தன் குறிப்பிட்ட 1977 காலப்பகுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தான் ஆட்சியில் இருந்தார். அவரே தான் தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை ஏவியவர். அவரே தான் தமிழர்களுடன் போர் என்றால் போர் என்று சவால் விட்டவர்.

சிங்கள அரசியல் பரப்பில் குள்ள நரி என்று அறியப்பட்ட அவரா அமைதி வழிப் போராட்டத்துக்கு மதிப்பளித்து சுயாட்சியை வழங்கியிருப்பார்?

அதைவிட இரா.சம்பந்தன் குறிப்பிட்ட 1977 காலப்பகுதியில் எதிர்க்கட்சியாக இருந்தது தமிழர் விடுதலைக் கூட்டணி தான். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அந்தக் காலகட்டத்தில் ஐதேவுக்கு அடுத்ததாக அதிக ஆசனங்களைக் கொண்டிருந்தது தமிழர் விடுதலைக் கூட்டணி தான்.

அந்த தகைமை மாத்திரமே அஹிம்சைப் போராட்டம் மூலம் சுயாட்சியைப் பெற்றுத் தந்திருக்கும் என்று நம்புவது கடினமானது.

இரா.சம்பந்தன் வேண்டுமானால் சிங்களத் தலைமைகளை தவறாக எடை போட்டிருக்கலாம். அவர்களின் வாக்குறுதிகளிலும் குணவியல்புகளிலும் நம்பிக்கை வைத்திருக்கலாம்.

ஆனால் காலம் காலமாக ஏமாற்றப்பட்ட தமிழ் மக்கள் அவ்வாறு நம்பும் நிலையில் இன்று வரை இல்லை என்பதே உண்மை.

1977ல் அஹிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் சுயாட்சி கிடைத்திருக்கும் என்பதற்கு அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இருந்த பாராளுமன்றப் பலத்தையும் ஒரு காரணியாக இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவி.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வைத்து சாதிக்க முடியும் என்றால் ஏன் இன்று அதே பதவியில் இருக்கும் இரா.சம்பந்தனால் அதனைச் சாதிக்க முடியாமல் இருக்கிறது என்ற கேள்வியும் வரும்.

1977ல் அஹிம்சை வழியில் தமிழ் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் சுயாட்சி கிடைத்திருக்குமாயின் அதனை முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் இரா.சம்பந்தன் எதனைச் செய்திருக்கிறார்?

கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அவரால் ஒரு அஹிம்சைப் போராட்டத்தை ஒருங்கிணைக்க முடிந்ததா? தலைமை தாங்க முடிந்ததா? முன்னெடுத்துச் செல்ல முடிந்ததா?

தேர்தல் காலத்தில் வாக்குகளுக்காக வீதியில் இறங்குவது தவிர அஹிம்சை வழியில் அரசுடன் உரிமைக்காக போராடுவதற்காக இரா.சம்பந்தன் எத்தனை முறை களமிறங்கியிருக்கிறார்?

வெறுமனே பாராளுமன்றத்துக்குள் இருந்து குரல் எழுப்புவது மாத்திரம் தான் அஹிம்சை வழிப் போராட்டம் என்றால் எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும் தமிழரின் இந்த இழிநிலை மாறப் போவதில்லை.

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகளாகி விட்டன. அதனை தோல்வியுற்ற வழிமுறையாகப் பிரகடனம் செய்து விட்ட தமிழ்த் தலைமைகள் அடுத்த கட்டமாக தமிழரின் உரிமைக்கான போராட்டத்துக்கான வழிமுறை என்ன என்பதை இன்று வரை கூறவேயில்லை. வழிகாட்டவேயில்லை.

இரா.சம்பந்தனிடம் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட போதும் அவர் அஹிம்சை வழியில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எத்தகைய முயற்சிகளை எடுத்துள்ளார் என்றால் எந்தப் பதிலும் வராது.

அவ்வாறாயின் ஆயுதப் போராட்டத்துக்குப் பிந்திய 10 ஆண்டுகளையும் வீணாகக் கழிக்கப்பட்டதாகவே வரலாறு அர்த்தப்படப் போகிறது என்பதையும் இரா.சம்பந்தன் மனதில் கொள்ள வேண்டும். அவ்வாறான ஒரு நிலை வந்தால் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவரும் அவர் தான்.

இப்போது 1977ல் தவறிழைத்து விட்டதாக தமக்கு முந்திய தலைவர்களை அடையாளப்படுத்தியதை போன்ற நிலை இரா.சம்பந்தனுக்கு ஏற்படும்.

அண்மையில் தமிழ்த் தலைமைகள் தவறிழைத்து விட்டதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒருமுறை கூறியிருந்தார். அது இரா.சம்பந்தனுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் அதனால் தான் அவர் தன்னைச் சந்திக்க விரும்பவில்லைப் போலும் என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

இரா.சம்பந்தனே 1977ல் தவறிழைத்து விட்டோம் என்று இப்போது கூறுகிறார் என்றால் தமிழ்த் தலைமைகள் தவறிழைத்து விட்டன என்ற விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டின் மீது அவர் கோபம் கொள்வது அர்த்தமற்றது.

Latest Offers