இலங்கையை அச்சுறுத்திய தொடர் குண்டுவெடிப்பு - யாருடைய தவறு?

Report Print Subathra in கட்டுரை
இலங்கையை அச்சுறுத்திய தொடர் குண்டுவெடிப்பு - யாருடைய தவறு?

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நிகழ்ந்த கொடூரமான குண்டுத் தாக்குதலுக்கான பொறுப்பை ஐ.எஸ்.அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், இந்தத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பேற்கப் போவது என்ற கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை.

முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தவறியதே இந்தப் பேரழிவுக்குக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.

தௌஹீத் ஜமாத் அமைப்பு இலங்கையில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருக்கின்றது என்ற புலனாய்வுத் தகவல்களை இந்தியாவின் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு இலங்கைக்கு வழங்கியிருந்தது.

அமெரிக்க புலனாய்வு அமைப்பும் கூட முன்னரே தாக்குதலுக்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்திருந்தது என்ற தகவல்கள் வெளியாகிய போதும் அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் அதனை மறுத்திருக்கிறார்.

இந்திய புலனாய்வு அமைப்பினால் ஒன்றுக்கு மூன்று தடவைகள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவோ, தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படவோ இல்லை.

அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட தகவல்களின்படி கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், தேவாலயங்கள், தற்கொலைக் குண்டுதாரிகளின் தாக்குதலுக்கு இலக்காகக் கூடும் என்று ஏப்ரல் 4ம் திகதி எச்சரிக்கை வழங்கப்பட்டதாகவும் பின்னர் மேலும் சில தடவைகள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இந்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளும் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் ஏப்ரல் 9ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மெண்டிசினால் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கையைத் தொடர்ந்து ஏப்ரல் 11ம் திகதி பொலிஸ்மா அதிபரினால் அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு எச்சரிக்கை குறிப்புகள் அனுப்பப்பட்டிருந்தன.

ஆனாலும் பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்கோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கோ இது தெரியப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

எனினும் இத்தகைய புலனாய்வு அறிக்கை ஒன்றை அமைச்சர்கள் சிலர் அறிந்திருந்தனர் என்பதை குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் அமைச்சர்கள் சிலர் வெளியிட்ட கருத்துக்களில் இருந்து அறியமுடிந்தது.

தாக்குதல்களை நடத்துவதற்காக தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர்கள் இலங்கை வந்திருப்பதாக அவ்வப்போது இந்திய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை செய்திருந்தது.

இந்திய புலனாய்வு அமைப்பின் தகவல்களின்படி ஏப்ரல் 4ம் திகதி முதலாவது எச்சரிக்கையும் தாக்குதல் நடப்பதற்கு முதல் நாள் ஏப்ரல் 20ம் திகதி இரண்டாவது எச்சரிக்கையும் தாக்குதல் நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மூன்றாவது எச்சரிக்கையும் வழங்கப்பட்டிருக்கிறது.

தாக்குதல் நடப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக கூட இந்திய புலனாய்வு அமைப்பினால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் கூட அது கண்டுகொள்ளப்படவில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருக்கிறார்.

இதுவே மிகப்பெரிய பேரழிவுக்குக் காரணமாகியிருக்கிறது.

இப்போது புலனாய்வு எச்சரிக்கைகள் முறையாக கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வதில் குறைபாடுகள் இருந்தன என்றும் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

2004ம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளுக்கு மறுநாள், இந்தோனேசியாவுக்கு அருகே கடலில் பாரிய பூகம்பம் ஏற்பட்டதும் சுனாமி தொடர்பான எச்சரிக்கை இந்தியாவின் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சராக இருந்த கபில் சிபலுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. சுனாமியின் ஆபத்தை அவர் உணர்ந்திருக்கவில்லை. அதனால் எந்த முன்னேற்பாட்டையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அதேபோன்று தான், ஈஸ்டர் நாளன்று நடந்த அனர்த்தங்களுக்கும் கூட இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு உயர்மட்டத்தின் தவறுகளே காரணமாகியிருக்கின்றன.

வெளிநாட்டு புலனாய்வு அமைப்பினால் துல்லியமான புலனாய்வு அறிக்கைகள், எச்சரிக்கைகள் வழங்கப்பட்டும் அவை கண்டுகொள்ளப்படாமல் போனது ஆச்சரியம்.

தாக்குதலுக்கு வந்திருப்பவர்கள் பற்றிய பெயர் விபரங்களுடன் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் பொலிஸ்மா அதிபர் அந்த அறிக்கையை முக்கிய பொலிஸ் பிரிவுகளுக்கு அனுப்பியதுடன் விட்டுவிட்டார்.

அந்த எச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட மேலதிக நடவடிக்கைகளைப் பற்றி அவர் அறிவுறுத்தியதாகத் தெரியவில்லை. எடுக்கப்பட்ட மேலதிக பாதுகாப்பு குறித்து அறிக்கைகளை கோரியதாகவும் தெரியவில்லை.

