கறுப்பு அறிக்கையாக மாறுவதற்கு முன்னோடியாக வெள்ளை அறிக்கையாக மாறும் உத்தேச நகல் அரசியல் யாப்பு!

Report Print M.Thirunavukkarasu in கட்டுரை

“இன இணக்கப்பாடு பற்றி பலர் மிகச் சாமர்த்தியமான முறையில் நயவஞ்சகமாகப் பேசிவருகிறார்கள். தம்மிடம் இருக்கக்கூடிய அதிகாரத்தின் மூலம் நாட்டின் மற்றைய மக்களை அடக்கி ஆள்வதன் வாயிலாகவும், ஏனைய இனங்களின் மொழி, பண்பாடு, அபிலாசைகள் என்பனவற்றை நசுக்குவதன் வாயிலாகவும் அவர்கள் தேசிய ஐக்கியத்தை உருவாக்கிட விரும்புகிறார்கள்” என்று அன்றைய பிரதமர் டட்லி சேனாநாயக்க 1968ஆம் ஆண்டு மாவட்டசபை வெள்ளை அறிக்கைக்கு எதிராக சுதந்திரக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த போது நாடாளுமன்றத்தில் பேசினார்.

ஏனைய இனங்களின் அழிவில் தேசிய ஐக்கியத்தை உருவாக்குவது தவறு என்ற உண்மையை டட்லி சேனாநாயக்க கூறியது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் இவரது வார்த்தைகள் நஞ்சூறிய இதயத்திலிருந்து தேன் தடவிய நாக்கினால் பேசப்பட்டவையாகும்.

சிங்களம் மட்டும் உத்தியோக மொழியாக இருக்க வேண்டுமென்று அன்றைய அரசாங்க சபையில் 1944ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்வைத்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

அவ்வேளை சிங்களத்துடன் தமிழும் உத்தியோக மொழியாக்கப்பட வேண்டுமென்று மட்டக்களப்பு உறுப்பினர் வி.நல்லய்யா திருத்தப் பிரேரணை கொண்டுவந்த போது அதனைக் கடுமையாக எதிர்த்தவர் டட்லி சேனாநாயக்கதான்.

ஆனாலும் தமிழும் உத்தியோக மொழியாக வேண்டுமென்ற திருத்தம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது அதனை எதிர்த்து வாக்களித்த இருவரில் டட்லி சேனாநாயக்க முக்கியமானவர்.

மேலும் “நான் உயிரோடு இருக்கும் வரையில் தமிழ் மக்கள் மீது எவரையும் ஆதிக்கம் செலுத்த விடமாட்டேன்” என்று 1955ஆம் ஆண்டு அன்றைய ஐதேக பிரதமர் சேர்.ஜோன். கொத்தலாவல யாழ்ப்பாணத்தில் பெரும் கரகோஷத்தின் மத்தியில் கூறினார்.

ஆனால் 1956ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் தொடர்பாக கொழும்பில் பேசுகையில் “இருமொழிகளுக்கும் சம அந்தஸ்து கொடுப்பது என்பது சிங்கள மொழியினதும், சிங்கள இனத்தினதும் அழிவாகவே முடியும்” என்று அதே சேர்.ஜோன் கொத்தலாவல கூறினார்.

“தமிழுக்கு சம அந்தஸ்து வழங்கப்படுமானால் இலங்கை தென்னிந்தியாவின் ஒரு பகுதியாக மாறிவிடும்” என்ற கருத்தை 1956ஆம் தேர்தல் காலத்தில் ஐதேக பெரிதும் பேசிவந்ததாக ஐ.டி.எஸ்.வீரவர்த்தன 1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பற்றிய தனது நூலில் எழுதியுள்ளார்.

இவ்வாறு ஈழத் தமிழர்களுக்கு எதிராக அவர்களை இந்தியாவோடும் இணைத்து நஞ்சைக் கக்கும் கருத்துக்களைக் ஐதேக தலைவர்கள் எப்போதும் கூறிவந்துள்ளார்கள்.

மேற்படி முதலாவது மேற்கோளில் “இன இணக்கப்பாடு பற்றி பலர் மிகச் சாமர்த்தியமான முறையில் நயவஞ்சகமாகப் பேசிவருகிறார்கள்” என்று டட்லி சேனாநாயக்க கூறியிருப்பது தமிழரை அழிப்பதற்கான அவரது நயவஞ்ஞகத் தனத்தைக் காட்டுகிறது என்பது பெரிதும் கவனத்திற்குரியது.

