போருக்குப் பின் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைக்கு சட்டம் தீர்வாகுமா?

Report Print Dias Dias in கட்டுரை

மக்கள் தமக்கு அநீதி ஏற்பட்டுள்ளதென எண்ணும் சந்தர்ப்பத்தில் தண்டனை இழப்பீடு மற்றும் சட்ட நிவாரணம் என்பவற்றை மக்கள் நீதி மன்றங்களை நாடிப் பெற்றுக் கொள்ள முடியும். மக்கள் அச் சேவைகளை சட்டத்தரணி காவல்த்துறை மற்றும் அரச துறைகள் ஊடாக பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தின் சட்ட உதவி ஆணைக்குழுவின் எஸ். வினோத் அவர்களின் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போருக்குப் பின் மக்கள் அதிகம் கூடும் இடங்களாக காவல் நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் நீதிமன்றங்கள் ஆக உள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிக பிணக்குகள் என பொதுவாக சொல்லப்படுகின்ற போதும் இதற்கான உண்மைக் காரணம் என்ன? அதற்கான தீர்வுத்திட்டம் என்ன? என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்ற ஒன்றிணைந்த திட்டம் தொடர்பாக அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் நோக்க வேண்டியுள்ளது.

போருக்கு பிற்பட்ட காலத்துப் பிணக்குகளில் அதிகம் குடும்பப்பிணக்குகள் மற்றும் பணப்பிணக்குகள் மதுபோதை காரணமாக ஏற்படும் சிறு குற்றங்கள் அதிக வீதி விபத்துக்கள் தற்கொலைச் சம்பவங்கள் சிறுவர் துஸ்பிரயோகங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பலதார திருமணங்கள் என்பன அதிக அளவில் பதியப்படும் மக்கள் பிரச்சினைகளாக உள்ளது.

இதற்கு பிரதான காரணமாக சொல்லப்படுவது பொதுவாக மது பாவனையே. போரின் போது திருமண சீட்டு நடவடிக்கைகள் வங்கி கடன்கள் தவணை முறைக்கடன்கள் திட்டத்தில் மக்கள் பொருட்களை வாங்குதல் மற்றும் நுண்கடன் திட்டம் என்பன என்று பொதுவான காரணங்கள் என மக்கள் மற்றும் அரச அரசசார்பற்ற நிறுவனங்களின் கருத்துக்கள் ஆக உள்ளது.

எனினும் வெளித் தெரியும் அடிப்படைக் காரணமாக உள்ள இக் காரணங்களை நிறுத்துவதும், தடுப்பதும் பாரிய பிரச்சினையாக மக்களிடம் காணப்படும் போது இதன் உண்மைக் காரணத்தை மக்களும் சமூக நிறுவனங்களும் கண்டறிய தவறி விட்டதோ என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

திருமணம் என்பது தாங்கள் எதிர்பார்த்த முற்றிலும் எதிர்பார்ப்புக்கு அமைந்த ஒருவரைத் திருமணம் செய்வது எக்காலத்திலும் சாத்தியமற்றது . தமிழ் மக்களிடையே காணப்படும் பேச்சுத்திருமணம் அவ்வகையில் அமைந்ததே.

காலம் காலமாக இதுவே தமிழ் மக்கள் மத்தியில் நடந்து வருகின்றது. போரின் போது நடந்த திருமணம் என்பது அவசர கதியில் நடந்த போதும் அதுவும் பேச்சுத் திருமண வகையில் அமைந்தே காணப்பட்டது. திருமண நிகழ்வில் தான் தம்பதியினர் தங்களை கண்டு கொள்ளும் வழக்கம் காணப்பட்ட சமூகத்தில் அவசரமாக நடந்த திருமணம் என்பது எப்படி பாதிக்கும் என்பது கேள்வியே.

சீட்டு மற்றும் கடன் திட்டங்கள் மக்களிடம் காலம் காலமாக இருந்து வரும் பழக்கமாக காணப்படுகின்றது. இது ஒரு புதிய முறையன்று ஆனால் ஏன் இப்போது இது மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை ஆராய வேண்டியுள்ளது.

மது போதை திருவள்ளுவர் காலம் முதல் கள்ளுண்ணாமை அதிகாரத்தில் மதுவுக்கு எதிராக கருத்துக்கள் இருந்து வருகின்றது. மக்களிடம் மதுபோதைப் பாவனை புதிய விடயம் அன்று. மது குடித்த ஒருவருக்கு தன்னுடைய வாகனமன தன்னுடைய வீடு தன்னுடைய மனைவி தன்னுடைய தாய் தன்னுடைய பிள்ளைகள் எனத் தெரிகின்ற போது எப்படி சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் ஏற்பட மதுபோதை காரணம் ஆகிறது என்பதும் ஒரு கேள்வியே.

போரின் போது ஏற்பட்ட திருமணம் சீட்டு தவனைமுறை கட்டணம் மதுபோதை பாவனை என்பன முற்காலத்தில் இருந்து வந்த போதும் தற்காலத்தில் ஏன் இந்த தாக்கம் என்பதை ஆராயும் போதே இதற்கான தீர்வு கிடைக்கும் என்பது உண்மை.

மாறிவரும் மக்களின் வாழ்க்கை முறை குறைந்த பொருளாதார நிலை உழைக்கும் நபர்களின் இழப்பு பருவநிலை மாற்றம் விவசாயக் கூலிகளின் தொழில் இல்லாமை மக்கள் தொகையை தாண்டிய நவீன தொழில் இயந்திர வருகை மக்கள் இடப்பெயர்வில் சொத்துக்களை இழந்து மீண்டும் வந்து மற்றவர்களைப்போல பொருளாதார நிலைக்கு வர முற்படும்போது அவர்கள் சரியான வழிகாட்டல் இல்லாமல் அவர்கள் தெரிவு செய்யும் முறைகள் என்பன மக்களிடம் காணப்படுகின்ற பிரச்சினைகளின் உள் மூலக் கூறுகள் ஆக காணப்படுகின்றது.

விளம்பரம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகள் சினிமாக்கள் மக்களை தமது கலாச்சாரம் இது என பின்பற்ற வைக்கும் கருவியாக மாறியுள்ளது. இது தொடர்பான சரியான விழிப்புணர்வு மக்களிடம் காணப்படவில்லை. இது தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்வதில், எம் மத்தியில் உள்ள சமூக நிறுவனங்கள் ஆர்வம் காட்ட வேண்டிய கட்டாய தேவை நெருங்கியுள்ளது.

குடும்பப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் என்பது சரியான பாலியல் அறிவு மற்றும் பாலியல் பழக்கம் மக்கள் மத்தியில் இல்லாமை பாலியல் தொடர்பான விடயத்தை ஒரு பரம இரகசியமாக பார்க்கும் எம் சமூகம் அதை சரியான முறையில் சந்ததிக்கு கடத்துவதாமை இனப்பெருக்க சுகாதாரம் என்னும் போது அது வெறும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ஆன பாலியல் செயற்பாடு என பலர் கருதுகின்றமை.

அது மட்டும் இன்றி குழந்தை வளர்ப்பு ஆண் பெண் வேறுபாடு ஆண் பெண் சமத்துவம் பால் பால்நிலை தொடர்பான விடையங்கள் குடும்பத்தில் ஆணின் கடமை பெண்ணின் கடமை கருவுற்ற பெண்களை கவனிக்க வேண்டிய ஆணின் பொறுப்பு குழந்தை தொடக்கம் மனித வளர்ச்சி படிநிலை அதில் ஏற்படும் உடல் உள மாற்றம் அவை தடைப்படும் போது ஏற்படும்.

உளப்பிரச்சனைகள் என்பன இனப்பெருக்க சுகாதாரம் என்ற விடையத்தில் உள்ளடங்கும் இது பற்றிய அறிவு முற்காலத்தில் பாட்டி, தாய் வழியாக பிள்ளைகள் கற்று வந்தார்கள். இப்போது உள்ள தாய்மார்களுக்கு இந்த அறிவு குறைந்து போக வரும் சந்ததிகளுக்கு இவை கடத்தப்படுவது குறைவாகவுள்ளது.

இதன் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளே அதிக குடும்பப்பிரிவு சிறுவர் துஸ்பிரயோகம் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பனவற்றிற்கு அடிப்படைக் காரணமாகவுள்ளது. இவைபற்றிய அறிவு பாடசாலை மட்டத்திலே வழங்கப்பட வேண்டும் என்ற திட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இப்பாடத்தை தனி ஒரு பிரிவாக எடுத்து கட்டாய பாடம் ஆக்கும் போது பிள்ளைகள் அதை கற்பது அதிகமாக ஏற்பட்டு இனி வரும் சமூகப் பிறழ்வுகளைத் தடுக்க முடியும்.

வாழும் கலையை கற்காமல் எந்தத்துறையில் பட்டம் பெற்றும் அது சமூக வாழ்கைக்கு உகந்ததாக அமையப்போவதில்லை. இதுவே இன்று எம் மக்கள் கூட்டம் கூட்டமாக காவல் நிலையம் மற்றும் நீதிமன்றில் நிற்பதற்கு காரணமாக உள்ளது.

மேலே குறிப்பிட்டது போல் திருவள்ளுவர் காலம் முதல் மது பாவனை இருக்கும் போது இப்போது மட்டும் ஏன் எம்மிடையில் இவ் மது போதை பாவனை அதிகரிப்பும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

அக்காலத்தில் இயற்கை வழிவரும் பனை தென்னை கள்வகைகளை உண்டு வந்தனர் இது எமது சூழல் மற்றும் தற்பவெப்ப நிலைக்கு ஏற்றதாகவும் அதிக போதையை தராததாகவும் இருந்தது.

இன்று நாம் மேற்கத்திய மது பாவனை நாகரீகம் என்று அடிமைப்பட்ட போது அதன் அற்ககோலின் அளவு உண்மைநிலை வேதிப்பொருட்களின் கலப்பு என்பன தெரியாமல் உள்ளது மற்றும் எமது சமூகத்தில் பரவவிடப்பட்டிருக்கும்.

புதிய புதிய போதைப் பொருட்கள் பாடசாலை பிள்ளைமுதல் பேரூந்து பயணிவரை இன்று தொற்றிக் கிடக்கிறது. இதன் தாக்கத்தின் அளவு இன்னும் காணப்படவில்லை. இவைகளே நாம் இன்று எதிர் கொண்டிருக்கும் சிறுவர் பாலியல் துள்பிரயோகம் அதிகரித்துவரும் குடும்பப்பிணக்கு என்பன இவைகளின் பாதிப்பு என கூற முடியும்.

இவைகள் சட்டம் தண்டனை நீதி என்பவற்றின் மூலம் தீர்க்கப்படும் பிரச்சினைகள் என்று மக்கள் அதை நாடியபோதும் அதற்கான முழு நிவாரணமும் கிடைக்கப்படுகிறதா? ஆனால் மேற்குறிப்பிட்ட உண்மைக் காரணிகள் அகற்றப்பட்டு ஒரு சுய ஆளுமை கொண்ட சமூகம் அமையப்பெற வேண்டும். அதுவே இப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக அமையும்.