கால அவகாசத்தை தடுப்பாரா சி.வி.விக்னேஸ்வரன்!

Report Print Kabilan in கட்டுரை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டுத்தொடர் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் நடத்தப்படவுள்ள நிலையிலும், இதனைத் தொடர்ந்து இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படவுள்ள நிலையிலும், ஜெனிவாவை நோக்கிய கவனம் கூர்மையடைந்திருக்கிறது.

மார்ச் 20ஆம் திகதி இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தின் வரைவு, ஏற்கனவே உறுப்பு நாடுகளின் பரிசீலனைக்காக விடப்படவுள்ள நிலையில், இது குறித்த முறைசாரா கலந்துரையாடல்களும் ஆரம்பமாகின்றன.

இலங்கை போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் முடிவடைவதற்கு இன்னமும் இரண்டு மாதங்களே எஞ்சியிருகின்ற சூழலில், போரின் போது நடந்த மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கும், நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், மேலும் இரண்டு ஆண்டு கால அவகாசத்தை அரசாங்கத்துக்கு வழங்கும் வகையிலான தீர்மான வரைவு ஒன்றே இப்போது தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வரைபு தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கின்ற சூழலில் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கின்ற ஒன்றாக இருக்காத நிலையில், இதனைவிட மென்மைப்படுத்தும் வகையான திருத்தங்களை முன்வைக்க வேண்டிய தேவை எந்த நாட்டுக்கும் இருப்பதாக தெரியவில்லை.

அதுபோலவே, 2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த முதலாவது தீர்மான வரைவை, நீர்த்துப்போகச் செய்ய உதவுமாறு, இந்தியாவின் தயவை நாடியிருந்தது இலங்கை அரசாங்கம்.

அதற்கேற்ப இந்தியாவும் அந்த தீர்மான வரைவில் இருந்த கடினமான விடயங்களை நீக்கி, மென்மைப்படுத்த உதவியிருந்தது. அது போன்று இந்த முறையும், தீர்மான வரைவை நீர்ந்துப்போக வைக்கும் போரிக்கை எதையும் முன்வைக்க வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை.

ஏனென்றால் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தைப் போலவே, ஏற்கனவே நீர்ந்துப் போகச் செய்த வரைவாகவே அது அமைந்திருக்கிறது. அதனால் தான் இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க போவதாக வெளிவிவகார அமைச்சு கூறியிருந்தது.

மேலும் இரண்டு ஆண்டுகள் இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை அளிக்க ஐ.நா, மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் முன்னெடுக்கும் முயற்சிகள், தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் ஒன்றாக அமைந்திருப்பதில் ஆச்சிரியம் இல்லை.

இந்த தீர்மான வரைவைத் தயாரிப்பதற்கு முன்னதாக பிரித்தானியா எந்த கலந்துரையாடலையும், பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர் தரப்புடனோ, அல்லது தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளுடனோ மேற்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

இதற்கும் முன்னைய சந்தர்ப்பங்களில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான தீர்மானங்களை முன்வைப்பதற்கு முன்னதாக, தமிழர் தரப்புடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன், பெயருக்காவது கலந்துரையாடல்களை அமெரிக்கா நடத்தியிருந்தது.

ஆனால் பிரித்தானியா அவ்வாறான கலந்துரையாடல்களை நடத்தாமலே பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களின் கருத்துக்ளை அறிந்து கொள்ளாமலேயே தமது வரைவைச் சமர்ப்பித்திருக்கிறது, இதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கருத்துக்கள், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கியமானயில்லை என்று ஏடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் பலமுறை ஜெனிவாவுக்குச் சென்று வந்திருக்கிறார்கள்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்றவர்களும், அடிக்கடி ஜெனிவா அமர்வுகளில் பங்கேற்றிருக்கிறார்கள். அது போன்று அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலரும் ஜெனிவாவுக்குச் சென்று அமர்வுகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் அரசியல் பிரமுகர்கள் மாத்திரமன்றி, பாதிக்கப்பட்ட தரப்பினர், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும், ஜெனிவாவுக்குச் சென்று குரல் எழுப்பியிருக்கிறார்கள்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனோ, அல்லது வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனோ அதுவரை ஒருமுறை கூட ஜெனிவாவுக்குச் சென்றதில்லை.

இது பற்றிய கடுமையான விமர்சனங்களும் கேள்விகளும் தமிழர் தரப்பிடம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வடக்கு மாகாண சபையின் பிரதிநிதிகளை (அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம்) அனுப்பியிருக்கிறோம் என்று கூறி நழுவி கொண்ட சி.வி.விக்னேஸ்வரன், இம் முறை ஜெனிவாவுக்கு செல்ல போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதனை அவர் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. எனினும் அவர் இம்முறை ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொண்டால் அது ஆச்சிரியமில்லை. ஏனென்றால் அவர் இப்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.

கட்சியின் சார்பில் என்ன செய்திருக்கிறோம் என்று மக்களுக்கு பிரசார செய்ய வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார். அதனால் அவர் ஜெனிவாவுக்கு மாத்திரமன்றி நியூயோர்க்கிற்குச் சென்றாலும் ஆச்சரியம் இல்லை.

சி.வி.விக்னேஸ்வரன் இப்போதாவது ஜெனிவாவுக்கு செல்வதற்கு முடிவு செய்தாரேயானால், அது வரவேற்கத்தக்கதே. ஆனால் அது வெறும் அரசியல் நலன்களுக்கானதாகவோ இருந்து விடக்கூடாது என்பதே பொதுவான எதிர் பார்ப்பாக உள்ளது.

ஜெனிவா கூட்டத்தொடரை தமிழர் தரப்பு இதுவரை பயன்படுத்திக் கொண்ட முறைகள் எல்லாமே, எத்தகைய விளைவுகளைத் தந்திருக்கிறன என்ற கேள்வி இருக்கிறது, குறைந்தபட்சம், தமிழர்களின் கருத்துக்களை செவிமடுத்து, அவர்களின் நலன்களை உறுதி செய்யக் கூடிய தீர்மானங்களை முன்வைக்கின்ற அளவுக்குத் தானும், ஜெனிவாவை தமிழர்களால் வளைக்க முடியவில்லை.

இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதை தடுப்பதற்காக, சி.வி.விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்கு பயணமாகப் போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

சி.வி.விக்னேஸ்வரனின் இந்தப் பயணத்தினால் அதனை சாதித்து விட முடியும் என்று எவராது நம்பினால் அது தவறு. விக்னேஸ்வரனோ, சம்பந்தனோ கூட அதனை செய்ய முடியாது, ஏனென்றால் இந்த தீர்மானத்தை முன்வைக்கப்போகும் நாடுகள் தான் அதனை தீர்மானிக்கின்றன.

அந்த நாடுகள் தமது நலன்கள் மற்றும் உறவுகளின் அடிப்படையில் தான் அதனை முடிவு செய்கின்றன. இங்கு தமிழர் தரப்பு என்பது பாதிக்கப்பட்ட தரப்பாக இருந்தாலும், இவர்கள் அந்த வட்டத்துக்கு வெளியே நிற்கலாமே தவிர அதற்குள் நுழைய முடியாது.

விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் போகப் போகிறார், இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படாது என்று நம்பிக்கையூட்டக் கூடிய நிலை இல்லை. அவர் அங்கு போனாலும் கூட அவராலும், பக்க அமர்வுகளில் உரையாற்றி விட்டுத் திரும்ப வேண்டியது தான். அதற்கு அப்பால் அவர் எதையும் செய்ய முடியாது.