1968ஆம் ஆண்டு மாவட்டசபை மசோதாவை சட்டமாக்காமல் அதை வெள்ளை அறிக்கையாக மாற்றி பின்பு தீயிட்டுச் சாம்பல், கறுப்பு அறிக்கையாக மாற்றிய கதையையும், தமிழரசுக் கட்சியை 5 ஆண்டுகளாக ஏமாற்றி தம் ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த ஐதேகவின் திறமையையும் இங்கு மீண்டும் மீட்டு ஒப்பிட்டுப் பார்க்குமாறு இன்றைய அரசியல் போக்கு ஆணையிடுகிறது.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தலைமையிலான அமைச்சர் குழு கடந்த 18ஆம் திகதி தனித் தனியே மல்வத்த பீடாதிபதியையும், அஸ்கிரிய பீடாதிபதியையும் சந்தித்தது. உத்தேச அரசியல் யாப்பு நகல் தொடர்பான விளக்கங்களை பீடாதிபதிகளுக்கு அளிப்பதற்கானசந்திபபாக இது அமைந்தது.

நாடாளுமன்றத்தில் பல தரப்பினரதும் கருத்துக்களை அறிந்து பின்பு ஒரு சட்ட வரைவை உருவாக்குவதற்கான ஓர் ஆவணமாக இந்த நிபுணர் குழு அறிக்கை அமைந்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல மல்வத்த பீடாதிபதியிடம் கூறினார்.

அவர் கூறிய விளக்கத்தைப் பார்க்கும் போது இந்த உத்தேச அரசியல் யாப்பின் நகலானது ஒரு ‘வெள்ளை அறிக்கை’ நிலைக்கே உரியது என்ற புரிதலையே தருகிறது.

மாவட்ட சபை மசோதாவை 1968ஆம் ஆண்டு ஒரு வெள்ளை அறிக்கையாக மாற்றிய அனுபவத்தை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுள்ளது. அப்படியே இந்த யாப்பு முன்வரைவு பற்றிய விடயங்களும் ஒரு வெள்ளை அறிக்கையாகிப் பின்பு சாம்பல், கறுப்பு அறிக்கை என்ற நிலையுடன் தன் ஆயுளை முடித்துக் கொள்ளும் என்பதில் சந்தேமில்லை.

‘வெள்ளை அறிக்கை’ என்ற பதம் பிரித்தானிய அரசியலில் குறிப்பாக 1922ஆம் ஆண்டிலிருந்து பிரயோகத்திற்கு வந்தது. வெள்ளை அறிக்கை (White Paper) நீல அறிக்கை (Blue Book), பச்சை அறிக்கை (GreenPaper)எனப் பலவகை அறிக்கைகள் உள்ளன.

அறிக்கையின் முகப்பு அட்டையின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டே இவற்றிற்கான பெயர்கள் இடப்பட்டன. அதாவது இத்தகைய நிற அறிக்கைகள் எதுவும் இறுதியானவை அல்ல என்பதே இதன் அடிப்படை உண்மையாகும்.

வெள்ளை அறிக்கை என்பதன் பொருள் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடவும், அவர்களது அபிப்பிராயங்களை அறிவதற்குமான ஒர் ஆவணம் என்பதுமேயாகும்.

இந்த அர்த்தத்திற்தான் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள உத்தேச அரசியல் யாப்பு நகல் உள்ளது என்பதை பீடாதிபதிகளிடம் அமைச்சர் குழு தெரிவித்துள்ளது.

அதற்கு மல்வத்த பீடாதிபதி அளித்த பதில் மிகவும் சுவாரஸ்ஸியமானது. அதாவது இந்த ஆண்டில் பல தேர்தல்கள் நடைபெற உள்ளன. அவையெல்லாம் நடந்து முடிந்த பின்பு இதைப் பற்றி சிந்திக்கலாம்.

இப்போது அவரசப்பட வேண்டியதில்லை என்பதே அந்தப் பதிலாகும். இந்த வெள்ளை அறிக்கைகூட சாம்பல் அறிக்கையாக மாறப் போவதற்கான கட்டியமாகவே மேற்படி மல்வத்த பீடாதிபதியின் கருத்து அமைந்துள்ளது.

