71ஆவது இலங்கையின் சுதந்திர தினம்! சுதந்திரம் என்றால் என்ன?

Report Print V.T.Sahadevarajah in கட்டுரை

இலங்கை சுதந்திரமடைந்து 71 வருடங்களாகின்றன. சுதந்திரத்திற்காக மூவினங்களும் சேர்ந்து செய்த தியாகங்களை அறிவோம். ஆனால் சில காலத்தில் தமிழினம் பல வழிகளாலும் ஒடுக்கப்பட மீண்டும் விடுதலை சுதந்திர உணர்வு தலைதூக்கியது. பலனாக போராட்டம், அழிவு என்று தமிழினம் இழந்தவை ஏராளம்.

இன்று நல்லாட்சி உருவாவதற்கு அதே தமிழினம் கூடுதல் பங்கை செலுத்தியிருக்கின்றன. அவ்வினம் சுதந்திரத்தை நுகரத் துடிக்கின்றது. இந்த நிலையில் இனத்திற்கு அப்பால் சமயரீதியில் இலங்கை கூறுபோடப்பட்டிருக்கிறது. இச்சமய முரண்பாடு களையப்படவேண்டும்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம், ரி.பி.ஜாயா, ராசிக் பரீட், டீ.எஸ்.சேனநாயக்கா மற்றும் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க ஆகியோர் ஒன்றாக இணைந்தே செயற்பட்டுள்ளனர். இதனையே இன்றைய அரசியல் பொருளாதார கலாச்சார நிலைகள் உணர்த்தி நிற்கின்றன.

எமது இன ஒற்றுமை சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய விழுமியங்களுள் ஒன்றாகும். இந்த விழுமியங்கள் வளர்ந்து செல்ல வேண்டிய ஒரு கூறாகும். ஆனால் சுதந்திரத்திற்குப் பின்னர் தலைமுறை தலைமுறையாக நாம் காத்து வந்த ஒற்றுமையைப் பேணிப் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது.

நாம் அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகளாகியுள்ளன. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தேசிய வீரர்களை எமது இன்றைய இளம் சமுதாயம் நினைவுபடுத்துவது அவசியமாகும்.

எமது நாடு பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டதாகும். ஆசிய ஜோதியான புத்தபெருமானின் காலடி பட்ட பாக்கியமும் இலங்கைக்கு உண்டு.

அதேசமயம் பல்வேறு மதங்களையும் எமது நாடு போற்றிப் பாதுகாத்து வந்துள்ளது. இந்து மதத்தை எடுத்து நோக்கினால் கண்ணகி வழிபாடு பரவிய நாடு இலங்கை ஆகும். கண்டி வரலாற்றுப் புகழ் மிக்க எசல பெரஹெரா இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றையும் கொண்ட பெருமைக்குரியதாகும்.

சுதந்திரம் என்றால் என்ன?

மனிதன் பிறக்கும் போது சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் அவன் பல்வேறு நிலைகளில் பல்வேறு தடைகளால் கட்டுப்பட்டுள்ளான் என்பதே உண்மை நிலையாகும் என்கிறார் மொன்டெஸ்கியூ.

சுதந்திரம் என்பது ஒரு மனிதன் தடைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டு ஏனையவர்களின் சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையில் தான் விரும்பியதைச் செய்வதற்குள்ள உரிமைகளே எனலாம்.

ஒரு மனிதனின் விருப்பமே சுதந்திரம் என்கிறார் ஜீன் ஜக்ஸ் ருசோ. தனக்குப் போதுமானது என்ற உணர்வினால் ஒருவனுக்கு ஏற்படும் உளத்துணிவு நிலையே சுதந்திரமாகும் என்கிறார் ஹெகல். பிறருடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகியிருப்பதே சுதந்திரம் என்கிறார் போசன்ருவேட்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் ஒரு கூறாக உள்ளனர். அம்மக்கள் ஐக்கியமாக இயங்கினாலன்றி எந்த ஒரு சமூகமும் தனித்து முன்னேற்றமடைய முடியாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

இந்தக் கொள்கையை எமது தேசிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் அன்றைய காலத்தில் உணர்ந்து செயல்பட்டிருப்பதை எமது வரலாற்றினூடாக காணக்கூடியதாகவுள்ளது.

