கிழக்குத் தமிழர்களும் ஆளுநர் நியமனமும்

Report Print Dias Dias in கட்டுரை

ஜனாதிபதியின் இன்றைய நியமனங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பலர் தெரிவித்து வருகின்றனர்.

தான் ஜனாதிபதியாக பதவியேற்ற வேளை மாகாண ஆளுநர்களாக இலங்கை நிர்வாக சேவையிருந்து ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களைத் தான் நியமிப்பேன் என்று அடம்பிடித்த அதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனக்கு வேண்டிய, விசுவாசமாக இருப்பார்கள் என்று கருதிய அரசியல்வாதிகளை மாகாண ஆளுநர்களாக நியமித்து இருக்கின்றார் என ஜனாத்தன் அல்ப்ரெட் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் அசாத் சாலியை மேல்மாகாண ஆளுநராக நியமித்துள்ளார்.

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சரும் தனது செல்லப் பிள்ளையாக வளர்க்கப்பட்டவருமான பேசல ஜெயரட்ணவை வட மேல் மாகாண ஆளுனராகவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களினால் நிராகரிக்கப்பட்டும், தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக்கியதோடு அமைச்சர் பதவியும் வழங்கியிருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராகவும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இதுவரை காலமும், தான் மக்களின் ஜனாதிபதி என்ற போர்வையை போர்த்தியபடி இருந்த ஜனாதிபதி அண்மைக்காலமாக அப்போர்வையை விலக்கி தன் சுயரூபத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றார்.

ஒரு முறைதான் ஜனாதிபதி ஆசனத்தை அலங்கரிப்பேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர் இன்று மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கான காய் நகர்த்தல்களை மேற்கோண்டு வருகின்றாரோ? என்ற சந்தேகத்தை தற்கால நியமனங்கள் எமக்கு எழுப்புகின்றன.

குறிப்பாக மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இதுவரை சிங்களவர்களே ஆளுநர்களாக இருந்து வந்துள்ளனர். அதற்கு பின்னர் இன்று முதன்முறையாக ஓர் தமிழ் பேசும் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நல்ல விடயம், இருந்தும் இந்நியமனம் தமிழ் பேசும் மக்களின் மீதான ஜனாதிபதியின் அன்பினால் எழுந்தது என்று கருதினால். அது இல்லவே இல்லை. ஏனெனில் தமிழ் பேசும் சமூகங்களை ஒற்றுமைப்படுத்தி, இன நல்லுறவை பேணும் வகையில் ஆழக்கூடிய, நிர்வாக திறமை மிக்கவர்கள் தமிழ், முஸ்லிம் சமுகங்களில் பலர் உள்ளார்கள்.

அவ்வாறு இருக்க இந்நியமனமானது தனது அரசியல் இருப்புக்காவும், தமிழ் மக்களையும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளையும் பழிவாங்கும் நோக்கோடும் வழங்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகின்றது.

ஏனெனில், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் கடந்தகால அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்களின் அதிர்ப்தியையும், வெறுப்பையும் சம்பாதிப்பனவாகவே அமைந்துள்ளன.

குறிப்பாக ஓட்டமாவடி காணி அபகரிப்பு, புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை விடயம் போன்றவற்றை குறிப்பிட்டுக் கூறலாம். இருந்தும் கிழக்கில் 23.15% வீதமாக வாழும் சிங்களவர்கள் தமிழர்களை விட புதிய ஆளுநர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எதிராக திரும்புவார்கள் என்பது உறுதி.

இது இவ்வாறு இருக்க மாகாண ஆளுநர் என்பவர் யார் அவருக்கான அதிகாரங்கள் என்ன? அதில் முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களின் வகிபங்கு என்ன என்பது தொடர்பில் ஆராய வேண்டியது அவசியமானதொன்றாகும்.

இதன்படி ஜனாதிபதியின் விருப்பத்தின்படி தனது பிரதிநிதியாக மாகாணமொன்றின் ஆளுநர் நியமிக்கப்படுகின்றார். ஆதலால் தனித்துவமான பல அதிகாரங்களையும் அவ் ஆளுநர் தன்வசம் கொண்டுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தின் 154C, 154Fஇன் ஒன்று தொடக்கம் ஆறு வரையான பந்திகள், மற்றும் 164 போன்ற சரத்துகளில் ஆளுநருக்கான அதிகாரங்கள் குவிக்கப்பட்டனவாகவுள்ளன.

