சம்பந்தனால் தப்பித்துக் கொண்ட ரணில்! அடுத்த சில மாதங்களில் காத்திருக்கும் சவால்கள்

Report Print S.P. Thas S.P. Thas in கட்டுரை

மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட வெள்ளிப் புரட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களின் 14 ஆசனங்களினால் வீழ்த்தியிருக்கிறது. ரணில் விக்ரமசிங்கவிற்கான அவர்களின் ஆதரவு என்பது மைத்திரி மகிந்தவின் நகர்வுகளை ஒட்டுமொத்தமாக தவுடு பொடியாக்கியிருக்கிறது.

ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இரண்டாவது தடவையாகவும் பாதியில் இழந்து இம்முறை பெற்று இருக்கிறார். சந்திரிகா அம்மையார் ஆட்சியின் போது 2014ம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க தன் பதவியை இழந்தார். அத்தோடு மகிந்த ராஜபக்சவின் எழுச்சி மூழு வீச்சானது.

இம்முறை அதே சுதந்திரக் கட்சியினால் வீழ்த்தப்பட்டார். ஆனால், சம்பந்தன் சுமந்திரன் என்னும் இரு அஷ்த்திரங்கள் அவரை காத்திருக்கின்றன. இழந்த பதவியை மீண்டும் தக்க வைத்திருக்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது நடுநிலை வகித்திருந்தாலோ அல்லது மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்திருந்தாலோ அன்றி பொதுத் தேர்தலுக்கு செல்லத் தயார் என்று அறிவித்திருந்தாலோ ரணில் விக்ரமசிங்க தன்னுடைய அரசியல் வரலாற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் வீழ்த்தப்பட்ட பிரதமர் என்னும் பட்டத்தை வென்று இருப்பார்.

ஆனால், காப்பாற்றியிருக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு. விடாப்பிடியாக இருந்த மைத்திரிபால சிறிசேன மெல்ல தன் முடிவினை மாற்றி ரணிலுக்கு மீண்டும் பதவியைக் கொடுக்கும் நிலைக்கும் வந்திருக்கிறார்.

இவையெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் சிறுபான்மை கட்சியின் ஆதரவினாலும், அரசியல் காய் நகர்த்தினாலும் ஏற்பட்ட மிகப் பெரும் வரமாக ரணிலுக்கு மாறியிருக்கிறது. ஆனால், ஆட்சியைப் பிடித்த ரணில் விக்ரமசிங்கவிற்கும் பெரும் சவால்கள் இந்தக் காலப்பகுதியில் காத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவோடு ரணில் ஆட்சியேற்று இருப்பதனால் மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்க் கட்சித் தலைவர் என்னும் பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது. எதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதில் குழப்பங்கள் நீடித்தாலும், இப்போதைக்கு மகிந்த ராஜபக்ச எதிர்க் கட்சித் தலைவர் என்று கரு ஜயசூரிய அறிவித்திருக்கிறார். ஆக, குடைச்சலைக் கொடுக்கக் கூடிய எதிர்க் கட்சி ஒன்றை ரணில் பெற்று இருக்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சியின் பங்காளியாக இருந்தமையினால் முன்னைய ஆட்சியில் எதிர்க் கட்சியாக அதிகளவில் சோபிக்கவில்லை. ஆயினும், மகிந்த ராஜபக்ச எதிர்க் கட்சித் தலைவராக இருக்கும் போது நாடாளுமன்ற நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நிற்க, ரணில் விக்ரமசிங்கவும், சம்பந்தனும் இரகசியமாக உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளார்கள் என்றும். அந்த உடன்படிக்கை வெளியே சொல்லப்பட வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இது ரணில் விக்ரமசிங்கவிற்கு அடுத்த தேர்தலில் பெரும் தலைவலியாக மாறும்.

