கோத்தாவுக்கு காத்திருக்கும் பாரிய அச்சுறுத்தல்...

Report Print Sathriyan in கட்டுரை

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றார் கோத்தபாய ராஜபக்ச.

அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அண்மையில் அளித்திருந்த செவ்வி ஒன்றிலே அவர் ஏற்கனவே ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறிய அதே கருத்தை மீள உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்திருந்த செவ்வியில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அதில் வெற்றி பெற்று இஸ்லாமிய தீவிரவாதத்தை வேரோடு அழிப்பேன் என்றும் சூளுரைத்திருந்தார் கோத்தபாய ராஜபக்ச.

ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக எதிர்கொண்டவர் என்ற பொது அபிப்பிராயம் உள்ள நிலையில் அதேவிதமான யுக்தியை இப்போதும் கையாளும் எண்ணத்தில் அவர் இருக்கின்றார்.

ஆனால் ஒரு சிறிய வேறுபாடு உள்ளது. விடுதலைப் புலிகளை எதிர்கொண்ட போது அவர் ஜனாதிபதியாக இருந்த தனது சகோதரரின் கீழ் அதிகாரம் மிக்க பாதுகாப்புச் செயலாளராக இருந்தார்.

இஸ்லாமிய தீவிரவாதத்தை அழிப்பதற்கான போரில் அவர் ஜனாதிபதியாக இருந்து தலைமை தாங்க ஆசைப்படுகின்றார்.

இஸ்லாமிய தீவிரவாத அச்சுறுத்தல் என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள அவர் திட்டம் தீட்டியிருப்பது அப்பட்டமாகவே தெரிகின்றது.

அல் ஜசீராவுக்கு அளித்திருந்த செவ்வியில் கோத்தபாய ராஜபக்ச தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அமெரிக்க குடியுரிமை துறந்திருப்பதாகவும் தனது இந்த முடிவு நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டது என்றும் கூறியிருக்கின்றார்.

ஆனால் அந்த நீண்டநாட்கள் என்பது எந்தளவு என்பதை அவர் வரையறுத்துக் கூறவில்லை. மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோதே அவருக்கு ஜனாதிபதி பதவி மீது ஒரு கண் இருந்ததா அல்லது அதற்குப் பின்னர் தான் அந்த ஆசை வந்ததா என்று தெரியவில்லை.

எது எவ்வாறாயினும் அவரது இந்த நீண்டநாள் கனவு அல்லது முடிவு அவரை முன்னிறுத்த எதிர்ப்பார்த்திருக்கும் தரப்புக்களுக்கு அச்சத்தையோ கலக்கத்தையோ கொடுக்கக் கூடும்.

கோத்தபாய ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றும் இலக்குடன் தான் எலிய, வியத்கம போன்ற அமைப்புக்களை நிறுவி பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தார்.

அதந்த அமைப்புக்களை அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் இன்னமும் இணைக்கவில்லை. அந்த அமைப்புக்கள் தொடர்ந்தும் சுயாதீனமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கீழ் செயற்படுகின்றன.

அதுபோலவே கோத்தபாய ராஜபக்ச இன்னமும் பொதுஜன முன்னணியின் உறுப்பினராகவும் இணைந்து கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

கோத்தபாய ராஜபக்சவை ஒரு கட்சி என்ற கட்டுக்கோப்புக்குள் கொண்டு வருவதை ராஜபக்சவினர் விரும்பவில்லை போலவே தோன்றுகின்றது.

அவரை அவ்வாறான ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பது கடினமானது என்பதற்காக ராஜபக்சவினர் அவரை வெளியில் வைத்திருக்க முடிவு செய்திருக்கலாம்.

அல்லது பொதுஜன முன்னணிக்கு வெளியே இருந்து ஒரு வேட்பாளரை கொண்டு வந்து அந்த நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் எண்ணம் இருக்கலாம்.

கோத்தபாய ராஜபக்சவும் கூட கட்சி அரசியலையோ கட்சி அரசியலுக்குள் இருந்து தான் முன்னிலைப்படுத்தப்படுவதையோ விரும்பவில்லை. பாரம்பரிய அரசியல்வாதியாக இருக்கும் திட்டம் அவரிடம் சிறிதளவும் கிடையாது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் போன்று ஒருவராக திடீரென உருவாக்கம் பெற்ற தலைவராக இருக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம். சில காலத்துக்கு முன்னர் அவர் அதனை வெளிப்படுத்தியிருந்தார்.

உலகம் முழுவதும் பாரம்பரிய அரசியல்வாதிகளை மக்கள் ஏற்கவில்லை என்றும் அதற்கு வெளியே இருந்தே தலைவர்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் உதாரணங்களைக் காட்டியிருந்தார்.

இந்த நிலையில் பொதுஜன முன்னணியின் உறுப்பினரே அடுத்த ஜனாதிபதி என்று அந்தக் கட்சியினர் முன்னர் உறுதியாக கூறிவந்த நிலையில் கோத்தபாய ராஜபக்ச அந்த கட்சியில் இணைந்து கொள்வது தவிர்க்க முடியாத விடயமாக மாறலாம்.

அவ்வாறு கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் நிலை ஏற்பட்டால் பொதுஜன முன்னணிக்கு தலைமை தாங்கப் போவது யார் என்ற கேள்வி எழும்.

