எங்கள் தலையில் நாங்களே மண்ணைக் கொட்டினோம்

Report Print S.P. Thas S.P. Thas in கட்டுரை

திருகோணமலை கன்னியாவில் தென்கயிலை ஆதீன குரு முதல்வர் மீது சுடுநீர் ஊற்றிய சம்பவத்தால் இந்து மக்கள் கடும் வேதனை கொண்டுள்ளனர்.

எனினும் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கண்டனமோ கருத்தோ வெளியிடாமல் இருக்கிறது.

இந்த நிலைமையைப் பார்க்கும்போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தன்னிலை இழந்து விட்டாரா என்று சந்தேகிக்கின்ற அளவில் நிலைமை உள்ளது.

என்ன செய்வது, நம்பி வாக்களித்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிக் கொட்டியதாக தமிழ் மக்களின் கதை ஆகிவிட்டது.

சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தான் பட்ட கடனுக்கு நன்றி செலுத்துகிறது என்றால்,

இந்த நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய மதத் தலைவர்கள் கூட தங்கள் கண்டனத்தை கருத்தைத் தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்பதுதான் வேதனைக்குரியது.

ஆதீன குரு மீது சுடுநீர் ஊற்றுகின்ற அநாகரிகம் நடப்பதைக் கண்டும் காணாமல் இருப் பது போல ஏனைய மதத் தலைவர்கள் பேசாமலிருக்கின்றனர்.

பரவாயில்லை சைவ சமயத்துறவி ஒரு வருக்கு நடந்த அக்கிரமம் கண்டு இப்போது நீங்கள் பேசாமல் இருந்து சிங்களப் பேரின வாதத்துக்கு வால் பிடிக்கலாம்.

அல்லது பெளத்த பிக்குகளின் தலை தடவி வாழலாம்.

ஆனால் என்றோ ஒருநாள் உங்களுக்கும் பெளத்த சிங்களப் பேரினவாதம் சுடுநீர் வீசும். அப்போது அது சுடுநீரோ அல்லது கொதிக்க வைத்த மனிதக் கழிவு நீரோ என்ற கேள்வி எழும்.

இது நிச்சயம் நடக்கும். இதுவே இயற்கையின் நியதி.

மதகுரு என்ற மரியாதைக்குரிய பதவியில் இருக்கின்றவர்கள் ஒருபோதும் இரட்டை வேடம் போடலாகாது.

இறைவன் என்றொருவன் இருப்பது உண்மையானால், இந்த இரட்டை வேடம் தண்டனைக்குரியவையாக மாறும் என்பதுதான் உண்மை.

எனவே ஒரு இனம் பாதிக்கப்படும்போது, ஒரு சமயத்தின் மதகுருவை இழிவுபடுத்தும்போது நமக்கென்ன என்று யாரும் இருந்துவிடாதீர்கள்.

பாதிக்கப்பட்ட மதகுருவுக்காகக் குரல் கொடுங்கள். இந்து, பெளத்தம், கத்தோலிக்கம், இஸ்லாம் என்று மதபேதமை பாராதீர்கள் என்பது நம் தயவான கோரிக்கை.

இவை ஒருபுறமிருக்க, திருகோணமலை கன்னியா விவகாரத்தில் அமைச்சர் மனோ கணேசன் உடனடியாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவைச் சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறி தற்காலிகத் தீர்வைப் பெற்றுக் கொண்டதன்மூலம் அவர் ஒரு சிறந்த மக்கள் பிரதிநிதி என்பதை நிரூபித்துள்ளார்.

எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒதுங்கி நிற்க, மனோ கணேசன் துணிந்து நின்று செயலாற்றியமை பாராட்டுக்குரியது.

- Valampuri