300 நாட்களைத் தாண்டியும் முடிவுறாத போராட்டம்!

Report Print V.T.Sahadevarajah in கட்டுரை

100 நாட்கள் ஓடிய வெற்றித் திரைப்படம் இது, 200 நாட்கள் ஓடி சாதனை படைத்த முதல் திரைப்படம் இது என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் 300 நாட்களை தாண்டியொரு மக்கள் போராட்டம் முடிவின்றி தொடருகின்றது என்றால் அது கிழக்கில் பொத்துவில், கனகர் கிராம மக்களின் காணி மீட்பு போராட்டமாகத்தானிருக்கும்.

ஆம். அந்த மக்களின் போராட்டத்திற்கான காரணம் என்ன? இதுவரை நடந்தது என்ன? அதற்கான சவால்கள் என்ன? தீர்வு காணப்படாததற்கு காரணம் என்ன? போன்ற பல கேள்விகள் எம்முன்னே எழுவதொன்றும் புதிய விடயமல்ல.

அவர்கள் இரவு பகலாக அந்த காட்டு பகுதியின் வீதியோரத்தில் முகாமிட்டு இரவுபகலாக தங்கியிருந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அந்த முகாம் தற்போது இரண்டாகியுள்ளது. அருகில் தண்ணீர் பவுசரொன்று நிறுத்தப்பட்டுள்ளது. அங்கேயே அடுப்பு மூட்டி சமையல் செய்கின்றனர். இடையிடையே தேநீர் போடுகின்றனர்.

வரலாறு

அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று - பொத்துவில் ஏ4 பிரதானசாலையில் ஊறணி எனுமிடத்தில் கனகர் கிராம தமிழ் மக்களின் காணி மீட்பு போராட்டம் தொடங்கி நேற்றுடன் 305ஆவது நாளாகிறது.

அவர்கள் கடந்த வருடம் 2018.08.13ஆம் திகதி இப்போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இற்றைக்கு 58 வருடங்களுக்கு முன்பு அங்கு வாழ்ந்து வந்த மக்கள் தமது காணிகளை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

1960களில் சுமார் 278 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. 1981களில் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் காலத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் எம்.சி.கனகரெத்தினத்தின் முயற்சியால் வீடுகட்ட அரை ஏக்கர் நிலமும், பயிர் செய்ய 2 ஏக்கர் நிலமும் தரப்பட்டு 30 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

1990களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்களை கடந்த 28 வருடங்களாக அங்கு வனபரிபாலன இலாகா குடியேற அனுமதிக்கவில்லையென்பது பிரதான குற்றச்சாட்டாகும்.

எது எப்படியிருந்தபோதிலும் அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடுமண்டி காணப்படுகின்றது.

அந்த காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30 வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும் தகர்ந்த நிலையில் காணப்படுகின்றன.

அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன. இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் பல அரசியல்வாதிகள், சமூக சேவையாளர்கள் என பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதி மொழிகளையும் அளித்துள்ளார்கள்.

வனத்துறை உயரதிகாரியும், பிரதேச செயலாளரும் இக்காணியை மீளளிக்க உறுதிகூறியுள்ள நிலையிலும் போராட்டம் தொடர்கிறது.

மக்கள் என்ன கூறுகிறார்கள்?

நாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்த காணியையே கோருகின்றோம். மரணித்தாலும் இந்த இடத்திலேயே மரணிப்போம். தவிர போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம்.

305ஆவது நாளில் அந்த மக்கள் தெரிவிக்கையில்,

நாம் எமது நீதியான நியாயமான அஹிம்சை வழிப் போராட்டத்தில் 305 நாட்களைக் கடத்தியது என்பது பெரிய விடயமல்ல. இன்னும் 1000 நாட்களும் இங்கு இருப்போம்.

ஆனால் எமது பிரச்சினைகள் கோரிக்கைகள் இன்னும் முறைப்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எட்டவில்லையென்பதே எமது ஆதங்கம்.

எமது அரசியல்வாதிகள் அதைப் பெற்றுத்தருவோம், இதைப் பெற்றுத்தருவோம் என்று வீரவசனம் பேசுவார்கள். இறுதியில் அபிவிருத்தியுமில்லை, உரிமையுமில்லை என்ற கையறுநிலைக்கு சென்றுள்ளமை வேதனைக்குரியது.