இப்போதைக்கு சம்பந்தன் ரணில் ஒப்பந்தங்கள் இல்லை என்று ரணில் தரப்பினர் மறுத்தாலும், அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தென்னிலங்கை சமூகம் இருக்காது. அதற்கான மனநிலையை அடிப்படை பௌத்த மக்களிடம் விதைப்பார்கள் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்கவாய்ப்பில்லை.

இன்னொருபுறத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுத்திருப்பதாக குறிப்பிட்டாலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் சிலவற்றிலேனும் ரணில் கவனம் செலுத்தியாக வேண்டும்.

ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தன்னுடைய இயங்கு சக்திக்கு அப்பால் சென்று ஆதரவினைக் கொடுத்திருக்கிறது. அடுத்த தேர்தலில் கூட்டமைப்பினர் தமிழ் மக்களிடம் சென்று வாக்குக் கேட்டாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நம்பிக்கையையும் ரணில் காப்பாற்றியாக வேண்டும்.

பெரும் குழப்பத்திலிருந்த அரசியல் விவகாரம் ஓரளவுக்கு தீர்ந்திருக்கிறது. 19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தெளிவும் மகிந்த மைத்திரி உட்பட நாட்டின் பிரஜைகளுக்கும் ஓரளவுக்கு புரிந்த்திருக்கிறது மைத்திரியின் செயற்பாடுகளினால்.

ஆனால், இந்த அரசியலமைப்பினைக் கொண்டு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை ரணில் தலைமையிலான அரசாங்கம் செய்யுமா என்பது கேள்விக்குறியானது. தம்மை காப்பாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நன்றி விசுவாசத்திற்காக தமிழ் மக்களுக்கு ஏதேனும் அதிகாரப் பகிர்வு தொடர்பான யோசனைகளை ரணில் தரப்பினர் முன்வைக்கும் போது, அது வரும் தேர்தல் காலங்களில் பாதகத்தை ஏற்படுத்தும் என்று ரணில் தரப்பினர் சிந்திப்பதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.

இந்தச் சிந்தனையின் வெளிப்பாடு, அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தில் தாமதத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.

இதேவேளை, அடுத்த சில நாட்களில் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளில் நம்பிக்கையற்று தாங்கள் ஆதரவினை விலக்குவதாக தமி்ழ் தேசிய கூட்டமைப்பு அறிவிக்குமாயின் ஆட்சி கலையும் துர்ப்பாக்கிய நிலைக்குச் செல்லும். கூட்டமைப்பு இது போன்றதொரு முடிவினை எடுக்காது என்றாலும், ரணில் தரப்பினர் தமது எச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொள்ளத்தயங்கமாட்டார்கள்.

இதற்காக, அடுத்த தேர்தலில் தனித்து, சுயமாக இயங்கும் ஒரு சக்தியாக ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்க வேண்ய பொறுப்பு ரணிலுக்கு உண்டு. தங்கள் ஆட்சியை தாங்களே தீர்மானிக்கும் பலத்தை பெருக்க வேண்டிய தேவை அவருக்கு உண்டு. அதற்கான வேலைகளைச் செய்வார்கள்.

அதற்குத் தடையாக அரசியலமைப்பு, அதிகாரப் பகிர்வு, தமிழ் பிரச்சினைகளை தீர்த்தல் போன்ற முக்கியமான பிரச்சினைகள் கிடப்பில் போடப்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகமிக அதிகம்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த வகையிலான நகர்வுகளை முன்னெடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எவ்வாறாயினும் சம்பந்தன் சுமந்திரனின் காய் நகர்த்தலினால் இன்று வெற்றி வாகை சூடியிருக்கும் ரணில் அவர்களுக்கான அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதில் முனைப்புக் காட்டுவது அறமாகும்.

எனினும், ரணிலை காப்பாற்றியதன் விளைவு சம்பந்தனின் பதவி பறிபோகும் நிலையில் வந்து நிற்கிறது. அடுத்தடுத்து என்ன நிகழுமோ?

Latest Offers