சீனாவிடம் இலங்கை ஜனாதிபதி மைத்திரி பெற்றுள்ள முக்கிய உதவி

Report Print Subathra in கட்டுரை

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடு இறுக்கமான பதற்றமான சூழ்நிலையில் சிக்கியிருந்த போதும் கூட கவலையில்லாமல் சீனாவுக்குச் சென்று பெரியதொரு உதவிப்பொதியுடன் நாடு திரும்பியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

ஆசிய நாகரிகங்களின் கலந்துரையாடல் மாநாட்டில் பங்கேற்பதாகவே ஜனாதிபதி சீனாவுக்குச் சென்றிருந்தார். ஆனால் அதில் பங்கேற்பது ஒன்றும் அவருக்கு அவசியமான விடயமாக இருக்கவில்லை.

அவரது இந்தப் பயணத்தின் நோக்கமே சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கைச் சந்திப்பது. சீனாவிடம் இருந்து பாதுகாப்பு உதவிகளைப் பெற்றுக் கொள்வது தான்.

குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்குப் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியத் தலைவர்களையோ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களையோ சந்திக்கவில்லை. மாறாக அவர் சீனத் தலைவர்களையே தேடிச் சென்றிருக்கிறார். சந்தித்திருக்கிறார். இது முக்கியமானதொரு விடயம்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் உதவ முன்வந்தன. ஆனால் அந்த உதவிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்புடன் தான் ஏற்றுக்கொண்டாரா என்ற சந்தேகங்கள் உள்ளன.

இப்படியான நிலையில் தான் ஆசிய நாகரிகங்களின் கலந்துரையாடல் மாநாடு என்ற போர்வையில் பீஜிங்கிற்குச் சென்று சீன ஜனாதிபதியைச் சந்தித்திருக்கிறார்.

இந்தச் சந்திப்பின் மூலம் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் உடன்பாடு கையெழுத்திடப்பட்டிருக்கிறது. தீவிரவாதத்தை அடியோடு அழிப்பதற்கு சீனாவின் முழுமையான உதவிக்கு உத்தவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கைப் படையினரைப் பலப்படுத்துவதற்கு 2600 மில்லியன் ரூபா கொடையை வழங்க சீனா இணங்கியிருக்கிறது.கடந்த 9ம் திகதி பொலிஸ் திணைக்களத்துக்கு 10 ஜீப்களை வழங்கிய சீனா 1500 மில்லியன் ரூபா பெறுமதியான மேலும் 100 ஜீப்களை வழங்க இணங்கியுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான புலனாய்வுப் பரிமாற்றங்களைச் செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதற்கும் அப்பால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கிரமமான உயர்மட்டத் தொடர்புகளை வலுப்படுத்தவும் சீன ஜனாதிபதி வலியுறுத்தியிருக்கிறார்.

இவையெல்லாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சீனப் பயணத்தினால் கிடைத்திருக்கின்ற நன்மைகள்.

பாதுகாப்பு விவகாரங்களைப் பொறுத்தவரையில் இலங்கைக்கு உதவிகளை வழங்க சீனா எப்போதுமே தயாராக இருந்து வந்திருக்கிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது மாத்திரம் சீனா அவ்வாறு செயற்பட்டிருக்கவில்லை.

1971 ஜே.வி.பி.கிளர்ச்சிக்குப் பின்னர் விமானப்படைக்கு எவ்.5 ரக ஜெட் போர் விமானங்களை வழங்கியிருந்தது. பின்னர் சூரயா, வீரயா, ரணகாமி, தக்சய, பாலவத்த என ஐந்து ஷங்காய் வகை அதிவேக பீரங்கிப் படகுகளை வழங்கியிருந்தது.

புலிகளுடனான போரின் பிற்காலத்தில் சீனாவின் ஆயுதங்களிலேயே இலங்கை அரசாங்கம் முற்றுமுழுதாகத் தங்கியிருந்தது.

போர் முடிவுக்கு வந்த பின்னர் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில் முன்னேற்றங்கள் காணப்பட்டன.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனந நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்துச் செல்லும் அளவுக்கு அந்த நெருக்கம் வலுவாகக் காணப்பட்டது.

ஆனால் 2015 ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர் சீனாவுடனான உறவுகளில் நெருடல் ஏற்பட்டது. அமெரிக்க, இந்தியாவின் கைகள் ஓங்கிய நிலையில் பாதுகாப்பு உறவுகள் சீனாவுடன் வலுப்படுத்திக் கொள்வதில் இலங்கைக்குச் சிக்கல்கள் இருந்தன். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையில் ஒரு புலனாய்வுப் போரை ஆரம்பித்திருக்கின்ற நிலையில் சீனாவிடம் ஓடிச் சென்றிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

அவர் சீனாவுக்குச் சென்று பெற்று வந்திருக்கின்ற 2600 மில்லியன் ரூபா நிதியுதவியோ பொலிஸ் திணைக்களத்துக்கான ஜீப் வண்டிகளோ மிக முக்கியமானவை அல்ல.

