கல்முனை உண்ணாவிரதம் தீர்வுக்கு வழிகோலுமா?

Report Print V.T.Sahadevarajah in கட்டுரை

கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக்கோரி நடாத்தப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் கடந்தவாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இப்போராட்டம் பல செய்திகளைச் சொல்லுகின்றது.

சாத்வீக வழியில் யாழ்ப்பாணத்தில் திலீபன் சாகும் வரை உண்ணாவிரதமிருந்து 11ஆவது நாள் உயிர்நீத்த வரலாற்றை உலகமறியும். அது ஒரு வரலாறு.

அதன்பின்னர் பிற்பாடு வடக்கு, கிழக்கில் நடைபெற்ற முதலாவது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இது.

கடந்த 17ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை ஏழு தினங்கள் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவரும், கல்முனை முருகன் ஆலய பிரதமகுருவுமான சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தசிவக்குருக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், அழகக்கோன் விஜயரெத்தினம் அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவரும் தொழிலதிபருமான கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் ஆகியோர் வரலாறாகி விட்டனர்.

இவர்களில் பௌத்த மதகுருவான வண.சங்கரத்ன தேரர் முதன்மைப்படுத்தப்பட்டார்.

எங்கோ ஒரு இனத்தில் பிறந்து வேறுமொழியைப் பேசுகின்ற ஒருவர் மற்றொரு பின்தள்ளப்பட்ட சகோதர இனத்திற்காக உண்ணாவிரதமிருப்பதென்பதே அதற்கான காரணமாகும்.

அன்று அதே கல்முனை சுபத்ரா ராமாய விகாரையில் முன்பிருந்த மதகுரு வண.மிதிசேன மஹாநாம தேரர் கல்முனையில் 2000.03.20இல் மேற்கொண்ட தமிழர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டிருக்க இன்று அவர்பின்வந்த கடவத்தை ரண்முத்துகலையைச்சேர்ந்த வண.சங்கரத்ன தேரர் கடந்தவாரம் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் முக்கிய புள்ளியாக பலரது கவனத்தையும் ஈர்த்து இறுதிவரை கலந்து கொண்டதும் ஒரு வரலாறு தான்.

தீர்வு?

இப்போராட்டம் ஒருவகையில் நீண்டகாலப் பிரச்சினையை மக்கள் மயப்படுத்தி ஜனரஞ்சகப்படுத்தியுள்ளது. பிரதமர் அனுப்பிய அமைச்சர் குழாம் 3 மாதகால அவகாசத்தைக் கோரிய அதேவேளை வண.ஞானசார தேரர் 1 மாதகால அவகாசத்தைக் கோரினார். 7ஆவது நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் அங்கொரு கணக்காளர் நியமிக்கப்படுவார் என எழுத்துமூல உள்ளூராட்சி அமைச்சரின் அறிவிப்பு வெளியாகியிருந்தும் அன்று நியமிக்கப்படவில்லை.

அன்றுமாலை நடந்த அமைச்சரவையில் அமைச்சர் மனோகணேசன் முழங்கியிருக்கிறார். அடுத்தவாரம் அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப்பேசி தீர்வு காணவிருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே மீண்டும் குழுவை நியமித்து காலத்தைக்கடத்தி மீண்டும் இதனை இழுத்தடித்து விடுவார்களோ என்ற ஐயப்பாடு கல்முனை தமிழ்மக்கள் மத்தியில் தற்போது பரவலாக எழுந்துள்ளதைக் காணக்கூடியதாயுள்ளது.

கல்முனை வடக்கிற்கான போராட்ட வரலாறு!

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்திற்கான போராட்டம் நடாத்தப்படுவது இது முதற் தடவையல்ல. உண்மையில் கடந்தகாலங்களில் 3 தடவைகள் ஏலவே போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

முதல் பேராட்டத்திற்கான காரணம் என்னவெனில் 1988இல் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னா கல்முனைக்கு விஜயம் செய்திருந்தார்.

அந்தவேளையில் அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்கத்தின் ஸ்தாபகத் தலைவராகவிருந்த சின்னத்துரை (நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர்) அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கநாயகி பத்மநாதனின் உதவியுடன் அமைச்சர் ரஞ்சனிடம் கல்முனை தமிழ் உதவி அரசஅதிபர் பிரிவு தொடர்பான கோரிக்கையை முன்வைத்தார்.

