இந்திய ஆட்சியில் ஈழத் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

ஈழத் தமிழர்கள் விடுதலைப் போராட்டத்திலும், விடுதலைப் பயணத்திலும், அன்னை இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்னர் மக்கள் திலகம் கொடைவள்ளல், தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் விடுதலைப் போராட்டம் பயணம் பின்னடைவு கண்டுள்ளது. தோல்வி அடைந்துள்ளன.

அன்னை இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்பு இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வடமராட்சியில் இந்திய விமானப் படையின் மிராஜ் யுத்தவிமானம் மூலம் உணவுப்பொதிகள் போட்டு இலங்கையைப் பணியவைத்தாலும் புலிகள் விரும்பாத இலங்கை இந்திய ஒப்பந்தத்தை திணித்து அனாவசியமாக இந்தியா இலங்கைக்குள் மூக்கை நுழைத்தது.

ஒரு ராஜிவ்காந்தியின் உயிருக்கு பல்லாயிரம் தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டும் இன்னும் இந்தியாவுக்கு கொலை வெறி அடங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் இந்திய ஆட்சியிலும் அரசியலிலும் மாற்றம் வேண்டும். தற்போதைய இந்திய அரசியலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நல்ல சூழல் அமைந்து வருகின்றது.

கடந்த மாதம் இந்தியாவில் வெளியான 5 சட்ட மன்ற தேர்தல்களில் மோடி அரசு படுதோல்வி கண்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள இந்திய லோக் சபா தேர்தலில் ராகுல் காந்தி தலைமை கொண்ட காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலை வந்துள்ளது.

சோனியாவின் மன்மோகன் அரசினால் ஈழத் தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை. அதற்கான முழுக் காரணம் கேரள மலையாளிகள் டெல்லியில் ஆளும் வர்க்கத்தில் சகல இடங்களிலும் மலையாளிகள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள்.

இந்திய வெளியிறவுக் கொள்கை நல்ல நிலையில் இருந்திருக்குமானால் இலங்கைக்குள் சீனா இந்தளவு காலூன்றியிருக்காது என்ற எதிர்க் கருத்தும் பலமாகவே உள்ளது.

இப்போது இந்திய மக்களின் வரிப்பணம் அதிகளவில் செலவு செய்யப்பட்டு தென்னிந்திய கரையோரக் கண்காணிப்பு, அதிகளவு கரையோரக் காவல் படை ரோந்து இந்தியக் கடற்படையினரின் காவல், வடக்கு கிழக்கு உட்பட இலங்கைக்குள் பெருமளவு றோவின் அவதானிப்புக்கள் மற்றும் துணி வியாபாரிகள் என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் இந்திய றோவின் உளவாளிகள் என்று பெருமளவு இந்தியப் பணம் செலவு செய்யபட்டு வருகின்றது.

இது சண்டைக்காரனை விட்டு சாட்சிக்காரனின் காலடியில் சரணடைவது போன்று இந்தியா நடந்து வருகின்றது. இது இந்தியாவை பிழையாக நடத்திவரும் அதிகாரிகளின் தவறு.

இலங்கைக்குள் இந்தியா ஆதிக்கம் செலுத்தக் கூடிய காலமும், நேரமும் இன்னும் கைநழுவி போகவில்லை இலங்கையை பொறுத்த மட்டில் இந்தியாவின் இதயத்தை அறுத்து இலங்கைக்கு குறுமா செய்து கொடுத்தாலும் இலங்கை இந்தியாவின் பக்கம் நிற்கப் போவதில்லை.

இந்தியாவின் எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தானுக்கு இலங்கைக்குள் வளங்களை அமைத்துக் கொடுத்துள்ளது. இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?

இந்தியாகவுக்குத் தெரியாமல் பாகிஸ்தான் வடக்கில் இரண்டு ராணுவ உளவு தளங்களை நிறுவியுள்ளதாம். இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவும் இந்திய கடற்பரப்பின் தொடர்பாடலை இடைமறித்து அவதானிக்கவும் பாகிஸ்தானின் உளவுத்துயின் ஐ.எஸ்.ஐ யாழ்ப்பாணத்தில் அவதானிப்பு நிலையம் இரண்டை நிறுவியுள்ளதாம்.

இதை இந்திய ரோ உளவு அமைப்பு கண்டு பிடித்துள்ளதாம் .அதன் பின்புதான் யாழ்ப்பாணத்தில் துணை தூதரகம் திறந்து இந்தியாவின் கண்காணிப்பு அதிகரித்தது. இந்திய நீர் மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டம் குறித்து பார்க்கும் கருவிகளை ஐ.எஸ்.ஐ பொருத்தியுள்ளதாம்.

