தமிழர்களை மீண்டும் கையறு நிலைக்குள் தள்ளிய ஜெனீவா

Report Print Subathra in கட்டுரை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான புதியதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் ஐ.நாவுடனும் சர்வதேச சமூத்துடனும் இணங்கிச் செயற்படும் போக்கை இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்கத் தொடங்கிய பின்னர் ஜெனீவாவில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்றாவது தீர்மானம் இது.

2015 செப்டெம்பரில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் மற்றும் 2017 மார்ச்சில் நிறைவேற்றப்பபட்ட 34/1 தீர்மானம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே இந்த முறையும் 40/1 என்ற புதிய தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

இந்த தீர்மானத்தின் உள்ளடக்கம் ஒன்றும் புதிய விடயங்களைக் கொண்டதல்ல. அதனால்தான் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையை மீண்டும் பெறக் கூடிய சூழ்நிலை பிரித்தானியா உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

2015ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணை பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதனை அப்போது இலங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டிருந்தது, ஆனால் நான்கு ஆண்டுகளாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

2015ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் 2017ஆம் அண்டு அந்த தீர்மானத்தை நீடிப்புச் செய்யும் வகையில் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அது முடிவுக்கு வந்த பின்னர் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் இப்போது 40/1 என்ற புதிய தீர்மானத்தின் மூலம் கால நீடிப்புச் செய்யப்பட்டிருக்கின்றது.

2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு இணங்கியிருந்த இலங்கை அரசாங்கம் கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்த இணங்கியது.

ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை, என்பதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டியதற்குப் பதிலளித்துப் பேசிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கலப்பு விசாரணைப் பொறிமுறையை அமைக் கமுடியாது, அரசியலமைப்புப்படி வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் உள்ளடக்க முடியாது என்று கையை விரித்திருக்கின்றார்.

2015ஆம் ஆண்டு இதே அரசாங்கம் இந்த வாக்குறுதியைக் கொடுத்த போதும் இதே அரசியலமைப்பு தான் நடைமுறையில் இருந்தது.

எனவே அப்போது அரசாங்கம் அந்த வாக்குறுதியைக் கொடுத்த போது அரசியலமைப்பு ரீதியான தடை இருக்கவில்லையா? அல்லது அந்த தடையை அகற்றும் பலம் தமக்கு இருக்கிறது என்று நம்பியதா? இல்லை வெறும் வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு ஏமாற்றி விடலாம் என்று கருதியதா? என்று தெரியவில்லை.

எது எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கம் இப்போது வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.

இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த மறுப்பை முதல் முறையாக வெளியிட்டிருக்கின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் கால அவகாசம் முடிவடைந்த பின்னர் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி ஐ.நா மனித உரிமை ஆணையாளராக இருந்த செயிட் ராட் அல்ஹூசைன் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்ற விபரங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

அதில் அவர் மோசமான குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி தண்டனை வழங்குவதில் இலங்கை தோல்வியடைந்துள்ளதானது ஒரு பரந்து பட்ட தயக்கத்தை பிரதி பலிப்பதாக அல்லது பாதுகாப்புப் படைகள் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுவதாக தோன்றுகின்றது.

கடந்தகால மீறல்கள் தொடர்பாக நீதி முறைமையின் நம்பகத்தன்மை குறைபாடு மற்றும் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலைக்கு முடிவுகட்ட விருப்பமின்மை அல்லது இயலாமை காரணமாக நீதிப் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு தேவைப்படுகின்றது.

இது நம்பகமானதாக இருப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குத் தொடுநர்கள் அங்கீகரிக்கப்பட்ட சட்டவாளர்கள் விசாரணையாளர்களை உள்ளடக்கியதாக ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

அந்த அறிக்கை மீது விவாதம் இடம்பெற்றபோது அப்போது பிரதி வெளிவிவகார அமைச்சராக இருந்த ஹர்ஷ டி சில்வா இலங்கையின் சார்பில் பதிலளித்து உரையாற்றினார்.

அவர் வெளிநாட்டு நீதிபதிகள் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரை பற்றி எந்தக்கருத்தையுமே கூறவில்லை.

எமது சமூகத்தின் எல்லாத் தரப்பினருடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி புதிய பொறிமுறைகள் உருவாக்கப்படும். சர்வதேச நிபுணத்துவத்தையும், உதவியையும் நாம் கோருவோம். அந்த பொறுப்பை எல்லா நாடுகளும் நிறைவேற்ற முடியும் என்று மாத்திரம் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய பரிந்துரையை பகிரங்கமாக நிராகரிக்காமல் வெளிநாட்டு நிபுணத்துவமும் உதவியும் கோரப்படும் என்று மாத்திரம் அப்போது கூறியிருந்தது அரசாங்கம்.

இந்த முறை நிலைமை முற்றாகவே மாறியிருக்கின்றது. அதற்குக் காரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீடுதான்.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் உரையில் தாம் திருத்தங்களைச் செய்ததாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.

