மைத்ரியின் விடாப்பிடி அரசியலுக்குப் பின்னால் தமிழர் தரப்புக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

Report Print S.P. Thas S.P. Thas in கட்டுரை

இலங்கை அரசியலின் சூடு இப்போதைக்கு தணியுமளவிற்கு நிலைமைகள் இல்லை என்பதை திடமாக சொல்லவிட முடியும். பொது வேட்பாளராக 2015ம் ஆண்டில் களமிறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன, நல்லாட்சி என்று சொல்லப்பட்ட கூட்டை உடைத்து பழைய இடத்திற்குள் தஞ்சம் புகுந்திருக்கிறார்.

சர்வதேசத்தின் நேரடி ஆசீர்வாதத்துடன், ஆட்சியமைத்த கூட்டணி உடைந்து, சின்னாபின்னமாகியிருப்பதான தோற்றங்கள் வெளியே தென்படுகின்றன. குழப்ப அரசியலை ஏற்படுத்திய சிறிசேனா, ஆசுவாசமாக இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாகி விமர்சனத்திற்கு உட்பட்டிருக்கிறது.

சுமூகமாக போய்க் கொண்டிருந்த அரசியல் நிலையை பெரும் குழப்பத்திற்குள் கொண்டுவந்து விட்டிருக்கும் சிறிசேனாவின் விடாப்பிடி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்க வைத்திருக்கிறது.

மைத்திரிபால சிறிசேனாவின் விட்டுக் கொடுக்காத் தன்மையும், ஐக்கிய தேசியக் கட்சியினரின் மாற்று பிரதமர் தெரிவில் ஏற்படாத மாற்றமும், மேலும் குழப்பங்களை அதிகரித்துச் செல்வதற்கான வடிகாலாக இருக்கிறது.

இந்தப் பிரச்சினைகளால் இரண்டு தடை உத்தரவுகளை இலங்கை நீதிமன்றங்கள் விதித்திருக்கின்றன. தனக்கு அதிகாரங்கள் இருப்பதாகவும், 19வது திருத்தச் சட்டத்தில் உள்ளவாறே பிரதமர் ஒருவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, இன்னொரு நபரை பிரதமராக்கியதாக சொல்லும் சிறிசேனாவும், இல்லை அதிகாரங்கள் முற்றாக குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளும் வாதாடிக் கொண்டிருக்கையில்,

நாடாளுமன்றத்தைக் கலைத்தார் மைத்திரி. அவரின் இந்த அதிரடி நடவடிக்கையினால் கொதித்துப் போன எதிர்க் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, மைத்திரியின் கலைப்புக்கு இடைக்காலத் தடையையும் வாக்கிவிட்டார்கள்.

இதுவொருபுறமிருக்க, புதிதாக பிரதமரை மைத்திரிபால சிறிசேன நியமித்து, அமைச்சரவையையும் புதிதாக்கினார். எதிர்க் கட்சிகளில் இருந்து கட்சி தாவி வந்தவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் தாராளமாக வழங்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும் என்ற நிலையில் குதிரை பேரங்களும் நடந்ததாக எதிர்க் கட்சிகள் குற்றச்சாட்டியிருந்தன.

எனினும் மகிந்த ராஜபக்ச தரப்பினரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போக, நாடாளுமன்ற நடவடிக்கைகளில் குழப்பங்கள் விளைவிக்கப்பட்டன. இலங்கை அரசியல் வரலாற்றில் மிக மோசமான நாட்களாக நாடாளுமன்ற கலவரங்கள் அமைந்திருந்தன.

அப்படியிருந்தும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை ஐக்கிய தேசியக் கட்சி நிரூபித்திருந்தது. ஒன்றல்ல இரண்டு முறை தனது பெரும்பான்மையை ஐக்கிய தேசியக் கட்சி நிரூபித்தும், அதனை மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கேட்டாலும் ரணில் விக்ரமசிங்கவை தான் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் சிறிசேனா.

இதற்கிடையில், புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் அவரது அமைச்சரவைக்கும் இடைக்காலத் தடைவிதித்திருக்கிறது மேல் நீதிமன்றம். உலக வரலாற்றில் அரசாங்கம் இல்லாத ஒரு நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுவிட்டது என்று கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறது இலங்கை.

இந்தச் சூழ்நிலையில் ஒட்டுமொத்த உலகமும், இலங்கை மக்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். உண்மையில் கடந்த மாதம் இடைக்காலத் தடைவித்திருந்த உச்ச நீதிமன்றத்தில் நேற்றும் இன்றும் சூடான விவாதங்கள் நடந்தன. நாளை வழங்க விருந்த தீர்ப்பு நாளை மறுநாள் என்றாகியிருக்கிறது.

ஆனால், எதிர்க் கட்சிகள் நீதிமன்றத்தை பாராட்டிவருகின்றார்கள். இலங்கை நீதிமன்றம் சுயாதீனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்னும் கருத்தினை ஐக்கிய தேசியக் கட்சியினர் இரண்டு இடைக் காலத் தடைகள் வந்த பொழுதே சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

நாளை மறுநாளும் ஒரு தீர்ப்பு வரவிருக்கிறது. இந்தத் தீர்ப்பு மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், வழக்குத் தொடர்ந்த எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவாகவும் வெளியானால், பெரும் செய்தி ஒன்றை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள் சிங்களத் தரப்பினர்.

குறிப்பாக இலங்கை நீதிமன்றங்கள் எப்பொழுதும் சுயாதீனத் தன்மை கொண்டவை என்றும், அரசியல் சூழ் நிலைக்குள் அடிமைப்பட்டு இயங்குவதல்ல என்றும், அரசியல் அழுத்தங்கள் இல்லாத நீதிமன்றக் கட்டமைப்பை இலங்கை கொண்டிருக்கிறது என்றும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் காட்டப்படும்.

மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி கூட்டாட்சியை ஏற்படுத்தியிருந்த ரணில் விக்ரமசிங்கவும், மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் மாநாட்டில் போதியளவிலான கால அவகாசத்தினை பெற்றுக் கொண்டனர். அதேபோன்று சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக மேற்கொள்வதற்கான ஆணையினையும் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள்.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடுத்து மனிதவுரிமைகள் மாநாடு கூடவிருக்கிறது. அதன் போது நீதிமன்ற இடைக்காலத் தடைகளுக்கான தீர்ப்புக்களை நிச்சயமாக மேற்கோள்காட்டி இலங்கை தரப்பினர் போர்க்குற்ற விசாரணைகளை உள்நாட்டில் மேற்கொள்ள முடியும் என்றும். இலங்கையில் அதற்கான கட்டமைப்பினை நீதிமன்றங்கள் கொண்டிருக்கின்றன என்றும் வாதாடுவார்கள்.

அதற்காக அண்மைய நாட்களாக வெளியாகியிருக்கும் தீர்ப்புக்களையும் நிச்சயமாக பயன்படுத்துவார்கள். மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்தியிருக்கும் குழப்பங்கள் உள்நாட்டில் வேண்டுமென்றால் குறுகிய காலப் பாதிப்பாக இருக்கலாம். ஆனால், அது சில நன்மைகளையும் சிங்களத் தரப்புக்கு பெற்றுக் கொடுக்கும். அதற்கான காலம் கனிந்து கொண்டிருக்கிறது என்பதை விரைவில் உணர்ந்து கொள்ள முடியும்.

Latest Offers