போருக்குப் பின்னரான அரசியல் பொருளாதார மீட்சிக்கான உலவியல் பாங்கு

Report Print Dias Dias in கட்டுரை

போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மக்களின் போரட்ட வடுக்கள், அரசியல் தீர்வுகள், மக்களின் பொருளாதார மனநிலை மாற்றங்கள் தொடர்பாக பாரிய ஏற்றதாழ்வுகள் காணப்படுகின்றது என கட்டுரையாளர் வட்டக்கச்சி வினோத் குறிப்பிட்டுள்ளார்.

தமது கட்டுரையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அக்கட்டுரையில்,

பொருளாதார ரீதியாக நோக்குமிடத்து மக்கள் முப்பது ஆண்டுகள் தாம் இழந்த பொருளாதாரத்தை வேகமாக அடைந்து விட வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இதை பயன்படுத்திக் கொண்டு உலக வியாபாரச் சந்தை வடக்கு மற்றும் கிழக்கு மக்களை இலக்கு வைத்து தவணை முறை கொடுப்பனவு என்று மக்களின் பணத்தை சுரண்டிக் கொண்டு செல்கிறது.

வங்கிகளில் கடன் நகைகள் அடைவை கட்ட முடியாமல் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. திட்டமிடாத பொருளாதார முறைகள் இவற்றுக்கு காரணமாக அமைந்து விடுகின்றது. எமது பிரதேச நிலங்கள் விவசாய நிலங்களாக இருக்கிறது.

இருப்பினும், அது சார் பொருளாதாரத் திட்டத்தை மக்களுக்கு அரசு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களும் முன்வைக்கவில்லை. சில அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் வியாபார முகவர்களாக செயல்பட்டு நாட்டு வளங்களை அழிக்கின்றது.

இதற்கு உதாரணமாக ஊசி மூலம் பெருக்கம் செய்யப்படும் மாடுகள் தீவனத்தை உண்பது மட்டுமில்லாது, மருத்துவச் செலவுகள் அதிகமாகவும் உள்ளது. அதில் வருகின்ற பால் உற்பத்தி ஒப்பீட்டளவில் போசக்கு குறைவாகவே உள்ளது.

இதனால் நாட்டு மாட்டு இனங்கள் அழிவடைந்து எமது பிரதேச காலநிலைக்கு ஒவ்வாத இனங்களை வளர்க்கும் போது பாரிய காலநிலை மாற்றம் வரும் போது எல்ல வளங்களும் அழிந்து விடும் நிலை உருவாகும்.

விவசாய உற்பத்திகளும் தற்போது கனியில் இருந்து கிடைக்கும் விதையில் இனபெருக்கம் செய்ய முடியாது உள்ளது.

வெளிநாட்டில் மரபாக்கம் விதைகளே பயிரிடப்படுகின்றது. அந்த விதைகளுக்கு அதே நிறுவனங்களே இரசாயனப் பசளை மற்றும் நோய் மருந்துகள், களை நாசினிகள் என்பவற்றை உற்பத்தி செய்கிறது.

முழுக்க முழுக்க வியாபார நோக்கம் கொண்ட வெளிநாட்டு சதிவலையில் சிக்கி சரியான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் நாங்கள் இந்த சதிவலையில் சிக்கி உழைக்கும் பணத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுக்கிறோம் .

எமது தற்சார்பு பொருளாதாரத்தை அதிகரித்து ஏற்றுமதி பொருளாதாரம் முலம் வெளிநாட்டுப் பணத்தை எமது பிரதேசத்துக்கு கொண்டுவர வேண்டும். சில தனியார் நிறுவனங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஒரளவு ஆறுதல் தருகிறது. ஆனால் அது இன்னும் விரிபுபடுத்தப்பட வேண்டும். உள்ளூர் இயற்கை விவசாய உற்பத்தி அதிகரிப்பதன் ஊடாகவே இதை செயற்படுத்த முடியும்.