அதற்கு அப்பால் சீனாவிடம் ஜனாதிபதி ஒரு முக்கியமான உதவியைப் பெற்று வந்திருக்கிறார்.

சீன ஜனாதிபதி தீவிரவாதத்தை ஒழிக்க எந்தெந்த உதவியை வேண்டுமானாலும் வழங்கத் தயார் என்று கூறிய போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரவாதத்தை தோற்கடிப்பதற்கு எங்களுக்கு எந்த தொழில்நுடபக் கருவிகளோ நிபுணத்துவ உதவிகளோ தேவையில்லை. அதனை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி விட்டு முக்கியமான ஒரு உதவியைக் கேட்டிருந்தார்.

இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களின் மூலம் பொய்யான தகவல்களைப் பரப்பி தீவிரவாதத்தை தூண்டிவிடும் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களை அடையாளம் காண உதவ வேண்டும் இதுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீன ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கை.

அதற்கு சீன ஜனாதிபதி உடனடியாகவே இணக்கம் தெரிவித்தார். தேவையான தொழில்நுட்பக் கருவிகளுடன் சீன நிபுணர்களின் குழுவொன்றை அவசரமாக கொழும்புக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர் உறுதியளித்திருக்கிறார்.

இந்த உதவியை அமெரிக்காவிடமோ, இந்தியாவிடமோ அல்லது ஏற்கனவே உதவ முன்வந்த பிரித்தானியா, இஸ்ரேல், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிடமோ கோராமல் எதற்காக சீனாவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரினார் என்ற கேள்வி முக்கியமானது.

இஸ்லாமிய தீவிரவாதத்தை அடக்குவதற்கு அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல், சீனா உள்ளிட்ட நாடுகள் நவீன தொழில்நுட்பக் கருவிகளை வழங்க இணங்கியுள்ளன என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஏற்கனவே கூறியிருந்தார்.

அவ்வாறிருக்கும்போது சீனாவிடம் சென்று ஜனாதிபதி இந்த உதவியைக் கோரியதற்குப் பின்னால் சில காரணங்கள் உள்ளன.

இஸ்லாமிய தீவிரவாதத்தை இலங்கையில் பரப்புவதற்கும் இந்தளவு அழிவுகளுக்கும் மாத்திரமன்றி பௌத்த அடிப்படைவாதத்தின் வெறித்தனம் முஸ்லிம்கள் மீது ஏவி விடப்பட்டதற்கும் பின்னால் இருப்பது இணையமும் சமூக வலைத்தளத் தொடர்புகளும் தான்.

நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் மூலமே ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஒழுங்கமைக்கப்பட்டன. அதுபோலவே தாக்குதல்தாரிகள் ஆட்திரட்டப்பட்டு தயார்படுத்தப்பட்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கண்டியிலும் இப்போது வடமேல் மாகாணத்திலும் பரவியதற்கும் சமூக வலைத்தளங்களில் வெளியான பொதய்யான தகவல்களும் பரப்பப்பட்ட வதந்திகளும் தான் காரணம்.

இதனைச் சமாளிக்க முடியாமல் அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கிறது. கண்டியில் வன்முறைகள் பரவிய போது இணையத் தொடர்புகளை முற்றாகத் துண்டித்த அரசாங்கம் இம்“முறை மாறிமாறி சமூக வலைத்தளங்களை தடை செய்து வருகிறது.

ஆனாலும் விபிஎன் போன்ற பதிலி இணையத்தளங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களின் மூலம் பொய்ப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதைத் தடுக்க முடியாமல் அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இணையவழிலான ஊடகங்களை முடக்குவதற்கு அமெரி்க்கா போன்ற மேற்குலக நாடுகள் எந்தளவுக்கு உதவ முன்வரும் என்ற கேள்வி இருக்கிறது.

பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படும் போது அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை அமெரிக்காவும் எதிர்கொள்ளும். இது ஒரு முக்கியமான பிரச்சினை.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் ஊடக சுதந்திரம், இணைய சுதந்திரம் என்று குரல் கொடுத்து வருபவை. அப்படியான நாடுகள் சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு உதவும் என்று எதிர்பார்க்க முடியாது. இது இன்னொரு பிரச்சினை.

சில வேளைகளில் அமெரிக்காவிடம் இதற்கான உதவியை அரசாங்கம் கோரியிருக்கவும் கூடும். அமெரிக்கா அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தாலும் ஆச்சரியமில்லை.

