சம்பந்தன் சுமந்திரனை இலக்கு வைக்கும் மகிந்த! எகிறிப் பாய்வதற்கான காரணம் என்ன?

Report Print S.P. Thas S.P. Thas in கட்டுரை

பிரதமர் பதவியை இராஜினாமா செய்து கொண்ட மகிந்த ராஜபக்ச, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அது கோபம் என்பதை விட வெறுப்பு என்று சொல்ல முடியும்.

மகிந்த ராஜபக்சவின் கோபம் எதிர்பார்த்த ஒன்றுதான். உள்ளாட்சி தேர்தலில் தன் பலத்தை மீண்டும் நிரூபித்துக்காட்டிய மகிந்த ராஜபக்சவை அழைத்து, பதவியைக் கொடுத்து, 50 நாட்களில் அவர் பிடித்து வைத்திருந்த செல்வாக்கை இழக்கும்படியாக செய்திருக்கிறது சமகால அரசியல் நிலைமை.

மகிந்த ராஜபக்சவின் இந்தத் தோல்விக்கு பெரும் பங்கினை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை பிணையக் கைதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பிடித்து வைத்திருக்கிறது என்று மகிந்த ராஜபக்ச கூறியதில் மறைந்து கிடைக்கிறது அவரின் கோபமும், வெறுப்பும்.

இன்று தன்னுடைய பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்திருக்கிறார். ஒக்டோபர் 26ஆம் திகதி ரணிலின் பதவி புடுங்கப்பட்டு, மகிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டது. தன்னுடைய பெரும்பான்மையை காட்ட மகிந்த ராஜபக்ச செய்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் போனது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை அழைத்துப் பேசிய மகிந்த ராஜபக்சவிடம் ஒரே போடாக சில நிபந்தனைகளை விதித்து எழுத்து மூலமான உறுதியைக் கேட்டு இருக்கிறார் சம்பந்தன். எனினும், சம்பந்தன் கேட்டதை வழங்க மறுத்த மகிந்த ராஜபக்ச, கோபமுடன் அன்றைய தினம் வெளியேறிச் சென்றார்.

மகிந்தவின் பெரும்பான்மை பலத்தை உறுதி செய்து கொள்வது கடினம் என்பதால், நாடாளுமன்றத்தைக் கலைத்தார் சிறிசேனா. ஆனால், மகிந்த மைத்திரியின் இந்த முயற்சிக்கும், நீதிமன்றம் செக் வைத்தது.

அதுமாத்திரமல்லாது, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனால், தன் பதவியை தானாகவே முன்வந்து இன்று துறந்திருக்கிறார் ராஜபக்ச.

ஜனாதிபதி தேர்தலில் தோற்றுப் போன மகிந்த ராஜபக்ச கௌரவமாக முன்னாள் ஜனாதிபதிக்கான வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு யுத்த வெற்றி நாயகன் என்னும் அந்தப் பட்டத்தோடு ஹம்பாந்தோட்டையில் இருந்திருக்க முடியும்.

ஆனால், அவரின் அதிகார ஆசை, அடுத்த பொதுத் தேர்தலில் களமிறங்கத் தூண்டியது. கௌரவ ஜனாதிபதி என்ற பொறுப்பிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

மைத்திர- ரணில் கூட்டரசின் செயற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தாலும், புதிய கட்சியை உருவாக்கி உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றியைப் பெற்றார். அது அவரின் அரசியல் நகர்விற்கானது தான்.

ஆனால், மைத்திரி ரணில் என்ற இருவருக்குமிடையிலிருந்த பகை மீண்டும் மகிந்த ராஜபக்சவிற்கு பதவியைப் பெற்றுக் கொடுத்தது. மகிந்த ராஜபக்ச ஒதுங்கியிருந்திருந்தால், அவருக்கான கௌரவமான அந்த மதிப்பு இப்போதுவரை கிடைத்திருக்கும். எனினும், அவரின் அதிகார ஆசை விட்டுவைக்கவில்லை.

எப்பாடுபட்டேனும் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிப்பேன், அல்லது நாடாளுமன்றக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு நகர்த்திச் செல்ல முடியும் என்று நம்பினார். ஆனால் இந்தத் திட்டங்கள் அனைத்தையும் தவுடு பொடியாக்கியது சம்பந்தனும் சுமந்திரனும் தான் என்று மகிந்த உறுதியாக நம்புகிறார்.

ஐக்கிய தேசிய கட்சியினர் 103 ஆசனங்களை மட்டுமே வைத்திருக்கிறார்கள். அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ரணிலைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி ரணிலுக்கான ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கியிருக்கிறது. இதனால், நெருக்கடி நிலையிலிருந்த நாட்டின் அரசியல் சிக்கல் அதாவது, மகிந்த ரணில் என்ற இருவரில் ரணில் பிரதமர் என்று உறுதியாகியிருக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ரணிலுக்கான ஆதரவை கொடுக்காமல் இருந்திருந்தால், பொதுத் தேர்தல் ஒன்றுக்கு சென்று ரணிலை தோற்கடித்திருக்க முடிந்திருக்கும் என்று நம்பினார் மகிந்த ராஜபக்ச. எல்லாவற்றையும் தங்கள் ஆதரவினால் சிதறடிக்கச் செய்துவிட்டார்கள் என்ற ஆதங்கத்தை இன்றைய தினம் வெளிப்படுத்தினார் மகிந்த.

இன்று பதவியைத் துறந்த பின்னர் பேசிய மகிந்த முதல் பேச்சையே கூட்டமைப்பிடம் இருந்து தான் தொடங்கினார். அதில், “ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என, 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில், 14 வாக்குகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடையவை.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருந்தாலும், அதேநாள், நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர், ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று வாக்களித்தாலும், தாங்கள் அரசாங்கத்தில் சேரப் போவதில்லை எனவும், எதிர்க்கட்சியிலேயே இருப்போம் என்றும் கூறியிருந்தார்.

எனவே, இங்கு உண்மையில் என்ன நடந்தது என்றால், 103 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை கூட்டமைப்பு பணயக் கைதியாக வைத்துள்ளது. கூட்டமைப்பின் கருத்துக்களுக்கு இணங்கவில்லை என்றால், ஐக்கிய தேசியக் கட்சி எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கக் கூடும்.

நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும், கருவியை ( றிமோட் கொன்ரோல்) கூட்டமைப்பே இப்போது வைத்திருக்கிறது.” என்றும் சீறியிருக்கிறார் மகிந்த. தன் கனவில் மண்ணையள்ளிப் போட்டிருக்கும் கூட்டமைப்பினர் மீதான கோபமும், பதவியை தட்டிப் பறித்த ரணில் மீதான வெறுப்பும் அடுத்தடுத்த நாடாளுமன்ற அமர்வுகளில் காட்டமாக தெரியவரும்..

அதற்குள் கூட்டமைப்பின் எதிர்க் கட்சியை தங்களுக்கு வழங்க கோரும் மகிந்த தரப்பினர் அதற்கான முனைப்புக்களையும் முன்னெடுப்பார்கள் நாளையிலிருந்து.

Latest Offers

loading...