பொம்பியோ வருகையும், சோபா உடன்பாடும்

Report Print Subathra in கட்டுரை

இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்கா, சோபா எனப்படும் படைகளை நிலைப்படுத்தல் தொடர்பான உடன்பாட்டில் கையயெழுத்திடுவதற்கு முயற்சிக்கிறது என்றும், இதனால் இலங்கையின் இறைமை பாதிக்கப்படும் என்றும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள சூழலில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இந்த மாத இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி, புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள மைக் பொம்பியோ, அங்கிருந்து கொழும்பு வரவுள்ளார். அதன்பின்னர், அவர் 28ஆம் திகதி ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள்ளார்.

கொழும்புக்கான பயணத்தை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ள போதும் அதற்கான திகதி மற்றும் அவரது நிகழ்ச்சி நிரல் எதுவும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. எனினும், 26 அல்லது 27ஆம் திகதி அவர் கொழும்பில் இருப்பார் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.

ஒபாமா அரசாங்கத்தில், இராஜாங்கச் செயலாளராக இருந்த ஜோன் கெரி, 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

அதற்குப் பின்னர், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்காவின் உயர்மட்ட அரச பிரதிநிதி, மைக் பொம்பியோ தான்.

இலங்கையில் முக்கியமான தேர்தல்கள் இன்னும் சில மாதங்களில் நடக்க போகின்ற நிலையில், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இலங்கை முகம் கொடுத்துள்ள நிலையில், உள்நாட்டு அரசியலில் குழப்பம் மேலோங்கியுள்ள நிலையில், அவரது இந்தப் பயணம், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுவதில் ஆச்சரியமில்லை.

அமெரிக்காவின், இந்தோ பசுபிக் மூலோபாயத் திட்டத்தில், இலங்கை முக்கியமானதொரு பங்காளராக மாறியிருக்கிறது. இந்த மாற்றம், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னரே உருவானது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர, இராணுவ ஒத்துழைப்பு குறுகிய காலத்தில் மிகஉச்ச நிலையைத் தொட்டிருக்கிறது.

இப்படியான நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் நெருக்கமாக்கி விட்டிருக்கின்றன.

தாக்குதல்கள் நடந்த 48 மணித்தியாலங்களுக்குள்ளாகவே, அமெரிக்காவின் எவ்.பி.ஐ புலனாய்வு அதிகாரிகள் குழு கொழும்பு வந்து விசாரணைகளுக்கு உதவியது. இன்னமும் சில எவ்.பி.ஐ அதிகாரிகள் இங்கு தங்கியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

எவ்.பி.ஐ அதிகாரிகள் குழு விரைந்து சென்று விசாரணைகளுக்கு உதவியது என்றும், உள்நாட்டு தீவிரவாத அமைப்புக்களை செயலிழக்கச் செய்வதற்கு உதவியது என்றும் அமெரிக்க காங்கிரஸின் வெளிவிவகார உபகுழுவின் தென்மேற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் கடந்த புதன்கிழமை கூறியிருந்தார்.

அதுபோலவே, அடுத்தகட்டமாக, தீவிரவாத முறியடிப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான வழிகளை ஆராய்வதாகவும், அலிஸ் வெல்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் கிளார்க் கூப்பர் கொழும்பு வந்திருந்தார்.

அவர் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும், தீவிரவாத முறியடிப்பில் இணைந்து செயற்படுவது குறித்தும் ஆராய்ந்திருந்தார்.

முன்னதாக, எதிர்காலத்தில் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர் டாகஸ் கூறியிருந்தார்.

கடந்த மே மாத நடுப்பகுதியில், அமெரிக்கா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவைச் சந்தித்த பின்னரே, அவர் இவ்வாறு கூறினார்.

தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு இலங்கைக்கு அமெரிக்கா வலுவான ஆதரவை வழங்கும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் இந்தச் சந்திப்பின் போது கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியலில், அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், தீவிரவாத முறியடிப்புத் தொடர்பாக, ஸ்ரீலங்கா கோருகின்ற எந்தவொரு உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, இலங்கை வரும் மைக் பொம்பியோவிடம், தீவிரவாத முறியடிப்புக்கான ஒத்துழைப்பையும் உதவியையும் கோருவதற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார் என்று, அவரது ஆலோசகர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில் அடுத்தடுத்து என்னென்ன நடக்கும் என்று அனுமானிக்க முடியாத வகையில் நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை அடுத்த சில மாதங்களுக்குள் மிகப்பலமான நிலைக்குக் கொண்டு சென்று விட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

ஏனென்றால், இன்னும் ஐந்து, ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடக்கப் போகிறது. அதற்குப் பின்னர், நிலைமைகள் எப்படியும் மாறலாம். அடுத்து நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்கும். அதன் பின்னர், அரசாங்கமே மாற்றம் காணலாம்.

இலங்கை அரசியலில் எதுவும் நடக்கக் கூடும் என்றொரு நிலையில் தான், கிடைத்துள்ள குறுகிய காலஅவகாசத்துக்குள் காரியத்தை முடிக்க எத்தனிக்கிறது அமெரிக்கா. இது ஒன்றும் இரகசியமான விடயமில்லை.

இந்த அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வரப்போவதில்லை. எனவே, கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்காவின் நலன்களை உறுதிப்படுத்தும், வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் வெளிப்படையாகவே தம்மிடம் கூறியிருந்தார் என ஆங்கில வார இதழ் ஒன்றின் அரசியல் பத்திரிகையாளர் எழுதியிருந்தார்.

அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், கடந்தவாரம் தெரிவுசெய்யப்பட்ட சில ஊடகவியலாளர்களைச் சந்தித்திருந்தார். அதில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து அதிகம் பேசப்பட்டது. சோபா உடன்பாடு தொடர்பாகவும் அது இலங்கையின் இறைமைக்கு ஆபத்து என்ற தொனியிலும் வெளியாகும் கட்டுரைகள், செய்திகள் தொடர்பான விளக்கமளிக்கவே அந்த சந்திப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இதன்போது அந்த அதிகாரி கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்க - இலங்கை உறவுகள் விரிவடைந்துள்ளன என்றும், அந்த நிலை புதிய அரசாங்கத்தின் கீழ் தொடருமா என்பதை இனிமேல் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அந்த விடயத்தில் அவர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. அதனால் தான், “எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், மனித உரிமைகளும் ஜனநாயகமும் மதிக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற சர்வதேச கடப்பாடுகள், தொடர வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய அரசாங்கம் ஏற்றுக் கொண்ட விடயங்களை அடுத்து வரும் அரசாங்கங்கள் மதித்து செயற்பட வேண்டும் அது சர்வதேச கடப்பாடு என்பதை அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில், மைக் பொம்பியோவின் பயணத்தின் போது, சோபா உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது, அமெரிக்க சட்டத்துறையின் கிளைப் பணியகம் கொழும்பில் திறக்கப்படவுள்ளது, என்றெல்லாம், எதிர்க்கட்சியினர் புரளிகளைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையுடன் சோபா உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு அமெரிக்கா விரும்புகிறது என்பதில் சந்தேகமில்லை. எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று, இலங்கையில் தவறு செய்யக் கூடிய அமெரிக்க படையினரை அமெரிக்க இராணுவ சட்டங்களின் கீழ் தான் தண்டிக்க அதில் வழி செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் உறுதியாகியிருக்கிறது. அதனை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கிறார் அமெரிக்க தூதரக அதிகாரி.

எனினும், பொம்பியோவின் வருகையுடன் சோபா உடன்பாட கையெடுத்திடப்படுமா என்பது நிச்சயமில்லை. உடன்பாடு இறுதி செய்யப்பட்டதும் நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனினும் அதுபற்றி இன்னமும் நாடாளுமன்றத்துக்கு அறிவிப்படவில்லை.

