பண்பாட்டுத் தொட்டிலான புதைகுழிகள் வாய் திறக்கும் போது...

Report Print M.Thirunavukkarasu in கட்டுரை

பூமியில் உயிரினங்கள் வாழ்வு கோடிக்கணக்கான ஆண்டுகளைக் கொண்டது. இதில் மனித இனத்தின் வாழ்வு பத்து இலட்சம் ஆண்டுகளைக் கொண்டது. ஆயினும் நவீன மனிதனின் வாழ்வு இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு உட்பட்டது.

இன்றைக்கு 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 'ஹோமோ நலடி' என்ற ஆதி மனித இனம் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்ததற்கான ஆதாரம் 2016ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

தென்னாப்பிரிக்காவின் தலைநகரமான ஜோகன்ஸ்பார்க்கிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓர் அடர்ந்த காட்டின் இருண்ட குகை ஒன்றில் மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பல நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் பக்குவமாக அடக்கம் செய்யப்பட்டிருந்ததை நிரூபித்து நிற்கின்றன.

அதாவது இறந்து போன தமது சக மனிதர்களை அவர்கள் மதிப்பதன் சின்னமாக அந்த உடலங்களை எங்கோ பக்குவப்படுத்த முற்பட்டனர்.

இதன்படி அவர்களுக்கு தமது இனிய சகாக்களை குகையில் பக்குவப்படுத்துவதே சிறந்த வழியென தோன்றியிருக்க வேண்டும். 'நலடி' என்றால் ஆபிரிக்க மொழியில் நட்சத்திரம் என்று அர்த்தம்.

அந்தக் குகை அத்தகைய பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. அந்தக் குகையின் மேல் பக்கம் கீழ்நோக்கி மூடுண்டு இருந்தது. குகையின் கீழ்ப்பக்கம் மேல்நோக்கி உயர்ந்திருந்தது. இதனால் அந்தக் குகைக்குள் மேலிருந்து சூரியஒளித் தாக்கமோ, கீழிருந்து மழைநீரின் உட்புகலோ நிகழமுடியாத அற்புத அமைப்பை கொண்டிருந்தது.

இத்தகைய மலைக்குகைக்குள் மேற்படி சடலங்களை வீசக்கூடிய வாயில் இருந்தது. ஆனால் அந்த வாயிலை கீழிருந்து மேலே சென்று அடைவது இலகுவான காரியமாகத் தெரியவில்லை.

அப்படிப்பட்ட ஒரு கடினமான அந்தக் குகை வாயிலை அடைத்து சடலங்களை அதற்குள் தொடர்ச்சியாக உள்ளே வீசி அந்த ஆதிமனித இனம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இப்படி ஒரு கடினமான வகையில் அடக்கம் செய்வதற்கான மனப்பாங்கை அவர்கள் பெற்றிருந்தமை நாகரீகத்தின் ஓர் உன்னதமான பக்கமாய் அமைகிறது.

உண்மையில் 'நலடி' எனப்படும் இந்த மலைக் குகைதான் இதுவரை அறிந்தவரையான நாகரீகத்தின் தொடக்கப்புள்ளியாக அமைகிறது.

இந்த ஆதிமனித இனம் முற்றாக அழிந்து போய்விட்டது. இதன் பின் தோன்றிய நவீன மனிதனான ஹோமோ சாப்பியன்ஸ் 1,80,000 ஆண்டுக்கும் 2,00,000 இலட்சம் ஆண்டுக்கும் இடைப்பட்ட வரலாற்றைக் கொண்டது.

இந்த இனத்தைச் சேர்ந்தவர்களே இன்றைய மனித இனமாகும். இந்த நவீன மனிதன் இறந்தோரின் உடலங்களை புதைப்பதன் மூலம் அடக்கம் செய்யும் பண்பாடு உடையவனாக பரிணமித்தான்.

இதுவரை கண்டறியப்பட்டவற்றின் அடிப்படையில் மத்திய கிழக்கு என்று சொல்லப்படும் மேற்காசியப் பகுதியில் 40,000 ஆண்டுகளுக்கு முன் மலர்களினால் அர்ச்சிக்கப்படும் பண்பாட்டைக் காட்டும் புதைக்குழி ஒன்று தொல்லியல் அறிஞர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி புதைகுழியில் இருந்து பண்பாடு பிறப்பெடுத்ததற்கான ஆதாரம் தெரியவருகிறது. அதாவது இறந்து போன தமது சகாக்களை மலர்களால் அர்ச்சிக்கும் பழக்கம் தோன்றியதற்குப் பின்னணியாக அவனது மனதில் இறந்தோர் பற்றிய எண்ணம், விருப்பம், கற்பனை, மதிப்பு என்பனவெல்லாம் ஒன்று சேர்ந்து மலர்களால் அர்ச்சிக்கும் குறியீடு தோன்றியது.

