மோசமான நிலையில் மைத்திரியின் அரசியல் எதிர்காலம்! தீர்க்கமான முடிவோடு இலங்கை திரும்பும் சிறிசேனா?

Report Print S.P. Thas S.P. Thas in கட்டுரை

மைத்திரிபால சிறிசேன....! மூன்றாண்டு காலமாக இலங்கையர்களை ஆச்சரியத்தோடு பார்க்க வைத்த ஒரு நபராக தன்னை அடையாளப்படுத்திய இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி.

சரிபாதி சிங்கள மக்களின் வாக்குகளாலும், அதிகளவான சிறுபான்மை மக்களின் வாக்குகளாலும் தேர்வு செய்யப்பட்டு பதவிக்கு வந்த 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக மைத்திரிபால சிறிசேன தற்போதுவரை செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

முப்பது ஆண்டுகாலமாக நீடித்திருந்த உள்நாட்டுப் போரை மிக மோசமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடித்திருக்கும் போது, இறுதிப் போர் முள்ளிவாய்க்காலை எட்டிய போது இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் என்னும் பதவியில் இருந்தவர்.

மகிந்த ராஜபக்ச மீதிருந்த வெறுப்பும், துவேஷமும் மைத்திரிபால சிறிசேனவை இலங்கையின் உயரிய இடத்திற்குக் கொண்டு சென்றது. சிறிசேனவின் பேரும் புகழும் சர்வதேசம் எங்கும் மிக நுட்பமாக பதியப்பட்டது.

இலங்கையின் ஜனாதிபதிகள் வரிசையில் தனக்கான அதிகாரங்களைக் குறைப்பேன் என்று சபதம் எடுத்து ஆட்சிக்கு வந்தவர், மிக மிக எழிமையாக நடந்து கொள்ளும் அற்புத மனிதர், சாதாரண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து செயலாற்றும் வல்லமை கொண்டவர். தன்னுடைய ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கும் சரியான இடத்தைக் கொடுக்க முயற்சித்தவர் என்று ஏராளமான பெயர்களை தன்வசப்படுத்தினார் சிறிசேனா.

ஆனால் ஒக்டோபர் 26 ஆம் திகதி மாலை தான் சேர்த்த அத்தனை பெயரையும் ஒரேயொரு வர்த்தமானி மூலமாக நிர்மூலமாக்கினார். கூட்டுச் சேர்ந்து மகிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்கு மூலோபாயங்களை வகுத்த ரணிலை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, யாரை எதிர்த்து நின்றாரோ அவரையே தன் பக்கம் சேர்த்துக் கொண்டார்.

ஒக்டோபர் 26ஆம் திகதி ஆரம்பித்தது மைத்திரிபால சிறிசேனவின் வீழ்ச்சி அல்லது துயரம். நாட்டின் பொருளாதாரத்தை அடியோடு சாய்த்த நிகழ்வாக அது அமைந்திருந்தது. ரணில் மைத்திரி இணைந்து ஆட்சியைக் கொண்டு சென்ற போதும் பொருளாதாரம் சரிவு நிலையில் இருந்தது என்பதை புள்ளிவிபரங்கள் தெளிவாகச் சொல்கின்றன.

எனினும், ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பின்னர் அது மேலும் சரிவைச் சந்தித்து படுத்தேவிட்டது. சுற்றுலாத்துறை சரிந்தது, முதலீடுகள் இல்லாமல் போயின. ஏற்றுமதி, இறக்குமதியில் பெரும் அடிவிழுந்தது.

இதனால் மைத்திரியின் அரசு நிலை தடுமாறத் தொடங்கியது. பொருளாதாரத்திலும், வருமானத்திலும் இலங்கை ததும்பியது என்றால், அரசியலில் சிறிசேனாவின் எதிர்காலம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

எந்த அதிகாரத்தைக் குறைத்து மக்களின் பிரநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குவேன் என்று சொல்லிய மைத்திரி, அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரதமரை மாற்றியதும், நாடாளுமன்றத்தைக் கலைத்ததும் தான் அவருக்கான அரசியல் அழிவின் ஆரம்பமாக பார்க்கப்பட்டது.

