ஈஸ்டர் தாக்குதலும் ஐ.எஸ் தொடர்பும்

Report Print Subathra in கட்டுரை

நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் இரண்டு மசூதிகள் மீது ஒருவர் நடத்திய நர வேட்டைக்கான பதிலடியாகவே, இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தா்ககுதல்கள் நடத்தப்பட்டிருக்கக்கூடும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன கூறியிருந்தாலும், ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி, அதற்கு மாறான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

சிரியாவிலும், ஈராக்கிலும் பெரும் நிலப்பகுதிகளை வசப்படுத்தியிருந்த ஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக இருந்தது, பகூஸ் நகரம்.

மார்ச் மாதம் அதுவும் சிரியப்படைகளிடம் வீழ்ச்சி கண்டது. அதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே இலங்கையில் தாக்குதல்களை நடத்தியதாக, ஐ.எஸ் தலைவர் கூறியிருக்கிறார்.

2014ஆம் ஆண்டு ஈராக்கின் மொசூல் நகரில் கடைசியாகத் தோன்றியிருந்த, ஐ.எஸ் தலைவர் அல் பக்தாதி கடந்த ஐந்து ஆண்டுகளாக வீடியோக்களில் கூட தோன்றவில்லை.

அமெரிக்க தாக்குதலில் இறந்து விட்டார், காயமடைந்தார் என்று பலமுறை அறிவிக்கப்பட்டவர், திடீரென இலங்கையில் தாக்குதல் நடத்தியதும், வீடியோவில் உரிமை கோரியிருக்கிறார்.

ஈஸ்டர் தாக்குதலை ஒரு பெரும் பதிலடியாக பழிவாங்கலாக அவர்கள் கருதுகிறார்கள் என்பதை பக்தாதியின் இந்தக் கருத்தில் இருந்து உணர முடிகிறது.

தொடர் தேல்விகளுக்குப் பின்னர் ஐ.எஸ் பழிவாங்கப் போவதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தால் அது கேலிக்குரியதாக இருந்திருக்கும்.

ஏனென்றால் ஜிகாத் செய்யும் படியே இறைவன் கட்டளையிட்டுள்ளான் என்றும் வெற்றியை பெறும்படி கட்டளையிடவில்லை என்றும் ஒரு இடத்தில் அல் பக்தாதி குறிப்பிட்டிருக்கிறார்.

இது சிரியாவிலும் ஈராக்கிலும் தமக்கு ஏற்பட்ட தோல்வியை இழப்பை நியாயப்படுத்தும் ஒரு கருத்து.

அதேவேளை பகூஸ் இழப்புக்கு பழிவாங்கும் நடவடிக்கையே இந்த தாக்குதல் என்று பக்தாதி கூறியிருப்பதானது, அந்த தேல்வி அவர்களை துவளச் செய்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

ஒரு வெற்றிகரமான தாக்குதலுக்குப் பின்னர் பக்தாதி வெளியே வந்திருப்பது, பழிவாங்குவோம் என்பதை உறைப்பாகச் சொல்வதற்கு தான்.

ஆரம்பத்தில் இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரவில்லை. ஈஸ்டர் தாக்குதல் நடந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் தான் உரிமை கோரியது,

அது போலவே கல்முனை - சாய்ந்தமருது தாக்குதல் நடந்து இரண்டு நாட்களின் பின்னரே, அதனையும் உரிமை கோரியது.

பொதுவாகவே, இது போன்ற தாக்குதல்களை நடத்தியதும், ஒரு சில மணி நேரங்களுக்குள் ஐ.எஸ் அமைப்பு உரிமை கோருவது தான் வழமை. அதற்கு மாறாக இலங்கைத் தாக்குதல்கள் அமைந்திருந்தன.

அதற்குள் தான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன கிரிஸ்ட் சர்ச் தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று ஆரூடம் சொன்னார்.

தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்ட அதிகாரிகளும் கூட இது உள்ளூர் நபர்கள் - அமைப்புகள் சம்பந்தப்பட்ட தாக்குதலே என்று கண்டறிந்தனர்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு இந்த தாக்குதல்களை நடத்தியது என்பது உறுதியாகியிருந்த நிலையிலும் இந்த அமைப்பினால் தனியாக இதனைச் செய்திருக்க முடியாது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் உதவி அவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்ற வலுவான சந்தேகங்களும் எழுந்திருந்தன.

தாக்குதல் நடத்தப்பட்ட முறைகள், பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் எல்லாமே இதனை உறதி செய்ததால் தான் அமெரிக்கா, இந்தியா, இன்ரபோல் என்று வெளிநாட்டு விசாரணையாளர்கள் ஒன்று குவிந்தனர்.

ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா போன்ற அமைப்புகளின் மீது சந்தேகங்கள் இருந்தாலும் அது நேரடியான தொடர்பாக இருக்குமா என்ற கேள்வி இருந்தது.

இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருந்தாலும். அதன் நேரடித் தொடர்பில், கட்டுப்பாட்டில் இருந்த தாக்குதல்கள் இடம்பெற்றனவா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.

அதற்கு முக்கியமான காரணம். தாக்குதல்கள் நடந்து இரண்டு நாட்களுக்கு பின்னரே ஐ.எஸ் உரிமை கோரியிருந்தது.

எனவே, இது ஐ.எஸ் அமைப்புடன் இந்த அமைப்புக்கு நேரடியான தொடர்பு இருந்திருக்காது என்றொரு கருத்து மத்திய கிழக்கில் மற்றும் மேற்குலகில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு நிபுணர்களிடம் இருந்தது,

பொதுவாகவே, ஐ.எஸ், அல்கொய்தா போன்ற அமைப்புகள், வெளிநாடுகளில் தாக்குதல்களை நடத்துவதற்கு உள்ளூர் அமைப்புகளை தெரிவு செய்து பயிற்சி அளித்து தொழில்நுட்ப உதவிகள், நிதி உதவிகளை செய்வது வழக்கம்.

ஆனாலும் உள்ளூர் அமைப்புகள் முற்று முழுதாக அந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டிலோ வழிநடத்தலிலோ இயங்குவதில்லை.

இலங்கையில் தாக்குதல் நடத்திய தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேரந்த தற்கொலைக் குண்டுதாரிகளில், சிலர் சிரியாவில் பயிற்சிகளைப் பெற்றிருக்கிறாரகள் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் அவர்கள் தொடர்ந்தும் ஐ.எஸ் அமைப்புடன் நேரடியான தொடர்பில் இருந்தனரா, அங்கிருந்து கிடைத்த உத்தரவுகளை பின்பற்றினரா என்ற சந்தேகங்கள் உள்ளன.

தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக அறியப்பட்ட சஹ்ரான் ஹாசிம் ஷங்ரிலா விடுதியில் தற்கொலைக் குண்டுதாரியாக செயற்பட்டிருக்கிறார் என்பது உறுதியாகியிருப்பதாக பொலிஸ் தரப்பு கூறுகிறது.

இந்த அமைப்பு ஐ.எஸ் கட்டுப்பாட்டில் அல்லாமல் சுயாதீனமாக செயற்பட்டிருந்திருக்குமாயின், அதன் தலைவரே, தனது உயிரைக் கொடுத்து தாக்குதல் நடத்த முன்வந்திருப்பாரா என்ற சந்தேகம் உள்ளது.

ஏனென்றால், தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவோம் என்று சாய்ந்தமருதில் இறந்துபோன மூன்று குண்டுதாரிகளான சஹ்ரானின் தந்தை மற்றும் சகோதரர்கள் கடைசியாக வெளியிட்ட வீடியோவில் எச்சரித்திருக்கிறார்கள்.

அவ்வாறு தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதற்கு, அவற்றை ஒருங்கிணைப்பதற்கு தலைமைத்துவம் ஒன்று அவசியம்.

இந்தளவுக்கு இரகசியமாக தாக்குதல்களை நடத்துவதற்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாசிம், இறந்து போனால், அந்த அமைப்பை வழிநடத்த இன்னொரு தகுதியான தலைவர் தேவைப்படுவார். இல்லாவிடின் அந்த அமைப்பு அப்படியே அழிந்து போகும். தாக்குதல்களை நடத்த முடியாது,

இது சஹ்ரான் ஹாசிமுக்கோ அல்லது அவரை வெளியில் இருந்து வழிநடத்தியவர்களுக்கோ தெரியாமல் போயிருக்காது. அதனையும் மீறி சஹ்ரான் ஹாசிம் தற்கொலைக் குண்டுதாரியா மாறியிருக்கிறார் என்றால், அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

இலங்கையில் இது போன்ற தற்கொலைத் தாக்குதல்கள் இதற்கு முன் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளால் முன்னெடுக்கப்படாத நிலையில், ஏனைய குண்டுதாரிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சஹ்ரான் ஹாசிமும் தற்கொலைக் குண்டுதாரியாக மாற வேண்டியது தவிர்க்க முடியாததாக இருந்திருக்க வேண்டும்.

வேறு வழியின்றி அவர் இந்த தாக்குதலில் பங்கெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம். இரண்டாவது காரணம், சஹ்ரான் தனக்கு பின்னரும் இந்தப் போரை முன்னெடுக்க ஒரு தலைமைத்துவ கட்டமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும்.

இது தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு சுயாதீனமாக செயற்பட்டு இந்தத் தாக்குதல்களை நடத்தியது என்ற பார்வையில் இருந்து நோக்கும் போது உள்ள காரணங்கள்.

ஒருவேளை, ஐ.எஸ் அமைப்பு இந்த தாக்குதலை நேரடியாக வழிநடத்தியது என்றால் சஹ்ரானைப் பலிகொடுக்க துணிந்திருக்கிறது என்றால் மாற்று வழியொன்றையும் குழுவொன்றையும் தயார்படுத்தியிருக்கும்.

ஆனாலும் அது சஹ்ரான் அளவுக்கு வலிமையானதாக இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது, சஹ்ரானின் பிரசார யுத்திகள் தான், இந்தளவுக்கு இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீரவாதமாக மாற்றமடைவதற்குக் காரணம்.

அவ்வாறானதொரு வலிமையான நபரை இழப்பதற்கு ஐ.எஸ் அமைப்பு விரும்பியிருக்காது என்றே கருத இடமுண்டு.

அதேவேளை, இந்த தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியது சஹ்ரான் அல்ல என்றும், தலைமை தாங்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.

ஆனால் அவரது பெயர் எம் என்ற எழுத்தில் தொடங்குகிறது என்று மாத்திரம் அவர் தெரிவித்திருந்தார்.

எது எவ்வாறாயினும் இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ் உரிமை கோரியுள்ளமை தொடர்பாக பலத்த கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

சரி ஐ.எஸ் அமைப்பே இதற்கு உரிமை கோரிவிட்ட நிலையில் எதற்காக சிரியாவில் ஏற்பட்ட இழப்புக்கு இலங்கையில் பழிதீர்க்க அந்த அமைப்பு முயன்றது என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

இலங்கையில் தாக்கப்பட்டது மென் இலக்குகளே என்றும், சுலபமான இலக்கு வைக்கக்கூடிதாக இருந்தால், ஐ.எஸ் இலங்கையை தெரிவு செய்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.

ஆனால், ஐ.எஸ் அமைப்பினால் வெளியிடப்பட்ட வீடியோக்களில் தமிழில் பேசுபவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் வெறித்தனம் கொண்டவையாக இருந்ததை அவதானிக்க முடியும்.

இலங்கையைத் தெரிவு செய்ததற்கு பின்னால் ஐ.எஸ் அமைப்புக்கு ஒரு நோக்கம் இருந்திருக்க வேண்டும். அந்த நோக்கம் அமெரிக்காவாக இருந்திருக்கலாம் என்றொரு கருத்தும் உள்ளது.

இலங்கையுடன் அண்மைக்காலமாக அமெரிக்கா தனது உறவுகளைப் பலப்படுத்தி வந்தது, இரண்டு நாடுகளும் இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியாக முன்னெப்போதும் இல்லாதளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ் அமைப்பை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா கணிசமான பங்களிப்பை வழங்கிருந்தது. ஈராக்கிய படைகள், குர்திஷ் போராளிகள், சிரிய போராளிக் குழுக்களுக்கு அமெரிக்கா இராணுவ தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதுடன், நேரடியான தாக்குதல்களிலும் ஈடுபட்டது.

தம்மைத் தேற்கடிக்க உதவிய அமெரிக்காவை பழிவாங்குவதற்கு, அதன் மிக நெருங்கிய நட்பு நாடாக மாறிய இலங்கையை ஐ.எஸ் அமைப்பு குறிவைத்திருக்கலாம் என்று பலரும் கருதுகிறார்கள்.

ஐ.எஸ் அமைப்பின் இலக்குமற்றும், பழிவாங்கும் குரோத உணர்வும் உள்ளூர் அடிப்படைவாத அமைப்புகளின் வளர்ச்சியும் சமநேரத்தில் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொண்டதானது, இலங்கையின் மென் இலக்குகள் அவர்களுக்கு வசதியாகி அமைந்திருக்கிறது.