எமது பிரச்சினையொன்றே போதும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் சிந்திப்பதற்கு. இலங்கையின் இன்றைய நிலைமை அதற்கு நல்ல சாட்சி.

கண்ணுக்கு முன் நாம் வாழ்ந்த பூமியில் இன்று நாம் வாழ்வதற்கு இப்படி போராடவேண்டிய துர்ப்பாக்கியநிலை.

நுளம்புக்கடிக்கு மத்தியிலும் மலைப் பாம்புகளுக்கு மத்தியிலும் உறங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு. எனினும் காணி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வைராக்கியத்துடன் இருக்கிறோம்.

நாம் இங்கு பூர்வீகமாக வாழ்ந்து வந்ததற்கு இங்கிருப்பவர்கள் மட்டும் சாட்சியல்ல. இந்த உடைந்து தகர்ந்து கிடக்கும் வீடு வாசல்கள் மட்டும் சாட்சியல்ல.

மாறாக இந்த மாவட்டத்தில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்களும் சாட்சிகளாக இருக்கிறார்கள்.

யார் என்ன சொன்னாலும் எமக்கு நிரந்தரமான எழுத்து மூல தீர்வு கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டு அகலமாட்டோம் என்றனர்.

அதற்கு கனகர் கிராம மீள்குடியேற்ற சங்கத்தலைவி புஞ்சிமாத்தயா றங்கத்தனா இவ்வாறு கூறினார்.

எமது போராட்டம் 305 நாட்களைத் தாண்டுகின்ற போதிலும் நாம் சற்றும் மனம் தளரவில்லை. இங்கு 278 குடும்பங்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்தோம்.

இந்த 60ஆம் கட்டையில் 1238 ஏக்கர் காணியுண்டு. நாம் இங்கு கேட்பது நாம் வாழ்ந்த காணியையே தவிர வேறெவரினதுமல்ல.

இறுதியாக அம்பாறை அரசஅதிபர் மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர் இங்கு வந்து எம்மோடு பேசி இப்பிரதேசத்தை பார்வையிட்டனர். அழிந்த வீடுகளைப் பார்வையிட்டனர்.

அப்போது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நாம் ஒவ்வொருவரும் இரண்டரை ஏக்கர் நிலத்துடன் வாழ்ந்து வந்தவர்கள்.

2 ஏக்கர் சேனைப் பயிர்ச்செய்கைக்கும் அரை ஏக்கர் வீட்டிற்குமாக தந்துதான் எம்மை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சி.கனகரெத்தினம் எம்மை 30 நிரந்தர வீடுகளில் குடியேற்றினார்.

அப்படி வாழ்ந்து வந்த எங்களுக்கு கால் ஏக்கர் நிலமா?

ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அப்படி பார்த்தால் 79 ஏக்கர் காணி இந்த 30 குடும்பங்களுக்குமாக விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் நாம் கேட்பது இந்த 79 ஏக்கரையல்ல. 1960களிலிருந்து இங்கு 278 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. அவர்களில் எம்.சி.ஜயா 30 குடும்பங்களுக்கு மாத்திரமே முதற்கட்டமாக வீடுகளை அமைத்துத் தந்தார். மற்றவர்களுக்கு அமைப்பதற்கிடையில் அவர் காலமாகி விட்டார்.

எனவே எமக்கு காணி தருவதாயின் 278 குடும்பங்களுக்கும் காணி தரவேண்டும். இல்லையென்றால் எவருக்கும் அந்த காணி தேவையில்லை என்றார்.

அங்கிருந்த 74 வயதான எம்.வடிவேல் எனும் வயோதிபர் அழுதழுது கூறுகையில்,

நானும் எனது 4 பெண் பிள்ளைகளும் இங்குதான் வாழ்ந்து வந்தோம். தற்போது பொத்துவில், குண்டுமடுவில் பல சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்.

இம்முறை எமது இந்த காணி கிடைக்காவிடின் நான் இந்த இடத்திலேயே உயிரை விடுவேன் என்றார்.

எம்.இராசா என்பவர் கூறுகையில்,

1960இல் இங்கு வந்து நாம் குடியேறியதனால் இதனை 60ஆம் கட்டை என்று கூறுவர். 1981இல் சீதேவி எம்.சி.கனகரெத்தினம். இந்த 30 வீட்டுத்திட்டத்தை ஏற்படுத்தித் தந்தார்.

அப்போது நாம் 276 குடும்பங்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். 1990வன்முறை யுத்தத்தின் போது நாம் இடம்பெயர நேரிட்டது.

