வரட்சியால் வாடும் வீரச்சோலை!

Report Print V.T.Sahadevarajah in கட்டுரை

வரட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் சம்மாந்துறை, வீரச்சோலைக் கிராமத்திற்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள இன்றைய நிலையை வெளிப்படுத்த இக்கட்டுரை வரையப்படுகிறது.

கடந்த 05ஆம் திகதி பிற்பகலில் அந்தக் கிராமத்திற்கு சென்றேன். முழுக்க முழுக்க வயல்களாலும், வாய்க்கால்களாலும் சூழப்பட்டு பச்சைப்பசேலேன்று காட்சியளிக்கும் வீரச்சோலைக் கிராமம் மஞ்சள் நிறமாக மாறி வரண்டு கிடக்கக் கண்டேன்.

செல்லும் பாதையின் இருமருங்கிலுமுள்ள வாய்க்கால்களில் ஒருசொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் புழுதி பறந்துகொண்டிருக்கும் நிலை காணப்பட்டது. இடையிடையே சாரைப்பாம்பின் நடமாட்டமும் தென்பட்டது.

கால்நடைகள் தீவனமின்றி அங்குமிங்கும் அலைந்து திரிந்தன.

என்னுடன் இந்த மக்களுக்கு வவுசர் மூலம் நீர்தாங்கிகளை வழங்கி ஏதாவது உதவி சேவைசெய்யலாமென்ற எண்ணத்தில் கல்முனையைச் சேர்ந்த பிரபல சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜனும் வந்திருந்தார்.

அங்கு சென்றதும் மக்கள் ஓடோடிவந்து அவர்களது அவல நிலையை எடுத்துச் சொன்னார்கள். இளைஞர்கள் அரசியல்வாதிகள் மீது சற்று கடுப்புடன் இருப்பதை அவதானிக்க முடிந்தது. சுமார் இருமணி நேரம் அந்தமக்களுடன் அங்குசெலவிட்டதில் தொகுத்ததைச் சுருக்கமாகத் தருகிறேன்.

அமைவிடம்!

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன் வெளிப்பிரதேசத்தின் தென்கோடியிலே தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தனித்தமிழ்க் கிராமமாக வீரச்சோலை அமைந்துள்ளது.

162 குடும்பங்களை மாத்திரமே கொண்ட இவ்வீரச்சோலையில் ஒரேயொரு பாடசாலை ஆலயம் என ஒருசில பொது நிறுவனங்களே உள்ளன.

பெரும்பாலும் கூலித்தொழிலாளிகளைக் கொண்ட மிகவும் பின்தங்கிய கிராமமான வீரச்சோலையின் பிரதான பிரச்சினை அடிப்படைத்தேவைகளுள் ஒன்றான நீர் என்பதனை சுட்டிக்காட்டமுடியும்.வீரச்சோலை மக்களின் நீர்தேவைக்கு அவர்கள் அருகிலுள்ள வாய்க்கால்கள் குளங்களைத் தான் நாடுவதுண்டு.

ஒரிரு கிணறுகளிருந்த போதிலும் அவற்றில் போதிய நீர் இருப்பதில்லை. குறிப்பாக கோடைகாலத்தில் மருந்துக்கும் நீரில்லை.

இந்தநிலையைக் கருத்திற்கொண்ட உலகதரிசன நிறுவனம் நீர்ப்பாவனைக்காக 2001ஆம் ஆண்டு ஊருக்கான ஒரு பாரிய நீர்த்தாங்கியை அமைத்து அதற்கு நீர்வழங்கும் வகையில் இரு பாரிய கிணறுகளையும் அமைத்துக் கொடுத்தது. கூடவே அங்குள்ள குடிமனைகளுக்கான குழாய்களையும் பொருத்திக் கொடுத்தது. இதனால் வீட்டிலிருந்தவாறே தமது நீரைப்பெற முடிந்தது.

இந்த நீர்த்தாங்கியே அந்த முழுக்கிராமத்துக்குமான நீர்த்தேவையைப் பூர்த்திசெய்து வருகின்றது. கோடைகாலத்தில் பொதுவாக நீர்வற்றுவதும் மட்டுப்படுத்தப்பட்ட நீரைவழங்குவதும் வழமையாகவிருந்தது.

ஆனால் இம்முறை அங்கு பாரிய வரட்சி நிலவுவதால் முழுக்கிராமத்திற்கான நீர்த்தேவை பாரிய சவாலாக மாறியுள்ளது.

ஊரைச்சுற்றியுள்ள வயல்நிலங்களும், வாய்க்கால்களும் சொட்டுத்தண்ணீர் கூட இல்லாமல் வரண்டு போயுள்ளன.

ஊருக்கு நீரை வழங்கும் இருகிணறுகளும் நீர்வற்றி இறுதிக்கட்டத்திலுள்ளன.

அவற்றிலிருந்து ஒன்றுவிட்டு ஒரு தினம் காலையில் 5 மணி தொடக்கம் 15 நிமிடங்களுக்கு குறைந்த அளவு நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இது குடிப்பதற்கும் சமைப்பதற்கும் போதுமானதாக இல்லை.

இந்த நிலையில் ஏனைய நீர்த்தேவைக்கான அவர்கள் 3கிலோமீற்றர் நடந்து சென்று ஒரு ஆற்றில் நீராடி துணிமணிகளை துவைத்து வரவேண்டி நேரிட்டுள்ளது. சடயந்தலாவ வீரச்சோலை 4ஆம் கொலனி அணைக்கட்டு என்ற இடத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.