அன்றிருந்த உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கே.டபிள்யு.தேவநாயகத்திடம் இக்கோரிக்கை சென்றடைந்ததும் அவர் நடவடிக்கை எடுத்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உடனடியாக கல்முனையில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுமாறு உத்தரவிட்டார்.

ஆனால் இது அமுலுக்கு வரவில்லை. எதுவுமே நடக்கவில்லை. இதுவே முதலாவது போராட்டத்திற்கான அடித்தளம்.

முதலாவது போராட்டம்!

1989இல் பொதுத்தேர்தல் முடிந்த கையோடு அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்க துணைத்தலைவர் பாண்டியூரான் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப்போராட்டம் முதலாவது போராட்டமாகும்.

இந்த சாத்வீக வழியிலான உண்ணாவிரதப் போராட்டத்தையடுத்து அப்போதைய பொதுநிர்வாக அமைச்சர் யு.பி.விஜேகோன் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் (தயாரத்னா அஸ்ரப் கலப்பதி திவ்வியநாதன் போன்றோர்) தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அ.அமிர்தலிங்கத்தையும் அழைத்து கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி 1989.4.12இல் கல்முனை வடக்கிற்கான உப அலுவலகம் திறக்கப்பட்டது.

இரண்டாவது போராட்டம் 2000இல்..

அதனைத் தரமுயர்த்த வேண்டுமெனக் கோரி 2000.03.20இல் கல்முனையிலுள்ள 50 தமிழர் பொதுநல அமைப்புகள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தது. இதில் சுமார் 1500 மக்கள் கலந்து கொண்டனர்.

தமிழர் மகாசங்கத்தின் தலைவர் கே.சுப்பிரமணியம், செயலாளர் சிவஸ்ரீ சிவஞான செல்வக் குருக்கள் த.மகேஸ்வரன், கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.மிதிசேன, மகாநாம காசுபதி தெய்வநாயகம் அன்னம்மா லோகநாதன் சுனில் போன்ற பல முக்கிய பிரமுகர்கள் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.

அன்று மாலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாவை சேனாதிராஜா, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் டக்ளஸ் தேவானந்தா,

வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், மாகாணசபை உறுபினர் இரா.துரைரத்னம் ஆகியோர் வழங்கிய உறுதிமொழியின் பேரில் அன்றே அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

3ஆம் கட்டப்போராட்டம்!

அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாதமையினால் மீண்டும் 2001.1.24இல் கல்முனையிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள் இணைந்து உண்ணாவிரதப் பேராட்டமொன்றை முன்னெடுத்தன.

அது உக்கிரமாக முன்னெடுக்கப்பட்ட வேளை ஏழாம் நாள் 31.01.2001இல் மட்டு.மாவட்ட தமிழர் விடுதலை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா உரிய தீர்வைத்தான் பெற்றுத்தருவதாக உறுதியளித்தமையைத் தொடர்ந்து அவ்வுண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

கல்முனை வடக்கு உபசெயலகமா? பிரதேசசெயலகமா?

தற்போது பேசுபொருளாகவிருக்கின்ற நிர்வாக அலகு பிரதேச செயலகமா? அல்லது உப பிரதேசசெயலகமா? கல்முனை வடக்கு உபபிரதேச செயலகமா? கல்முனை தமிழ் உபபிரதேச செயலகமா? கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகமா? என்பதில் பலருக்கு மயக்கமிருக்கிறது.

ஏனெனில் கடந்த ஒருவார காலப்பகுதியில் உண்ணாவிரத்தின் போது வருகை தந்த அரசியல்வாதிகள் முதல் ஊடகர்கள் வரை இவ்விரு சொற்றொடர்களையும் பரவலாக பாவித்து வந்திருக்கின்றனர்.

உண்மையில் 12.04.1989இல் உருவான கல்முனை வடக்கு (தமிழ்) உப பிரதேச செயலகம் என்பது உள்நாட்டு அலுவல்கள் முன்னாள் அமைச்சர் காலஞ்சென்ற கே.டபிள்யூ. தேவநாயகம் அப்போதைய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கிய பணிப்புரையின் படியும் பின்னர் 1989 பெப்ரவரி நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்னர் இது விடயமாக முன்னாள் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் யூ.பி.விஜயகோனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத் தீர்மானத்தின்படியுமே உருவாக்கப்பட்டது.