28 வருடங்களின் பின்பு இங்குவர முடிந்தது. ஆனால் காணி மறுக்கப்படுவது வேதனையாக உள்ளது. எமது காணியை தானே கேட்கிறோம். இறைவன் இரங்கட்டும் என்றார்.

அங்கு அடிக்கடி விஜயம் செய்து உதவி வரும் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் கூறுகையில்,

பகல் பொழுதிலே இந்த பிரதான வீதியால் பயணிகள் செல்வதற்கு அஞ்சுவார்கள். காரணம் யானையின் நடமாட்டம். பாம்புகளின் நடமாட்டம். தற்போது மலைப்பாம்பின் தொல்லை ஒருபுறம். நுளம்புக்கடி மறுபுறம்.

அப்படிப்பட்ட காட்டிற்குள் 300ஆவது நாளை தாண்டி போராட்டம் நடத்துகிறோம். இன்னும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கண் திறக்கவில்லையா?

இந்த காட்டிற்குள் அந்த அதிகாரிகளின் அல்லது அரசியல்வாதிகளின் குடும்பங்கள் இருந்திருந்தால் என்ன நடக்கும்?

கடந்த கால அரசுகள் தமிழ் மக்களுக்கு எந்த உரிமையையும் வழங்கவில்லை. இன்றைய நல்லாட்சியாவது எதையாவது செய்யும் என இன்னும் நம்புகிறோம். பொறுத்திருப்போம்.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் பாவம் செய்தவர்கள். முக்கிய தினங்களில் கூட தமது உரிமைக்காக போராட வேண்டிய துர்ப்பாக்கியநிலை.

தமிழர்க்கு சிறுவர் வயோதிபர் தினங்களிலும் போராடும் அவலத்தை இங்கு காண்கிறேன். நல்ல பதில் கிடைக்குமென நம்புவோம் என்றார்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் கூறுகையில்,

கனகர்கிராம விடயத்தில் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம். பலதடவைகள் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடியுள்ளோம். இருதடவைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனயிடம் பேசியுள்ளோம்.

மக்களுக்கு இது தெரியாமல் இருக்கும். தற்போது அங்கு வீடமைப்புத் திட்டமொன்றை ஏற்படுத்துவதற்கு சகல நடவடிக்கையை மேற்கொண்டுள்ளேன்.

கடந்த 305 நாட்களாக காணி மீட்புப் போராட்டம் நடத்தி வரும் பொத்துவில் கனகர் கிராமத்தில் 150 வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றும் 12 இலட்சம் ருபாய் பெறுமதியான இந்த 150 வீடுகளை அமைத்து கொடுக்க புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு முன்வந்துள்ளது.

அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதியுடன் கடந்தவாரம் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போது,

அதற்கான மதிப்பீட்டை வழங்குமாறு அமைச்சு அலுவலகத்திலிருந்தவாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவுடன் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டதற்கமைவாக விரைவில் இது நடைமுறைக்கு வரும்.

மேலும் காடுமண்டிக்கிடக்கும் காணியினை விடுவித்து அவற்றை சுத்தம் செய்து மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சுத்தம் செய்வதற்கான நிதியும் அதே அமைச்சினால் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு செயலாளர் சிவஞானசோதி இணங்கியுள்ளார்.

இதன்படி, கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கனகர்கிராம மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவிருக்கிறது என நம்பலாம்.

எனினும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழ் அரசியல்வாதிகளின் அசிரத்தையும் பாராமுகமும் இவர்களை இவ்வாறு 300 நாட்களைத் தாண்டியும் போராட வைத்திருக்கிறது.

அரசுக்கு முட்டுக்கொடுக்கும் தமிழ்க்கட்சிகள் தமிழ் மக்களுக்கான தீர்வையோ புதிய அரசியல்யாப்பையோ வடக்கு கிழக்கு இணைப்பையோ பெற்றுக்கொடுக்காவிட்டாலும் கடைசி இதனைக் கூட வென்றுகொடுக்க முடியாதா? என பொதுஜனம் வினவுவதையும் இங்கு பதிவிடுவது பொருத்தமென கருதுகிறேன்.

எதிர்வரும் மாரிக்கு முன்பாக அல்லது போராட்டம் ஒருவருட நிறைவை காண்பதற்கு முன்பதாக இந்த ஏழைத் தமிழ் மக்களின் வாழ்வில் ஒளியேற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம்.

Latest Offers