இறையாண்மை நாடாளுமன்றத்தின் கையிலா? மஹாசங்கத்தின் காலடியிலா

Report Print M.Thirunavukkarasu in கட்டுரை

இலங்கையின் தன்னாதிக்கமும், இறையாண்மையும் கொண்ட குடியரசு என்றும் அதன் இறைமை மக்களிடம் இருந்து பிறக்கின்றது என்றும் நாடாளுமன்றம், ஜனாதிபதி, பொதுவாக்கெடுப்பு என்பவற்றிற்கு ஊடாக அந்த இறைமை பிரயோகிக்கப்படுகிறது என்றும் அரசியல் யாப்பு கூறுகிறது என மூத்த கட்டுரையாசிரியர் மு.திருநாவுக்கரசு, விரைவில் வெளிவர உள்ள தமிழீழப் புதிய தேசியவாதம் என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் தொடர்ந்தும் குறிப்பிடப்படுவதாவது,

இறைமை இறைவனிடமிருந்து பிறக்கின்றது என்றும் அந்த இறைமை மன்னனுக்கு ஊடாக பிரயோகிக்கப்படுகிறது என்றும் தெய்வீக இறைமைக் கோட்பாடு கூறுகிறது.

ஆனால் மன்னராட்சி முறையால் உருவாக்கப்பட்ட இந்த தெய்வீக உரிமைக் கோட்பாட்டை எதிர்த்து மனிதகுலம் நீண்ட போராட்டங்களின் வாயிலாக மக்கள் இறைமைக் (Popular Sovereignty) கோட்பாட்டை பெற்றெடுத்தது.

தெய்வீக இறைமைக் கோட்பாட்டை எதிர்த்து மக்கள் இறைமைக் கோட்பாடு உருவாக்கியமையே ஜனநாயகம் ஆகும்.

ஆனால் இலங்கையின் இறையாண்மையானது மீண்டும் பண்டைக் காலத்திற்குரிய தெய்வீக இறைமைக் கோட்பாட்டிற்குரிய மத நிறுவனமான மஹாசங்கத்தின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறது.

பெயரளவில் நாடாளுமன்றத்திற்கு ஊடாக மக்கள் இறைமை பிரயோகிக்கப்படுவதாக கூறினாலும் நடைமுறையில் மஹாசங்கத்தின் சுண்டிவிரல் அசைப்பின்றி நாடாளுமன்றம் எதனையும் செய்ய முடியாது.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் உட்பட அனைத்து ஆட்சியாளர்களும் மஹாசங்க மஹாநாயக்க தேரோக்களினது காலடியில் வீழ்ந்து வணங்கி அவர்களினது ஆணைக்கு உட்பட்டே ஆட்சிபுரிகின்றனர்.

எனவே உண்மையான அர்த்தத்தில் இறையாண்மையின் பிறப்பிடம் மஹாசங்கமே தவிர ஜனாதிபதியோ, நாடாளுமன்றமோ, பொதுவாக்கெடுப்போ அல்ல.

அதாவது பொதுவாக்கெடுப்பை நடத்துவதா இல்லையா என்பதைக்கூட மஹாசங்கத்தின் அனுமதியின்றித் தீர்மானிக்க முடியாது. குறிப்பாக இனப்பிரச்சினைகள் சார்ந்த அரசியல் விடயங்களுக்கு இது நூறுவீதம் பொருந்தும்.

இந்நிலையில் மஹாசங்கம் பற்றிய சரியான புரிதல் அவசியமானது. மஹாசங்கத்தைப் புரிந்து கொள்ளாமல் இலங்கையின் அரசியலைப் புரிந்து கொள்ள முடியாது.

உண்மையில் மஹாசங்கம் இலங்கை அரசியலில் இருந்து பிரிக்கப்பட முடியாத தீர்க்கமான பங்கு வகிக்கும் ஒரு தலையாய நிறுவனம். ஆதலால் இதனை பௌத்தம் - அரசியல் - தத்துவம் - வரலாறு – வாழ்நிலை சார்ந்து புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.

சிங்கள-பௌத்த தேசியவாதமானது “ஆகம, ரட்ட, பாஷாவ” என்ற மூன்று எண்ணக் கருத்துக்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகும். அதாவது ‘ஆகம’ என்பது பௌத்த மதம், ‘ரட்ட’ என்பது சிங்கள அரசு, ‘பாஷாவ’ என்பது சிங்கள மொழி. இந்த மூன்று அம்சங்களையும் ஒருங்கிணைத்த கட்டமைப்பே சிங்கள-பௌத்த தேசியவாதம் ஆகும்.

தேரவாத (Theravada)பௌத்தம் மும்மணிகளை (Triple Gem of Buddhism) அடிப்படையாகக் கொண்டது. புத்தபிரான், அவரது தர்மபோதனை, சங்கம் (The Buddha, the Dharma, and the Sangha) என்பனவே மும்மணிகளாகும்.

தேரவாத பௌத்தத்தின்படி ஞானம் பெறுவதற்கு அல்லது பரிநிர்வாணம் அடைவதற்கு இம்மூன்று மும்மணிகளும் அடிப்படையானவை. இதனால் ஒரு பௌத்தன் புத்தபிரானிடமும், அவரது போதனையிடமும், சங்கத்திடமும் சரணடைவதன் மூலம் அவன் ஞானம்பெற அல்லது பரிநிர்வாணம் அடைய முடியும்.

ஆனால் போதிசத்துவ (Bodhisattva) கோட்பாட்டு முறையைக் கொண்ட மஹாயானத்தின் (Mahayana) ஒரு பிரிவின்படி மும்மணிகளில் ஒன்றான சங்கமின்றி போதிசத்துவரின் வழிகாட்டலின் கீழ் ஒருவர் ஞானமடைய முடியும்.

மேலும் புத்தபிரான் ‘நான் கடவுள் அல்ல மனிதன் தான்’ என்று தன்னைத் தானே கூறியிருப்பதை ஆதாரங்காட்டி, அதன்படி மனிதனிடம் சரணடையத் தேவையில்லை என்பதால் புத்தரிடம் சரணடைய வேண்டியதில்லை என்றும் அவரது போதனைகளை வழிகாட்டியாகக் கொண்டு சுயமுயற்சியினால் நிர்வாணம் அடையலாம் என்றும் மேற்படி மூவகை சரணடைதலையும் நிராகரிக்கும் போதிசத்துவர்களின் தத்துவமும் உண்டு.

அதாவது மும்மணிகளிலுள்ள சங்க கோட்பாட்டின்படி மலையில் ஏறும் ஒருவர் அல்லது சகதியில் நடக்கும் ஒருவர் அக்கம் - பக்கம் உள்ளவர்களின் துணையோடு மலையேறவும், சகதியைத் தாண்டவும் எவ்வாறு முடியுமோ அவ்வாறே பிறவிப் பிணியை ஆன்மா கடப்பதற்கு சங்கத்தின் துணை வேண்டும் என்று இந்த மும்மணிக் கோட்பாடு சங்கத்தை நியாயப்படுத்துகிறது.

இதன்படி ‘ஞானம்’ (enlightenment) பெறுவதற்கான அல்லது ‘நிர்வாணம்’ (Nirvana) அடைவதற்கான கண்டிப்பான மூன்று அடிப்படைகளில் ‘சங்கம்’ (Association) ஒன்றாக அமைகிறது.

ஆனால் மஹாயானத்திலுள்ள போதிசத்துவ கொள்கையின்படி போதிசத்துவரின் வழிகாட்டலின் கீழ் ஒருவர் ‘ஞானம்’ பெறமுடியும். இங்கு ‘சங்கம்’ முக்கியமல்ல.

போதிசத்துவர் என்பது புத்தர் நிலையை அடையாத அதற்கு முற்பட்ட நிலையாகும். இதன்படி ஞானம் பெற்ற போதிசத்துவர் ஏனைய ஆன்மாக்களுக்கு உதவுவதன் பொருட்டு மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கிறார். ஆனால் புத்தபிரான் புத்தநிலையை அடைந்தபின் அவர் மீண்டும் பிறப்பதில்லை.

‘சங்க’ என்ற பதத்திற்கு பொருள் காண்பதில் வேறுபாடுகள் உண்டு. ‘சங்க’ என்பது ஆண் பிக்குக்களையும், பெண் பிக்குக்களையும் அங்கமாகக் கொண்ட அமைப்பாகும் என்று ஒரு பொருள் உண்டு.