பின்னர் 1993இல் அமைச்சரவைத் தீர்மானத்தின்படி நாடளாவிய ரீதியில் 28 உபபிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பெற்ற போது கல்முனைத் தமிழ்ப் பிரிவும் அதில் ஒன்றாக அமைந்தது.

ஆனால் 1993இல் ஏனைய 27 உபபிரதேச செயலகங்களும் தரமுயர்த்தப் பெற்றபோது கல்முனை வடக்கு மட்டும் புறக்கணிக்கப்பட்டது.

இதுவே நடந்த உண்மையாகும். இப்படியிருக்கும் போது 30 வருடங்களும் கழிந்த பின்னர் இப்பிரதேச செயலகத்தின் உருவாக்கம் சட்டவிரோதமானது என முஸ்லிம் தரப்புக் கூறுவது கூறுவது 'மதியீனம்' ஆகும் என தமிழ்த் தரப்பினர் கூறுகின்றனர்.

அப்படியானால் உள்நாட்டு அலுவல்கள் முன்னாள் அமைச்சர் கே.டபிள்யு தேவநாயகத்தின் பணிப்புரையும், பொது நிர்வாக உள்நாட்டு முன்னாள் அமைச்சர் யூ. பி. விஜயகோனின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானமும் பின்னர் 1993இல் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானமும் சட்ட விரோதமானவையா? என்றும் நோக்கர்கள் வினவுகின்றனர்.

எனவே இச்செயலகத்தை காணி மற்றும் நிதி அதிகாரமிக்கதான முழு அதிகாரமுடைய பிரதேசசெயலகமாக மாற்றி தரமுயர்த்தி தர வேண்டும் என்பது தமிழ்மக்களின் கோரிக்கையாகும்.

அண்மையில் அரசின் பிரதிநிதியாக சொப்பரில் உண்ணாவிரததிற்கு வந்த சுமந்திரன் எம்.பி கூட இது என்றோ தரமுயர்த்தப்பட்டுவிட்டது.

அதை தரமுயர்த்தவேண்டிய அவசியமில்லை. ஆக காணி நிதி அதிகாரம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தார்.

அப்படியெனின் பிரதேச செயலகமாக எப்போது தரமுயர்த்தப்பட்டது? சரி அப்படித் தரமுயர்த்தியிருந்தால் ஏன் காணி மற்றும் நிதி அதிகாரங்கள் வழங்கப்படவில்லை?

மேலும் கூறப்போனால் தரமுயர்த்தித்தரும்படி இந்த சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் எதற்கு? என்றெல்லாம் கேள்விகள் எழலாமல்லவா?

ஆரம்பத்தில் தமிழ் உபபிரதேச செலயகம் என்று அழைக்கப்பட்டு வந்த இவ்வலகு பின்னர் வடக்கு உப அலுவலகம் என அழைக்கப்பட்டது.

மூவினங்களும் உள்ளதால் தமிழ் என்று வராமல் பொதுவான வடக்கு என்ற பெயருடன் அழைக்க ஆரம்பித்தார்கள்.

ஆக இது 'கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம்' என்பதே சரியான சொற்றொடராகும்.

ஏனெனில் எந்தக் காலகட்டத்திலும் இது பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படவில்லையென்பது கசப்பான உண்மை.

தமிழருக்கு மட்டுமான செயலகமா?

இது தனித்தமிழ் செயலகமல்ல. இதற்குள் தமிழர்கள் முஸ்லிம்கள் சிங்களவர்கள் வருகிறார்கள். எனவே மூவினத்திற்கும் சொந்தமான செயலகம் எனக் கூறப்படுகிறது. 97,98 குடும்பங்களைச் சேர்ந்த 36,346 சனத்தொகையைக் கொண்டது.

இதற்குள் 33,007 தமிழ் மக்களும், 3215 முஸ்லிம் மக்களும், 124 சிங்களமக்களுமுள்ளனர்.

மேலும் இவை நிலத்தொடர்புள்ள வகையில் உள்ளன என்றும் வரைபடம் சுட்டிக்காட்டுகின்றது. ஆக 15.77சதுரமீற்றர் பரப்பளவைக் கொண்ட இவ்வடக்கு பிரதேசம்.

மத அடிப்படையில் பார்த்தால் இந்துக்கள் 30,205 பேரும், இஸ்லாமியர்கள் 3,215 பேரும், கிறிஸ்தவர்கள் 2,802பேரும், 124 பௌத்தர்களும் உள்ளனர்.

