திரிபுபடுத்தப்படுகிறதா சோபா?

Report Print Hariharan in கட்டுரை

அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள கையகப்பட்டுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாட்டு நடைமுறையில் இருக்கும் நிலையில், சோபா உடன்பாடு அவசியமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் சோபா எனப்படும் படைகளின் நிலை உடன்பாட்டை செய்து கொள்வதற்கு எதிர்ப்புகள் வலுபெற்று வருகின்றன. ஐ.தே.க அரசாஙங்கம் இந்த உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு தயாராகியுள்ளது அல்லது அதற்கான பேச்சுக்களை நடத்தி வருகின்றது.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேனவோ இதற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். எனவே அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள கையகப்பட்டுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாட்டு நடைமுறையில் இருக்கும் நிலையில், சோபா உடன்பாடு அவசியமில்லை என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

அத்துடன், தான் அதிகாரத்தில் இருக்கும் வரை, சோபா அல்லது மிலேனியம் சவால் நிதிய உடன்பாடுகளில் கையெழுத்திட அனுமதிக்க போவதில்லை என்றும், அவர் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இவற்றைப் பரிசீலித்துக் கொள்ளலாம் என்று அவர் கூறியிருப்பதானது, இந்த பழிக்குள் தான் சிக்கிவிடாமல், அடுத்த அரசாங்கத்தின் மீது அல்லது அடுத்த ஜனாதிபதியிடம் பொறுப்பை தட்டிக்கழிக்க எத்தனிக்கிறார் என்பதை புலப்படுத்துகிறது.

இன்னொரு பக்கத்தில் அமெரிக்காவுடனான இந்த உடன்பாட்டை திக கடுமையாக எதிர்க்கின்ற தரப்பாக மஹிந்த அணி இருகின்றது. இந்த உடன்பாட்டின் மூலம், இலங்கையின் இறைமையும், சுயாதீனமும், பறிபோகப் போகிறது, என்றெல்லாம் மஹிந்த அணியில் உள்ளவர்கள் பெரியளவில் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறனர்.

சோபா உடன்படிக்கையினால் ஏற்படக்கூடிய சமூக, பொருளாதார, அரசியல் பாதிப்புகள் தொடர்பாக, ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான ஒரு குழுவையும் மஹிந்த நியமித்திருகிறார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கோத்தபாய ராஜபக்ச தலைமையில் ஒரு குழுவை அமைத்து, ஒரு வாரத்துக்குள் அறிக்கையை பெற்றது போலவே, இந்த இரண்டு குழுக்களையும் ஒரு வாரத்துக்குள் அறிக்கையை சமர்பிக்குமாறு கேட்டிருக்கிறார் மஹிந்த.

சோபா உடன்பாடுக்கு, ஐ.தே.க தவிர ஜே.வி.பி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன முன்னணி, மற்றும் இடதுசாரிக் கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் பெரும்பாலும், இந்த விடயத்தில் மதில் மேல் பூனையாகவே இருக்க விரும்புகின்றன. இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஆங்கில வார இதழ் ஒன்று சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியது.

ஏற்கனவே அமெரிக்காவுடன் ஒரு உடன்பாடு இருக்கும் நிலையில் சோபா உடன்பாடு தேவையா என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தாலும், இதுபற்றி பாதுகாப்பு நிபுணர்கள் தான் ஒரு பாதுகாப்பு நிபுணர் அல்ல என்றும் அவர் பதிலளித்திருந்தார்.

ஏனைய பல கட்சிகளைப் போன்று சோபா உடன்பாடு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிபடையான கருத்தை வெளியிடுவதை தவிர்க்கிறது என்பதும், அது ஏன் என்று புரிந்து கொள்வதும் கடினமானதல்ல.

ஏனைய எந்த தமிழ்க் கட்சிகளுமே சோபா விடயத்தில் ஆர்வம் காட்டுவதாக இல்லை. ஆனால், இன்றைய நிலையில், இலங்கை அரசியலில் மரண தண்டனை விவகாரத்தை விடவும், சோபா விவகாரம் தான், முதன்மை பெற்றதாக இருக்கிறது.

உள்நாட்டு அரசியல் சக்திகளின் அரசியல் நலன்களுடன் மாத்திரமன்றி, சர்வதேச சக்திகளின் அரசியல் நலன்களுடனும் இது தொடர்புபட்டதாப இருக்கிறது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், சீனாவின் தலையீட்டையும், திட்டங்களையும் தடுத்து நிறுத்துவதற்கும், முடக்குவதற்கும் அமெரிக்கா பின்புலத்தில் இருந்து செயற்பட்டது.

அதேபோலவே, இப்போது, அமெரிக்கா இலங்கையுடன் செய்து கொள்ள முனையும் உடன்பாடுகளை தடுத்து நிறுத்தி, முடக்குவதற்கு சீனா, ரஷ்யா போன்ற தரப்புகள் முயற்சிப்பதாக தெரிகிறது.

இலங்கையுடன் அமெரிக்கா செய்து கொள்ளக் கூடிய சோபா உடன்பாடு, இலங்கையில் சீனாவினது நலன்கள் மாத்திரமன்றி, ரஷ்யாவினது நலன்களுக்கு சவாலை ஏற்படுத்தும்.

Latest Offers