அன்று ஜேவிபியின் முதுகில் குத்திய ராஜபக்ஸவிற்கு இன்று முதுகில் ஓங்கி குத்திய ஜேவிபி

Report Print M.Thirunavukkarasu in கட்டுரை

பிரதமர் பதவியில் அமர்ந்த மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஜேவிபி எனப்படும் ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை 14ஆம் திகதி முன்மொழிந்தார்.

அப்பிரேரணையை அதே கட்சியைச் சேர்ந்த விஜித ஹேரத் வழிமொழிந்தார். இதைத் தொடர்ந்து 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குக்களுடன் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களின் தொகை 225. இதில் ஜேவிபியினரின் தொகை 6 மட்டுமே. இந்த 6 உறுப்பினர்களைக் கொண்ட ஜேவிபி பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்ற முடிந்தமை அரிதான சம்பங்களில் ஒன்று.

இத்தீர்மானத்தை ஜேவிபியினர் முன்மொழிவதற்கு பெரிதாக ஜனநாயகத்தின் மீதான பற்று பாசம் என்பன காரணம் அல்ல.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்தவுடன் ஜேவிபியினருக்கு மகிந்த ராஜபக்ச செய்த நம்பிக்கை துரோகத்திற்கு பழிவாங்கும் ஒரு வாய்ப்பாக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஜேவிபியினர் முன்மொழிந்து நிறைவேற்றினர்.

அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் எண்ணம் அன்றைய ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான சந்திரிகா விஜயகுமாரதுங்க பண்டாரநாயக்கவிடம் இருக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மகிந்த ராஜபக்ச சந்திரிகாவிற்கு எதிரான அரசியலை முன்னெடுத்து தன்னை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டிய போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருந்தது.

இந்நிலையில் மகிந்த ராஜபக்சவிற்கு முதலில் கைகொடுக்கவல்ல சக்தியாக ஜேவிபியினர் காணப்பட்டனர். கட்சித் தலைவர் சந்திரிகாவின் விருப்பத்தையும் மீறி ஜேவிபியினரோடு ராஜபக்ச கூட்டுச்சேர்ந்து கொண்டார்.

இவ்வாறு ஜேவிபியினருடன் கூட்டுச் சேர்ந்ததும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயான போராடக்கூடியதற்கான பெரும் பலத்தை ராஜபக்ச பெற்றுக் கொண்டார்.

ஜேவிபியினரிடம் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடவல்ல பலமான இளைஞர் அணியிருந்தது. கூடவே அனைத்து சிங்களப் பல்கலைக்கழகங்களிலும் மாணவ அமைப்புக்களின் தலைமைத்துவம் ஜேவிபியின் கையில் இருந்தது.

இதன் வாயிலாக சிங்கள பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் ஜேவிபி பெரும் பலம் பெற்றிருந்தது.

ஜேவிபியின் இளைஞர் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவ அமைப்புக்கள், பாடசாலை மாணவ அமைப்புக்கள் என்பன ஒன்றிணைந்து நாடாளுமன்றத்திற்கு வெளியேயான போராட்டங்களை முன்னெடுக்கவல்ல பெரும் சக்தியாக விளங்கினர்.

இப்பின்னணியில் ஜேவிபியினருடன் ராஜபக்ச கூட்டுச் சேர்ந்ததன் பலத்தால் ராஜபக்சவிற்கான நேரடி ஆதரவு மட்டுமல்ல நாடுதழுவிய பிரச்சார பலமும் அதிகரித்தது.

இதனைக் கண்டு சந்திரிகா அச்சமடைய வேண்டியிருந்தது. இப்பின்னணியில் சந்திரிகாவின் அணியில் இருந்த மங்கள சமரவீரவும் ராஜபக்ச பக்கம் தாவவே ராஜபக்சவை எதிர்கொள்ள முடியாத நிலை சந்திரிகாவிற்கு ஏற்பட்டது.

இதன்வாயிலாக மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் சந்திரிகாவிற்கு ஏற்பட்டது.

இந்த வகையில் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக ஆக்குவதற்கான போராட்டத்தில் தீர்க்கமான பாத்திரத்தை ஜேவிபியினர் வகித்தனர்.