இந்து ஆலயங்கள் 45 உள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்கள் 12உம் பள்ளிவாசல்கள் 3உம் பௌத்தவிகாரையொன்றும் உள்ளன.

இவ்வாறு 12.04.1989இல் ஏற்படுத்தப்பெற்ற கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தான் இன்று வரை கடந்த 30 வருடகாலமாகப் பெயரளவில் 29 தமிழ்ப் பெரும்பான்மைக் கிராம சேவகர்களுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம்தரப்பு வாதம்!

இதேவேளை முஸ்லிம் தரப்பினர் கடந்த 30 வருடகாலமாக இக்கோரிக்கைக்குத் தடையாக இருந்து வருகின்றார்கள் என்பது வெளிப்படையாகக் கூறப்பட்டது.

அதற்கு அண்மையில் நடந்த முஸ்லிம்களின் சத்தியாக்கிரகப் போராட்டமும் சாட்சியாகவுள்ளது. அவர்களது பார்வையில் இது நிலத்தொடர்பற்றதும் இனரீதியானதுமாகும் என்பது பிரதான குற்றச்சாட்டாகும்.

எம்முடன் பேசாமல் கல்முனை நகரை தானாக கைப்பற்ற நினைக்கிறார்கள் என்று கருதுகிறார்கள்.

கல்முனை மாநகரம் எங்களுடையது. காலாகாலமாக தாங்கள் தான் வர்த்தகம் செய்துவருகிறோம் எனவே அது எமக்குத்தான் சொந்தம். எனவே அதனை விட்டுக்கொடுக்க முடியாது என்பதும் ஒரு வாதம். எனவே அதனைப்பேசித் தீர்க்கவேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

கல்முனை நகர்?

கல்முனை நகர் 1892இல் 100வீதம் தமிழர்களோடு இருந்ததையும் பின்னர் 1946இல் கல்முனைக்குடியை இணைத்து கல்முனைபட்டினசபையாக மாறியது. எனவே இன்று நிலைமை மாறிவிட்டது

மட்டக்களப்பு மாநகரில் முஸ்லிம்களின் வர்த்தக மையங்கள் இருக்கின்றன.

ஹோட்டல்கள், ஹார்ட்வெயார்கள், ஜவுளிக்கடைகள் இப்படிப் பல உள்ளன. அதற்காக அவற்றை காத்தான்குடி நகரசபைக்குச் சொந்தம் அல்லது எமது கடைகள் இருப்பதால் எமக்குத்தான் சொந்தம் என்று வாதிடலாமா? என்று கூறும் தமிழ்த்தரப்பினர் யார் கடை வைத்தாலும் மட்டக்களப்பு பிரதேசசெயலகத்தின் கீழ்தான் அனைத்தும் வரும் என்கிறார்கள்.

அதேபோன்று கொழும்பு மாநகரில் யாரும் கடைவைக்கலாம். மூவினத்தவரும் கடை வைத்துள்ளனர். அதற்காக கொழும்பு எமக்குரியது என்று சொந்தம் கொண்டாடலாமா? அது கொழும்பு மாநகரசபைக்குரியது அந்தப் பிரதேச செயலகத்துக்குரியது என்று அர்த்தம் கற்பிக்கிறார்கள் தமிழ்த்தரப்பினர்.

அதே போன்று தான் தரவைப் பிள்ளையார் ஆலயம் தொடக்கம் பெரிய நீலாவணை வரை கல்முனை வடக்குப் பிரதேசம் என்றால் அதற்குள் வரும் அத்தனையும் அப்பிரதேசத்திற்குரியது தான்.

கல்முனை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற போதிலும் அவர்களோ அல்லது வடக்குப்பிரிவிற்குட்பட்ட முஸ்லிம்களோ நகருக்கு பூர்வீக குடிகளல்ல ஆக வர்த்தக நோக்கங்களுக்காக வந்த முஸ்லிம்களே அவர்கள். ஆக தமிழர்களே பூர்வீக குடிகள் என மூத்த தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் பிரமுகர் கு.ஏகாம்பரம் கூறுகிறார்.

இதேபோன்று தனித்தமிழ்ப் பிரிவில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப்பினால் தனி முஸ்லிம்களைக் குடியேற்றி இஸ்லாமாபாத் என்று பெயரிட்டனர். வேண்டுமென்றே தமிழர் செறிவைக் குறைக்க அவர்கள் திட்டமிட்டுச் செயற்பட்டனர் என்பதே எனது கருத்தாகும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

கல்முனையின் பூர்வீகம்!