மகிந்த ராஜபக்ச இன்னமும் அதன் நிழல் தலைவராக இருக்கின்றாரே தவிர பகிரங்கமாக அதன் தலைமையை ஏற்கவில்லை. எனினும் மகிந்த ராஜபக்சவைச் சுற்றியே பொதுஜன முன்னணி என்ற கோட்டை கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றது.

எனவே ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றாலும் பொதுஜன முன்னணியில் அவர் தலைமைத்துவப் பதவியைக் கைப்பற்ற முடியாமல் போகும்.

ஒரு பக்கம் அவர் நாட்டின் தலைவராக இருந்தாலும் கட்சியின் தலைவராக வேறொருவரின் கீழ் இருக்கவோ கட்சியின் முடிவை ஏற்று நடக்க வேண்டிய நிலையோ ஏற்படலாம்.

அவ்வாறானதொரு நிலையை கோத்தபாய ராஜபக்ச விரும்புவாரா என்ற கேள்வி இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து நீண்ட நாட்களாகி விட்டது என்ற அவரது கருத்தும் தனக்குக் கீழ் சில சுயாதீன அமைப்புக்களை வைத்திருப்பதும் அவர் தனக்கான ஒரு பாதையை வகுக்க முனைகின்றார் என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது.

மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச போன்றவர்கள் அரசியல் வழியில் பயணிப்பவர்கள். அவர்களுக்கிடையில் சில பொது இணக்கப்பாடுகள் இருக்கின்றன.

ஆனால் மகிந்தவுக்கும் கோத்தபாயவுக்குமோ, பசிலுக்கும் கோத்தாவுக்கும் இடையிலோ அத்தகைய பொது இணக்கப்பாடு இருப்பதாகத் தெரிவயவில்லை.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நீண்ட நாட்களாக திட்டமிடுகின்றார் என்றால் அதற்கு காரணம் மகிந்தவுக்கு மீண்டும் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது அல்ல.

அவர் தனக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றார். அந்த அதிகாரங்களைக் கொண்டு தான் விரும்பியபடி ஒரு நாட்டை வடிவமைக்கும் எண்ணம் கொண்டிருக்கின்றார் என்பதே அர்த்தம்.

இது மகிந்த ராஜபக்சவின் திட்டத்திற்கு எதிரானது மகிந்த ராஜபக்சவின் திட்டத்திற்கு எதிரானது. மகிந்த ராஜபக்ச மீண்டும் தானே உச்ச அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று விரும்புகின்றார். அதற்கான குறுக்கு வழிகளைப் பயன்டுத்தவும் அவர் தயங்கமாட்டார்.

மற்றொரு புறத்தில் அவர் தனது மகன் நாமல் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டிருக்கின்றார். தனது அரசியல் வாரிசாக கோத்தபாய ராஜபக்சவை பிரகடனப்படுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச தயாரில்லை. அவர் அந்த நிலைக்கு நாமல் ராஜபக்சவைக் கொண்டு வரவே விரும்புகின்றார்.

இப்படியான சூழலில் கோத்தாவின் ஜனாதிபதி கனவு இப்போதையை நிலையில் ராஜபக்சவினர் அதிகாரத்தைக் கைப்பற்றும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சாதகமான ஒன்றாக இருந்தாலும் மகிந்தவின் நீண்டகால அரசியல் நோக்கிற்கு ஆபத்தானது அச்சுறுத்தலானது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால் அவர் முழு அதிகாரத்தையும் பயன்படுத்திக் கொள்வார். அதன் மூலம் அவர் மகிந்தவின் ஒளிவட்டத்தை மங்கச் செய்து தன் மீது குவிக்கச் செய்வார். அது நாமலின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடும்.

கோத்தபாய ராஜபக்ச தொடர்பாக ஏற்கனவே மகிந்த தரப்பு கடுமையான சவால்களையே சந்தித்திருக்கின்றது. இன்னமும் அவர் தான் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை.

ஆனால் கோத்தாவோ தானே போட்டியிடுவேன் என்று அறிவிக்கின்றார். இங்கு பொதுஜன முன்னணியை விட கோத்தா தனியான அரசியலை முன்னெடுக்க ஆரம்பித்து விட்டார்.

அவருக்குப் பின்னால் செல்லுகின்ற நிலைக்கு பொதுஜன முன்னணியை கொண்டுவர ஆரம்பித்திருக்கின்றார்.

இஸ்லாமிய தீவிரவாதத் தாக்குதல்கள் கோத்தாவின் கரங்களை இன்னும் பலப்படுத்துகின்றன. அதனை வைத்தே இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அதிகாரத்தைக் கைப்பற்ற அவர் முயற்சிக்கின்றார்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்துப் பாயும் என்று ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க எச்சரித்திருப்பதையும் இங்கு காணமுடிகின்றது.

ஒரு வகையில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைப் பெறுவதற்கான சில யுக்திகளைப் பயன்படுத்த முற்பட்டாலும் அவரை அச்சுறுத்தலாகப் பார்க்கின்ற நிலை தமிழ் முஸ்லிம்களிடம் மாத்திரமின்றி சிங்கள் அரசியல் தரப்புக்களிடமும் ஏன் ராஜபக்ச குடும்பத்திற்குள்ளேயே இருக்கின்றது.

கோத்தபாய ராஜபக்சவின் ஜனாதிபதி கனவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இதுவாகத்தான் இருக்கப்போகின்றது.