வெள்ளை அறிக்கை தயாரிக்கும் நடைமுறை சார்ந்த ஐதேகவின் அனுபவத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. இதற்கு உதாரணமாக மாவட்டசபை மசோதாவை (District Council Bill 1968) மிக வெற்றிகரமாக ஒரு வெள்ளை அறிக்கையாக மாற்றி அதனோடு அதன் கதையை டட்லி சேனாநாயக்க அரசாங்கம் முடிவிற்குக் கொண்டுவந்ததைக் கூறலாம்.

ஐதேகவின் இந்த நுணுக்கமான கையாளலையும் அதில் இருந்து தமிழ் மக்கள் கற்றிருக்கக்கூடிய படிப்பினையையும் இங்கு ஒரு கணம் மீட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.

1965ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியுடன் கூட்டுச் சேராமல் அரசாங்கத்தை அமைக்க முடியாது என்ற நிலை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்தது. இந்நிலையில் ‘தேசிய அரசாங்கம்’ என்ற பெயரில் தமிழரசுக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஐதேக ஆட்சி அமைத்தது.

அப்போது அதன்பொருட்டு டட்லி – செல்வா ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு வருடத்திற்குள் மாவட்ட சபைகள் அமைக்கப்படும் என்று ஒப்பந்தமானது.

ஆனால் ஒரு வருடம் கடந்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் 1967ஆம் ஆண்டு டட்லி சேனாநாயக்க அரசாங்கத்தை தந்தை செல்வா வற்புறுத்தத் தொடங்கினார்.

இந்நிலையில் ஐதேக வின் மூளையாக செயற்பட்டு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஓர் உபாயத்தை வகுத்தார். எனது சிங்கள நண்பரான ஆங்கிலப் பத்திரிகையாளர் காமினி நவரட்ண இதுதொடர்பாக என்னுடன் பேசிக்கொண்ட விடயத்தை இங்கு குறிப்பிடுவது அவசியம்.

இது பற்றி தனது நண்பரான ஏரிக்கரை பத்திரிகை ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கூறியதாக காமினி நவரட்ண என்னிடம் கூறியவற்றை சுருக்கமாக நோக்குவோம்.

அதாவது ஏரிக்கரை ஆங்கில பத்திரிகை ஆசிரியர் ஒருவரை அழைத்து தமது அரசாங்கத்திற்கு செல்வநாயகம் நெருக்கடி கொடுப்பதாகவும், அதனை தவிர்ப்பதற்கு பத்திரிகை செயலாற்ற வேண்டுமென்றும் ஜெவர்த்தன அந்த பத்திரிகை ஆசிரியரிடம் கூறினார்.

எனவே மாவட்டசபை சம்பந்தமான மசோதாவை உருவாக்குவது நாட்டைப் பிளப்பதற்கான செயல் என்ற வகையில் அதற்கு எதிர்ப்பு ஏற்படக்கூடியவாறு பத்திரிகையில் கட்டுரைகளும், ஆசிரியர் தலையங்கமும் தீட்டப்பட வேண்டும் என்று ஜெயவர்த்தன கேட்டுக் கொண்டார்.

இதன்படி அந்த பத்திரிகை ஆசிரியர் பத்திரிகையில் தனது சதிகார யுத்தத்தை ஆரம்பித்தார். அதைப் பின்பற்றி சிங்களப் பத்திரிகைகளும் நெருப்பைப் பற்றி எரியவைத்தன.

செல்வநாயகத்திடம் இப்பத்திரிகைச் செய்திகளை டட்லி சேனாநாயக்க காண்பித்து அதன் அடிப்படையில் மாவட்டசபை அமைப்பது பற்றிய விடயத்தை மேலும் ஒராண்டிற்கு மேல் ஒத்திப்போட முடிந்தது.

இதன் பின்பு தொடர்ந்தும் செல்வநாயகத்தால் அமைதிகாக்க முடியாது இருந்தது. இந்நிலையில் 1968ஆம் ஆண்டு மாவட்டசபை மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐதேக ஒப்புக்கொண்டது.

ஆனாலும் அதனை ஒரு வெள்ளை அறிக்கையாக குறுக்கி இறுதியில் ஐதேக அதற்கு சமாதி கட்டியது. இதுபற்றி சற்று விரிவாக நோக்க வேண்டியது அவசியம்.

