பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கற்றுக்கொடுத்த பாடம்

Report Print Subathra in கட்டுரை

பிரித்தானியாவின் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்து வருகின்ற நிலையில் இது போன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான முன்னாயத்தங்களில் அரசாங்கம் இறங்கியிருக்கின்றது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுத்து விடுவது போன்று சைகை மூலம் அச்சுறுத்தலை வெளிப்படுத்தியிருந்தார் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ.

அவரது அந்தச் செயற்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பிரித்தானிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தி கொழும்புக்கு திருப்பி அழைத்தது இலங்கை அரசாங்கம்.

அத்துடன் அந்த விவகாரம் முடிந்து போகவில்லை, புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய செயலுக்கு எதிராக பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் புலம்பெயர் தமிழர்களால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ முன்னிலையாகாத நிலையில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது, அதையடுத்து இலங்கை அரசாங்கம் பிரித்தானிய அரசாங்கத்துடன் பேசியது.

இந்த சம்பவம் நிகழ்ந்தபோது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஒரு இராஜதந்திரியாக இருந்தார் என்றும் அவருக்கு வியன்னா உடன்பாட்டுக்கு அமைய இராஜதந்திர விலக்குரிமை உள்ளது என்றும் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியது.

இந்த வாதம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியினால் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போதும் அதனை கடைசியாக நடந்த விசாரணையின்போது நீதிபதி நிராகரித்திருந்தார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் இந்த அச்சுறுத்தும் செயற்பாடு அவருக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர பணிக்கு உற்பட்டது அல்ல என்று நீதிபதி கூறியிருந்தார்.

அதனால் அவருக்கு வியன்னா பிரகடணத்தின் கீழ் இராஜதந்திர விலக்குரிமை இல்லை என்றும் நீதிபதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் வழக்கு விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடக்கப்போகின்றது. இந்த விசாரணைகளின் முடிவில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியாக அறிவிக்கப்படவும் அதற்கான தண்டனை விதிக்கப்படுவதற்கும் சாத்தியங்கள் உள்ளன.

இலங்கையின் சார்பில் வெளிநாடு ஒன்றில் இராஜதந்திரப் பணிக்காக அனுப்பப்பட்ட ஒருவர் இதுபோன்ற சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டது இதுவே முதல்முறை, கடந்த இரண்டு தசாப்தங்களாக வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரங்களில் இராஜதந்திரப் பணிகளுக்கு முப்படையின் அதிகாரிகள் ஓய்வுபெற்ற படைத்தளபதிகள் நியமிக்கப்டுவது அதிகரித்திருக்கின்றது.

முப்படைகளின் தளபதிகளாக அல்லது தலைமை அதிகாரிகளாக இருந்தவர்கள் பலர், பல நாடுகளில் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் அந்த நாடுகளில் சிக்கல்களையும் எதிர்நோக்கினர். குறிப்பாக இறுதிப் போரில் பங்கெடுத்த இராணுவ கடற்படை அதிகாரிகள் பலர் மேற்குலக நாடுகளில் சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலையும் ஏற்பட்டது. அவ்வாறான தருணங்களில் சிலர் அவசரமாக திருப்பி அழைக்கப்பட்டனர்.

அதேவேளை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பலகல்லவை கனடாவுக்கான தூதுவராக இலங்கை அரசாங்கம் முன்மொழிந்த போது அந்த நாடு அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

அதுபோலவே முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை எரித்திரியா, தமது நாட்டுக்கான தூதுவராக ஏற்றுக்கொள்ள மறுத்தது.

எனினும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மாத்திரமே, வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்.

அவர் தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் பணிக்காக பொறுப்புகளுக்கு அப்பால் செயற்பட முனைந்ததன் விளைவாகவே சிக்கலில் மாட்டியிருக்கின்றார்.

கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவம் இந்த ஆண்டு தொடக்கத்தில் விஷ்வரூபம் எடுக்கத் தொடங்கியதை அடுத்து இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளைத் தேடத் தொடங்கியிருக்கிறது அரசாங்கம்.

இப்போது வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான இலங்கை தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர் பதவி பெரும்பாலும் இருக்கின்றது.

குறிப்பிட்ட நாட்டுடனான இராணுவ ரீதியான உறவுகளைப் பலப்படுத்துதல் மற்றும் இலங்கையின் பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு இந்தப் பதவி முக்கியத்துவமாக பாரக்கப்படுகின்றது.

பாதுகாப்பு ஆலோசகர்கள் வெளிநாடுகளில் பணியாற்றும்போது, இராஜதந்திரிகள் என்ற அந்தஸ்தும் அளிக்கப்படுகின்றது.

குறிப்பிட்டதொரு நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் உறவுகளின் தன்மைக்கு ஏற்ப, பாதுகாப்பு ஆலோசகர் பதவிகள் அளிக்கப்படுகின்றன.

உதாரணத்திற்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கடல்வழித் தொடர்புகள், கடல் சார்ந்த பாதுகாப்பு உறவுகள் சிக்கல்கள் அதிகம். அதனால் கடற்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரையே இரண்டு நாடுகளும் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு நியமிக்கின்றன. சில நாடுகளுக்கு முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மாறி மாறி நியமிக்கப்படுவார்கள்.