கல்முனைப் பட்டினம் 1892ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் சுகாதார நலனோம்பு சபை என்ற உள்ளூர் அதிகாரசபையாக உருவானது.

இந்த சபையில் கல்முனை 1, கல்முனை 2, கல்முனை 3, ஆகிய 3 பிரிவுகள் உள்ளடக்கப்பட்டன. இது முழுக்கமுழுக்க தமிழ் மக்களை மட்டும் கொண்ட அலகாக இருந்தது.

அப்போது இச்சபைக்குள் சாய்ந்த மருதோ, கல்முனைக் குடியோ, பாண்டிருப்போ, மருதமுனையோ உள்ளடங்கவில்லை. ஆக ஆரம்பத்தில் கல்முனை என்பது முற்றுமுழுதாக 100வீதம் தமிழர்களை மாத்திரமே கொண்டது என்பது உலகறிந்த விடயம்.

பின்பு 1946இல் 3ஆம் இலக்க பட்டினசபைச் சட்டத்தின் பிரகாரம் ஏலவேயிருந்த கல்முனையுடன் கல்முனைக்குடி என்ற கிராமமும் சேர்க்கப்பட்டு அப்போதைய அரசியல் சக்திகளால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வரக்கூடியவாறு பட்டினசபையாக தோற்றம் பெற்றது.

முதன்முறையாக பட்டினசபையாக உருவெடுத்த கல்முனையில் சாய்ந்தமருதோ, பாண்டிருப்போ உள்ளடக்கப்படவில்லை என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.

முழு கல்முனைத் தொகுதியையும் உள்ளடக்கியவாறு கரவாகுப்பற்று என்ற இறைவரி உத்தியோகத்தர் பிரிவு அல்லது பிரிவுக்காரியாதிகாரி பிரிவு என்ற என்ற பிரிவு உருவானது.

இதற்குள் 4 பிரிவுகள் உள்ளடக்கப்பட்டன. இக் கட்டுரையில் முற்பந்தியில் சுட்டிக்காட்டப்பட்ட கல்முனைபட்டின சபையுடன் பாண்டிருப்பு மருதமுனையை உள்ளடக்கிய கரவாகு வடக்கு சாய்ந்த மருதைக் கொண்ட கரவாகு, தெற்கு சேனைக் குடியிருப்பு, நற்பிட்டி முனையைக் கொண்ட கரவாகு மேற்கு ஆகிய 3 கிராம சபைகள் இருந்தன.

1946இல் தோற்றம்பெற்ற இந்த 4 சபைகளைக் கொண்ட கரவாகுப்பற்று உதவிஅரசாங்க அதிபர் பிரிவு 1987ஆண்டின் 15ஆம்இலக்க பிரதேசசபைச் சட்டத்தின் பிரகாரம் அதுவரை இருந்த பட்டினசபை முறை ஒழிக்கப்பட்டு பிரதேசசபை முறை தோற்றுவிக்கப்பட்டது.

அதன்படி 1987இல் கல்முனை பிரதேசசபை உருவானது.

பின்னர் அது 11.12.1998அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 11.06.1999முதல் நகரசபையாக தரமுயர்த்தப்பட்டது. பின்னர் அது 2002.04.15ஆம் திகதியன்று மாநகர சபையாக மாற்றம்பெற்றது.

இந்த மாகரசபை எல்லைக்குள் முன்பிருந்த கரவாகுப்பற்றுக்குரிய 4 சபைகளும் உள்ளன என்பதை குறிப்பிடமுடியும்..

தற்போது அதிலிருந்து தனியாக ஒரு உள்ளூராட்சி சபை வேண்டுமென சாய்ந்தமருது மக்கள் கடந்தசில வருடங்களாக பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதுவும் அரசியல் சகதிக்குள் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நிர்வாக அலகைப் பொறுத்த வரை தற்போது கல்முனை பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேசசெயலகம், கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம் என 3 பிரிவுகள் இயங்கி வருகின்றன.

கல்முனை வடக்கு உபபிரதேசசெயலகம் என்பது காணி நிதி அதிகாரங்களில்லாமல் கடந்த 30 வருடகாலமாக இயங்கி வருவதே இன்றைய போராட்டத்திற்கு அடிப்படைக்காரணம்.

கடந்தவார உண்ணாவிரதம் ஏன்?

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜூன் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் ஜூன் மாதம் 23ஆம் திகதி நிறைவுற்றது.

இந்த உண்ணாவிரதம் ஏன்? என்ற கேள்விக்கு கடந்த 30 வருடகாலமாக ஆட்சியில் மாறிமாறி வந்த அரசாங்கங்களும் தமிழ்த்தலைமைகளும் இந்தப் பிரச்சினையை இழுத்தடித்து வந்ததே காரணமாகும் என எளிதாகக்கூறலாம்.

நாட்டின் ஜனாதிபதி பிரதமர் குறித்த அமைச்சர் ஆகியோடு எத்தனை தடவைகள் இதுசம்பந்தமாகப் பேசியிருக்கிறோம். உடனே செய்வோம் என்பார்கள். ஆனால் எதுவுமே நடக்கவில்லை.

அதனால் தான் எவ்வித அழுத்தமுமில்லாமல் நாங்களாகவே இதனை ஆரம்பித்தோம் என்கிறார் உண்ணாவிரதியான மாகநரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்.

கல்முனை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக காரைதீவில் பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஜூன் 19ஆம் திகதி விபுலாநந்த சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஜூன் 22ஆம் திகதி நிறைவுற்றது.

அதேபோல நாவிதன்வெளியிலும் நடைபெற்றது. வடபகுதியிலும் ஆதரவுப் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் தினமும் ஒவ்வொரு தமிழ்க்கிராமங்களிலிருந்து மக்கள் பேரணி படையெடுத்து வந்தன.

இவ்வுண்ணாவிரதப்போராட்டம் தமிழர் என்ற அடிப்படையில் வரலாறு காணாத எழுச்சி ஏற்பட்டதை மறக்க முடியாது.

கல்முனை தமிழ் மக்கள் மன்றம் சகல ஏற்பாடுகளையும் இரவு பகல் பாராது செய்து கொடுத்திருந்தனர். அத்தனை நாட்களும் அந்த தமிழ் இளைஞர்களின் தியாகம் பாராட்டுதற்குரியது.

கிழக்கு மட்டுமல்ல வடக்கு, மலையகம், தெற்கு என்று பல இடங்களிலிருந்தும் பூரண ஆதரவு கிடைத்தது.

நாட்டின் முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் இதற்கு குரல்கொடுத்தையும் பலர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததையும் காண முடிந்தது. அதேவேளை பலர் மௌனியாக இன்று வரை இருந்து வருவதையும் மட்டக்களப்பில் தமிழ் எம்பிக்களாக இருந்து கொண்டு வருகைதராதோரும் உள்ளனரென்று மக்கள் கவலையடைகின்றனர்.

இதுவரை அமைச்சர்களான மனோ கணேசன், தயாகமகே நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், சிவசக்தி ஆனந்தன், கவிந்திரன் கோடீஸ்வரன், ச.வியாழேந்திரன், வண.அத்துரெலியரத்ன தேரர், முன்னாள் பிரதியமைச்சர்

வினாயகமூர்த்தி முரளிதரன், த.தே.கூட்டமைப்பின் தமிழ்மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் செ.கஜேந்திரன்,

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், மகளிரணித் தலைவி செல்வி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான பி.அரியநேத்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், வெள்ளிமலை, வடமாகாணசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சட்டத்தரணி வி.தவராஜா, முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், திருக்கோவில் பிரதேசசபைத் தவிசாளர் வி.இ.கமலராஜன், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், சி.புஸ்பலிங்கம்(கொக்கட்டிச்சோலை), சா.மகேந்திரலிங்கம்(ஆரையம்பதி), மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான சோ.புஸ்பராஜா, மு.இராஜேஸ்வரன் மா.நடராஜா, தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட பல தமிழ்த் தலைவர்கள் அரசியல் வேறுபாடின்றிக் கலந்துகொண்டு ஆதரவை நழ்கியிருந்தனர்.

இறுதியாக இலங்கையின் முக்கிய மதப்புள்ளி பொதுபலசேனா தலைவர் வண.ஞானசாரதேரர் தமது குழாத்தினருடன் வந்து சாகும் வரை விரதத்தை முடிவுறுத்தினார்.

அமைச்சர்கள் 3 மாதக்காலம் செய்து தருவதாக பிரதமர் கூறியதைக் கூற தேரரோ 30 நாட்களுள் செய்து தருகிறேன் என்றதும் வேறு வழியில்லாமல் உண்ணாவிரதிகள் தமது உயிரைப் பாதுகாத்துக் கொண்டனர்.