கடந்த ஜூன் 01ஆம் திகதி அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தினால், இந்தோ பசுபிக் மூலோபாய அறிக்கை என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இலங்கையுடனான அமெரிக்காவின் இராணுவ கூட்டு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2015இல் இருந்து, இலங்கையுடன் பாதுகாப்புத் திணைக்களம் உறவுகளை வலுப்படுத்தியுள்ளது. இராணுவ தொடர்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இலங்கை கடற்படையுடனான தொடர்புகள் அதிகரித்துள்ளன. 2019இல், இந்திய பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் இடர்களின் போதான, விநியோக ஏற்பாடுகளுக்கான இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரித்துள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த அறிக்கையில் இலங்கையுடனான கையகப்படத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாடு குறித்தோ, சோபா உடன்பாடு குறித்தோ எந்த தகவலும் உள்ளடக்கப்படவில்லை. எனினும், இலங்கைக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது என்பதை, கடந்த புதன்கிழமை அமெரிக்க காங்கிரஸின், வெளிவிகாரக் குழுவின் இந்தோ பசுபிக் பிராந்தியத்துக்கான உபகுழு முன்பாக சாட்சியமளித்த போது, தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இலங்கை, பங்களாதேஷ், மாலைத்தீவு ஆகிய நாடுகளின் பாதுகாப்பு ஆற்றலை கட்டியெழுப்புவதற்காக அவர் மேலதிகமாக 30 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டை கோரியிருக்கிறார். வங்காள விரிகுடா முன்முயற்சி என்ற பெயரில் ட்ரம்ப் நிர்வாகம் இந்த நிதியைக் கோரியிருக்கிறது.

உலகின் அரைப்பகுதி மக்கள் வாழுகின்ற இந்தோபசுபிக் பிராந்தியத்தின் மீது அமெரிக்காவின் கவனம் திரும்பியிருக்கிறது என்பதை அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்தப் பகுதியின் செழிப்பு மற்றும் வாழ்க்கைத் தர அதிகரிப்பு அமெரிக்காவின் கடப்பாடு என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதற்காக 2020ஆம் ஆண்டில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், 468 மில்லியன் டொலரைக் கோரியிருக்கிறது. இது 2019ஆம் ஆண்டில் கோரப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், இந்தோ பசுபிக் பிராந்தியத்தின் மீது அமெரிக்கா செலுத்தும் கவனமும், குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்தின் மீது கூடுதல் கவனம் குவிக்கப்படுகிறது என்பதும் உறுதியாகியிருக்கிறது.

உலக வணிகத்தின் 70 வீதமான பகுதி, இந்தோ பசுபிக் பெருங்கடல்கள் வழியாகவே செல்கின்றன.

எமது இராஜதந்திர முயற்சி, அபிவிருத்தி முயற்சிகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மூலம் இந்தக் கடல்களையும் வான்பரப்பையும், அமெரிக்கா பாதுகாக்கும் என்று உறுதிப்படக் கூறியுள்ளார் அலிஸ் வெல்ஸ். அத்துடன், “நிலையற்ற உட்கட்டமைப்பு திட்டங்களின் மூலம், எமது பங்காளிகளை அழிப்பதற்கு சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டையோ அனுமதிக்க முடியாது. அது, பொருளாதாரத்தைக் கடன்களுக்குள் தள்ளும் அல்லது வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயக நெறிமுறைகளை பாதிக்கும்” என்றும் அவர் கூறியிருப்பது, சீனாவுடனான அமெரிக்கப் போட்டியை உறுதிப்படுத்துகிறது.

இந்தோபசுபிக் மூலோபாயத்துக்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளிக்கின்ற நிலையில், இலங்கை மீதான அதன் அதீத கரிசனை, குவிந்துள்ள நிலையில் தான், அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் வருகை இடம்பெறவுள்ளது.

எதரிக்கட்சிகளின் கூச்சல்கள் இருந்தாலும், அவரது இந்த வருகையானது, இலங்கை - அமெரிக்க உறவுகளை இன்னும் உச்சத்துக்கு கொண்டு செல்லப் போகிறது என்பதையே அமெரிக்க நகர்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

Latest Offers