அண்மையில் இங்கு நீராடிய 4 குழந்தைகளின் தந்தையான ஒரு விவசாயியை முதலை கடித்து இழுத்துச் சென்றமை தெரிந்ததே. எனவே பயத்தின் மத்தியில் தான் இங்கு ஆண்களும் பெண்களும் நீராடுகிறார்கள்.

பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் ஒப்புக்கு முகத்தை அலம்பிக்கொண்டு செல்கிறார்கள். பாடசாலையிலும் தண்ணீர் இல்லை. அங்குள்ள இரு பிளாஸ்ரிக் தாங்கிகளுக்கு வாரத்திலொருமுறை நாவிதன்வெளிப் பிரதேசசபையால் நீர் நிரப்பப்படுவதாக அதிபர் கே.திருச்செல்வம் தெரிவிக்கிறார்.

ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே குடிப்பதற்குத் தேவையான நீரைக்கொண்டு வருவதாக அவர் தெரிவிக்கிறார்.

இன்னும் வரட்சி நீடித்தால் அந்த மக்களுக்கு காலையில் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச நீரும் கிடைக்காத துர்ப்பாக்கிய நிலை தோன்றும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பொதுமக்கள் கருத்து!

ஊர்த்தலைவர் கே.சோமசுந்தரம் (வயது 60) கூறுகையில்:

வீரச்சோலைக்கிராமம் என்றுமில்லாதவாறு நீர்த்தட்டுப்பாட்டை எதிநோக்கியுள்ளது. இருக்கின்ற இரு கிணறுகளும் மிகவேகமாக வற்றிவருகின்றது. மக்கள் பெரும கஷ்டத்திலுள்ளனர். நீருக்காக தினமும் 3 கிலோமீற்றர் தூரம் அலைய வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

எஸ்.செல்வராஜா என்ற இளைஞன்(வயது17) கூறுகையில்:

நாம் தண்ணீரின்றி வாடுகின்றோம் என்பதைப் பார்ப்பதற்காவது ஒரு அரசியல்வாதியைக்கூட காணவில்லை. தேர்தலுக்கு மாத்திரம் வாக்குக்கேட்டு வருகிறார்கள். பின்னர் அவர்களது தலைக்கறுப்பையும் காணவில்லை. இம்முறை நாங்கள் நல்ல படிப்பினையை காண்பிப்போம் என்றார்.

குடும்பஸ்தர் பி.விமலா(வயது 38) கூறுகையில்:

கடந்த 2 மாதங்களாக இந்த நிலை தான் காணப்படுகிறது. இன்றாவது நீங்கள் வந்து இதனை உலகத்திற்குக்காட்ட முன்வந்திருப்பதற்கு நன்றி கூறுகிறோம். எமது பிள்ளைகள் குளிக்காது முழுகாது முகத்தை அலம்பிக்கொண்டு பாடசாலைக்குச் செல்கிறார்கள். தற்போது வரும் நீர் சமைப்பதற்கும், குடிப்பதற்குக் கூட போதுமானதாக இல்லை. நீரைப்பிடிப்பதற்கு ஒழுங்கான பாத்திரங்கள் கூட இல்லை. சட்டியிலும், பானைகளிலும், குடங்களிலும் நீரை பிடித்து வைக்கிறோம். என்றார்.

மற்றுமொரு குடும்பஸ்தர் சோ.தர்மலிங்கம்(வயது 67) கூறுகையில்:

3 கிலோமீற்றர் தூரம் தாண்டி குளித்து, துவைத்து வரும்போது அனைத்தும் காய்ந்துவிடும். வியர்வை தான் மிஞ்சும். பிரதேசசபை வவுசர் வந்து 10 நாட்களாகின்றன. ஒவ்வொருநாளும் ஒரு வவுசராவது வரவேண்டும். நீங்கள் உதவிசெய்வதாகவிருந்தால் அங்குள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் நீரைப்பிடித்து வைக்கக்கூடிய ஒரு பெரிய வூளியை வாங்கித்தாருங்கள் பிரயோசனமாகவிருக்கும் என்றார்.

உண்மையில் அவர்களது சோகக்கதைகளைப் பார்க்கின்ற போது பல உண்மைகள் தெரிய வருகின்றன.

இருப்பினும் இன்றைய நிலையில் அந்தப்பெரியவர் சொன்னது போன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வூளி என்றால் குறைந்தது 700ரூபாய் என்றாலும் சுமார் 1இலட்சம் ரூபாய் அளவில் அதற்குத் தேவை. உதவிசெய்யும் மனப்பாங்கள்ள தனவந்தர்கள் அதனை முன்வந்து வழங்கலாம்.

நீரை வவுசர் முலம் பெற்று ஓரிரு தாங்கிகளை வாங்கித்தருவதாக சமுகசேவையாளர் ராஜன் தெரிவிக்கிறார். நாவிதன்வெளிப் பிரதேசசபையும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மனிதனின் அடிப்படைதேவையான நீரை வழங்குவதற்கு உதவிசெய்வது கோடி புண்ணியம் கிடைக்கும். அதற்காக முன்வருமாறு இந்த நேரடி றிப்போர்ட் வேண்டுகோள் விடுக்கிறது.