சிந்துவெளி நாகரீகத்தில் வழிபாட்டிற்கு பூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பூசை என்பது பூ 10 செய் ஸ்ரீ பூசை என்ற தமிழ் இலக்கண அடியில் இருந்து பிறந்தது என்று மொழியியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதாவது சிந்துவெளியை வெற்றி கொண்ட படையெடுப்பாளர்களான ஆரியர்கள் அக்கினி வழிப்பாட்டை உடையவர்கள். அக்கினியும் பூவும் ஒன்றுக்கொன்று முரணானது. ஆதலால் அக்கினி வழிபாட்டிற்கு பூ புறம்பானது.

ஆனால் வெற்றிகொண்ட படையெடுப்பாளர்கள் தோல்விகண்ட மக்களிடம் காணப்படும் சிறப்பம்சங்களை தம்முடன் இணைத்துக் கொள்வது வழக்கம்.

இந்த வகையில் சிந்துவெளியில் காணப்பட்ட பூக்களால் அர்ச்சிக்கும் பழக்கத்தை அந்த படையெடுப்பாளர்கள் உள்வாங்கி தமது அக்கினி வழிபாட்டை வழிபாட்டிற்குரிய உருவத்திலிருந்து சற்று தூர இடத்தில் ஓமகுண்டமாக அமைத்து அக்கினி வழிபாட்டையும் உருவ வழிபாட்டுடன் கூடிய பூக்களால் அர்ச்சிக்கும் முறையையும் இணைத்து பூஜை என தமது உச்சரிப்பிற்கு பொருத்தமாக வடிவமைத்துக் கொண்டதாக ஒரு கருத்துண்டு.

இதன்படி பார்க்கையில் புதைகுழியில் இறந்தோரை பூக்களால் அர்ச்சிக்கப்படுவதில் தொடங்கிய மனிதனது பண்பாடு பின்பு பூக்களால் கடவுளை அர்ச்சிக்கும் பண்பாடாக பரிணாமம் பெற்றதைக் காணலாம்.

எனவே இறந்துபோன சக மனிதனை மதிப்பதிலும், போற்றுவதிலும், பூசிப்பதிலும், பூப்போட்டு வணங்குதிலும் ஆரம்பமாகிய இந்த பண்பாட்டு அம்சம்தான் பின்பு கடவுள் வழிபாட்டிற்குரிய அடிப்படையாகவும் அமைந்ததைக் காணும்போது புதைகுழியே மனித இனத்தின் பண்பாட்டுத் தொட்டில் என்பது புலனாகிறது.

புதைகுழிகளை பூக்களால் பூசித்த மனிதன் தனது காதலுக்கும் பூக்களைச் சின்னமாக்கினான். காதலர்களுக்கு இடையே அன்பின் குறியீடாய் பூங்கொத்துக்கள் உதயமாகி அது பின்பு பரஸ்பர மரியாதைக்கும் உறவிற்கும், மதிப்பிற்கும் உரிய சின்னமாக வளர்ச்சியடைந்தது.

இவ்வாறு புதைகுழியில் பூஜைக்குப் பயன்பட்ட மலர்களே கடவுளை பூசிப்பதற்கும் உரிய குறியீடானது. இந்த வகையில் மாவீரர்நாள் என்பது நீண்ட வரலாற்றின், பண்பாட்டின் தொடர்ச்சியாய் அது பூஜைக்குரிய ஓர் அங்கமாய் பரிணமித்துள்ளது.

ஆரம்பத்தில் போராளிகளினது உடலங்கள் எரிக்கப்படும் நிலையே காணப்பட்டது. ஆனால் வரலாற்றின் வளர்ச்சிப் போக்கு இதனை வேறுவிதமாக முன்னெடுத்தது.

குறிப்பாக இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சண்டை நடந்துகொண்டிருந்த காலத்தில் கொல்லப்பட்ட போராளிகளின் சடலங்கள் தவிர்க்க முடியாதவாறு புதைக்கவேண்டி ஏற்பட்டது. அவ்வாறு புதைக்கப்பட்ட இடங்களில் போராளிகள் மலர்தூவி வணக்கம் செய்யும் நிலை இயல்பாகத் தோன்றியது.

இவ்வாறு காட்டின் உட்புறங்களில் போராளிகளின் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களில் நினைவாக அதன் மேல் கற்சின்னங்கள் கட்டப்பட்டன. இவ்வாறு கட்டப்பட்ட கற்சின்னங்கள் நினைவுகளைப் பேணுவதற்கு இலகுவாக வழி சமைத்தது. ஆயினும் அது ஒரு முறைமையாக அமையவில்லை.

