கோத்தாவும் அமெரிக்காவும்

Report Print Subathra in கட்டுரை

வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை போட்டியில் நிறுத்துவதற்கான எல்லா ஒழுங்குகளையும் மகிந்த ராஜபக்ச செய்து கொண்டிருக்கின்ற நிலையில், கோத்தாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான நகர்வுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அவ்வாறான ஆகப் பிந்திய நகர்வாக, அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள சித்திரவதைக் குற்றச்சாட்டு வழக்கை குறிப்பிடலாம்.

கனேடியத் தமிழரான றோய் சமாதானம் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்த இந்த வழக்கில், மேலதிகமாக புதிய வழக்குத்தொடுனர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர், கோத்தாபய ராஜபக்சவின் காலத்தில், தாம் சித்திரவதைக்கு பாலியல் துன்புறுத்தல்களுக்கு, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக- அவரிடம் இழப்பீடு கேட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

தென்னாபிரிக்காவை தலைமையகமாக கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பின் ஏற்பாட்டிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில், “தனது கட்டுப்பாட்டில் உள்ள படையினரால் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் பெருமளவில் செய்யப்படுகின்றன என்பதை கோத்தாபய ராஜபக்ச அறிந்திருந்தார் அல்லது அறிந்திருக்க வேண்டும்.

இந்த முறைகேடுகளைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர் அவர்களை ஊக்குவித்தார் அல்லது சகித்துக் கொண்டார். குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர் நீதிக்குத் தடையாக இருந்தார், சாட்சிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார்.” என்று கூறப்பட்டுள்ளது.

“இது தனியான சம்பவங்களோ, எங்காவது ஒன்றாக நிகழ்ந்தவையோ அல்ல. நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு நடவடிக்கை, இதற்கு கோத்தாபய ராஜபக்சவே தலைமை தாங்கியிருந்தார்” என்று பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு சட்டத்தரணிகளில் ஒருவரான, ஸ்கொட் கில்மோர் ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார்.

இதனை இன்னொரு வகையில், கோத்தாபய ராஜபக்ச பதவியில் இருந்த காலத்தில் தமிழர்களுக்கு எதிராக நிறுவன மயப்படுத்தப்பட்டு கட்டமைக்கப்பட்ட அநீதிகள் இழைக்கப்பட்டன என்றும் கூட குறிப்பிடலாம்.

இந்த வழக்குத் தொடுக்கப்பட்ட போது, இதனை புலம்பெயர் தமிழர்களின் சதி என்றும், இவ்வளவு காலமும், அமெரிக்கா சென்று வரும் தன் மீது இதுவரை வழக்குத் தொடுக்காமல் இருந்து விட்டு, இப்போது வழக்குத் தாக்கல் செய்திருப்பது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியே என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

இந்த வழக்கில் மேலதிக மனுதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ள பின்னர் அவர் எந்தக் கருத்தையும் வெளியிடாவிடினும், இதனை புலம்பெயர் தமிழர்களின் சதி என்றே மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சமகாலத்தில், லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கிலும் இழப்பீடு கோரி அவரது மகளான அகிம்சா விக்ரமதுங்க ஒரு வழக்கை கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அவரது சட்டத்தரணியினால் கடந்த 27ஆம் திகதி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பதில் மனுவுடன் சேர்த்து, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் அசோகா டி சில்வாவின் ஆவணம் ஒன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

அந்த ஆவணம் கோத்தாபய ராஜபக்சவை அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து காப்பாற்றும் நோக்கம் கொண்டதாக கருதப்படுகிறது.

கோத்தாபய ராஜபக்சவை உள்நாட்டு நீதிமன்றத்திலேயே பொறுப்புக்கூற வைக்க முடியும் என்றும், அவருக்கு எதிராக இலங்கை நீதிமன்றங்களில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டி, அமெரிக்க நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான மனுவை தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என நிரூபிக்க முயன்றிருக்கிறார் நீதியரசர் அசோக டி சில்வா.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், 2011 வரை உச்சநீதிமன்ற தலைமை நீதியரசராக இருந்தவர் அசோக டி சில்வா. அப்போது, அவரது குடும்ப உறுப்பினர்கள், பல்வேறு நலன்களைப் பெற்றிருக்கின்றனர்.

