கருணாவின் கணக்கு சரியானது! மகிந்தவிடம் சரணடைந்தார் வியாழேந்திரன், அடுத்தது யார்..?

Report Print Murali Murali in கட்டுரை

கொழும்பு அரசியலில் நாளுக்கு நாள் வியப்பூட்டும் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களும் முடிவுகளும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், யாரும் எதிர்பாராத வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

அத்துடன், பிரதி அமைச்சர் பதவியினையும் பெற்றுக்கொண்டுள்ளார். இது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு அந்த பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமித்தார்.

ஜனாதிபதியின் இந்த செயல் முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. அத்துடன், இந்த விடயம் சர்வதேச அரசியலிலும் பெரும் பரபரப்பையும், முரண்பாட்டையும் ஏற்படுத்தியிருந்தது.

அரசியல் அமைப்புக்கு முரணான வகையில் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி பிரதமாராக நியமித்துள்ளார் என தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியினர், அலரி மாளிகையினை முற்றுகையிட்டுள்ளனர்.

எனினும், எதிர் தரப்பின் எந்தவொரு கருத்தையும் பொருட்படுத்தாது, மகிந்த - மைத்திரி தரப்பினர் தனது அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

அமைச்சரவை கலைக்கப்பட்டது, நாடாளுமன்றம் முடக்கப்பட்டது, அதேசமயம் புதிய அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டு பலருக்கு அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டன.

எனினும், சட்ட ரீதியான பிரதமர் நான் தான் என, ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்றை கூட்ட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட முக்கிய தரப்பினர்களும், சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மகிந்த மற்றும் ரணில் தரப்பு இருக்கின்றது. இதனால் கட்சி தாவல்கள் அதிகமாக இந்த காலப்பகுதியில் இடம்பெறுகின்றன.

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து முக்கிய உறுப்பினர்கள் பலர் மகிந்த தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், அவர்களுக்கு அமைச்சர், பிரதி அமைச்சர், இராஜாங்க அமைச்சர் என பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வாரம் முழுவதும், கொழும்பு அரசியலில் நாளுக்கு நாள் பல கோடி ரூபாய்களையும், அமைச்சு பதவிகளையும் கொடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை பேரம் பேசும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வியாழேந்திரன் இன்று கூட்டமைப்பில் இருந்து வெளியேறி மகிந்த ராஜபக்ச தரப்புக்கு ஆதரவு வழங்கியுள்ளார். அத்துடன், பிரதி அமைச்சர் பதவியினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மகிந்தவின் சகா கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று தனது டுவிட்டர் பதிவிலும் கூறியிருந்தார்

“நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்” என கருணா தனது டுவிட்டர் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

அவர் சொன்னது போல கூட்டமைப்பில் இருந்து இன்றைய தினம் வியாழேந்திரன் வெளியேறி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கருணா கூறியது போல் மேலும் இருவர் வெளியேறுவார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவை அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும். நடப்பவைகளை கொண்டு பார்த்தால், கருணா கூறிய கருத்து பலித்து விடும் என்றே அரசில் ஆய்வாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Latest Offers