தமிழ் மக்கள் மத்தியில் அருகிச் செல்லும் மட்பாண்ட பாத்திரங்கள்!

Report Print Thileepan Thileepan in கட்டுரை

என்ன தான் நாகரிகம் வளர்ச்சியடைந்தாலும் மனித நடவடிக்கையில் மட்பாண்டங்களின் செல்வாக்கு என்பது இன்றும் இருந்து வருகின்றது. இலங்கையின் ஆரம்ப கால மனிதன் மட்பாத்திரங்களையே பயன்படுத்தியிருந்தான்.

அவனது வீடுகள் மண்ணால் அமைக்கப்பட்டிருந்தது. அவர்களது தேவைகளுக்காக மட்பாண்பாண்டங்களே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தன.

பானை, சட்டி, சிட்டி, அரிக்கன் சட்டி, முட்டி, உண்டியல் என பலவகை மட்பாண்ட பாத்திரங்கள் மனிதனது அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இதனால் மட்பாண்ட உற்பத்தியும் தொழில் நுட்பத்துடன் கூடியதாக பரம்பரை பரம்பரையாக வளர்ச்சியடைந்து வந்திருந்தது. ஆனால் இன்று மட்பாண்ட உற்பத்திகளின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது.

நவீன விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக மக்களது வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அலுமினியம் மற்றும் சில்வர் பாத்திரங்களை தமது தேவைகளுக்கு பயன்படுத்தும் நாகரிக மனிதனாக இன்றைய மக்கள் மாறியுள்ளனர். இதன் காரணமாக மட்பாண்ட உற்பத்திகளின் விற்பனை இன்று குறைவடைந்து சென்றுள்ளது.

மட்பாண்ட உற்பத்திகளின் விற்பனை வீழ்ச்சியால் அதனை நம்பி தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்ட பலர் போதிய வருமானம் இன்றி இன்று வேறு வேலைகளில் ஆர்வம் காட்டி வருவதனால் இத் தொழில் பரம்பரை அழிவடைந்து வருகின்றது.

வவுனியா மாவட்டத்தில் மட்பாண்ட கைத்தொழில் இடம்பெறும் 10 முயற்சியாளர்கள் இருந்த போதும் இன்று இரண்டு இடத்தில் மட்டுமே உற்பத்தி நடைபெறுகின்றது. அவையும் அடுத்த பரம்பரைக்கு செல்லும் என்பது கேள்விக்குறியே. ஏனெனில் அவர்களது பிள்ளைகள் வேறு தொழில்களில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

மட்பாண்டத் தொழில் என்பது எமது பரம்பரைத் தொழில். எனது தாய், தந்தையர் அதனை செய்தே எம்மை ஆளாக்கினர். இன்று நானும் இத் தொழில் மூலமே எனது குடும்பத்தைப் பார்த்து வருகின்றேன்.

ஆனாலும் சந்தையில் தற்போது மட்பாண்ட உற்பத்திகளுக்கான கேள்வி குறைவடைந்து இருக்கின்றது. தென்பகுதியில் சிங்கள மக்கள் மட்பாண்டங்களை அதிகமாக பயன்படுத்துகின்ற போதும் எமது வடக்கு மக்கள் நாகரீக வாழ்க்கையால் மட்பாண்ட பாத்திரங்களை கைவிட்டுச் சென்று நோய்களை தாமே தேடிப் பெறுகின்றனர்.

இதனால் வருமானம் குறைவடைந்துள்ளதுடன், நவீன இயந்திரங்களைப் பெற்று இத்தொழிலை மேம்படுத்தக் கூடிய வசதிகளும், அரச ஆதரவும் எமக்கு கிடைக்கவில்லை என்கிறார் மட்பாண்டத் தொழிலில் ஈடுபடும் எஸ்.தர்மலிங்கம்.

கடந்த மாதம் தமிழ் மக்களின் திருநாளான தைத்திருநாளை முன்னிட்டு சந்தைகளில் மட்பாண்ட பானைகளை, அலுமினியம் மற்றும் சில்வர் பானைகளுடன் போட்டி போட்டே விற்பனை செய்ய வேண்டியிருந்தது.

அண்மைக் காலமாக மக்களுக்கு அவர்களது உணவுப் பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக நோய்கள் ஏற்பட்டு வருவதனால் மட்பாண்ட பாத்திரங்களை சிலர் மீண்டும் நாடி வருவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.

ஆனாலும் மட்பாண்ட தொழில் ஈடுபடுவோர் போதிய வருமானம் இன்மை, அரச ஆதரவுகள் கிடைக்காமை காரணமாக மட்பாண்ட தொழிலை கை விட்டுச் செல்லும் போக்கு காணப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தில் தேவையான மட்பாண்ட உற்பத்தி இல்லாமையாலும், உற்பத்தியில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாமையாலும் தென்பகுதியில் இருந்தும் மட்பாண்டம் இறக்குமதி செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், வவுனியா மாவட்டத்தில் மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபடுவோர் தம்மை தொடர்பு கொண்டால் அவர்களது தொழில் விருத்திக்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்க முடியும் என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய மட்பாண்ட பாத்திரங்களின் பாவனை நவீன உலகில் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதனை தடுத்து, குறைந்த செலவில் மேற்கொள்ளக் கூடிய இத்தகைய உற்பத்திகளை பாதுகாத்து, ஆரோக்கியமான வாழ்வு வாழ உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மட்பாண்டத்தை நேசிக்கும் மக்களின் அவாவாக இருக்கிறது.

Latest Offers