அவ்வாறு நியமிக்கப்படும் படை அதிகாரிகள் தமக்கான பணிகளுக்கு அப்பால் செல்வதை தடுப்பதற்காகவே இப்போது அரசாங்கம் ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. ஐ.நா. அமைதிப் படைக்கு இலங்கைப் படையினரை அனுப்புவதற்கு முன்னர் அங்கு செல்லும் படையினருக்கு இங்கேயே பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் எப்படியான நாட்டில், எப்படியான பணியில் ஈடுபட வேண்டும், எதையெதை செய்யக் கூடாது என்ற பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னரே அனுப்பப்படுகின்றனர்.

ஆனால் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாகப் பணியாற்றச் செல்லும் படை அதிகாரிகளுக்கு அவ்வாறான எந்தப் பயிற்சிகளும் அளிக்கப்படுவதில்லை. அங்குள்ள பொறுப்புக்கள் பற்றிய சரியான தெளிவுபடுத்தல்களும் சரியாகக் கொடுக்கப்டுவதில்லை.

போர் முனையில் திறமையாக பணியாற்றிய அதிகாரிகளை கௌரவிப்பதற்கான ஒரு பதவியாக கருதி அவர்களை பாதுகாப்பு ஆலோசகர்களாக நியமிக்கும் வழக்கமே பெரும்பாலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

உள்நாட்டில் பணியாற்றும் படை அதிகாரிகளுக்கே அடிக்கடி கருத்தரங்குகள், வழிகாட்டல் செயலமர்வுகள் நடத்தப்படும் நிலையில் வெளிநாட்டில் பணியாற்றும் படை அதிகாரிகளுக்கு இத்தகைய எந்த பயிற்சிகளும் அளிக்கப்படாததன் விளைவை அரசாங்கம் பிரிகேடியர் பிரியங்க விவகாரத்தில் தான் உணர்ந்து கொண்டது.

போதிய பயிற்சிகள், பணி பற்றிய தெளிவு இல்லாமல் நியமிக்கப்பட்ட படை அதிகாரிகளால் வினைத்திறன் மிக்க விளைவுகளையும் பெற முடியாமல் போயிருக்கும்.

போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரசாரங்கள், நகர்வுகளை தோற்கடிப்பதில் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாகவும் பாதுகாப்பு அதிகாரிகளாகவும் பணியாற்றி படை அதிகாரிகள் காத்திரமான பங்கு வகித்திருந்தார்கள்.

ஆனால் இப்போது இலங்கையை இராஜதந்திர நெருக்கடிக்குள் சிக்க வைக்கின்றவர்களாக அவர்கள் மாறியிருக்கின்றார்கள்.

இதனைக் கருத்தில்கொண்டுதான் எதிர்காலத்தில் பாதுகாப்பு ஆலோசகர்களாக நியமிக்கப்படவுள்ள இராணுவ, கடற்படை, விமானப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

வெளிவிவகார அமைச்சின் ஒரு அங்கமான பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திரப் பயிற்சி நிறுவனத்தினால் முப்படை அதிகாரிகளுக்குமான முதல் பயிற்சி கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மார்ச் 7ஆம் திகதி முடிவடைந்திருக்கின்றது.

முதல் தொகுதியில் 30 முப்படை அதிகாரிகளுக்கு பயற்சி அளிக்கப்பட்டு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இராஜதந்திர நடைமுறை அம்சங்கள் இலங்கையின் இராஜதந்திர உறவுகள் சுதந்திரத்திற்குப் பிற்ட்ட கால இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை இருதரப்பு மற்றும் பல தரப்பு இராஜதந்திரம், கலாசார இராஜதந்திரம், ஊடகங்களுடனான உறவுகள், மனித உரிமைகள், நெறிமுறைகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரிகளின் வகிபாகம் போன்ற விடயங்கள் குறித்து இந்தப் பயிற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.

இதன் மூலமாக லண்டனில் பிரியங்க பெர்னாண்டோவினால் ஏற்பட்டுள்ளது போன்ற நெருக்கடி ஏற்படாமல் தடுக்க முடியும் என்று வெளிவிவகார அமைச்சு எதிர்பார்க்கின்றது.

சர்வதேச நாடுகளுடனான பாதுகாப்பு உறவுகளை அதிகளவில் எதிர்பார்க்கும் இலங்கைக்கு இது அவசியமான ஒன்று இல்லாவிட்டால் இருதரப்பு உறவுகளை குழப்பி விட்டுப்போய்விடும் நிலை ஏற்படும்.

பொதுவாகவே வெளிநாடுகளுடனான உறவுகள் விடயத்தில் இலங்கை துறைசார் இராஜதந்திரிகளுக்கு இடமளிக்கப்படுவது குறைவு.

ஓய்வுபெற்ற படை அதிகாரிகளும் துறைசார் இராஜதந்திரிகள் அல்லாதவர்களும் இராஜதந்திரப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதன் மூலம் பெரும்பாலும் அவை அரசியல் மயப்படுத்தப்பட்டன.

அந்த நிலையை மாற்றியமைப்பதாக கூறி பதவிக்கு வந்த தற்போதைய அரசாங்கமும் கூட அதே வழியில் தான் சென்று கொண்டிருக்கின்றது.

அதேவேளை பாதுகாப்பு ஆலோசகர்கள் விடயத்தில் அரசாங்கம் சற்று விழித்துக்கொண்டிருக்கின்றது. ஏனென்றால் வெளிநாடுகளில் பணியாற்றும் படை அதிகாரிகளால் ஏற்படக்கூடிய எந்தப் பாதகமான சம்பவமும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

Latest Offers