திறமையான பெண் அழகான உலகை படைக்கின்றாள்! சர்வதேச மகளிர் தினம்

Report Print V.T.Sahadevarajah in கட்டுரை

இன்று சர்வதேச மகளிர் தினத்திற்கு வயது 108ஆம்! 108ஆவது சர்வதேச மகளிர் தினத்தினை ஒட்டி இம்முறை இலங்கையில் 'திறமையான பெண் அழகான உலகை படைக்கின்றாள்' என்ற தொனிப்பொருளில் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

திறமையான பெண் என்கின்ற போது பெண்களை அரசியல்வாதியாக உள்வாங்கும் போது தமது திறமைகளை வளர்த்து கொள்வது அவசியமாகும்.

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ஆண்களுக்கு நிகராக மகளிர் எல்லாத் துறையிலும் வந்து விட்டனர்.

இது ஏதோ ஆண்கள் விட்டுக் கொடுத்ததால் கிடைத்த பரிசு அல்ல. அடுப்பூதும் மகளிர் தெருவுக்கு வந்து போராடியதன் காரணமாக கிடைத்த வெற்றி இது.

இந்த தினத்தை வேண்டுமானால் நாம் எளிமையாக கொண்டாடலாம். ஆனால் உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும் அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாக கிடைத்தது அல்ல.

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது. எப்படி கிடைத்தது என்று கேட்கிறீர்களா?

பதினெட்டாம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். மகளிரோ வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர்.

ஆரம்ப கல்வி கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டது. மருத்துவமும், சுதந்திரமும் என்னவென்றே கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம். இப்படிப்பட்ட நிலையில் 1857ஆம் ஆண்டு நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டனர்.

பலர் படுகாயமடைந்து வீட்டில் முடங்கினர். இதனால் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை தவிர்க்க நிலக்கரிச்சுரங்கங்கள் தொழிற்சாலைகள் நிறுவனங்களில் முதல் முறையாக மகளிருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

இந்த சந்தர்ப்பம்தான் அடுப்பூதும் மகளிரால் திறமையாக பணியாற்ற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தது. ஆண்களுக்கு நிகராக தங்களாலும் வேலை செய்ய முடியும் என்று மகளிர் சமுதாயமே அப்போதுதான் புரிந்து கொண்டது.

இருந்தும் ஊதியத்தில் மகளிருக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் மகளிர் மனம் குமுறினர். இதையடுத்து ஆண்களுக்கு இணையான ஊதியம் மற்றும் உரிமைகளை கோரி மகளிர் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அரசு செவிசாய்க்கவில்லை.

கொதித்தெழுந்த அமெரிக்க மகளிர் 1857ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தையும் அரசு அடக்கியது. வெற்றி பெற்றதாக கொக்கரித்தது.

ஆனால் அந்த பகல் கனவு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அடக்கி வைத்தால் அடங்கி போவது அடிமைத்தனம் என்று முழங்கியபடி 1907ம் ஆண்டு மகளிர் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.

இந்த முறை அமெரிக்கா மட்டுமல்லாமல் ஜேர்மனி, ரஷ்யா, டென்மார்க், பாரிஸ் உட்பட பல நாடுகளில் மகளிர் போரட்டத்தில் குதித்தனர். இருந்தும் ஆண் ஆதிக்கம் அதிகம் இருந்ததால் எல்லா போராட்டங்களும் தோல்வியில் முடிந்தன.

1910ஆம் ஆண்டு டென்மார்க்கில் முதல்முறையாக பெண்கள் உரிமை மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் உலக நாட்டில் உள்ள மகளிர் அமைப்புகள் கலந்து கொண்டன.

அப்போதுதான் மார்ச் 8ஆம் திகதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. பல்வேறு தடங்கலால் இந்த தீர்மானத்தை நிறைவேற முடியாமல் போனது.

இருந்தும் ஆங்காங்கே மகளிர் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். சோவியத் ரஷ்யாவில் செயின்ட்பீட்டர்ஸ் நகரில் 1921ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவில் மகளிர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸசாண்ட்ரா கெலனரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

1921ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி முதலாவது மகளிர் தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டது. சர்வதேச மகளிர் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!

உலக மகளிர் தினம் உருவான பின்னணியை சற்று பார்த்தால் இப்போதுதான் அவர்கள் சிந்திக்கத் துவங்கியிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. பெண் அடிமைத்தனம் எங்கு இருக்கிறன்றதோ அங்குதான் பெண் சுதந்திரம் மற்றும் பெண்கள் எழுச்சி தேவைப்படுகிறது.

பெண்கள் முன்னேற்றம் மற்றும் சம உரிமை மையமாக வைத்து கி.பி 1909இல் அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியினர் முதல் முதலாக மகளிர் தினத்தை பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி கொண்டாடினர்.

மேற்கத்திய நாடுகள் உலகறிய தாங்கள்தான் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம் என்கிறார்கள். மகளிர் அமைப்புகள் பெண்கள் சம உரிமைக்காக போர்க்கொடி ஏந்தி போராடி வருகிறார்கள்.

இத்தகைய நிகழ்வுகளாலும் போராட்டங்களாலும் மகளிர் அமைப்புகளின் செயல்களாலும் பெண்சமுதாயம் முன்னேற்றமடைந்து விட்டதா? பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருக்கின்றனவா? என்றால் இல்லை என்றே கூறலாம்.

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆண்களுக்கு சற்று அதிகமான கடமை இருப்பது போன்று இல்லற வாழ்க்கையில் பெண்கள் ஆண்களைவிட சற்று அதிகமான பொறுப்புகளை ஏற்றாக வேண்டியது நியதி.

குழந்தை வளர்ப்பில் அதிகம் பங்கெடுத்துக் கொள்வது பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின் ஓர் பெண் இருக்கிறாள். தாயகவோ, மனைவியாகவோ, சகோதரியாகவோ அல்லது மகளாகவோ.

சம உரிமை பேசும் மேற்கத்திய நாடுகளில் பெண் எழுச்சி ஏற்பட்டதன் விளைவு கருப்பைச் சுதந்திரம் அதிகமாகி இல்லறம் என்ற முறை தகர்க்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் காப்பகங்கள் அதிகரிக்கின்றன.

குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு வருடத்திற்குள் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து விடுகிறார்கள். பெற்றோர்களின் பாசம், பரிவு, அன்பு, அரவணைப்பு கிடைக்காமல் குழந்தைகள் வளர்கின்றன.

பின்விளைவு முதியோர் காப்பகங்களும் மேற்கத்திய நாடுகளில் அதிகமாக உருவாகின்றன. இந்த நிலை மேற்கத்திய நாடுகளில் மட்டும் என்றில்லை அதன் சாயலை நம் நாடுகளிலும் காணலாம்.

இவர்களின் இவ்வாறான முன்னேற்றம் நமக்குத் தேவையில்லை. கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு அடுப்பூதும் பெண்கள் இடுப்பொடிய பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை கையில் எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.

புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி 'இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.

ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.

இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களை சமாதானப்படுத்தினான்.

இயலாது போகவும் அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!

தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.

இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில் புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான்.

அந்த நாள் 1848ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாளாகும்! அந்த மார்ச் 8ஆம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

Latest Offers