அரசு வடபகுதியில் உள்ள சிறிய ஏரிகள், குளங்கள், ஆறுகள் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை சில சிறிய குளங்கள் காணாமல் போய்விட்டது. ஆறுகள், வயல், நிலம் தாண்டி காடுகளை அழித்து மணல் கொள்ளையால் பெருத்து விட்டது.

ஏரிகள் புதுப்பிக்கப்படாததால் ஒரே ஒரு பெரிய குளம் இரணைமடுவை நம்பியே சகல நடவடிக்கையும் உள்ளது. எமது அரசியல்வாதிகளிடமும் இது பற்றிய புரிதலும் எந்த திட்டமும் இல்லை.

சிறிய குளம் ஏரிகள் செழிப்புறுவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் அதைச் சுற்றி உள்ள சிறிய கிராமங்கள் வளம் பெறும் என்பது உண்மை.

மக்களின் உழைக்கும் திறன் மங்கி வருவதை காணக்கூடியதாக உள்ளது. விவசாய இயந்திரங்களின் வருகை, தொழில் தெரியாமை, உடனடியாக அதிக பணத்தை பெற வேண்டும் என்ற பேராசை என்பன மக்களின் உழைக்கும் ஆற்றலை பின் தள்ளியுள்ளது என்பது மிகையாகாது.

தனியார் நிறுவனங்கள் மக்களை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளிவிட்டு சென்றுவிட்டது. இலவசங்களை எதிர்பார்த்து விட்டுத்திட்டம், வாழ்வாதாரம், நன்கொடை இந்தசொற்கள் மக்களினால் அதிகம் போருக்குப் பின்னே பயன்படுத்தப்பட்டது. அதற்கு முதல் உழைப்பு ஊதியம் என்னும் வாசகம் மட்டுமே எம்மிடம் இருந்தது.

மகிழ்ச்சி குறையாமல் இருந்தது. இப்போது எதற்கும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் மனநிலையை உருவாக்கி விட்டு விட்டது போராட்டமும் அதன் புறச் சூழலும் என்பது திண்ணம்.

எப்படிப்பட்ட பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்றால். எல்லாத் தொழில்களை மதிக்க பழக வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் சாதிப் பிரிப்புக்களை தாண்டி தொழில் முன்னேற்றம் என்ற பாதையை உருவாக்க வேண்டும்.

எங்கள் வளங்களை அதிகம் பயன்படுத்தி நாங்கள் இந்த நாட்டின் தவிர்க்க முடியாத பொருளாதார சக்தியாக உருப்பெற வேண்டும். அதன் பின் எமது கோரிக்கைகள் எல்லாம் தானாக நிறைவுகாணும்.

அரசியல் மாற்றம் தொடர்பாக நோக்கும் இடத்து யாருக்கு வாக்கு போடுவது?, யாரை மக்கள் நம்புவது?, யார் தமிழர் உணர்வுகளை மதித்து அரசியல் செய்வது?, எவரது அரசியலை இளம் சமூகம் பின்பற்றுவது?, இல்லை புதிய ஒளியில் இன்னும் ஒரு அரசியல் கருத்தை கொண்டு அரசியல் நடத்துவதா? என்ற முரண்பாடு நிறைந்த காலக்கட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் நிலை காணப்படுகின்றது.

இதைப் பயன்படுத்தி சுயநல அரசியல் நாடகம் செய்யும் திட்டங்களும் நடந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழ் மக்களின் மனம் ஒற்றுமையை விரும்பும், இதன் காரணமாக ஒற்றுமைப்பட்ட ஒரு அரசியல் நடவடிக்கையே தற்போது மக்கள் எதிர்பார்க்கும் விடயமாகும்.

இதுவே எமது தேர்தல் முடிவுகளும் காட்டி நிற்கிறது. இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக வாக்கு வாங்க காரணமாக அமைந்து விட்டது.

மக்கள் பிரிந்து போன வரலாறுகளை துரோகமாக பார்க்கும் பழக்கம் பிரிந்து போனதன் விளைவாக நாம் கண்ட துன்பம்.

இது மற்றைய கட்சிகளின் வாக்கு வங்கியை இல்லாமல் செய்யும். காரணம் பொதுவாக எல்லோரும் ஒரே குளத்தில் ஊறிய மட்டைகள் என்பது புரியாத மக்களின் நிலை. மக்களின் விளக்கமற்ற அரசியல் நிலைத்தன்மையைக் காட்டுகின்றது.

மக்களை சரியான அரசியல் கொள்கைகளை முன்வைத்து விளங்கப்படுத்தும் எந்த ஒரு நிறுவனமும், ஊடகமும் சார்பு அற்று காணப்படவில்லை. இதனால் எம் மக்களிடம் சரியான அரசியல் புரிதல் இல்லை சட்டரீதியாக இலங்கை அரசியல் அமைப்பு சீர்படுத்தப்படாமல் எந்த முன்னேற்றமும் இலங்கைக்கு இல்லை.

இரு தேசம் கேட்கும் அரசியலும் இலங்கை அரசியல் அமைப்பு மூலம் சாத்தியப்படாத ஒன்று. அப்படி இரு தேசம் கேட்கும் அரசியல்வாதிகள் இலங்கை அரசின் தேர்தலில் போட்டியிடுவது ஒரு தேசத்தை ஆதரிப்பது போன்றது.

இலங்கையரசுக்கு எதிராக பேசின் இங்கு அரசியல் செய்து விட முடியும் என்ற எண்ணக் கருத்தும் காணப்படுகிறது, மற்றைய கருத்தாக இவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்? என்ற கருத்தும் யார் வந்தால் எமக்கு என்ன என்ற கருத்தும் நிலவும். உலகில் எப்படிப்பட்ட அரசியல் தற்போது மக்களுக்கு தேவை?

அது எப்படி தமிழ் மக்களின் உரிமையை வென்று தரும் என்ற சரியான புரிதல் உள்ள நல்ல அரசியல் கட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது என்பது மிகையாகாது.

அபிவிருத்தி என்பது உரிமைகளைத் தராது, உரிமைப்போராட்டம் அபிவிருத்தி தராது, போரட்ட வெற்றி கூட சரியான மகிழ்வான வாழ்க்கை தரும் என்பதும் நிகழ்த்தகவு முடிவாக அமையலாம் அமையாமலும் விடலாம் என்பதே உண்மை.

அவ்வாறு இருக்கையில் மக்கள் எதை விரும்புவது எந்த அரசியலை முன்னெடுப்பது என்ற முரண்பாடுகள் உள்ளது மக்களுக்காக போராடும் சக்திகள் சுயநல அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் சேவையை செய்ய வேண்டும்.

அரசியல் என்பது தான் சார் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்று தரும் குரலாக இருக்க வேண்டும் என்பதே சிறந்த அரசியலாக இருக்கும். இளைஞர்கள் எப்படிப்பட்ட அரசியலை முன்னேடுக்க வேண்டும்? தான் சார்ந்துள்ள சமூகப் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வருவதே அரசியல் தான்.

மிக நாகரீகமாக சமூகவலைத்தளங்கள் மூலம் ஊடகக் கட்டுப்பாட்டுடன் பக்கச்சார்பற்ற சமூகப்பிரச்சினைகளை முன்வைத்து அரசியலில் ஈடுபட வேண்டும்.

தனியே கட்சி தேர்தல் என்பதை தாண்டி மக்கள் பிரச்சினைகளை வெளியே தெரியப்படுத்தி இளைஞர்கள் அரசியல் செயற்பாட்டை வெளிகொண்டுவரும் போது எமது எதிர்கால அரசியல் முன்னேற்ற பாதையில் செல்லும் என்பது திண்ணம்.

உளவியல் நிலை நாங்கள் உடலியல் சக்தியை பற்றி அதிகம் பேசி கொண்டு இருக்கிறோம். ஆனால், உளவியல் பலம் கொண்ட எந்த சமூகத்தையும் யாரும் வீழ்த்திவிட முடியாது.