தொடர்ந்து சிறிசேனாவின் வர்த்தமானிகள் அரசியலமைப்புக்கு முரணான விதத்தில் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்ட விரோதமானது என்றும் குறிப்பிட்டு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பும் அவரை இன்னொரு தளத்தில் வீழ்த்தியது.

அதற்கொருபடி மேலே சென்ற சிறிசேனா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை பலமுறை ஏற்றுக்கொள்ள மறுத்ததும், ரணிலை பிரதமராக ஏற்கமாட்டேன் என்று சிறுபிள்ளைத் தனமாக செயற்பட்டதும், சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை இழக்கச் செய்தது.

மகிந்த ராஜபக்ச நமக்கு வேண்டாம் என்று சிறுபான்மையினத்தவர்கள் தேர்தல் மூலம் தெரிவித்த போதும், சிறுபான்மை மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற மைத்திரி அவரை அரவணைத்த போதும் மைத்திரி தன்னிலையில் இருந்து கீழிறங்கினார்.

நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவோடு ரணில் ஆட்சியை மீண்டும் பிடித்த போது மைத்திரியின் அடுத்த நகர்வும் பிசுபிசுத்தது. இன்னொருபுறத்தில் வேறு வழியில்லாமல் வழிக்கு வந்தார் மைத்திரி. அரசை அமைக்க ஐக்கிய தேசிய கட்சியினருக்கு வழிவிட்டார்.

ஆனால், அவருக்கு மகிந்த ராஜபக்சவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் பக்கபலமாக இருப்பார்கள் என்று நம்பினார். எனினும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் ரணில் பக்கம் அமைச்சுப் பதவிக்காக தாவினர். அடுத்தடுத்த அடியும் அவருக்கு விழவே, அவர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்.

இந்நிலையில், அண்மையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன கூட்டம் முடிவடைவதற்கு முன்னர் வெளியேறிச் சென்றுவிட்டார். அவருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், அரசியல் முடிவுகளை அடுத்து சரியாக எடுக்க முடியாமல் மைத்திரி திணறியதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அவர் எடுத்த அத்தனை தீர்மானங்களும் படுதோல்வியில் முடிவடைந்தமையினால் தன்னை மனதளவில் திடப்படுத்தவே வெளிநாட்டுக்கு குடும்பத்தினருடன் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டில் தங்கியிருக்கும் அவர் நாடு திரும்பும் போது தீர்க்கமான ஒரு முடிவோடு திரும்புவார் என்கின்றன தகவல்கள். அவருக்கான ஆலோசனைகளை ஆலோசகர்களும் குடும்ப உறவினர்களும் தெரிவித்திருப்பதாகவும், இந்தப் பதவிக் காலத்துடன் ஆட்சியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டால் இருக்கும் கௌரவத்தை தற்காத்துக் கொள்ள முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அடுத்த தேர்தல் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கும் ரணில் தரப்பினருக்குமானது என்றும், மைத்திரியின் அண்மைக்காலச் செயற்பாடுகளினால் அவரின் செல்வாக்கு சரிந்தது உண்மை என்றும், இதனைக் கருத்தில் கொண்டு ஓய்வு பெறுவது மிகச் சிறந்த முடிவாக இருக்கும் என்றும் அவருக்கு சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தன் முடிவினை மைத்திரி விரைவில் தெரிவிப்பார் என்கின்றன கொழும்புத் தகவல்கள். ஒருவேளை மைத்திரிபால சிறிசேன தன்னுடைய முடிவினை ஓய்வு என்று அறிவிப்பாராயின் அவருக்கு எஞ்சிய கௌரவமும் நீடித்து நிலைக்கும். மாறாக அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன் என்று களமிறங்கினால் தோல்வியை அவரை விலை கொடுத்து வாங்குவார் என்கின்றன தென்னிலங்கைத் தகவல்கள்.

எதுவாயினும் 30ம் திகதி நாடு திரும்பும் மைத்திரி நாட்டு மக்களுக்கான தனது உரையினை ஆற்றுவார் என்றும், அதன் போது சரியான முடிவினை வெளிப்படுத்துவார் என்றும் நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers