போருக்குப் பின்பான தமிழர் தலைவிதி

Report Print Tamilini in கட்டுரை

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி போர் முடிவுற்ற நாள் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

தனித்துப் போர் முடிவுற்றது என்பதோடு அந்த அறிவிப்பு நின்று போகவில்லை.

மாறாக தமிழ் மக்களின் மிகப்பெரும் பலம் என்றிருந்த விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர் என்ற செய்தியும் அதற்குள் அடங்கியிருந்தது.

போர் முடிவுற்றதன் பின்னர் ஏற்பட்ட விளைவுகள் தாக்கங்கள் இன்னமும் தூரம் தொடுவானமாய் நீள்கிறது.

ஆம், யுத்தத்தால் உயிரிழப்புகளைச் சந்தித்த குடும்பங்கள் காணாமல் போனவர்களின் உறவுகள் என ஒரு பெரும் தொகையினர் சதா கண்ணீர் விட்ட வண்ணம் வாழ்கின்றனர்.

போரில் அகப்பட்டு இறந்துபோன பிள்ளைகளை, பெற்றோரை நினைந்துருகும் பெருந் துயர் இப்போதைக்கு மாறப்போவதில்லை.

இதற்கு மேலாக காணாமல்போன தங்கள் பிள்ளைகளை, குடும்பத் தலைவர்களை தேடித் தாருங்கள் என்று கண்ணீரும் கம்பலையுமாய் கரம் கூப்பி அழுகின்றவர்களைத் திரும்பிப் பார்ப்பதற்குக் கூட எம்மவர்க்கு நேரமில்லை என்றாயிற்று.

இதுதான் என்றால், காணாமல்போன பிள்ளைகளின் மீட்புக்காகப் போராட்டம் நடத்து கின்ற உறவுகளைக் கண்டவர்களும் கைஉறுக்கி ஏசுகின்ற அளவுக்கு நிலைமை வந்து விட்டது.

என்ன செய்வது, மண் மீட்புப் போராட்டத்தில் இணைந்த குற்றத்துக்காக இன்று முன்னாள் போராளிகள் என்ற பெயரோடு வீடுகளுக்குள் தங்களை முடக்கிக் கொண்டு ஏக்கத்தோடும் தீராத சோகத்தோடும் வாழுகின்றவர்கள்,

உழைத்துத் தரக்கூடிய பிள்ளைகளை மாவீரர்களாக்கிவிட்டு அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்ற ஏக்கத்துடன் வாழுகின்ற முதுமையான பெற்றோர்கள்,

இதற்கு அப்பால் கை இழந்து, கால் இழந்து, தடுப்பு முகாம்களில் ஏற்றப்பட்ட ஊசிகளால் உடல் வலு இழந்து வாழுகின்றவர்கள்.

கடவுளே! தமிழ் மண்ணை நேசித்ததற்காக தமிழர்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக தங்களை அர்ப்பணித்தவர்களின் தலைவிதி இது என்றால்,

தனித் தமிழீழம் வேண்டும்.

தமிழர் படை போராட வேண்டும் என்று உசார்கொடுத்தவர்கள், உசுப்பேத்தியவர்கள் இன்று சிறப்பான வாழ்வு வாழ்கின்றனர்.

அவர்களின் கருத்துக்களே இன்றைய சமூகத்தால் அங்கீகரிக்கப்படலாயிற்று.

என்ன செய்வது தமிழ் வாழ வேண்டு மென்று நினைத்தவர்களுக்கு இயற்கை தீராத துன்பத்தைக் கொடுத்தது.

தமிழ் வாழ வேண்டுமென நடித்தவர்களுக்கு இயற்கை சுகபோக வாழ்வைக் கொடுத் தது.

இதுதான் போருக்குப் பின்பான எங்கள் தமிழர் தலைவிதி.

சுருங்கக் கூறினால், சன்னதம் ஆடியவன் வீழ்ந்து போனான். அரோகரா சொன்னவன் வாழ்ந்து கொண்டான் அவ்வளவுதான்.

- Valampuri