ஜனாதிபதியைப் போன்ற நிறைவேற்று அதிகாரங்கள், மாகாண சபையின் முதலமைச்சருடன் நான்கிற்கு அதிகமில்லாத எண்ணிக்கையிலான அமைச்சரவை நியமனம், அவ்வமைச்சரவைக்கு கீழ் வரும் திணைக்களங்கள் மீதான அதிகாரங்கள், சட்ட உருவாக்கங்கள் மீதான கடப்பாடுகள் என பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சபையில் நிதி சார்ந்த எந்த ஒரு சட்ட மூலத்தையும் கொண்டு வருவதாக இருந்தாலும் அதை ஆளுநருடைய அதிகாரம் இல்லாமல் கொண்டுவர முடியாது. இது 90 இற்கும் மேற்பட்ட சட்டமூலங்களை பாதிக்கின்றது. அதாவது 90இற்கும் மேற்பட்ட சட்டமூலங்களை ஆளுநரின் அனுமதியின்றி கொண்டு வருவது சாத்தியமற்று போகின்றது. இது சட்டவாக்கத்துறையில் ஆளுநர் கொண்டுள்ள அதிகாரத்தின் தாக்கத்தினை காட்டுகின்றது.

இது தவிர நிறைவேற்று துறையினை பொறுத்தவரை குறிப்பாக மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு என்பதும் முழுமையாக ஆளுநருடைய கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பொது சேவைக்கான ஒருவரை நியமிக்கின்ற, விலக்குகின்ற மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கின்ற அதிகாரம் இவருக்கு உண்டு. இதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் என்பது இவரது கரங்களில் குவிந்திருப்பதனை காணமுடிகின்றது.

குறிப்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளர், பிரதம செயலாளர் நியமனங்களை கருதமுடியும். இவ்விடத்தில் முதலமைச்சர் ஒருவர் பதவியில் இருந்தாலும் சரி, இல்லாது போனாலும் சரி அதே அதிகாரம் அப்படியே இருக்கும். ஆதலால் மாகாண முதலமைச்சரின் பரிந்துரைகளை கேட்டு செயல்படும் நிலை என்பது முற்றாக இல்லாது போகும்.

ஆளுநர் சட்டவாக்கத் துறையிலும், நிறைவேற்றுத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய சூழ்நிலையில் அதிகாரங்கள் உண்டு என்பது தவிர இருக்கின்ற அதிகாரங்கள் அனைத்தும் இவருடைய கைகளில், இதற்கு அப்பால் ஜனாதிபதியின் பிரதிநிதியாக மாகாண சபையில் ஆளுநர் இருப்பதால் மத்திய அரசின் அதிகாரங்களை கூட ஆளுநரே செயற்படுத்துகின்ற நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் மாகாண, மத்திய அரசினுடைய அதிகாரங்கள் ஓர் ஆளுநரின் கைகளில் உள்ள சந்தர்ப்பத்தில் தெர்ந்தெடுக்கப்படப் போகும் மாகாண சபையினால் எதனையும் சாதிக்க முடியாது என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது.

அதிலும் பொதுவாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை தமிழ், முஸ்லிம் இனங்களின் பிரதிநிதித்துவங்கள் இணைந்தே ஆட்சியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் நிலவி வருகின்றது.

அதிலும் யார் முதல்வர் என்கின்ற போட்டி வேறு. இவ்வாறிருக்க முஸ்லிம்கள் சார்பாக மாத்திரமே கடந்த கால செயற்பாடுகளை பதிவு செய்திருக்கும் ஹிஸ்புல்லா போன்ற ஒருவர் தமிழ் மக்களினதும், அவர்கள் சார்பாக மாகாண சபைக்குள் செல்லும் பிரதிநிதிகளதும் அபிலாஷைகளை எவ்வாறு பூர்த்தி செய்வார்? என்பது ஐயமே!

Latest Offers