இதன் பின்பு தேர்தலை எதிர்கொண்ட ராஜபக்சவை வெல்ல வைப்பதற்கான நாடுதழுவிய பெரும் பிரச்சாரத்தில் ஜேவிபி ஈடுபட்டது. அதில் ஜேவிபியின் இளைஞர் அணிகளும், மாணவ அமைப்புக்களும் பெரும் பங்காற்றின.

ராஜபக்சவை ஒரு தேவ தூதர் போலவும், நவீன துட்ட கெமுனு போலவும் சிங்கள மக்கள் மத்தியில் காட்சிப்படுத்துவதில் ஜேவிபியினர் மும்மரமாக ஈடுபட்டனர்.

இதில் ஜேவிபியினருக்கென ஒரு கணக்குப் போடல் இருந்தது. அதாவது பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து அனைத்து அரச வளங்களையும் ஆதரவையும் பயன்படுத்தி தம்மை மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்களாக மாற்றுவதற்கான முயற்சியில் ஜேவிபியினர் ஈடுபட்டனர்.

குறிப்பாக புலிகளை அழித்தல் என்ற தீவிர யுத்த முழக்கத்தை சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுத்து அதன்வாயிலாக சிங்கள மக்கள் மத்தியில் அரச செலவில் தமக்கான செல்வாக்கை வளர்க்க முற்பட்டனர்.

ராஜபக்சவைப் பொறுத்தவரையில் ஜேவிபியினரின் பிரச்சாரம் அவருக்கு சிங்கள தீவிரவாதத்தை அதிகரித்து ஜனாதிபதி தேர்தலில் வாக்குக்களை குவிக்க உதவியது.

மேலும் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச புலிகளுடன் போராடுவதற்கான இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டியிருந்தது.

அக்காலக் கட்டத்தில் புலிகளின் தீவிரமான பெரும் தாக்குதல்களுக்கு அ​ஞ்சி படையில் இருந்த சிப்பாய்கள் படையைவிட்டு விலகி ஓடும் நிலை காணப்பட்டது.

இப்பின்னணியில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பது கடினமாக இருந்தது. ஆனால் ஜேவிபியினரிடம் காணப்பட்ட இளைஞர் அணிகளால் ஆட்சேர்க்கும் பணியை மேற்கொள்வது இலகுவாக இருந்தது.

இதுவிடயத்தில் ஜேவிபியினரிடம் இன்னொரு கணக்கு இருந்தது. புலி எதிர்ப்பு யுத்தத்தின் பேரால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அனுசரணையுடன் தமது கட்சிக்காரர்களை பெருமளவு இராணுவத்தில் சேர்த்து அதன் மூலம் இராணுவத்திற்குள் தாம் ஒரு பெரும் சக்தியாகலாம் என்று கணக்கிட்டனர்.

ஜேவிபியினர் தீவிர இனவாத தன்மை கொண்ட இடதுசாரிகளாவர். இவர்கள் அடிமட்ட சிங்கள மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைக் கொண்டவர்கள். குறிப்பாக ஏழை மீனவர்கள் சமூகத்தின் மத்தியிலும், பின்தங்கிய ஏழை விவசாயிகள் மத்தியிலும் இவர்களுக்கு பெரும் செல்வாக்கு இருந்தது.

ஆதலால் மேற்படி சமூகத் தட்டுக்களின் மத்தியில் காணப்பட்ட இளைஞர்களை இலகுவாக படைக்குச் சேர்க்க ஜேவிபியால் முடிந்தது.

எப்படியோ சிங்கள இராணுவத்தின் எண்ணிக்கையை குறுங்காலத்தில் பெருந்தொகையாக மாற்றி இராணுவத்தை பலப்படுத்த ஜேவிபியின் ஆதரவு பெரிதும் உதவியது.

அப்போது ஜேவிபியினரின் பலம் அரசியலிலும் இராணுவத்திலும் அதிகரிப்பதைக் கண்டு ராஜபக்சவை சிங்களத் தலைவர்கள் எச்சரித்தனர்.

அந்நிலையில் ராஜபக்ச ஒரு சிங்களத் தலைவரிடம் பின்வரும் பதிலை கூறினார். அதாவது ‘அந்த பயல்களை எப்படிக் கையாள்வது என்பது எனக்குத் தெரியும் எனவே அச்சமடைய வேண்டியதில்லை’ என்றார்.