தமிழரசுக் கட்சியில் தந்தை செல்வாவின் மூளையாக ஆரம்பகாலத்தில் செயற்பட்டவர் கோப்பாய் கோமன் என்று அழைக்கப்படும் கு.வன்னியசிங்கம். அதாவது கொழும்பை மையமாகக் கொண்ட செல்வாவிற்கு தமிழ் மக்களின் வாழ்வோடு பரீட்சையமான ஒரு மூளைசாலி அவசியப்பட்டது.

அது கு.வன்னியசிங்கமாக அமைந்தது. 1959ஆம் ஆண்டு வன்னியசிங்கத்தின் திடீர் மரணத்தோடு அந்த இடம் வெற்றிடமானது. பின்பு அந்த இடத்தை நிரப்பக்கூடிய செல்வாவின் மூளையாகச் செயற்பட்டவர் காவலூர் நவரத்தினமாவர்.

1965ஆம் ஆண்டுவரை அவரே அந்தப் பாத்திரத்தை பெரிதும் வகித்தார். 1962ஆம் ஆண்டு சத்தியாக்கிரகம் சம்பந்தமான திட்டமிடல், பின்பு அதனை முடிவிற்குக் கொண்டுவருதல் தொடர்பாக அனைத்து வகையிலும் செல்வநாயகத்தின் மூளையாக நவரத்தினம் செயற்பட்டார்.

ஆனால் 1965ஆம் ஆண்டு ஒரு புது இரசாயன மாற்றம் ஏற்பட்டது. 1965ஆம் ஆண்டோடு செல்வநாயகத்தின் மூளையாக கொழும்பை மையமாகக் கொண்ட மு.திருச்செல்வம் பாத்திரம் வகிக்கலானார். அதனோடு நவரத்தினத்தின் பாத்திரத்திற்கு முடிவு கட்டப்பட்டது.

அக்காலகட்ட அரசியல் அனுபங்களை அறிந்து கொள்ளவதற்காக 1980ஆம் ஆண்டின் மத்தியில் பல ஞாயிறு நாட்களில் காவலூர் நவரத்தினம் அவர்களை சந்தித்துள்ளேன். அவர் பல வியப்பிற்குரிய அனுபவங்களை என்னிடம் தெரிவித்துள்ளார்.

ஏரிக்கரை பத்திரிகை அலுவலகத்தில் மிகவும் இரகசியமாக பூட்டப்பட்ட அறைக்குள் இருந்து 1965ஆம் ஆண்டு டட்லி - செல்வா ஒப்பந்தத்திற்கான நடவடிக்கைகள் நிகழ்ந்ததைப் பற்றி வர்ணித்தார்.

அப்போது டட்லி சேனாநாயக்கவிடமும், ஜெவர்த்தனவிடமும் காணப்பட்ட அவசரம் அரசாங்கம் அமைப்பது பற்றியதாக இருந்ததே தவிர இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது பற்றிய விடயத்தில் இதயசுத்தி வெளிப்படவில்லை என்று கூறினார்.

அவசர அவசரமாகத் தயாரிக்கப்பட்ட அந்த ஒப்பந்த நகலில் இருக்கும் குறைகள் பல சுட்டிக் காட்டப்பட்ட போது நீல மையால் எழுதப்பட்ட அந்த நகலில் டட்லி சேனாநாயக்க தனது பச்சை மை பேனாவால் சில திருத்தங்களை மேற்கொண்டார் என்று கூறி கையால் எழுத்தப்பட்ட அந்த மூல அறிக்கையை அவர் என்னிடம் காண்பித்தார்.

யாழ் பல்கலைக்கழக அருஞ்சுவடிக் காப்பகத்தில்(Archives) அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கு அந்த மூல ஆவணத்தை தருமாறு அவரிடம் நான் வேண்டினேன் ஆயினும் அது கைகூடவில்லை.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் எந்தவிதமான அக்கறையையும் டட்லி சேனாநாயக்கவோ, ஜெயவர்த்தனவோ பின்பு காண்பிக்கவில்லை என்று அவர் கூறியதுடன்கூடவே மு.திருச்செல்வம் சம்பந்தமாக பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் என்னிடம் விபரித்தார்.

அவை தனியான ஆய்விற்குரியவை. டட்லி – செல்வா ஒப்பந்தத்தில் இருந்து அதிக தூரம் விலகியதாக மாவட்டசபை மசோதா தயாரிக்கப்பட்டது. இறுதியில் ஒரு வெள்ளை அறிக்கையாகவே 1968 யூன் 5ஆம் திகதி அமைச்சர் மு.திருச்செல்வத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக’ இந்த வெள்ளை அறிக்கை வெளிவந்தது. அது 8ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவரான திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான எதிர்க்கட்சியினர் வெள்ளை அறிக்கை நகலை துண்டு துண்டாக கிழித்து நாடாளுமன்றத்தில் பறக்கவிட்டனர்.

மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும் சுதந்திரக் கட்சியின் உதவித் தலைவருமான T.B. தென்னக்கோன் ஒரு நகலை தீயிட்டுக் கொளுத்தினார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அனைவரும் நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்புச் செய்து வெளியே பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அந்த நகல்களை எரித்து கோஷமிட்டனர்.

அப்போது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க முன்னிலையில் இந்த காட்சிகள் அரங்கேறின. அத்தோடு வெள்ளை அறிக்கை சாம்பல், கறுப்பு அறிக்கையாக மாறியது. அதன் கதையும் முடிந்தது.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தை 1959ஆம் ஆண்டு 200 பௌத்த பிக்குக்களின் முன்னிலையில் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்க கிழித்தெறிந்தார். பின்பு மாவட்ட சபை வெள்ளை அறிக்கை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் கிழித்து எறியப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்ற வகையில் இனப்பிரச்சினைக்கான புதிய அரசியல் யாப்பு நகலை சந்திரிகா அரசாங்கம் 2000ஆம் ஆண்டு முன்வைத்த போது அதனை நாடாளுமன்றத்தில் துண்டு துண்டாக கிழித்து காற்றில் பறக்கவிட தலைமைதாங்கியவர் இன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்பதும் இங்கு குறிப்பிடக்கூடியது.

இப்படி ஏமாற்று வரலாறு, கிழித்தெறியும் வரலாறு, தீயிட்டுக் கொளுத்தும் வரலாறு சிறிதும் தப்பாமல் பிசகாமல் தொடர்கிறது.

இப்போது அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தலைமையிலான குழுவினரும் பீடாதிபதிகளைச் சந்தித்து அவர்களுக்கு அளித்திருக்கும் விளக்கம் மேற்படி 1968ஆம் ஆண்டு ஐதேகவின் வெள்ளை அறிக்கையை நினைவூட்டுகிறது. அப்படி என்றால் இப்போது வெள்ளை அறிக்கையாக உருமாறும் இந்த உத்தேச அரசியல் நகல் யாப்பு மேலும் சாம்பல், கறுப்பு அறிக்கை ஆவதற்குரிய அடுத்த கட்டத்திற்காக காத்திருக்கிறதே உண்மை.

மகாநாயக்கர்களின் அனுமதி பெற்றே புதிய அரசியல் அமைப்பை தயாரிப்போம் என்று ஐதேகவின் செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதனை மல்வத்த பீடாதிபதியின் மேற்படி பதிலோடு இணைத்துப் பார்த்தால் வெள்ளை அறிக்கைக்கான சமாதியும் கண்ணில் தெரியும். நெருப்பு சுடும். அது வெளிப்படையாகக் தொட்டாலும் சுடும். மறைந்திருந்து இரகசியமாகத் தொட்டாலும் சுடும்.

அவ்வாறு நெருப்பு சுடும் என்ற முன்னெச்சரிக்கையை உதாசீனம் செய்ய முடியாது. இன்றைய நிலையில் என்ன இனி நடக்கப் போகிறது என்பதை மேற்படி பின்னணியில் விளங்கிக் கொண்டு தமிழ் மக்களின் உரிமைகளை வெல்வதற்கான முழுமைப்படுத்தப்பட்ட மூலோபாயமும் அதன் பொருட்டான அரசியலுமே அவசியமானது.

தேன் தடவிய வார்த்தைகளினால் தமிழரசுக் கட்சியை அணைத்துத் தனது 5 ஆண்டுக் கால ஆட்சியை செவ்வனே பூர்த்திசெய்ய டட்லி சேனாநாயக்காவால் முடிந்தது.

அந்த நஞ்சூறிய இதயங்களில் இருந்து தேன்தடவிய வார்த்தைகளால் தமிழ்த் தலைவர்களைத் தமது கைக்குள் வைத்துத் தமிழரைத் தோற்கடிக்கும் ஏமாற்று வரலாறு இன்னும் தொடர்கிறது.

“அணிலை மரத்தில் ஏறவிட்டு குரைக்கும் நாயின் கதையாக” தமிழ் மக்களின் அரசியல் இனியும் போய்விடக்கூடாது.