அதற்கான நன்றிக்கடனாகவே, அவர் கோத்தாபய ராஜபக்சவை அமெரிக்க நீதிமன்றத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு முயன்றுள்ளார்.

இதைவிட, இன்னொரு விடயமும் உள்ளது, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களோ, உச்சநீதிமன்ற நீதியரசர்களோ ஓய்வுபெற்ற பின்னர், யாருடைய தரப்பிலும் நீதிமன்றில் முன்னிலையாகி வாதாட முடியாது – மனுக்களை தாக்கல் செய்ய முடியாது. அவ்வாறு செய்வதானால் ஜனாதிபதியிடம் அனுமதி பெற வேண்டும் என்று அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக நீதியரசர் அசோக டி சில்வா தாக்கல் செய்துள்ள மனு அரசியலமைப்பு மீறலா என்பது குறித்த விவாதங்களும் உள்ளன.

அமெரிக்க நீதிமன்ற வழக்கை எதிர்கொள்வதற்கு தான் தயார் என்று கோத்தாபய ராஜபக்ச முன்னர் கூறியிருந்தாலும், இப்போது அந்த வழக்கில் இருந்து நழுவிக் கொள்ள அவரது தரப்பு முற்படுகிறது என்பது தெளிவாகிறது.

ஏனென்றால், இலங்கை நீதித்துறையின் மூலமே அவரைப் பொறுப்புக்கூற வைக்க முடியும் என்ற அசோக டி சில்வாவின் அறிக்கையின் மூலம், அமெரிக்க நீதிமன்றில் இந்த வழக்கு தேவையற்றது என்று தள்ளுபடி செய்ய வைப்பதற்கான முயற்சியாகவே தெரிகிறது.

வழக்குகளில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் நிகழ்ந்த காலப்பகுதியில், கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க பிரஜையாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

அதுமாத்திரமன்றி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட போதும், அவர் அமெரிக்க பிரஜையாகவே இருந்தார். அதற்குப் பின்னர் தான் அமெரிக்க குடியுரிமை நீக்கத்துக்காக அவரது கடவுச்சீட்டு மற்றம் ஆவணங்களை திருப்பி ஒப்படைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில் அமெரிக்க நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க – அல்லது இந்த வழக்குகளில் இருந்து விலகிக் கொள்ள முடியாது என்றே கூறப்படுகிறது.

அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிராத ஒருவர் மீது கூட, இதுபோன்ற சித்திரவதை, மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இழப்பீடு கோரும் வழக்குகளை அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இதுபோன்ற இழப்பீடு கோரும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டமை நினைவில் இருக்கலாம்.

இவ்வாறான வழக்குகளை அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு- குற்றம்சாட்டப்படுபவர் அமெரிக்க குடியுரிமை கொண்டவராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

ஆனால், கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை கொண்டவராகவும் இருப்பது அவருக்கு இரட்டிப்பு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது.

ஏனென்றால், கோத்தாபய ராஜபக்ச மீது, இலங்கையர் என்ற அடிப்படையில் அன்றி அமெரிக்கர் என்ற அடிப்படையிலும் வழக்குகளை தொடரவோ, நீதி விசாரணையில் சிக்க வைக்கவோ முடியும்.

அதிலும், அமெரிக்கர் என்ற வகையில், அவருக்கு எதிராக போர்க்குற்ற வழக்குகளைக் கூட தாக்கல் செய்ய முடியும். ஆனால் அதனை செய்ய வேண்டியது, அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம் தான்.

கடந்த மாதம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறை குழுவின் முன்பாக சாட்சியங்கள் அளிக்கப்பட்ட போது, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக கோத்தாபய ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக எடுக்கப்படக் கூடிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இதுபற்றிய செய்திகள் பெரிதாக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருக்கவில்லை என்றாலும், இந்த விவாதத்தில் முக்கியமான பல விடயங்கள் வெளிவந்திருந்தன.

அமெரிக்கர்களால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றங்களுக்கு எதிராக சட்டங்களை கடுமையாக்குவது தொடர்பாக, ஆராய்ந்து வரும் அமெரிக்க காங்கிரசின் விசேட குழு முன்னிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றப் பிரிவின் பதில் சட்டமா அதிபர் டேவிட் ரிபிக்கி முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது, இலங்கையில் தமிழ் –முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெறும் கொடுமைகள் தொடர்பாக குரல் கொடுத்து வரும் காங்கிரஸ் உறுப்பினரான ஜிம் மெக்கவர்ன், அமெரிக்க குடியுரிமையை கொண்டிருக்கும் கோத்தாபய ராஜபக்ச மற்றும் அமெரிக்க கீறீன் கார்ட் வைத்திருக்கும் சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றப்பிரிவின் பதில் சட் டமா அதிபர் டேவிட் ரிபிக்கி, அமெரிக்க பிரஜைகள் எங்கு குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக தெரிவித்தார்.

“குற்றவாளிகளை தண்டிப்பதற்காக எமக்கு போதுமான சட்டங்கள் இருக்கின்றன. மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு, போர்க் குற்றங்கள்,சித்திரவதைகள், சிறுவர்களை பலவந்தமாக ஆயுதப் படைகளில் இணைத்துக்கொண்டமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவ்வாறான அமெரிக்க பிரஜைகளுக்கு எதிராக அரச திணைக்களங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் கடமைப்பட்டுள்ளன.

சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கா விட்டாலும், வெளிநாடுகளில் குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்க பிரஜைகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை தண்டிக்க முடியும். இதற்கமையவே லைபீரியாவின் முன்னாள் கொடுங்கோல் ஆட்சியாளரின் புதல்வருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு 97 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

கொடூரங்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களை தண்டிப்பதற்கு தேவையான போதுமான பின்னணிகள் எமக்கு தாராளமாக இருக்கின்றன. அதனால் அமெரிக்க பிரஜைகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க முடியும்” என்று அவர் விளக்கமளித்திருந்தார்.

அதேவேளை வெளிநாடுகளில் இடம்பெற்ற இன அழிப்பு, போர்க் குற்றங்கள் உள்ளிட்ட மனித குலத்துக்கு எதிராக கொடூரங்கள் தொடர்பிலான சாட்சியாளர்களையும் அமெரிக்காவுக்கு அழைத்துவர முடியும் என்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் தெரிவித்த பதில் சட்டமா அதிபர் ரிபிக்கி, அந்த நடைமுறைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியிருந்தார்.

அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களத்தின் கருத்துகளின்படி, கோத்தாபய ராஜபக்சவோ, சரத் பொன்சேகாவோ, எந்த நேரத்திலும், அவர்கள் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதி விசாரணையை எதிர்கொள்ள முடியும் என்பது உறுதியாகியிருக்கிறது.

தற்போது கலிபோர்னியா நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அமெரிக்க நீதித்துறைக்கு கோத்தா மீது வழக்குத்தொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

அதனைக் கருத்தில் கொண்டு தான், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

போர்க்காலத்தில் மீறல்கள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா, அந்த மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருந்த, கோத்தாபய ராஜபக்ச, சரத் பொன்சேகா மாத்திரமன்றி, பசில் ராஜபக்சவும் கூட தமது நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் ஏன் இதுவரை வழக்குத் தாக்கல் செய்யாமல் இருக்கிறது என்ற கேள்வி இருக்கிறது.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகள் இருந்தாலும், அமெரிக்கா அமைதியாக இருப்பதன் பின்னணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்கவும் கூடும்.

அமெரிக்க நலன்களுக்கு எதிராக கோத்தாபய ராஜபக்ச செயற்படப் போவது உறுதியானால், அமெரிக்காவில் அவரது நலன்களும், கேள்விக்குள்ளாகக் கூடும்.

Latest Offers