அவ்வாறு ஜனாதிபதியினால் செய்யப்பட்ட திருத்தங்களில் முக்கியமானதாக படையினர்மீதான போர்க்குற்றச்சாட்டு நிராகரிப்பும் கலப்பு விசாரணைப் பொறிமுறைக்கான எதிர்ப்பும் அமைந்திருக்கின்றது.

இறுதிக்கட்ட போரில் படையினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை என்றும் சர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்யப்பட்ட அமைப்புடன்தான் படையினர் போரிட்டனரே தவிர எந்தவொரு இனத்துடனும் அல்ல என்றும் திலக் மாரப்பன கூறியிருந்தார்.

அதைவிட போர்க்குற்றங்கள் தொடர்பான நம்பகமான நீரூபிக்கத்தக்க குற்றச்சாட்டுகள் இல்லை என்பதையும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

ஐ.தே.க அரசாங்கத்திற்கும் கலப்பு விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படாது என்பது நன்றாகவே தெரியும்.

ஆனால் அதனை வெளிப்படையாக கூறத் தயங்கி வந்தது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை ஐ.தே.க அரசாங்கத்தை கொண்டே ஜெனீவாவில் கூற வைத்திருக்கின்றார்.

2015 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்திக் கூறுகின்ற நிலையில் அந்த தீர்மானத்தின் முக்கியமான உள்ளடக்கத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்த போது எந்த நாடும் அதனை எதிர்க்கவில்லை.

அதனைக்கேட்டுக்கொண்டு அமைதியாககத் தான் இருந்தன. 2021ஆம் ஆண்டு வரை இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ள போதும் கூட கலப்பு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படாது.

2015வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதைத்தான் இது காட்டியிருக்கின்றது.

அதேவேளை இம்முறை தீர்மானம் இலங்கை அரசாங்கத்திற்கு கடிவாளம் போடத்தக்கதாக இருக்கவேண்டும் என்றும் இலங்கையைக் கண்காணிக்கும் வகையில் ஒரு செயலகத்தை ஐ.நா மனித உரிமைகைள் ஆணையாளர் பணியகம் அமைக்க வேண்டும் என்றும் கால வரம்பு ஒன்றை நிர்ணயித்து வாக்குறுதிகள் நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பரவலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைாயளர் கூட தனது அறிக்கையில் இத்தகைய பரிந்துரைகளை முன்வைத்திருந்தார்.

ஆனால் இலங்கை அரசாங்கம் ஐ.நாவின் கண்காணிப்புச் செயலகத்தை இலங்கையில் அமைப்பதற்கு இணங்க மறுத்திருக்கின்றது. காலவரம்பு நிர்ணயித்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

இந்த இரண்டு விடயங்களையும் ஜெனீவா தீர்மானத்தில் உள்ளடக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழர் தரப்பில் சிலர் முன்வைக்க முயன்ற போதும் கடைசி வரையில் அது சாத்தியப்படவில்லை.

ஜெனீவா தீர்மானம் வரைவில் திருத்தங்களைச் செய்ய முயன்றால் இலங்கை அரசும் திருத்தங்களை செய்து விடும் என்பதால் இணை அனுசரணை நாடுகள் அதில் திருத்தங்களை செய்ய விரும்பவில்லை என்றும் அதனால் அந்த நாடுகளுக்கு தாமும் அழுத்தங்களை கொடுக்கவில்லை என்றும் நழுவலான பதிலை அளித்திருந்தார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்.

2015ஆம் ஆண்டு தீர்மானத்தில் கலப்பு விசாரணை என்று நேரடியாக குறிப்பிடப்படாவிடினும் வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறை என்று கூறப்பட்டுள்ளது கலப்பு விசாரணைதான் என்றும் அதில் விட்டுக்கொடுப்பு செய்யக்கூடாது என்று அமெரிக்காவிடம் வாதிட்டு நிறைவேற்றியதாகவம் சுமந்திரன் அப்போது கூறியிருந்தார்.

ஆனால் கலப்பு விசாரணை மாத்திரமன்றி உள்நாட்டு விசாரணையோ கூட முன்னெடுக்கப்படாத நிலையில் ஒரு காலவரம்பை தீர்மானிக்கும் திருத்தத்தைக் கூட முன்வைக்க முடியாத நிலைக்கு தமிழர் தரப்பு இப்போது தள்ளப்பட்டிருக்கின்றது.

தமிழர்களை பொறுத்தவரையில் ஜெனீவா ஒரு பலவீனமான களம்தான். இருந்தும் அங்கு ஏற்கனவே இருந்த பலத்தைக் கூட தமிழர் தரப்பு இப்போது இழந்து வருகின்றது. இலங்கை பலமடைந்து கொண்டு வருகிறது என்பதையே கலப்பு விசாரணையை இலங்கை அரசு துணிச்சலுடன் நிராகரித்ததில் இருந்து உணர முடிகின்றது.

தீர்மான வரைவில் திருத்தங்களை செய்ய முடியாத அளவுக்கு தமிழர் தரப்பு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது என்பதை ஜெனீவா மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றது.

Latest Offers