ஆனால், 1990ஆம் ஆண்டு ஆணையிறவு இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை மேற்கொண்ட போது வீரச்சாவடையக்கூடிய எண்ணிகை பற்றிய கணிப்பீட்டின் அடிப்படையில் அவர்களது சடலங்களை எரிப்பதற்கான விறகுகள் வெட்டப்பட்டன.

ஒருபுறம் காட்டு விறகுகளை பெருமளவில் வெட்டி ஏற்றி இறக்கும் போது அதன்வாயிலாக புலிகள் நடத்தக்கூடிய தாக்குதல் பற்றிய இரகசியம் வெளியே தெரியவந்துவிடும். எனவே விறகு வெட்டுவதில் ஒரு சுய கட்டுப்பாடு அவர்களுக்குத் தேவைப்பட்டது.

இதேவேளை ஆணையிறவு சண்டையின் போது எதிர்பார்த்த தொகையினரைவிட இழப்பு அதிகமாக இருந்ததால் அவற்றை எரிப்பதற்குப் பதிலாக புதைக்க வேண்டியது தவிர்க்க முடியாது அமைந்தது. இப்படித்தான் மாவீரர் துயிலும் இல்லம் தோன்றுவதற்கான சிந்தனை பரிணாமம் பெற்றது.

இதிலிருந்து வீரச்சாவு அடையும் போராளிகள் புதைக்கப்படுவதில்லை மாறாக அவர்கள் விதைக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களது வெற்றுடல் வித்துடல் என்றும் கூறும் பதப்பிரயோகங்கள் முதன்மை பெறத் தொடங்கின.

இவ்வாறு மாவீரர்கள் விதைக்கப்படும் இடங்கள் 'துயிலும் இல்லங்கள்' எனப் பெயரிடப்பட்டு போராட்டத்தில் அது ஒரு புனிதமான அங்கமாக பரிணாமம் பெறலாயிற்று.

மாவீரர் சங்கர், அவர் வீரச்சாவு அடைந்த கார்த்திகை மாதம், பூஜைக்குப் பயன்படும் கார்த்திகைப்பூ என மூன்றும் இணைந்து ஈழத்தமிழரின் வரலாற்றில் மாவீரர் நாள் என்கின்ற ஒரு பண்பாட்டு அத்தியாயம் தோற்றம் பெறலாயிற்று.

இது மனித குலத்தின் 30 இலட்சம் ஆண்டுகால பண்பாட்டுத் தொடர்ச்சியின் ஒரு முக்கிய சின்னமாய் அமைகிறது.

மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை ஆனால் அவர்கள் விதைக்கப்படுகிறார்கள் என்ற கூற்றை கவனிக்காமல் விடுதலைக்கான எண்ணங்களையும் பண்பாட்டையும் புதைக்கும் வகையிலான குறுநில மன்னர் கலாச்சாரம் தமிழ் மக்களின் அரசியலில் தலையெடுத்திருப்பது வேதனைக்குரியது.

'நிலங்களை உழுவதுபோல் உள்ளத்தை உழுங்கள்' என்ற கூற்றிற்கு நேர்எதிர்மாறாக தமிழ் மக்கள் மத்தியில் இப்போது குழுவாதங்களும், குறுகிய சிந்தனைகளும் தலையெடுத்துள்ளன.

1987ஆம் ஆண்டு 'ஓப்பரேஷன் லிபரேஷன்-1' என்ற தலைப்பில் வடமராட்சி பகுதியில் அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத்முதலி பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார்.

அப்போது வல்வெட்டித்துறையில் நெடியகாடு பிள்ளையார் கோயில் வாசிகசாலைக்குள் 68 தமிழ் இளைஞர்களை இராணுவம் அடைத்து அந்த கட்டடத்திற்குள் குண்டுவைத்து வெடிக்கச் செய்து கொடூரமான படுகொலையை அரங்கேற்றியது. இதனால் ஏற்பட்ட மனக்கொதிப்பே கரும்புலி மில்லரைத் தோற்றுவித்தது.

'ஓப்பரேஷன் லிபரேஷன்-1' என்ற இராணுவ நடவடிக்கையே முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் தொடக்க அத்தியாயம். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு 'ஓப்பரேஷன் லிபரேஷன்-1', இராணுவ நடவடிக்கையின் இறுதி அத்தியாயம் ஆகும்.

ஆட்சியாளரின் இத்தகைய சூத்திர வடிவிலான இனஅழிப்பையும், மில்லரின் மன உணர்வையும் புரிந்து கொண்டால் அனைத்துவகையான சுயநல அரசியலையும் கடந்து மக்களின் விடிவிற்கான தமிழ்த் தேசிய அரசியலை பற்றிச் சிந்திக்கலாம்.

