மருந்தாக அரண்மனைக்கு கொண்டு வரப்பட்ட இலை! மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தும் விஷம்

Report Print Sujitha Sri in கட்டுரை

'அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு' இந்த பழமொழி நம் தற்போதைய காலகட்ட வாழ்விற்கு மிகவும் பொருத்தமானதாக காணப்படுகிறது.

உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரையில் நாம் அனைவரும் அளவிற்கு அதிகமாகவே பயன்படுத்துகிறோம். இதற்காக அளவிற்கு அதிகமாக உழைக்கின்றோம்.

அதிகமான உழைப்பிற்காக நம் அளவான சந்தோசத்தை கூட தொலைகிறோம். இவ்வாறு குடும்ப சந்தோசங்களை தொலைக்கும் பலர் போதைக்கு அடிமையாகின்றார்கள்.

அது உடை மீதான பற்றாக இருக்கலாம் அல்லது உடமை மீதான பற்றாக கூட இருக்கலாம். இதனை விடவும் போதைப்பொருட்கள் எனும் உயிரை காவு கொள்ளும் பொருட்கள் மீதான பற்றாக கூட இருக்கலாம்.

1560ஆம் ஆண்டு கத்தரீன் டி மெடிசியின் அரண்மனைக்கு ஒரு மருந்துப் பொருளாக அனுப்பி வைக்கப்பட்ட புகையிலையானது தற்போது போதையூட்டும் சாதனமாக மாறியுள்ளது.

புகையிலை வரலாற்றின் படி தென்னமெரிக்க மக்களால் கண்டறியப்பட்டு அமெரிக்காவிற்கும், ஸ்பானியர்கள் மூலம் ஐரோப்பாவிற்கும், பின்பு ஏனைய நாடுகளுக்கும் பரவியதாக அறியப்படுகிறது.

சொலனேசி குடும்பத்தை சேர்ந்த நிகோட்டினா பேரினத்தைக் கொண்ட புகையிலையில் பல சிற்றினங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பேரினத்தின் பெயர் போர்த்துக்கல் நாட்டுக்கான முன்னாள் பிரான்ஸ் தூதுவரான ஜீன் நிக்கொட் டீ வில்லமெயின் என்பவரைக் கௌரவிப்பதற்காக இடப்பட்டதாகவும் வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருந்துக்காக கொண்டு வரப்பட்ட இந்த புகையிலையானது பயன்படுத்தும் முறையையும், அளவையும் பொறுத்து மனித உடலில் ஏற்படுத்தும் தாக்கம் வெவ்வேறாக காணப்படுகின்றன.

நிகோட்டினா தாவரமானது போதையை ஏற்படுத்துவதாக காணப்படுகிறது. புகையிலையில் உலர்ந்த நிலையில் காணப்படும் போது 0.6% முதல் 3.0% நிகோட்டின் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நிகோட்டின் அமிலமானது மூளையுடன் தொடர்பு கொண்டு புகையிலை அடிமைத்தனத்திற்கு உள்ளாக்குகிறது.

புகையிலையை நுகர்ந்தவுடன் அது நிகோட்டின் மூலக்கூறாக இரத்த ஓட்டத்தில் கலந்து 10 - 20 நொடிகளில் மூளையை அடைகிறது. இந்த போதை சில நொடிகள் மதிமயக்கச் செய்து அதனை நுகரத் தூண்டுகிறது.

இதனைப் பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய முக்கியமான உடல்நலக்கேடாக குருதிச் சுற்றோட்ட தொகுதியில் ஏற்படக்கூடிய நோய்களை குறிப்பிடலாம்.

அத்துடன் தொடர்ச்சியான புகையிலை பயன்பாடானது காலப்போக்கில், வாய், தொண்டை, நுரையீரல் ஆகிய பகுதிகளில் புற்று நோயைத் தூண்டும் பொருட்களைப் படியச் செய்கிறது.

இவற்றிட்கு விழிப்பூட்டும் வகையிலேயே உலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் உலக புகையிலை ஒழிப்பு தினம் மே மாதம் 31 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

புகைப்பிடித்தல் பழக்கமானது நம்மையும் தாண்டி நம் பின் வரும் சந்ததியினரின் மரணபனுவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Latest Offers