இந்தியாவின் அந்தமான் தீவில் இந்திய கடற்படையின் கப்பல்களின் நடமாட்டங்களையும் ராணுவ தொடர்பாடல்களையும் இடைமறிக்கவும் சீனா இது போன்றதொரு அவதானிப்பு நிலையத்தை இந்தோனேசியாவுக்கு அருகாமையிலுள்ள கொக்கோ தீவில் அமைத்துள்ளது.

பாகிஸ்தானின், யாழ்ப்பாண உளவு அவதானிப்பு நிலையம் இந்தியாவுக்கு மிகவும் கிட்டிய தூரத்தில் உள்ளது. இதற்கருகிலேயே ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் உள்ளது. விசாகபட்டினத்தில் தான் இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்திய தளம் உள்ளது.

அங்கிருத்து அண்மையில் ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட அணுசக்தி நிலையம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இயங்கி வருகின்றது அத்துடன் திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையம் உள்ளது. பாகிஸ்தானின் இந்த உளவு தளங்கள் தென் இந்தியக் கரையோரங்களை கண்காணிக்கின்றது.

ஆக இந்தியாவின் நான்கு பகுதிகளிலும் இந்தியாவைச் சுற்றி எதிரிகள் சுற்றி விட்டார்கள். என்னதான் இந்தியா வீரம் பேசினாலும் யுத்தம் என்று வருகின்ற போது எல்லோருக்கும் அழிவுகள் தான், சேதங்கள் தான்.

இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை நல்ல நிலையில் இருந்திருக்குமானால் இலங்கைக்குள் இந்தியாவின் கை ஓங்கியிருக்கும். இந்தியாவின் நாட்டாமை ஆதிக்கம் இலங்கைக்குள் நிலைத்திருக்கும்.

இந்திய அரசைப் பொரறுத்தமட்டில் இலங்கையின் சிங்கள அரசையும் சிங்களவர்களையும் நம்பும் அளவுக்கு ஈழத் தமிழர்களையும் தமிழ் பிரதிநிதிகளையும் நம்புவதாக இல்லை.

ஈழம் மலர்ந்தால் அது தமிழ் நாட்டிலும் பிரிவினையை எதிரொலிக்கும் என்று இந்திய அரசு அஞ்சுகின்றது. ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு என்பது இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் தங்கியுள்ளது என்பதை இந்தியா உணர வேண்டும்.

இலங்கைக்குள் சீனாவின் ஆதிக்கம், பாகிஸ்தானின் புதிய நுழைவு என்பது எப்படி பார்த்தாலும் இந்தியாவுக்கு ஆபத்தானது தான். ஈழத் தமிழர்களின் காவலர்களான புலிகள் இல்லாத நிலையில் ஈழத்தில் தமிழ் கூட்டமைப்பும் ஈழத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர்களும் தமிழ் அமைப்புகளும் ஈழத் தமிழர் காவலர்களாக இருக்கும் நிலையில் பணபலம் மிக்க ஈழ அமைப்புக்கள் இந்திய அரசியலில் நுழைய வேண்டிய தேவை தொக்கி நிற்கின்றது.

ஈழத்தவர் விடயத்தில் உபகண்டத்தில் இந்தியாவின் பங்கு வகிபாகம் மிக மிக முக்கியமானது. குறிப்பாக ஈழத் தமிழர்கள் புலத்திற்கு வெளியே கனடா, பிரிட்டனில் ஆதிக்கம் செலுத்துவது போன்று இந்தியாவில் ஒரு ஆதிக்கச் சக்தியை உருவாக்க வேண்டும்.

கடந்த இந்திய ஆட்சியில் சோனியாவின் அரசில் தமிழர் ஆதிக்கச் சக்தியாக உருவாகக் கூடிய நிலை இல்லாமல் தான் போய்விட்டது. ஆனால் அந்த நிலை மாற வேண்டும். ஈழத் தமிழர்கள் மாற்றியமைக்க வேண்டும். அது மறத் தமிழனால் முடியக் கூடியதே, அதற்கான நல்ல புறச் சூழல் உருவாகி வருகின்றது.

இந்தியாவில் எதிர்வரும் லோக் சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் ஈழத் தமிழர்கள் ராகுல்காந்தி தலைமை கொண்ட காங்கிரஸ் கட்சி மூலமாக இந்திய ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சக்தியாக மாற வேண்டும்.

இந்திய ஆட்சியில் ஈழத் தமிழர்கள் என்ன விலை கொடுத்தாவது ஆதிக்கச் சக்தியாக மாற வேண்டும். அதற்கான ஒரே வழி இந்திய ஆட்சி மாற்றத்தை நோக்கி காய் நகர்த்த வேண்டியதுதான். அதற்காக உலகம் முழுவதும் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் தங்களது பணத்தின் மூலமாக காய் நகர்த்தி சாதிக்க முடியும்.