மனத்திடம் ஒன்றை வளர்ப்பதன் மூலம் எமக்கு வரும் எந்த எதிர்ப்புக்களையும் வெற்றிகொள்ளும் சமூகமாக நாங்கள் வெளிவர முடியும்.

போருக்கு பின்னும், போரின் போதும் ஏற்பட்ட மனவடுக்களை நாங்கள் சரியான முறையில் ஆற்றுப்படுத்தவிவில்லை. அது தொடர்பாக அரசு கவனிக்கவில்லை. அவர்களின் நோக்கமும் அதுவாக இருக்கப் போவதுமில்லை.

எமது அரசியல்வாதிகளின் தொடர்பாக தெளிவான புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது காணப்படும் குடும்ப வன்முறை, மதுபோதைப் பாவனை குற்றங்கள், வீதி விபத்துக்கள், தற்கொலைகள் என்பன வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிகரித்துக் காணப்பட போரின் தாக்கத்தின் காரணமாக உள்ளது.

அரசின் திட்டமிட்ட செயல்களும் துணை புரிகின்றன. சில இளைஞர்களின் விழிப்புணர்வும் அவர்களின் சில சமூக செயற்பாடுகள் இந்த சமூகத்தின் மாற்றம் தொடர்பான நம்பிக்கையை காட்டுகின்றது.

ஆனால் சரியான அரசில் கொள்கைகள் இல்லாமல் இது தொடர்பாக தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க இயலாது. போதைப்பொருள் தொடர்பாக சட்டத் திருத்தம் அவசியமாகின்றது.

அதற்கு முதலில் இந்த இலஞ்ச ஊழல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எதையும் ஒழித்துக்கட்ட இயலாது. ஆதனால் சரியான மனமாற்றம் ஒன்றே இப்போது ஒரே ஒரு வழியாக எமது சமூக மாற்றத்துக்கு ஒற்றை துருப்பாக உள்ளது.

எப்படிப்பட்ட மனமாற்றம் என்பதை இளம் சமூகத்துக்கு வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் காணப்படுகின்றது.

எங்கள் ஊர். எங்கள் மொழி. எங்கள் மக்கள். எங்கள் நாடு என்ற உணர்வு மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்படுமானால் குற்றச்செயல்கள் குறைவடைய அதிக வாய்ப்பு உள்ளது.

ஆன்மீகம் தொடர்பான ஆரோக்கியம் நிச்சயமாக தேவைப்படுகின்றது. ஆன்மீக வழிகாட்டல் இல்லாத சமூகம் ஒரு குற்றச்சமூகமாகவே காணப்படும் தத்தம் சமய விழுமியங்களை கடைப்பிடிக்கும் மனமாற்றம் மக்களுக்கு அவசியமாகின்றது.

சமூக அக்கறை, சமூக ஒற்றுமை பற்றிய மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது எங்கள் சமூகத்தின் குறையாக உள்ள விடயமாக ஒற்றுமையே சுட்டக்காட்டப்படுகின்றது. ஒரு விடயம் எங்களைத் தாக்கும் வரை நாம் அந்த விடயம் பற்றி சிந்திப்பதில்லை.

மற்றவருக்கு தானே, அங்கே தானே என்று அலட்சியப்படுத்தும் விடயம் எல்லா இடமும் பரவி இறுதியில் எங்களையும் சேர்த்து தாக்கும் என்பது அறிந்தும் அறியாமல் நடக்கும் சமூகமாகவே இயங்கிக் கொண்டு இருக்கிறோம்.

இந்த நிலையில் இருந்து நாங்கள் மனமாற்றம் பெற்று வரவேண்டிய தேவையுள்ளது. எத்தனை முறை எங்களை நாங்களே குறை கூறிக் கொண்டு நாட்களை செலவு செய்வது? எமக்கான தீர்வு எம்மிடமே உள்ளது. அதற்கான மன திடத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம் எம்மிடத்தே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers