கதிர்காம பாதயாத்திரீகர்களின் அனுபவப் பகிர்வுகள்!

Report Print V.T.Sahadevarajah in கட்டுரை

ஈழத் தமிழரின் பண்பாட்டு பாரம்பரிய அடையாளமாக, குவிமையமாகத் திகழ்வது கதிர்காமம்.

இதனையொட்டிய மற்றுமொரு பாரம்பரியம் தான் பாதயாத்திரை.

அன்று அகத்தியர், கபிலர், பரணர், புலஸ்தியர், போகர் மற்றும் கோரக்கர் போன்றோர் இந்தியாவிலிருந்து இலங்கை வந்து உகந்தை மலையூடாக பாதயாத்திரை மேற்கொண்டு கதிர்காமம் சென்று முருகப்பெருமானைத் தரிசித்ததாக கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.

அதனை அடியொற்றியதாக 1972ஆம் ஆண்டில் அமெரிக்க முருக பக்தர் பற்றிக் ஹரிகன் கதிர்காம பாதயாத்திரையை ஒழுங்கமைக்கப்பட்ட குழு வடிவில் ஆரம்பித்தார்.

அதன் தொடர்ச்சியாக 1978இல் அவர் ஓய்வு பெற்றதும் அவர் தாங்கிவந்த வேலை காரைதீவைச் சேர்ந்த வேல்சாமி மகேஸ்வரனிடம் ஒப்படைத்தார்.

அன்றிலிருந்து 22 வருடங்களாக வேல்சாமி தலைமையில் பாதயாத்திரை நடைபெற்று வருகின்றது. ஆரம்பத்தில் வெருகலில் இருந்து இது இடம்பெற்றது.

எனினும், நாட்டின் அமைதி நிலவிய பிற்பாடு 2012முதல் சந்நிதியிலிருந்து இப்பாதயாத்திரை ஆரம்பமானது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகல ஆகிய 7 மாவட்டங்களையும் இணைத்து 56 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப்பாதயாத்திரை இலங்கையின் மிகமிக நீண்ட தூரக் கதிர்காம பாதயாத்திரையாக கருதப்படுகின்றது.

இம்முறை கடந்த மே மாதம் 10ஆம் திகதி சந்நிதியில் ஆரம்பித்த வேல்சாமி அணியின் யாழ்.பாதயாத்திரீகர்கள் 52பேர் கடந்த 35 நாட்களாக பயணித்து காரைதீவை கடந்து ஞாயிறன்று வந்தடைந்தனர்.

அவர்கள் காரைதீவு நந்தவன சித்திவிநாயகர் ஆலயத்தில் பகல்பொழுதை அநாயாசமாகக் கழித்துக் கொண்டிருக்கையில் அவர்களுள் 20 பேரிடம் கண்ட பேட்டியின் விபரம் இங்கு வாசகர்களுக்கு சுருக்கமாகத் தரப்படுகின்றது.

இணுவில் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பீ.கந்தசாமி கூறுகையில்,

இது எனக்கு 9ஆவது பயணம். 2013இல் வாழைச்சேனையால் வரும்போது திடீரென மாரடைப்பு வந்தது. 5 நிமிடம் தாமதித்திருந்தால் அன்று மரணித்திருப்பேன். ஆனால், உடனடியாக மட்டு.வைத்தியசாலையில் அனுமதித்து 17 நாட்களில் சரியாகப்போய்விட்டது.

5 வருடமாக பயணிக்கின்றேன். ஒரு சத்திரசிகிச்சையுமில்லை. பிரச்சினையுமில்லை. கடந்த தடவை செல்கையில் வழி தவறிய போது முருகப்பெருமான் யானை வடிவில் வந்து சரியான பாதையைக்காட்டி அதிசயம் நடந்தது.

67 வயதுடைய கல்லடியைச் சேர்ந்த எஸ்.சாந்தாவதி கூறுகையில்,

நான் 23ஆவது வருடமாக பாதயாத்திரையில் ஈடுபடுகிறேன். சந்நிதியிலிருந்து 12ஆவது தடவை. எனது நேர்த்தி இதுதான். நாட்டில் நிரந்தர சமாதானம் நிலவ வேண்டும். சகல இனங்களும் ஐக்கியமாக சமஉரிமையுடன் மகிழ்ச்சியாய் வாழவேண்டும்.

ஒரு தடவை உகந்தையிலிருந்து 9 பேருடன் பயணித்தபோது காட்டுக்குள் வழிதவறினோம். நாகக்கன்னி வடிவில் எமக்கு வழிகாட்டப்பட்டது.

இன்னுமொரு தடவை ஊறணியால் வரும்போது வேல்சாமியின் வேலில் இருந்து ஒளிவரக் கண்டேன். இவை அற்புதம்.

செல்வச் சந்நதியில் இருந்து 41 வயதுடைய அ.அஜந்தன்,

5ஆவது வருடமாக வருகிறேன். எமது குடும்பத்தில் 10 பேர். சந்நதி வாசலில் கற்பூரம் விற்று சட்டி பானை கழுவித்தான் எம் 10 பேரையும் வளர்த்த எம் அம்மா ராசாத்தி.

இன்று எம்மில் 4பேர் வெளியில். இருவர் இல்லை. எனது உடம்பில் பல ரவைக் கூறுகள் உள்ளன. 2 மைல் நடந்தால் 2 மாதம் படுக்கையில் கிடக்க வேண்டும்.

ஆனால், பாதயாத்திரை சென்று வந்த பிற்பாடு ஒரு பிரச்சினையுமில்லை. 5ஆவது தடவையாக இப்போ பயணிக்கின்றேன். 2015இல் காட்டுக்குள் நாவலடி தாண்டிச்செல்கையில் மாலையானதும் வழிதவறிய போது பறவை வடிவில் வந்து பெருமான் எங்களுக்கு வழிகாட்டினார்.

2016இல் ஏழுமலைக்குச் சென்றபின் வள்ளிமலைக்கு செல்ல முடியாமல் அமர்ந்திருந்த வேளை என்னை எழுப்பி செல்ல வைத்தவர் அவர். நம்பினால் கிடைக்கும். சந்தேகமேயில்லை. நம்பிக்கை அவசியம்.

எனக்கிருந்த நோய் மற்றும் பல பிரச்சினைகளை தீர்த்து வைத்தவர் முருகப்பெருமான். நம்புங்கள் முருகன் நல்லவன். நிச்சயம் நடக்கும்.

தொண்டமானாறுச் சேர்ந்த 56 வயதுடைய து.சுசீலா கூறுகையில்,

4ஆவது வருடமாக வருகிறேன். எனது மகன் கஜீபனுக்கு சுகவீனம். அதாவது வலிப்பு. வயது 32. அதைத் தீர்த்து வைக்கவேண்டுமென்று நேர்த்தி வைத்து வந்தேன். கைமேல் பலன். இன்று அவனுக்கு வலிப்பு இல்லை.

கிளிவெட்டியைச் சேரந்த 64 வயதுடைய சி.மகாலிங்கம் கூறுகையில்,

இது எனக்கு 6ஆவது தடவை. நான் எந்த நேர்த்தியும் வைக்கவில்லை. தமிழர்களின் பாரம்பரியம் பண்பாடு அடுத்த சந்ததிக்கு எத்தி வைக்கப்பட வேண்டும் என்பதற்காக இவ் யாத்திரையில் ஈடுபடுகின்றேன். ஊர் நாடு சமாதானமாக அமைதியுடன் திகழவேண்டும்.

குமுழமுனையைச் சேரந்த 73 வயதுடைய கலாபூசணம் ச.சிவகுரு கூறுகையில்,

இப்பயணம் எனக்கு 5ஆவது வருடமாகும். 2 பிள்ளைகளும் நன்றாக வாழவேண்டும் என்பதே நேர்த்தி. 34வயது ஆண்மகன் திருமணம் முடிக்க வேண்டும்.

கொழும்புத்துறையைச் சேர்ந்த 66 வயதுடைய ஜ.குணரெத்தினம் கூறுகையில்,

இது எனது முதலாவது பயணம். இனம்புரியாத மகிழ்ச்சி என்னுள் பாய்கிறது. தமிழர் தம் பாரம்பரியம் தொடர வேண்டும் என்பதே எனது அவா.

நெடுங்கேணியைச் சேர்ந்த 65 வேணு வயதுடைய லக்ஸ்மணன் கூறுகையில்,

நான் வற்றாப்பளையிலிருந்து 3வது வருடமாக வருகிறேன். எனது மகனுக்கு வயது 22. அவர் 19 வயது வரை வாய் பேச முடியாதவராக இருந்தார். நான் நேர்த்தி வைத்து பாதயாத்திரையில் வரத்தொடங்கிய பிறகு தற்போது பேச ஆரம்பித்திருக்கிறார். அதிசயம். ஆனால் உண்மை.

காரைநகரைச் சேர்ந்த 35 வயதுடைய சி.ஜெயராஜா கூறுகையில்,

இது 7ஆவது தடவையாகும். எமது தமிழ்ச்சந்ததி நன்றாக வாழவேண்டும். நாட்டில் எவ்வித பிரச்சினையுமின்றி நன்றாக வாழ வேண்டும்.

எனது அண்ணனின் மகன் கஜானன் 3 வயதில் நடக்கமுடியாமல் இருந்தான். அது சரிவர வேண்டும் என்று கோரி பாதயாத்திரையில் ஈடுபட்டேன். இப்போ நடக்கிறான். அற்புதம்.

காரைதீவைச் சேர்ந்த 66 வயதுடைய ஸ்ரீ நந்தவனப்பிள்ளையார் கதிர்காம பாதயாத்திரீகர்கள் சங்கத் தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் கூறுகையில்:

இது எனக்கு 22 வருட பாதயாத்திரை. 7 வருடங்களாக சந்நிதியிலிருந்து தலைமை தாங்கி வேல்தாங்கி பயணித்து வருகின்றேன்.

இம்முறை எனது சுகயீனம் காரணமாக திருக்கோவிலிலிருந்து பயணிக்கிறேன். பல தடவைகள் பல அற்புதங்கள். அதிசயங்கள். கடந்த வருடம் வருகையில் பெரியநீலாவணை நாகக்கன்னி ஆலயத்தில் தெய்வமாடிய பெண் என்னிடம் வந்து 1000 எலும்புகளில் 1 எலும்பைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.

அதுதான் நீ. எவ்வித இடர்கள் நேரிடினும் கைவிடாது தொடர்ந்து வேல் தாங்கி பயணிக்க வேண்டும் என்றார்.

வருடாவருடம் இத்தனை அடியார்களையும் அழைத்து தலைமைத் தாங்கி வருவதென்பது எனக்கு ஒரு பாரமான சுமையாகத் தெரியவில்லை. அனைத்தும் முருகனின் செயல். அவன்தான் அவனது வேல் தான் எம் அனைவரையும் எந்த விக்கினமுமில்லாமல் அழைத்துச் செல்கின்றது.