ஆனால் சீனா அதற்கு நேர் எதிர்மாறான நாடு. அமெரிக்கா, ஜப்பானின் தொழில்நுட்பங்களுக்குஇணையான மாற்றாத தொழில்நுட்பங்களை கொண்டுள்ள நாடு.அதற்கு சுதந்திரம் என்ற சொல்லே பிடிக்காது. ஊடக சுதந்திரத்தை சீனா ஒருபோதும் அனுமதித்ததில்லை. ஏற்றுக்கொண்டதில்லை.

இப்போது கூட எந்தவொரு மொழியிலும் விக்கிபீடியா தகவல் களஞ்சியத்தை பயன்படுத்த முடியாதவாறு தடை செய்து வைத்திருக்கிறது சீனா.

சீனாவில் இதுபோன்று ஏராளமான இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. சீன அரசுக்கு எதிரான அதன் கொள்கைகளுக்கு எதிரான இணையத் தொடர்புகளுக்கோ சமூக வலைதளங்களுக்கோ அங்கு அனுமதியில்லை.

இவ்வாறு சமூக வலைத்தளங்களையும் இணையத்தளங்களையும் கட்டுப்படுத்தி தடை செய்யும் தொழில்நுட்பத்தை சீனா அதிகளவில் கண்டறிந்திருக்கிறது. வெற்றிகரமாக பயன்படுத்தி தடைகளை நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

சீனாவிடம் உள்ள நவீன தொழில்நுட்பங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா தயங்கமாட்டாது. அந்த துணிச்சலில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீன ஜனாதிபதியிடம் இந்த உதவியைக் கோரியிருக்கிறார்.

இனிமேல் தான் இருக்கிறது. சிக்கலான விளையாட்டு. சீன நிபுணர்கள் இலங்கைக்கு தொழில்நுடபக் கருவிகளுடன் வந்து இணையங்கள், சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் தவறான தகவல்களை வெளியிடுபவர்களை கண்டறிவதற்கு உதவப் போகிறார்கள்.

எவ்.பி.ஐ. இன்ரபோல், எம்.ஐ5 போன்ற வெளிநாடடுப் புலனாய்வு அமைப்புகளைப் போலவே சீன நிபுணர் குழுவும் இலங்கையில் அதிகாரபூர்வமாக இயங்கப் போகிறது.

மற்றைய புலனாய்வு அமைப்புகள் தாமாகவே வந்து சேர்ந்து கொண்டவை. ஆனால் சீன நிபுணர் குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தேடிச் சென்று அழைத்து வந்திருக்கிறார்.

இந்தக் குழுவின் செயற்பாடுகளை மேற்குலகமோ இந்தியாவோ எந்தளவுக்கு விரும்பும் என்ற கேள்வி இருக்கிறது. ஏனென்றால் சீனக்குழுவின் செயற்பாடுகள் இணைய சுதந்திரம், ஊடக சுதந்திரம் போன்றவற்றுக்கு சவாலானது.

இந்தத் தருணத்தில் தகவல் திருட்டைத் தடுப்பதற்கான அவசரகால நிலையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரகடனம் செய்திருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஏற்கனவே சீனாவின் தலையீடுகள் குறித்து கவலையடைந்துள்ள மேற்குலக நாடுகள் மேலும் தலையீடுகளுக்கு வழிவகுக்கப்பட்டிருப்பதை விரும்பப் போவதில்லை.

இவற்றுக்கு அப்பால் சீனாவின் இணைய தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியை இலங்கை அரசாங்கம் பெறுகின்ற போது அந்த நிபுணர்கள் இணைய வழித் தகவல் தொடர்புக் கூட்டமைப்பை புலனாய்வு செய்வதற்கும் வாய்ப்புகள் ஏற்படலாம். அது நிச்சயமாக அமெரிக்காவை சினங்கொள்ள வைக்கும்.

ஏனென்றால் அமெரிக்கா போன்ற நாடுகள் இணைய வழியில் பரிமாறும் தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக நிகழும்.

இணைய வழித் தொடர்பு மிகவும் பாதுகாப்பானது. இரகசியமானது. யாராலும் ஊடுருவவோ ஊடறுக்கவோ முடியாதது என்பதெல்லாம் பழைய கதை.

எந்தத் தொழில்நுட்பத்தையும் உடைத்தெறிந்து நுழைகின்ற வல்லமை பெற்றவர்கள் நிரம்பிய உலகம் இது.

நாளாந்தம் நிகழும் தகவல் தொழில்நுட்ப இணையவெளிக் குற்றங்களை அவதானித்தால் இதனை உணர்ந்து கொள்ளலாம்

இப்படியான நலையில் சீன நிபுணர்களைக் கொண்டுவருவதை மேற்குலகம் நிச்சயமாக விரும்பாது.

அதனைப் பற்றிக் கவலையின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீன நிபுணர்களை அழைத்திருக்கிறார். இதன் விளைவுகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.