மொத்தத்தில் எதுவும் நடக்காது என்ற தைரியத்தில் பொலிஸ் தரப்பு இருந்திருக்கிறது.

இந்தளவுக்கும் மாவனெல்லையில் புத்தர் சிலைகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவங்கள் நடந்திருந்த நிலையிலும் புத்தளம், வனாத்தவில்லு பகுதியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்த நிலையிலும், சில நாட்களுக்கு முன்னர் கூட காத்தான்குடியில் ஒரு வெற்றுக் காணியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மர்ம நபர்களால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்ட போதும், பொலிஸ் தரப்பு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளைப் பற்றிய எச்சரிக்கைகளையிட்டு கண்ணை மூடிக் கொண்டிருந்திருக்கிறது. சந்தேகத்திற்கிடமான பல சம்பவங்கள் நடந்திருந்தும் கூட மிகவும் பாரதூரமான எச்சரிக்கைகள் உதாசீனம் செய்யப்பட்டிருக்கின்றன.

பாதுகாப்பு நிலைமை தொடர்பாக மிகையான நம்பிக்கையோ அல்லது இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை குறைத்து மதிப்பிட்டதாலோ இவ்வாறு நடந்துள்ளது என்று கூற முடியாது. அதற்கு அப்பால் அரசியல் பாதுகாப்பு மட்டங்களின் அதிகாரப் போட்டியும் இதற்குப் பின்னால் இருந்திருக்கிறது.

தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்படாமல் போனதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் அனைத்துமே பொறுப்புக்கூறியாக வேண்டும்.

பொலிஸ் தரப்பு புலனாய்வுத் தகவல்களை இராணுவத்துடன் பகிர்ந்து கொள்வதில்லை என்றும் புலனாய்வு எச்சரிக்கையை தமக்கு அறிவிக்கவில்லை என்றும் இராணுவத் தளபதி கூறியிருந்தார்.

ஆனால் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசியப் புலனாய்வுப் பிரிவின் மூலமே பொலிஸ்மா அதிபருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறாயின் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அந்தப் புலனாய்வு அறிக்கை ஏன் இராணுவத் தலைமைக்கு வழங்கப்படாமல் போனது?

அரசாங்க புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகளை விட இராணுவப் புலனாய்வுப் பிரிவு மிகவும் வலிமையான ஒன்றாகவே இருக்கிறது. ஆனாலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்பான எந்த முன்னெச்சரிக்கையையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு கண்டறியாமல் போனது எப்படி?

இராணுவத்தில் மாத்திரமன்றி கடற்படை, விமானப்படை, விசேட அதிரடிப்படையிலும் புலனாய்வுப் பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கும் கூட இந்தத் தகவல்கள் கிடைத்திருக்கவில்லையா?

எத்தனையோ உள்நாட்டுப் புலனாய்வுப் பிரிவுகள் இருந்த போதும் ஒரு வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்திருக்கிறது. முன்கூட்டியே எச்சரித்திருக்கிறது.

இதிலிருந்து இலங்கையில் உள்நாட்டு புலனாய்வு அமைப்புகளை விட வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் வலுவாகச் செயற்படுகின்றன. தகவல்களைத் திரட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தளவுக்குப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்து போதும் குண்டுகள் வெடிக்கும் வரை - அமைதியாக இருந்து கோட்டை விட்டதற்குச் சரியான காரணம் அரசாங்கத்திற்குள் இருந்த முரண்பாடுகள் தான்.

ஒக்டோபர் 28 ஆட்சிக் கவிழ்ப்பு தோல்வியடைந்த பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையில் சரியான உறவுகள் இல்லை.

ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று சபதம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தச் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் போனபோதும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் தீராப் பகையுடனேயே இருந்து வருகிறார்.

மீண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற பின்னர் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு ஒருபோதும் அழைக்கப்பட்டதில்லை என்ற தகவல் இந்தக் குண்டு வெடிப்புகளுக்குப் பின்னர் தான் அம்பலமாகியிருக்கிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமன்றி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ருவான் விஜேவர்த்தனவும் கூட பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.

குண்டுத் தாக்குதல்கள் நடந்த பின்னர் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட பங்கேற்ற கூத்துக்கள் நடக்கின்ற போது இது ஒன்றும் ஆச்சரியமானது அல்ல.

அதேவேளை இதுவரை பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு தாம் அழைக்கப்படாதது குறித்து பிரதமரோ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்களோ வாய் திறக்காமல் இருந்தமைக்கு ஜனாதிபதியுடனான முரண்பாட்டை தவிர்க்கும் நோக்கத்தை காரணமாக கூற முடியாது.

ஏனென்றால் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு அப்பால் நாட்டின் நலனும் பாதுகாப்புமே முக்கியமானவை.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தனிநபராக கையாண்டு வந்திருக்கின்ற நிலையில், பிரதமர் ரணில் விகரமசிங்க அரசாங்கத்துக்கு பாதுகாப்பு நிலைமைகள், முன்னெச்சரிக்கைகள், புலனாய்வுத் தகவல்கள் என்று எதுவுமே தெரியாத நிலையே இருந்திருக்கிறது.

குண்டுகள் வெடித்த போது பெலியத்தையில் இருந்த பிரதமர் ரணில் விகரமசிங்க உடனடியாக கொழும்பு திரும்பி முப்படைத் தளபதிகள், உள்ளிட்ட தேசிய பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களை அலரி மாளிகைக்கு அழைத்தார். ஆனால் அவர்கள் அங்கு வரவில்லை.

அதற்குப் பின்னர் பிரதமர் பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று 20 நிமிடங்கள் காத்திருந்த பின்னரே பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களைச் சந்திக்க முடிந்தது.

நாட்டின் வரலாற்றில் பிரதமரின் அழைப்பை பாதுகாப்புச் சபை நிராகரித்த முதல் நிகழ்வு இது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டே ரணில் விக்ரமசிங்கவின் கூட்டத்துக்கு பாதுகாப்புச் சபை உறுப்பினர்கள் செல்லவில்லை.

பாதுகாப்பு விவகாரங்களில் இருந்து ரணில் விக்ரமசிங்கவையும் அவரது அமைச்சர்களையும் ஒதுக்கி வைப்பதில் இந்தளவுக்கு வன்மத்தைக் காட்டிய ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சை முறையாக கவனித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதையும் சரியாகச் செய்யவில்லை.

பாரிய அனர்த்தம் ஏற்பட்ட பின்னரும் அவர் சிங்கப்பூரில் இருந்து உடனடியாக நாடு திரும்ப முற்படவில்லை. அங்கிருந்து பிற்பகலிலும், முன்னிரவிலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் புறப்பட்ட போதும் அவர் நள்ளிரவே அங்கிருந்து புறப்பட்டு வந்தார்.

ஜனாதிபதி நாடு திரும்பும் வரை பாதுகாப்பு நிலைமையைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கே இருந்தது. ஆனால் அதனை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி உரிய ஒழுங்குகளைச் செய்திருக்கவில்லை.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போது பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்க வேண்டியது அவரது கடமை.

முன்னர் வெளிநாடு செல்லும்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமித்து வந்த ஜனாதிபதி இப்போது அப்படிச் செய்வதில்லை.

விடுதலைப் புலிகளுடனான போர் நடந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச வெளிநாடுகளுக்கு சென்ற போது 9 தடவைகள் பதில் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியவர் மைத்திரிபால சிறிசேன.

எனவே பதில் பாதுகாப்பு அமைச்சரின் நியமனத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தும் அரசியல் போட்டி காரணமாக அவ்வாறு யாரையும் ஜனாதிபதி நியமிக்கவில்லை.

இதனால் பாதுகாப்பு அமைச்சரின் இடத்தில் இருந்து ருவான் விஜேவர்த்தனவினால் உத்தரவுகளை வழங்க முடியாமல் போனது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரித்தாளும் தந்திரம் இன்று அவருக்கே வினையாகியிருக்கிறது. அரசியலமைப்புக்கு அமைய செயற்படாதவர் என்ற பழியை அவரும் சுமக்கவுள்ளார்.

அதைவிட பாதுகாப்புத் தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த சூழலில் ஜனாதிபதி தனிப்பட்ட விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றது பொறுப்பு வாய்ந்த செயலா என்ற விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

புலனாய்வு அறிக்கைகள் பற்றி தமக்கு அறியத் தரப்படவில்லை என்று ஜனாதிபதியின் மீது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சர்கள் பந்தைப் போட அந்தப் பழியில் இருந்து தப்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கும் அவ்வாறான அறிக்கை கிடைக்கவில்லை என்று நழுவ முனைகிறார்.

ஏப்ரல் 4ம் திகதி புலனாய்வு துறையிடமிருந்து கிடைத்த அறிக்கை 7ம் திகதி நடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதனை அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரே செய்திருக்க வேண்டும்.

அதேவேளை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே பாதுகாப்புச் சபையின் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசப்பட்டது. அவர்களின் நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டது. ஆனாலும் போதிய ஆதாரங்கள் இருக்காததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்ற காரணத்தையும் ஜனாதிபதியே கூறியிருக்கிறார்.

இது ஒரு விந்தையான காரணம். பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அடிப்படைவாத அமைப்புகள் பற்றி ஆராயப்பட்டது உண்மையெனின் புலனாய்வு எச்சரிக்கைகள் வந்த போதாவது பாதுகாப்புச் சபை,, பாதுகாப்பு அமைச்சு தகுந்த நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு எதையும் செய்யவில்லை. அதுவே அழிவுகளுக்குக் காரணம்.

ஒரு பேரழிவைத் தவிர்த்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் போதியளவுக்கு இருந்த போதும் அதனைத் தவறவிட்டு விட்டு பழியை யார் மேலாவது போட்டு விடலாம் என்பதிலேயே உயர்மட்டங்கள் செயற்படுகின்றன.

அரசியல் போட்டி, அலட்சியம், குறை மதிப்பீடு போன்ற தவறுகளால் தான், இலங்கைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

Comments