தேசியம் என்பது வெறுமனே ஒரு மொழி அல்லது இன அபிமானம் மட்டுமல்ல. தேசியம் பண்பாட்டு உறைவிடம். ஜனநாயகத்தின் கர்மபீடம்.

பண்பாட்டை அடையாளமாகக் கொண்டு பரந்துபட்ட மக்களை ஆரத்தழுவி ஐக்கியப்படுத்தி பண்பாட்டையும், ஜனநாயகத்தையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக இணைத்து கட்டியெழுப்பப்படும் ஒரு வாழ்க்கைமுறை.

அது ஜனநாயக மீறல்களையும் அனைத்துவகை அந்நிய, அரச, இன ஆக்கிரமிப்புக்களையும் தடுப்பதற்கான ஒரு கவசமாகவும் குறித்த இனத்தின் மத்தியில் காணப்படும் அனைத்துவகை சமூக, சாதி, ஆண் ஆதிக்கங்களையும் தகர்ப்பதற்கான கருவிகயாகவும் அமைகிறது.

அத்துடன் கூடவே அனைத்துவகையான ஆக்கத் திறன்களையும் (Creative Talent) தொட்டிலில் இருந்து புதைகுழிவரையான உயிர்வாழும் காலம்வரை வளர்த்து இறுதியில் புதைகுழியையும் எதிர்கால வளர்ச்சிக்கான விதைகுழியாக வடிவமைக்க வேண்டிய பொறுப்பு தேசியத்திற்கு உண்டு.

அனைத்துவிதமான கோஷங்களுக்கும், புகழுரைகளுக்கும் அப்பால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாய் இறுதி அர்த்தத்தில் தமிழினம் தோல்வியடைவதற்கான காரணத்தைக் கண்டறியாமல் விடுதலைக்கு வழிதேட முடியாது.

என்ன இருக்கின்றதோ அதை வைத்துத்தான் எதையாவது செய்யலாம். இல்லாவிட்டால் எதனையும் படைக்க முடியாது. விருப்பம் எதனையும் நிர்ணயிக்காது. இருப்புத்தான் எதனையும் நிர்ணயிக்கும். இதனை 'இருப்புநிலை நிர்ணயக் கோட்பாடு என அழைப்பர். இதனை விளக்க தமிழில் மிக எளிமையான ஒரு பழமொழி உண்டு.

அதாவது 'பானையில் இருந்தாற்தான் அகப்பையில் வரும்' வரலாறு எம்மை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறதோ அந்த இடத்தில் இருந்துதான் அடுத்த கட்டப் பயணத்திற்கான அடியை எடுத்து வைக்கலாம்.

மனவேகத்தால் 1000 மையிலுக்கு அப்பால் நின்று அடியெடுத்து வைக்க முடியாது. தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் யதார்த்தத்தை கவனிக்காதத் துயரமும், காலதேச வர்த்தமானத்திற்குப் பொருந்தாத தீர்மாங்களும் தமிழ் மக்களின் தலைவிதியை அதளபாதாளத்திற்கு தள்ளுகிறது.

புதைகுழிகளுக்குள் உறங்கிக்கிடக்கும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்களையும், தியாகிகளையும் உயிர்பிக்கும் வித்தையைச் செய்யவல்ல தேசிய மந்திரக்கோலாய்த் தலைவர்களும், அறிஞர்களும் எழவேண்டும். இதுதான் புதைகுழிகளுக்குள் உறங்கிக் கிடப்போருக்குச் செய்யும் முதல் மரியாதை.

ஒருவன் சொல்லும் அவனது கவர்ச்சியான வார்த்தைப் பிரகடனத்திற்கும் அப்பால் அவனது செயல் யாருக்கு அல்லது எதற்கு சேவை செய்கிறது என்பதிலேயே அவன் யார் என்பது அடங்கியிருக்கிறது.

மொத்தத்தில் தேசியமானது எல்லாவித குறுகிய மனப்பாங்குகளுக்கும் முடிவுகட்டி பரந்த புதிய பண்பாட்டுடன் பரந்துபட்ட மக்களை ஐக்கியப்படுத்தவல்ல ஒரு வழிமுறையாய் அமைகிறது.

இத்தகைய வழிமுறையைப் பின்பற்றுவதே மக்களின் விடுதலைக்கும் விடிவிற்கும், வளர்ச்சிக்கும் நல்வாழ்விற்குமாய் உயிர்நீத்த ஆயிரக்கணக்கான ஆண்டுகால மாந்தர்களின் புதைகுழிகளுக்குச் செய்யும் மரியாதையாகும். அத்தகைய வழிமுறையைத்தான் மாவீரர்கள் தமக்கான மரியாதையென ஏற்றுக்கொள்வர்.

Latest Offers