புத்தபிரான் உயிரோடு இருந்த போது முதலில் பிக்குக்களுக்கும், பின்பு பிக்குணிகளுக்கும் என ஒழுங்கு விதிமுறைகளை வகுத்தார். இது ‘வினய பிடக’ (Vinaya Pitaka - The Basket of the Discipline) என்ற விதிமுறைகளைக் குறிக்கும்.

அதேவேளை நால்வகையினரைக் கொண்ட சங்கம் என்ற வரைவிலக்கணத்தின் படி பிக்குக்கள் (ஆண்), பிக்குணிகள் (பெண்), ஆண் பௌத்த குடியினர், பெண் பௌத்த குடியினர், the “fourfold” Sangha, which included bhikkhus (monks), bhikkhunīs (nuns), upāsaka (laymen) and upāsikā (laywomen) ஆகிய அனைவரையும் கொண்ட அமைப்பு என்றும் கூறுவர்.

இதன்படி பௌத்தமும், சங்கமும் இரண்டல்ல என்ற அத்வைத நிலை கூறப்படுகிறது. பௌத்த சங்க வரலாற்றை அதன் வளர்ச்சிப் போக்கிற்கு ஊடாக பின்வருமாறு நோக்கலாம்.

புத்தபிரான் பரிநிர்வாணம் அடைந்ததன் பின்பு அவரது பிரதம சீடரான மஹாகாசியப்ப (Mahakasyapa) தலைமையில் முதலாவது பௌத்த பேரவை (First Buddhist Council) கிமு 400ஆம் ஆண்டுளவில் பீகாரிலுள்ள சப்டப்பானி குகையில் (First Buddhist Council) மன்னன் அஜாதசத்ருவின் (Ajatashatru) ஆதரவோடு கூடியது. புத்தபிரானையும் அவரது தர்ம போதனையையும் இப்பூமியில் நிலைநிறுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கென்ற நோக்கின் அடிப்படையில் அந்தப் பேரவை கூடியது.

அப்போதுதான் புத்தபிரான், புத்த தர்மம், சங்கம் என்ற மும்மணிகளிடமும் (Triple Gem of Buddhism) சரணடைவதான வரையறையும் தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது.

எனவே இவை மூன்றிடமும் சரணடைவது என்ற கொள்கை புத்தபிரான் உயிரோடு இருக்கும் போது பிரகடனப்படுத்தப்பட்டதல்ல. அது புத்தபிரான் நிர்வாணம் அடைந்த பின் (மரணம் அடைந்த பின்) கூட்டப்பட்ட இந்த பௌத்தப் பேரவை மாநாட்டிலேயே முதல் முறையாக தீர்மானம் எடுக்கப்பட்டுப் பிரகடனப்படுத்தப்பட்டது.

நிலபுலங்களைக் கொண்ட பெரும் செல்வச் செழிப்புமிக்க பிராமணக் குடும்பத்தில் பிறந்த மஹாகாசியப்ப திருமணம் செய்தும் பிரம்மச்சாரியாக வாழ்ந்து பௌத்தரானவர் என்று கூறப்படுகிறது. இவரே பௌத்த சங்கத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுகின்றார்.

அதேவேளை இந்த முதலாவது பௌத்த பேரவையிற்தான் திரிபிடக (Tripitaka) என்ற ஒழுக்க நெறியும் தொகுக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டு, அதற்குரிய தகுதிவாய்ந்த பௌத்த மத ஞானிகள் நியமிக்கப்பட்டு, பின்பு அமைப்பு ரீதியாக அது பிரகடனப்படுத்தப்பட்டது.

புத்தபிரான் உயிரோடு இருக்கும் போது முதலில் ஆண் பிக்குக்களுக்கும், பின்பு பெண் பிக்குணிகளுக்கும் என அவர் வகுத்த ஒழுக்க விதிமுறையான ‘வினய பிடக’ (Vinaya Pitaka) நெறியோடு இங்கு சங்கத்திற்கான முதல் நிலைத் தொடக்கத்தைக் காணலாம். பின்பு முதலாவது பௌத்த பேரவையோடு இது அரச ஆதரவுடன் கூடிய ஒரு பெருநிறுவன அமைப்பைப் பெற்றது.

எனவே அரசின் கரங்கள் இந்த முதலாவது பேரவையில் தெளிவாகப் பதிந்த வண்ணம் பௌத்த சங்க அமைப்பு வடிவம் பெற்றதைக் காணலாம்.

கௌதம புத்தர் முடியையும், அரச வாழ்வையும் துறந்து பௌத்தத் துறவியானார். ஆனால் அவர் முன்வைத்த அவரது மூலவேரான துறவறத்திற்கு எதிர்மாறாக அவரது பிரதம சீடனும் ஏனைய பௌத்த துறவிகளும் பௌத்தத்தை அரச நிறுவனத்தோடு சங்கமிக்கச் செய்தனர்.

உடைமைகளையும் ஏனைய அந்தஸ்துக்களையும் துறப்பதிலிருந்து ‘துறவறம்’ ஆரம்பமாகிறது. ஆனால் இங்கு முதலாவது பௌத்த பேரவையின் மாநாட்டோடு, சொத்துக்களின் பெருநிறுவனமான அரசுடன் பௌத்தம் தன்னை பிணைத்துக் கொண்டதோடு, அதன் சங்க வரலாறு அரசியல் வரலாறாக பரிணமித்தது. இது துறவறத்தின் நேரெதிர் நிலை.

இலங்கையில் உள்ள மஹாசங்கம் என்பது நடைமுறையில் அரசின் போஷிப்பிற்குரிய பௌத்த பிக்குக்களையும், பிக்குணிகளையும் கொண்ட ஒரு நிறுவனம் என்பதே அதற்கான முதலாவது அர்த்தமாகும்.

ஆதலால் அரச போஷிப்புடன் கூடிய பிக்கு-பிக்குணிகளின் சங்கமே இங்கு மஹாசங்கம் என்ற செயல்பூர்வ அமைப்பாகிறது. இதற்கு பௌத்த மக்களின் ஆதரவும், அனுசரணையும் இருப்பது என்பது அதற்கான இரண்டாவது தளமாகும்.

எப்படியோ அரசும், ஆட்சியாளர்களும், சங்க தலைமைத்துவ பௌத்த பிக்குக்களும் இணைந்த வகையில் தீர்மானங்களும், நடைமுறைகளும் உருவாகின்றன.

மொத்தத்தில் பீடங்களின் தலைமைத் தேரோக்களும், ஆட்சியாளர்களுமே இந்த மஹாசங்கத்தின் இதயத் துடிப்பாவர். எனவே பௌத்த மஹாசங்கம் என்பதிலிருந்து அரசையும்,அரசாங்கத்தையும், ஆட்சியாளர்களையும், சிறிதும் பிரித்துப் பார்க்க முடியாது.

இந்தவகையில் பௌத்த மஹாசங்கம் எடுக்கும் முடிவே அரசாங்கத்தின் முடிவாகவும் அமைகிறது. அப்படிப் பார்க்கையில் அரசும், பௌத்த மஹாசங்கமும் இரண்டல்ல.

அடுத்து ‘இறைமை’ என்பதை நோக்வோம்,

ஒரு மனிதனுக்கான ‘சுயம்’ ‘தன்னாதிக்கம்’ தனக்கான தீர்மானத்தை எடுப்பதற்கான ‘அதிகாரம்’ என்பனவற்றின் மொத்த வடிவவே ‘இறையாண்மை’ என்பதன் பொருளாகும். இது ஒரு மனிதனின் சுயத்திலிருந்து இனம், அரசு, நாடு என்ற பெருவட்டம் வரை விரிந்து செல்கிறது.

‘தமிழ்’ என்ற பதத்திற்குள் ‘இறையாண்மை’ என்பது பொதிந்துள்ளதாக பேராசிரியர் மா.திருநாவுக்கரசு கூறும் மொழியியல் விளக்கம் இங்கு கவனிக்கத்தக்கது.

அதாவது, “தமிழ்” என்ற பதத்தைப் பிரித்தால் தம் + இழ் ஸ்ரீ தமிழ் என விரியும் என்றும் “தம்” என்பது தனது, தன்னுடைய, எனது, என்னுடைய என்ற பொருளைக் கொண்டது என்றும்.

“இழ்” என்பது வாழ்வு, வாழ்கை, வழி, தத்துவம், தர்மம், சுதந்திரம், இறையாண்மை என்ற பொருளைக் கொண்டது என்றும் கூறுகிறார்.

