ஐ.நா மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கியுள்ளதா?

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in கட்டுரை

ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா மனித உரிமை சபையின் நாற்பதாவது (40ஆவது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும்!

இலங்கை விடயத்தில் ஐ.நா அங்கத்துவ நாடுகள் பல உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், புலம் பெயர் வாழ் அமைப்புக்களும், பாதிக்கப்பட்டவரும், தமிழ் அரசியல்வாதிகளும் இவ்விடயத்தில் பலவிதப்பட்ட வேலைத் திட்டங்களில் பங்களித்திருந்தனர்.

இவற்றில் சில தமிழ் அமைப்புக்கள் தனி நபர்களது வேலைத்திட்டம் என்பது மறைமுகமாக இலங்கை அரசிற்கு உதவியாக காணப்பட்டது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

ஐ.நா மனித உரிமை சபையில் “தமிழர் ஒரு தரப்பு அல்ல” என்ற விடயத்தை நாம் முதலில் ஆராய வேண்டும். தமிழர் மட்டுமல்லாது - நாடு, அரசு அற்று அடக்கப்பட்ட இனங்களான குரூடிஸ்தான் மக்கள், காஸ்மீர் மக்கள், கத்தலோனியா மக்கள், மேற்கு சகர மக்கள் போன்றோர், ஐ.நா மனித உரிமை சபையில் ஒரு தரப்பு அல்ல என்பதை யாவரும் புரிய வேண்டும்.

இதேவேளை ஐ.நாவில் 193 அங்கத்துவ நாடுகளும் இரண்டு பார்வையாளர் நாடுகளும் இருந்த பொழுதும், மனித உரிமை சபையில் 47 நாடுகளுக்கு மட்டும் வாக்குரிமை உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்காக வாக்குரிமை அற்றவர்கள் ஐ.நாவில் செல்வாக்கு அற்றவர்களென எண்ணுவது மிகத் தவறு. அடுத்து ஐ.நா அங்கத்துவ நாடுகள் யாவரையும் குறை கூறி கொண்டு, ஐ.நாவில் எமது விடயங்கள் முழுதாக எமக்கு திருப்தியாக நடைமுறைப்படுத்த முடியாது என்பதை மக்களால் தெரிவு செய்யப்படாத அரசியல்வாதிகளும், அகதி விவகாரத்தை ஐ.நா மனித உரிமைசபையில் பெரிதுபடுத்தப்படுத்துபவர்களும் முதற்கண் உணர வேண்டும்.

சுருக்கமாகக் கூறுவதானால் தமிழீழ மக்களுக்கு இலங்கை என்ற ஓர் நல்ல எதிரி இருக்கும் வேளையில், மற்றைய நாடுகளையும் எதிரியாக்கி கொண்டால் நாம் எதையும் மனித உரிமை சபையில் சாதிக்க முடியாது!

அறிக்கை

கடந்த புதன்கிழமை 20ஆம் திகதி ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிகேல் பாச்றினால் இலங்கை பற்றிய அறிக்கை உத்தியோகபூர்வமாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வேளையில் பத்தொன்பது ஐ.நா அங்கத்துவ நாடுகளும் ஒன்பது அரச சார்பற்ற நிறுவனங்களும் சபையில் உரையாற்றியிருந்தன. இலங்கை சார்பாக வெளிநாட்டு அமைச்சர் மாறப்பன உரையாற்றியிருந்தார்.

இங்கு உரையாற்றிய பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளும், இலங்கைக்கு சார்பாக கருத்து கூறியிருந்தனர். அங்கு உரையாற்றிய இந்தியா தவிர்ந்த மற்றைய நாடுகள், ஓர் நேர அட்டவணையுடன் இலங்கை மீதான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியிருந்தனர்.

பல வருடங்களின் பின்னர் இந்தியா தற்பொழுது தமிழ் மக்கள் சார்பாக அக்கறை கொண்டதாக உரையாற்றியுள்ளதுடன் தமிழ் மக்களுக்கு 13ஆவது திருத்த சட்டத்தின் அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டுமென கூறியிருந்தது.

இந்தியாவுடைய இந்த உரை, இந்தியாவில் இடம்பெறவுள்ள தேர்தலிற்கானதா? அல்லது உண்மையில் தமிழீழ மக்கள் மீது அக்கறை கொண்டு உரையாற்றியிருந்தனரா என்பது பற்றி பலர் கருத்து கூறியுள்ளார்கள்.

தீர்மானம்

கடந்த வியாழக்கிழமை 21ஆம் திகதி இலங்கை மீதான கூட்டு குழு (Co-group)ன் தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு கூட்டு குழுவின் அங்கத்தவர்களான பிரித்தானியா, கனடா, வடக்கு மசிடோனியா, மொன்ரன்கிரோ, ஜெர்மனி உட்பட எல்லாமாக 34 நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளனர்.

இலங்கை 2015ஆம் ஆண்டு முதல் வழங்கிவரும் அனுசரணையை, இவ் முறையும் வழங்கியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே முன்மொழியப்பட்ட தீர்மானத்தில் எந்தவித மாற்றங்களும் இன்றி இன்னும் இரண்டு வருடங்களிற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட இவ் தீர்மானத்தை பற்றி சுருக்கமாக கூறுவதனால், இது சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக இலங்கையினால் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகமாக நாம் கொள்ள முடியும்.

இதனது வரைவு தீர்மானம், நாடுகளுடன் கடந்த 5ஆம் திகதி உரையாடலிற்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளையில் சுவீடன், சுவிஸ்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள், இத்தீர்மானத்தின் சொற்பதங்களை கடுமையாக பயன்படுத்துமாறு வேண்டியதுடன் புதிய விடயங்களையும் இணைக்குமாறு வேண்டியிருந்தனர்.

இச் செய்தி கொழும்பின் அரசாங்க வட்டங்களை எட்டியதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இத்தீர்மானம் பற்றி சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதாக பொய்யான நாடகங்களை நடித்து, அப்படியானால் இலங்கை இவ் தீர்மானத்திற்கு இணை அனுசரணை கொடுக்க முடியாதுவென இலங்கை கூறியதும், சர்வதேசம் ஐ.நா மனித உரிமை சபை நாடுகள் திகில் கொண்டுவிட்டது.

இதன் அடிப்படையில் இவ்தீர்மானத்தில் மாற்றங்களை செய்து கடுமை ஆக்காது, ஓர் நலிந்த தீர்மானமாக நிறைவேற்றியுள்ளனர். இது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மட்டுமல்லாது முழு தமிழீழ மக்களிற்கும் ஏற்பட்ட முழு ஏமாற்றமாகும்.

எது என்னவானாலும், இவ் தீர்மானத்தின் உண்மை சரித்திரத்தை ஒவ்வொரு புலம் பெயர் வாழ் தமிழரும், தாம் வசிக்கும் நாட்டின் அரசுகளிற்கு விளக்கங்கள் கொடுத்து அவர்களது ஆதரவை பெற வேண்டும். இதன் மூலம் நாம் வேறு வழிவகைகளை அடையமுடியும்.


You may like this video