இலங்கையில் சுதந்திரம்!

சோழ மன்னர்கள் இலங்கையை ஆண்ட போது அவர்களுக்கு எதிராகப் போராடி நாட்டை மீட்ட பெருமையும் இந்த நாட்டுக்கு உண்டு. இலங்கை வளம் மிகுந்த நாடென்பதில் சந்தேகமில்லை. அதனாலேயே வெளிநாட்டார் இங்கு வந்து நமது நாட்டைக் கைப்பற்றினர்.

இலங்கையை அவர்கள் ஆட்சி செய்தது மட்டுமன்றி தேயிலை, இறப்பர், கோப்பி போன்ற பயிர்களையும் பயிரிட்டனர். நீண்ட காலமாக விவசாய நாடாக திகழ்ந்த எமது நாட்டில் பெருந்தோட்டத் துறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்காரணமாக அக்காலத்தில் வேறு நாடுகளிலிருந்து உணவுத் தேவைக்கான பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைமை ஏற்பட்டது. இலங்கையில் மட்டுமன்றி ஐரோப்பியர் ஆட்சி செய்த நாடுகளில் எல்லாம் இந்நிலையே ஏற்பட்டது.

1505ஆம் ஆண்டு கரையோரப் பகுதியை கைப்பற்றிய ஐரோப்பியர்களான போர்த்துக்கேய கத்தோலிக்கர் மதத்தினைப் பரப்பும் பணியிலும் ஈடுபட்டனர். போர்த்துக்கேயரை விரட்டிய ஒல்லாந்தர் புரட்டஸ்தாந்து மதத்தினை பரப்பினர். 1815இல் பிரித்தானியர் மத்திய மலைநாடு முதல் சகல பிரதேசங்களையும் கைப்பற்றி முழு இலங்கையையும் தமதாக்கினர்.

இவர்கள் 152 வருடங்கள் இலங்கையை ஆட்சி செய்தனர். 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திரம் பெற்ற காலம் வரை 152 வருடங்கள் பிரித்தானியர் ஆட்சி செய்துள்ளனர். நான்கு நூற்றாண்டு காலப் பகுதிக்கு மேலாக எமது நாடு அந்நியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

இந்த நான்கு நூற்றாண்டுகள் எமது மூதாதையர் சுதந்திரத்துக்காகப் போராடியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் எமது மூதாதையரது வீரப் பண்புகள் வீரச் செயல்கள் வரலாற்றில் புகழ் வாய்ந்தவையாகும். இந்த வீரர்களை நினைவுகூருவது இன்றியமையாததாகும்.

அவர்கள் தம்மை அர்ப்பணித்தமையால் நாம் இன்று சுதந்திரமாக வாழ்கின்றோம். ஆங்கிலேயரிடமிருந்து நாட்டை மீட்பதற்காக இலங்கையர் அனைவரும் இன, மத, மொழி பேதமின்றி போராடியுள்ளனர்.

இந்து மதத்தினையும் பெளத்த மதத்தினையும் காக்க இவர்கள் அரும்பாடுபட்டுள்ளனர். ஒன்றாக கைகோர்த்து செயற்பட்டுள்ளனர். இவர்களை நினைவுகூருவதும் எம் அனைவரது கடமையாகும்.

இன்றைய சுதந்திர தினத்தில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அனைவரும் பேதமின்றி இதனை கருத்தில் கொள்வது முக்கியம். எமது தாய் நாட்டின் பெருமையை உலகறிய திடசங்கற்பம் பூண வேண்டும்.

கடந்த கால யுத்தத்தினால் ஐக்கியம் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது மக்கள் மத்தியில் நல்லுறவு வலுப்பெற்று வருகின்றது. யுத்தம் ஓய்ந்த பின்னர் மீண்டும் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஒற்றுமையினை தொடர்ந்தும் பாதுகாப்பது தமிழ் சிங்கள மொழிகளை பேசும் சகலரதும் கடமையாகும். அப்போதே நாம் உண்மையான சுதந்திரத்தினை அனுபவிக்க முடியும்.

நல்லாட்சியும், சுதந்திரமும்...

ஒரு நாட்டில் நல்லாட்சி நிலவினால் மட்டுமே நிரந்தர சமாதானம் ஏற்படும். அப்போதுதான் மக்கள் சுதந்திரமாக வாழ முடியும். சமாதானம் நாட்டில் மட்டுமல்ல வீட்டிலும் சமூகத்திலும் சுற்றுச் சூழலிலும் ஊர் எல்லைப்புறங்களிலும் பெண்கள், சிறுவர்கள், மதகுருமார்கள், கல்விமான்கள் அரசியல்வாதிகள் இளைஞர்கள் யுவதிகள்

போன்ற அனைவரின் உணர்விலும் உள்ளத்திலும் சமாதானம் சமாதான உணர்வு ஏற்பட வேண்டும். விட்டுக்கொடுப்பு என்பது ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஏற்பட வேண்டும்.

கருத்து முரண்பாடு, விட்டுக்கொடுக்காத தன்மை, புரிந்துணர்வு இன்மை போன்றவைகளே இன முரண்பாட்டையும் இனப்பிரச்சினையையும் சமாதான மின்மையும் ஏற்படுத்துகின்றது.

ஆகையால் சமாதானம் என்பது ஒரு தூணில் கட்டியெழுப்ப முடியாது. சமாதானம் என்பது ஒவ்வொரு மனிதன் மனங்களிலும் உணர்வுகளிலும் ஏற்பட வேண்டும்.

சிறுவர்கள் பெண்கள் மதகுருமார்கள் எல்லைக்கிராம மக்கள் அரசியல்வாதிகள் பல்கலைகழக மாணவர்கள் கல்விமான்கள் போன்றவர்களின் மனதில் சமாதானம் ஏற்பட வேண்டும். இவ்வாறு பல்வேறு கோணங்களிலும் சமாதானம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இன்று இறையருளால் நல்லாட்சி என்ற பதத்திற்கு படிப்படியாக அர்த்தம் பெறப்பட்டுவருகிறது. அது நிலைத்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்பது பலரதும் பிரார்த்தனையாகும்.

இன்றைய உலகம் சண்டை சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கிறது. தேசீயம் – சர்வதேசம் பற்றி சண்டைகள், இன – மத சச்சரவுகள், வர்க்க-வகுப்புப் பூசல்கள் ஆகிய இவற்றை அலட்சியப்படுத்துவதோ, இல்லை என்று மறுத்துரைப்பதோ முட்டாள் தனமானது. இவற்றிற்கு நாம் சமாதான முறையிலேயே தீர்வுக்காண வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை!

பல்லின பல்சமூகமுள்ள ஒருநாட்டில் ஒரு சமயத்தின்மிதுள்ள அதீத ஈடுபாடு சுதந்திரத்திற்கு தடையாகவுள்ளது. எனவே அங்கு வேற்றுமையில் ஒற்றுமைகாண வேண்டியுள்ளது.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இப்போக்கை ஆரம்பித்து வைத்தவர் இந்தியாவின் புகழ்பெற்ற பேரரசன் அசோக சக்கரவர்த்தி எனக் கூறமுடியும். அவருக்கு குறிப்பிட்ட ஒரு சமயத்துடன் விருப்பு இருந்த போதிலும் அவர் சமயங்களின் வேறுபட்ட தன்மைகளை மதித்தார். அவர் சமயங்களின் கூட்டை சக்தி வாய்ந்த ஒட்டிப் பிணைந்த ஒரு

சக்தியாகக் கண்டார். எனவே அவர் மக்களிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வளர்க்க உதவக்கூடிய சமயங்களில் காணப்பட்ட நல்லம்சங்களைத் தேர்ந்தெடுத்தார்.

அவர் நாடுகளை யுத்தங்கள் மூலம் வென்றெடுக்கும் சம்பிரதாய வழமைகளைக் கைவிட்டார். அதற்குப் பதிலாக சமயங்களில் காணப்பட்ட சமாதானச்செய்திகளை உள்வாங்கிய தனது நேர்மையான ஆட்சி மூலம் தனது அதிகாரத்தை விஸ்தரிப்பதற்கான ஆதரவைப் பெற்றார்.

அவர் சமயங்களுக்கிடையே உள்ள வேற்றுமைகளை மதிக்குமாறு மக்களை வலியுறுத்தினார்.

மக்கள் தமது சமயத்தை புகழ்ந்து கொண்டு ஏனைய சமயங்களை இழிவுபடுத்திக் கருத்து வெளியிடுவதைத் தடுத்தார். இச்செய்தியை அவர் கல்வெட்டுகளில் செதுக்கி மக்கள் பார்வைக்கு வைத்தார். இதில் 'தனது சமயத்தைப் புகழ்ந்து ஏனைய சமயங்களை இழிவு படுத்துபவர்கள் தமக்குத் தெரியாமலேயே தமது சமயத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர்' என்று குறிப்பிட்டிருந்தது. இதன் மூலம் அவர் சமய அடிப்படைவாதத்தை நேரடியாக நிராகரித்துள்ளார்.

ஒரு சமயத்தைப் பின்பற்றுபவர் ஓர் அடிப்படைவாதியாக இருக்கத்தேவையில்லை. அடிப்படைவாதம் உண்மையை மறைக்கின்றது. பார்வையை மட்டுப்படுத்துகின்றது.

மனக்கிளர்ச்சிகள் மூலம் வழி நடாத்தப்படுகின்றது. மனக்கிளர்ச்சி மூலமான செயற்பாடுகள் மிகவும் ஆபத்தான தீ பற்றியெரியக்கூடிய மனம்போனபடியான தாறுமாறான செயல்களில் இறங்கத் தூண்டும்.

ஒருவருக்கு மனதில் நம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால் பிரித்தறியும் அறிவை உள்ளடக்கிய புத்திசாலித்தனத்தை கைவிடக் கூடாது. இது எல்லா சமய போதகர்களாலும் ஊக்குவிக்கப்படும் ஒரு நடைமுறையாகும்.

வாழு வாழவிடு

எல்லா சமயத்தவர்களும் உள்நோக்கங்கள் எதுவுமில்லாமல் திறந்த மனதுடன் செயற்படவேண்டும். சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் ஒவ்வொருவரும் 'வாழு வாழ விடு' எனும் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சமயங்கள் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமான ஆயுதங்களாகப் பாவிக்கப்பட வேண்டுமே தவிர அவை சமாதானம். புரிந்துணர்வு, நம்பிக்கை, சுதந்திரம் போன்றவற்றை அழிக்கும் ஆயுதங்களாகப் பாவிக்கப்படக் கூடாது.

சமயம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விடயம். ஒவ்வொருவருக்கும் அவர் விரும்பும் சமயத்தைக் கடைப்பிடிக்கும் உரிமையுண்டு. சுதந்திர முண்டு. ஒரு சமயத்திற்கு சேவையாற்றுவது என்பது அச்சமயத்தை நம்பிக்கையுடன் கடைப்பிடிப்பதாகும். எல்லோருக்கும் ஒரு சமயமே இருக்க வேண்டும் என்று எந்த சமயப் போதகரும் கூறியதில்லை.

சமயங்கள் என்பது அதனைப் பின்பற்றுவோரின் மகிழ்ச்சி மற்றும் நன்மைக்காக அச்சமயப் போதகர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்யப்பட்ட முயற்சிகளின் பலனேயாகும். சாந்தமான மன நிலையானது எல்லாவற்றையும் குறிப்பிட்ட இலக்குடன் நோக்கி பக்கசார்பில்லாமல் நல்லதை மதிக்கவும் கெட்டதைப் புறந்தள்ளவும்

இயலுமாக்குகின்றது. இந்த வகையான ஞானம் ஊடாக அறிவுடை நிலையை நாங்கள் பின்பற்றுவதன் மூலம் முரண்பாடுகளும் மோதல்களும் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும். அங்குதான் சுதந்திரத்தை பூரணமாக நுகரமுடியும்.

இதுவே வேறுபாடுகள் நிறைந்த உலகில் சமாதானமான சகவாழ்வுக்கான வழியாகும். நாங்கள் சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் சுதந்திரமாக வாழ விரும்பினால் இதுவே அதற்கான ஒரே ஒரு தேர்வு ஆகும்.