தமக்கு இச்செயலகத்தைப் பெற்றுத் தருவார்கள் என்று 30 வருடகாலமாக தமிழ் மக்கள் நம்பியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரோ செயலாளரோ அந்தப்பக்கமே வராதது மட்டுமல்ல வாய்திறக்காதது இந்த மக்கள் மத்தியில் பாரிய வெறுப்பையேற்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டலாம்.

தமது உறுப்பினர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டும் கூட இவ்விதம் நடந்து கொண்டது தமிழ் மக்களின் எதிர்கால அரசியலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

ஆனால் இப்பிரச்சினையை தேர்தல் காலத்தில் பேசுபொருளாக வைத்து தெரிவான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடந்துகொண்ட விதம் இன்னும் அதன் தலைவர் சம்பந்தரோ, மாவையோ வாய்திறக்காதது கல்முனை வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் விளைவுகளையே சுமந்திரனிலும், கோடீஸ்வரனிலும் மக்கள் காட்டினர் என்பதை ஊடகங்களில் அறிந்துகொள்ளலாம்.

இத்தனைக்கும் அதே கூட்டமைப்பின் இரு மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், அ.விஜயரெத்தினம் ஆகியோர் உண்ணாவிரதிகளாக இருந்தனர்.

அப்படியிருந்தும் தலைவர்கள் இன்னும் பேசவில்லையென்பது எமக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளதென விஜயரெத்தினம் அன்றே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஞானசார தேரரரை அங்கு அழைத்துவந்தது சரியா? என மற்றுமொரு தரப்பினர் கேள்வியெழுப்புகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உரியமுறையில் செயற்பட்டிருந்தால் தமது மக்களின் பிரச்சினைகளை தேவைகளை தீர்த்துவைத்திருந்தால் ஞானசார தேரர் ஏன் கல்முனை வருகிறார்?

அவர் வருவதற்கு வகை செய்தவர்கள் கூட்டமைப்பினரே. நிலைமை இப்படியிருக்க ஆபத்பாண்டவராகவந்து இறுதிநேரத்தில் உயிரைக்காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் கௌரவமாக உண்ணாவிரதத்தை முடித்து வைத்து 30 நாட்களுள் தான் அதனைப் பெற்றுத் தருகிறேன் என்று உறுதிமொழி சொன்ன ஞானசாரதேரரை எவ்வாறு பிழையென்று சொல்வது? என்று மற்றத்தரப்பினர் சொல்கின்றனர்.

அவர் சிறுபான்மை தரப்பில் மூக்கை நுழைக்கின்றார் என்றால் அதற்கு களம் அமைத்த வழி விட்டவர்கள் யார்? என்பதனையும் இந்தக்கட்டத்தில் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பது தமிழ் புத்தி ஜீவிகளின் கருத்தாகும்.

உண்ணாவிரத காலகட்டத்தில் எந்தவொரு செய்தியையோ, உறுதிமொழியையோ, கால அவகாசத்தையோ தமிழ்த் தலைமைகள் வழங்கவில்லை.

எனவே தேர்தல் காலத்தில் கல்முனையில் உறுதியளித்த சம்பந்தரோ, ஏனைய தலைமைகளோ உறுதியளிக்காததை எவ்வாறு நோக்குவது என்பது அவர்களின் விரக்தி மிகுந்த வேதனையாகும்.

எது எப்படியிருப்பினும் 30 வருடகால கோரிக்கை இன்று உச்சக்கட்ட உண்ணாவிரதத்தால் சகலரையும் விழிப்படைய வைத்துள்ளதுடன் தீர்வு கட்டாயம் வழங்கப்படவேண்டும் என்ற நிலைக்கு தள்ளியுள்ளது. அதற்கான ஒரு திருப்பு முனையாக கூட கருதலாம்.

எனவே இது முடிவல்ல ஆரம்பம். எனவே சம்பந்தப்பட்ட மத அரசியல் தலைவர்கள் தீர்வுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு குறித்த காலக்கெடுவுக்குள் தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்நிலையில் தாமதிக்காமல் விரைந்து அர்த்தபுஸ்டியான தீர்வைப்பெற்றுக்கொடுப்பதே இனவிரிசலைத் தவிர்ப்பதற்கான உபாயமாகும் எனலாம்.