இவ்வாறு இராணுவத்தில் சேர்க்கப்பட்ட ஜேவிபியினரை அதிகாரிகள் தரத்திற்கு உயராமல் பார்த்துக் கொள்வதும் இவர்களை யுத்தத்தில் முன்னரங்கங்களுக்கு அனுப்புவதும் என்ற உத்தியை கோத்தபாய ராஜபக்ச வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

இதன் மூலம் ஜேவிபியினரால் திரட்டப்பட்ட படையினர் முன்னரங்கில் பலிக்கடாக்களாக ஆக்கப்பட்டனர். ஒருபுறம் கொல்லப்பட்டவர்களும், காயமடைந்தவர்களும் என்ற வரிசையில் இவர்கள் அதிக தொகையில் காணப்பட்டனர்.

யுத்தத்தில் இனப்படுகொலை வாயிலாக ராஜபக்ச வெற்றி பெற்றதும் அவர் செய்த முதலாவது காரியம் ஜேவிபியினரை வெளியே தூக்கிப் போட்டதுதான்.

ஜேவிபியினரால் தேவ தூதனாக சித்தரிக்கப்பட்ட ராஜபக்சவை சிங்கள மக்கள் நம்பிய பின்னணியில் ஜேவிபியின் ஆதரவு சக்திகளும் ராஜபக்சவின் பக்தர்களாயினர்.

இனவாத பின்னணியில் தமிழின எதிர்ப்பு, புலி எதிர்ப்பு என்ற கோட்பாட்டுடன் ராஜபக்சவை ஜேவிபியினர் வளர்த்த போது தமது ஆதரவு தளத்தையும் ராஜபக்சவிடம் தாரைவார்த்தனர்.

இனப்படுகொலை யுத்தத்தில் வெற்றி பெற்ற ராஜபக்ச சிங்கள மக்கள் மத்தியில் யுத்த வீரனாகவும், யுத்த கதாநாயகனாகவும் காட்சியளித்தார்.

இந்நிலையில் அரசாங்கத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட ஜேவிபியினரால் ராஜபக்சவிற்கு எதிராக ஒரு துரும்பைத்தானும் அசைக்க முடியவில்லை.

யுத்த காலத்தில் 39 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருந்த ஜேவிபியின் பலம் இன்று 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

காலையில் புலிகள் வீழ்ந்தனர் கூடவே மாலையில் ஜேவிபியினரும் வீழ்ந்தனர். ஜேவிபியின் வளர்ச்சி புலி எதிர்ப்போடு பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தது.

எனவே புலிகள் வீழ்த்தப்பட்ட போது அவர்களோடு சேர்ந்து கூடவே ஜேவிபியினரையும் வீழ்த்துவது ராஜபக்சவிற்கு இலகுவாய் அமைந்தது.

இவ்வாறு ஜேவிபியினரைப் பயன்படுத்தி ஜனாதிபதி வேட்பாளராகி, பின்பு ஜனாதிபதி தேர்தலிலும் அவர்களைப் பயன்படுத்தி வெற்றிபெற்று, அவர்கள் மூலம் தனக்கான கதாநாயக பிரச்சாரத்தை முன்னெடுத்து அதிலும் தனது இலக்கை அடைந்து கொண்டதுடன் கூடவே ஜேவிபியைப் பயன்படுத்தி இராணுவத்தையும் வளர்த்து அதிலும் ஜேவிபியினரை பலியிட்டு தனது வெற்றியை மகிந்த ராஜபக்சவால் உறுதிப்படுத்த முடிந்தது.

யுத்தம் முடிந்த நிலையில் மேற்படி பயன்படுத்தப்பட்ட ஜேவிபியினரின் முதுகில் ராஜபக்ச ஓங்கி ஒரு குத்து குத்தினார்.

அந்த குத்தின் தாக்கத்திலிருந்து ஜேவிபியினரால் இன்னும் எழும்ப முடியவில்லை.

இந்நிலையில் ராஜபக்சவை பிரதமர் ஆசனத்தில் இருந்து உதைத்து வீழ்த்துவதற்கு ஜேவிபியினர் தமது முஷ்டியை உயர்த்தினர்.

அன்று முதுகில் குத்திய ராஜபக்சவிற்கு இன்று முகத்தில் ஓங்கி குத்த கிடைத்த வாய்ப்பை ஜேவிபியினர் பயன்படுத்திக் கொண்டனர்.

Latest Offers