“தமிழ்” என்ற பதம் தனது வாழ்வியலில் “இறையாண்மையோடு” கூடிய ஒரு வாழ்க்கை முறையை கொண்டதாக வடிவம் பெற்றது என்று கூறுவதன் மூலம் இறையாண்மையை வாழ்வில் இருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பண்பாடாக அவர் அடையாளப்படுத்துகிறார்.

அதாவது “தமிழ்” என்ற சொல்லிற்குள் “இறையாண்மை” என்பது பிறப்போடும், வாழ்வோடும் இரத்தமும் தசையுமாக இணைந்துள்ளதாக வியாக்கியானப் படுத்துகிறார்.

சங்ககால திருவிளையாடல் புராணக் கதையில் வரும் புலவர் நக்கீரன், சிவபெருமானுடன் விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவர் கடவுள்தான் என்பதைத் தெரிந்துகொண்ட பின்பும் “நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்று கடவுளின் முன்னால் தனது தன்னாதிக்கத்தை, அறிவுசார்ந்த இறையாண்மையை விட்டுக் கொடுக்காத பண்பாடு தமிழனிடம் உண்டு என்று பேராசிரியர் மா.திருநாவுக்கரசு தன் வாதத்தை மேலும் முன்னெடுக்கின்றார்.

எப்படியோ ஒரு புராணக் கதைக்கு ஊடாக இறையாண்மையின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஒரு பண்பாட்டு அம்சம் இங்கு புராணக் கதைக்கு ஊடாக வெளிப்படுவதைக் காணலாம்.

மொத்தத்தில் ‘இறையாண்மை’ என்பது ‘சுயம்’ ‘தன்னாதிக்கம்’ ‘அதிகாரம்’ என்ற மூன்றையும் உள்ளடக்கிய பிறப்புரிமை சார்ந்த பதப்பிரயோகமாகும். இது ஒரு தனி மனிதனில் இருந்து தேசிய இனம் வரையான தலையாய உரிமையுமாகும்.

தமிழ்த் தேசிய இனத்திற்குரிய இந்த இறையாண்மைக்கு மாறாக ஜனநாயகம் என்ற பெயரில் தலையெண்ணும் இனநாயக நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய இனத்திற்கான இறையாண்மை முற்றிலும் மறுக்கப்படும் வரலாறே நடைமுறையாக உள்ளது.

அந்த நாடாளுமன்றத்தின் இறையாண்மை மஹாசங்கத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே தமிழ் மக்கள் பொறுத்து நாடாளுமன்றம் இறைமையற்றது.

கிமு 400ஆம் ஆண்டு முதலாவது பௌத்தப் பேரவையால் முன்வைக்கப்பட்ட புத்தம், தம்மம், சங்கம் என்ற மும்மணிகளும் கிபி 5ஆம் நூற்றாண்டு மஹாவம்சம் முன்வைத்துள்ள ஆகம, பாஷாவ, ரட்ட என்ற மூன்று நிலைப்பாடுகளும் ஒன்றிணைக்கப்பட்ட வகையில் இலங்கையில் மஹாசங்க இலட்சியம் வகுக்கப்பட்டு அதுவே நடைமுறை சார்ந்த அரசியல் சக்தியாகவும் உள்ளது.

இத்தகைய மஹாசங்கத்தின் காலடியில் இருந்தே இலங்கையில் ‘இறையாண்மை’ என்பது பிறக்கிறது. ஆதலால் நாடாளுமன்றத்திற்கு ஊடான அரசியல் தீர்வு என்பது பொய்யானது மட்டுமல்ல இலங்கையில் இறைமையின் பிறப்பிடம் மஹாசங்கத்தின் காலடியிற்தான் என்ற புரிதலின்றி சமாதானபூர்வ அரசியல் தீர்வைப் பற்றிச் சிந்திப்பது அபத்தமானது.

இல்லாத கறுப்பு பூனையை இருட்டறையில் தேடுவது போன்றதே இலங்கையின் நாடாளுமன்றத்திற்குள் அரசியற் தீர்வைத் தேடுவது என்பதாகும்.

ஆதலால் தமிழ் மக்களுக்கான தீர்வானது இவற்றிற்கு அப்பாலான சர்வதேச அணுகுமுறைக்கு ஊடாக இறைமை, சுயநிர்ணய உரிமை அதன் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியிலான ‘பொதுவாக்கெடுப்பு’ என்ற பொறிமுறைக்கு ஊடாக தீர்மானிக்கப்பட வேண்டும்.