காலி சிற்றெஸ் தோட்ட மக்களின் தீராத பிரச்சினையாக நிலவும் காணிப்பிரச்சினை

Report Print Sumi in கட்டுரை

ஒரு துண்டுக் காணி தருவதற்கே தோட்ட நிர்வாகம் பாகுபாடு காட்டுது, எங்கட காலம் முடிஞ்சு போச்சு, எங்கட பிள்ளைகளாவது நல்லா இருக்க வேண்டுமென்றே எங்கட ஆசை என சலித்துக்கொண்டே கூறினார் சிற்ரெஸ் தோட்டத்தில் றப்பர் வெட்டும் பாக்கியம் என்பவர்.

இலங்கையில் வாழும் சகல இன மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் மிகப் பிரதான பிரச்சினையாக காணிப் பிரச்சினை எழுந்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மட்டுமன்றி தென்மாகாணத்திலும் காலி மாவட்டத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் காணிப் பிரச்சினை மட்டுமன்றி செய்யும் தொழிலுக்கான கூலி நியாயமாக கிடைக்கவில்லை என்றும் தோட்ட நிர்வாகம் மீது சரமாறியாக குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றார்கள்.

காலி மாவட்டம் போத்தல பிரதேசத்தில் சிற்றெஸ் இறப்பர் தோட்டம் காணப்படுகின்றது. இந்த தோட்டத்தில் வசிக்கும் பெண்கள் இறப்பர் மரம் வெட்டி பால் எடுக்கும் தொழில் செய்கின்றார்கள்.

இந்த தோட்டத்தில் 70 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். இங்குள்ள இறப்பர் தோட்டத்தில ஆண்களுக்கு வேலை கொடுப்பதில்லை. பெண்கள் மட்டுமே வேலை பார்க்க முடியும். இவர்கள் நாள் ஒன்றுக்கு இறப்பர் பால் வெட்டி தமது அன்றாட சீவியத்தைப் பார்க்கின்றார்கள்.

இந்த தோட்டத்தில் வாழும் பெண்கள் வேறு கூலி வேலைகளுக்குச் செல்ல முடியாது. ஒரு நாளைக்கு 24 லீற்றர் பால் வெட்டினால், 700 ரூபாய் சம்பளம் தோட்ட நிர்வாகத்தினால் கொடுக்கப்படும்.

இந்த சம்பளத்தில், இருந்தே தமது குடும்பத்தின் பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் கல்வியை தொடர வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த குடும்பங்களுக்கு தோட்ட நிர்வாகத்தினரால், ஒரு துண்டு காணி வழங்கப்படுகின்றது. அந்த காணியில் அவர்களே தமக்கான வீட்டினைக் கட்ட வேண்டும்.

தோட்ட நிர்வாகத்தினரால் வழங்கப்படும் காணி சிலருக்கு வழங்கப்பட்டும் பலருக்கு வழங்கப்படாமல் உள்ளது.

இந்த றப்பர் தோட்டத்தில் பால் வெட்டும் தொழில் செய்யும் நபர் ஒருவர். தாம் எதிர்நோக்கும் கஸ்டங்கள் தொடர்பில் எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

இந்த தோட்டத்தில் தலைமுறையாக தொழில் செய்து வருகின்றோம். எங்களுக்கு காணி இல்லை. லயத்திலேயே எமது சீவியம் போகுது. இந்த தோட்டத்தில் 70 குடும்பங்கள் இருக்கிறாங்க. 20 குடும்பங்கள் லயத்தில இருக்கிறாங்க. லயத்தில இருக்கிற குடும்பத்திற்கு காணி இல்ல. எங்களுக்கு வயசு போயிட்டு, காணிய கொடுத்தா எங்க பிள்ளைங்கட வருங்காலத்த தான் எதிர்பார்த்து இருக்கின்றோம்.

எங்களுக்கு காணி கிடைச்சு, பிள்ளைகளுக்கு வீடு வாசல கட்டிக் கொடுக்க வேண்டுமென்று தான் ஆசை ஒன்று இருக்கு. அத எப்பிடியோ தெரியல காணி கொடுத்தா தான் நல்லம் என்றார்.

28 குடும்பங்களுக்கு ஒரு பகுதியிலும், 11 குடும்பங்களுக்கு ஒரு பகுதியிலும் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. 12 குடும்பத்திற்கு மற்றொரு பகுதியிலும் காணி கொடுத்திருக்கிறாங்க. எங்களுக்கு நிலம் கொடுக்கவில்லை.

காணி கிடைக்குமோ என்று தெரியவில்லை. வயது கூடிய காரணத்தைக் காட்டி காணி தரமுடியாது என கூறுகின்றார்கள். முன்னர் கொடுத்த 25 குடும்பம் மற்றும் 11 குடும்பத்திற்கான நிலத்தின் காசினை மாதாந்தம் வெட்டுகின்றார்கள்.

400 ரூபாய் முதல் 450 வரை வெட்டுகின்றார்கள். ஏனைய 12 குடும்பத்தினருக்கும் காணிக்கான சல்லி இல்லை. அரசாங்கத்தால கட்டிக் கொடுக்கிறாங்க.

சகோதரிக்கும் அம்மாவுக்கும் தோட்டத்தில வேலை கேட்டதுக்கு வேல கொடுக்கல தோட்டத்தில. நான் மட்டும் தான் தோட்டத்தில வேல செய்கிறேன்.

ஒரு நாளைக்கு 600 சம்பளத்த பெற்று இந்த கஸ்டத்திலயும் சமாளிக்கின்றோம். சம்பளத்த கூட்டித் தர சொல்லிக் கோட்டோம். கூட்டியும் கொடுக்கல. இப்ப இந்த அரசாங்கம் பிரண்டதால இல்ல என்று சொல்லிட்டாங்க. என்றார் பாக்கியம்.

தினமும் 24 லீற்றர் பால் வெட்ட வேண்டும். 24 லீற்றர் பால் வெட்டினால், 700 சம்பளம் தருவார்கள் அந்த சம்பளத்தில் தான் எமது வாழ்க்கைச் சீவியம் பார்க்கின்றோம்.

1000 ரூபாய் கூட்டித் தரச் சொல்லிக் கேட்டும் இன்னும் கூட்டித் தரவில்லை. 700 சம்பளத்தில் தான் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். சாப்பிட வேண்டும். எல்லாம் அந்தக் காசில் தான் என மனம் சளித்துக்கொண்டார்.

1000 அதிகரிக்க கேட்கின்றார்கள். ஆனால், எங்கட தோட்டத்தில கேட்கவில்லை. எந்தவிதமான போராட்டங்களும் முன்னெடுக்கவில்லை. இந்த 700 ரூபாய் காசில தான் நாங்க சாப்பிட வேணும் எங்கட பிள்ளைங்கள ஸ்கூலுக்கு அனுப்ப வேணும் என்ன தான் செய்கிறது என்றார் சாரதா.

இவ்வாறான நிலைமையில் தோட்டப்புற மக்கள் பல சவால்களின் மத்தியில் தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

சிற்றெஸ் தோட்டத்தில உள்ள நான்கு லயத்து மக்களுக்கும் அரசாங்கம் தேவையானதுசெய்து கொடுக்கிறாங்க. தோட்ட மக்கள் கோரும் 1000 ரூபா சம்பளத்த அதிகரிக்க தற்போது ஆலோசித்து வருகின்றோம். முடிவு கிட்டத்தில் தருவார்கள் என நம்புகின்றேன்.

றப்பர் தொழிலாளர்களுக்கான ஒன்றியங்கள் இருக்கின்றன. அவர்களுடன் தான் கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த தோட்டத்தில இருக்கிற மக்களுக்கு 7 பேர்ச் அளவிலான காணி கொடுக்கின்றோம்.

அத்தோடு அவர்களுக்கு தேவையான அனைத்தும் தோட்ட நிர்வாகத்தினாரால் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு 3 வருடத்திற்கும் ஒரு தடவை கைச்சாத்திடப்படுகின்றது.

அந்த வருடத்திற்கான கைசாத்திடவுள்ளனர். கைச்சாத்திட்டா அவங்க கேட்கிற 1000 ரூபாய் சம்பளம் கொடுக்க முடியுமென நினைக்கிறன் என்றார் தோட்ட சுபிரின்டன்ட் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கும் மக்கள், இங்குள்ள ஏனைய இனத்தவர்களுடன் எந்தவித முரண்பாடுளுமின்றி வாழ்கின்றார்கள்.

இந்த பகுதியில் தமிழ், சிங்கள மக்கள் வாழ்கின்றார்கள். இங்குள்ள மக்கள் இன, மத, பேதம் பார்ப்பதில்லை. சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி வாழ்ந்து வருகின்றார்கள்.

ஏனைய இன மக்களுடன் சமத்துவத்தைப் பேணவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பல நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில், மொழிகளினால் தாம் எந்தப் பிரச்சினையையும் எதிர்நோக்கவில்லை.

சிங்கள மொழி கதைக்க முடிகின்ற காரணத்தினால், சக இன மக்களுடன் பேதமின்றி வாழ்கின்றார்கள். ஆனால், பேதமின்றி வாழ்ந்தாலும், இந்த மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மலைய மக்களுக்கு அது ஓர் சாபமாக தான் காணப்படுகின்றது.