பயங்கரவாத முறியடிப்பு

Report Print Subathra in கட்டுரை

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலை புலிகளின் இயக்கத்தை தோற்கடித்த இலங்கை இராணுவம், சில மாதங்களின் பின்னர், தமது போர் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையிலான பாதுகாப்புக் கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தது.

மூலோபாய மற்றும் தந்திரோபாய ரீதியாக விடுதலை புளிகள் இயக்கத்தை எப்படித் தோற்கடித்தோம் என்று விளக்கமளிப்பதன் ஊடாக, இராணுவத்துக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று கொடுக்க முற்பட்டார் அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷ.

முதல் கருத்தரங்கு நடத்தப்பட்ட போது, மனித உரிமை அமைப்புகளிடம் இருந்து மாத்திரமன்றி பல நாடுகளிடமிருந்தும் பலத்த எதிர்ப்புகள் இருந்தன.

எனினும், பலம் வாய்ந்த விடுதலைப் புலிகளின் இயக்கத்தை தோற்கடித்து விட்ட இராணுவம் என்பதால், அதன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் கருத்தரங்கிற்கு, சர்வதேச அளவில் வரவேற்பும் கிடைத்தது.

ஏனென்றால், விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாத சக்தியாகவே உலகம் கருதிக் கொண்டிருந்தது.

அந்த வரவேற்பினால், ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு கருத்தரங்குகளை இராணுவம் ஒழுங்கு செய்து வருகின்றது. ஆரம்பத்தில் புலிகளைத் தோற்கடிப்பது தொடர்பான தந்திரோபாயங்கள் தொடர்பான விடயங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் அதற்கு மவுசு குறைந்து விட்ட நிலையில், இப்போது, பெரும்பாலும் பொதுவான பாதுகாப்புத் தலைப்புகளின் கீழ் அந்தக் கருத்தரங்குகளை நடத்திக் கொண்டிருக்கிறது.

புலிகளைத் தோற்கடிப்பதில் இராணுவம் கையாண்ட தந்திரோபாயங்கள், பல நாடுகளின் படைகளுக்கு படிப்பினையாக அமைந்திருந்தது. அதனை நமது நாட்டு இராணுவ கல்விநெறிகளிலும் பல நாடுகள் புகுத்தியிருக்கின்றன.

அதேவேளை, பல சக்தி வாய்ந்த நாடுகளின் ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும், புலனாய்வுத் தகவல்களையும் பின்பற்றியே இலங்கை இராணுவம், புலிகளைத் தோற்கடிப்பதற்கான தந்திரோபாயங்களை செயற்படுத்தியிருந்தது என்பது வேறு விடயம்.

ஆனாலும், அதனை சாதித்திருந்ததால், இலங்கை இராணுவம் தொடர்பாக சர்வதேச பாதுகாப்பு மட்டங்கள் வியப்புடன் பார்க்கும், நிலையே காணப்பட்டது.

இவ்வாறான நிலையில் இருந்த இலங்கைக்கு, 21/4 தாக்குதல்களுக்குப் பின்னர், சர்வதேச பயங்கரவாத முறியடிப்பு நிபுணர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த அனுபவத்தைக் கொண்டுள்ள இலங்கைப் படைகளுக்கு, பாடம் சொல்லிக் கொடுக்க உலக நாடுகளின் நிபுணர்கள் வரத் தொடங்கியிருக்கின்றார்கள்.

விரும்பியோ விரும்பாமலோ, இந்த பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்க வேண்டிய நிலையில் இருக்கின்றது இலங்கை படைகள்.

21/4 தாக்குதல்கள் நடந்து சில நாட்களின் பின்னர், தற்கொலைக் குண்டுதாரிகள் உள்ளிட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சிலர், சாய்ந்தமருதில் சுற்றிவளைக்கப்பட்ட போது, இந்தியா தனது என்.எஸ்.ஜி எனப்படும், தேசிய காவல்படை கொமாண்டோக்களை அனுப்பவும் தயாராக இருந்தது.

புலனாய்வு, விசாரணை என்பதற்கு அப்பாலும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும், இலங்கைக்கு தேவையான பயங்கரவாத எதிர்ப்பு உதவிகளை அளிக்கத் தயாராக அப்போது இருந்தன.

புதிய சூழலைச் சமாளிக்கும் திறன் இலங்கைப் படைகளுக்கு இருக்காது என்ற கணிப்பின் அடிப்படையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தயார் நிலையில் தமது படைகளை வைத்திருந்தால், விடுதலைப் புலிகளை எதிர் கொண்ட பலத்துடன் தற்போதைய இராணுவம் இல்லை என்ற கருத்து அந்த நாடுகளிடம் இருக்கின்றது என்றே கருத வேண்டும்.

இந்தியா உள்ளிட்ட எந்தவொரு வெளிநாட்டினதும் இராணுவப் படைகளோ, படை பல உதவிகளோ தமக்கு தேவையில்லை என்றும், இலங்கைப் படையினராலேயே இந்தச் சூழலைச் சமாளிக்க முடியும் என்றும் அப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், இலங்கை இப்போது, பயங்கரவாத எதிர்ப்பு போர்முறை பற்றிய புதிய அனுபவங்களை சர்வதேச பாதுகாப்பு நிபுணர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.

10 ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப் புலிகளை இராணுவம் எதிர்கொண்ட முறையில் இருந்து இது வேறுபட்டது. விடுதலைப் புலிகள் பொதுமக்களையோ, ஆலயங்களையோ, பொது இடங்களையோ, ஒருபோதும் இலக்கு வைத்திருக்கவில்லை.

அவர்களின் தாக்குதல் இலக்குகள் அரசியல் பெறுமானங்களையும், இராணுவப் பெறுமானங்களையும் அடிப்படையாக கொண்டவையாக இருந்தன.

ஆனால் ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட 21/4 தாக்குதல்கள், முற்றிலுமாக அழிவுகளையும், குரோதத்தையும், அடிப்படையாக கொண்டவை. அதுவும் மதம் சார்ந்த அடிப்படைவாதத்தின் அடிப்படையிலேயே இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான தாக்குதல்களை எதிர்கொண்ட இன்னமும் எதிர்கொள்ளும் தரப்புலிகளிடமிருந்து இலங்கைப் படைகள் நிறையவே கற்றுகொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன.

சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான நிபுணத்துவ உதவிகள் தேவைப்படுவதாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட எல்லா தரப்புகளுமே சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இப்படியான நிலையில் தான், ஐ.நாவில் இருந்து. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து, அமெரிக்காவில் இருந்து மாத்திரமன்றி, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், நிபுணத்துவ உதவிகளை அளிப்பதற்காக நிபுணர் குழுக்கள் கொழும்புக்கு வந்து கொண்டிருக்கின்றன.

21/4 தாக்குதல்களுக்கு பின்னர், ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் நிலைமையை அவதானிக்க, அவரது சிறப்புப் பிரதிநிதியாக, நாகரீகங்களின் கூட்டமைப்புக்கான ஐ.நா உதவிச் செயலர் மிக்வேல் ஏஞ்சல் மொராடினசை அனுப்பி வைத்திருந்தார்.

மிக்வேல் ஏஞ்சல் மொராடினஸ் ஜனாதிபதி மைத்திரிபாக சிறிசேனவைச் சந்தித்து பேசிய போது, இஸ்லாமிய பயங்கரவாதத்தை அகற்றும் இந்த முற்சிகளுக்கு அனைத்துலக சமூகமும் தோள் கொடுக்கும்.

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு நிபுணத்துவ உதவிகளை வழங்க, பயங்கரவாத முறியடிப்பு நிபுணர்களின் குழுவொன்றை ஐ.நா. பொதுச்செயலர் கொழும்புக்கு அனுப்பவுள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.

அதற்கு பின்னர் ஐ.நா. உதவிச் செயலரும், பயங்கரவாத முறியடிப்பு நிறைவேற்றுப் பணியகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான, michele coninsx தலைமையிலான குழுவொன்று இலங்கை வந்து அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தது.

இதன்போது, வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புக்களையும் அதன் செயற்பாடுகளையும் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு ஆலோசனைகளும் அளிக்கப்பட்டன.

அதன் பின்னர், அண்மையில் அமெரிக்க பயங்கரவாத முறியடிப்பு நிபுணர்கள் குழுவொன்றும் இலங்கைக்கு வந்து சில ஆலோசனைகளைக் கூறியிருந்தது.

சர்வதேச பயங்கரவாதத்தை தடுப்பதற்கு கடலோரக் காவல்படையைப் பலப்படுத்தி, எல்லைகளின் பாதுகாப்பை இறுக்கமாக்க வேண்டும் என்று அமெரிக்க நிபுணர்கள் ஆலோசனை கூறியிருந்தனர்.

அத்துடன் இலங்கைக்கு மேலதிக நிதியுதவிகளை வழங்குவதற்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியை ட்ரம்ப் நிர்வாகம் கோரியிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த வாரம், ஐரோப்பிய ஒன்றியத்தின், பயங்கரவாத முறியடிப்பு ஒருங்கிணைப்பாளர் கில்லிஸ் ட் கெர்ச்சோவ் தலைமையிலான நான்கு நிபுணர்கள் இலங்கைக்கு வந்து, அரச மற்றும் பாதுகாப்பு துறைகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

அத்துடன், பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக 8.5 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்குவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்தது.

இதுதவிர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்த சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் 2600 மில்லியன் ரூபா நிதியுதவியையும், 1500 ரூபா பெறுமதியான வாகங்களையும் வழங்குவதாக அறிவித்திருந்தார்.

மற்றொரு புறத்தில், பயங்கரவாத முறியடிப்புக்கான கருவிகள் மற்றும் பயிற்சி உதவிகளை வழங்கவுள்ளதாக, கடந்த மாத நடுப்பகுதியில், கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜபானின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ரொஷிகோ அபே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்திருந்தார்.

21/4 தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கையில் எழுந்துள்ள சூழ்நிலைகள் தொடர்பாக, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ்வுடன், கடந்த மே மாதம், இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக, நடத்திய பேச்சுக்களின் போது, சர்வதேச பயங்கரவாதம் தொடர்பாகவும், அதற்கான உதவிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

ஆக, இப்போதைய நிலையில், சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முன்னெடுக்கத் தள்ளப்பட்டுள்ள இலங்கை, தனியாக அதனை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது.

எங்கிருந்து எந்த வடிவில் எதிரி செயற்பாடுகின்றான் என்பதை தெரிந்து கொள்வதற்கு சர்வதேசத்துடன் கைகோர்க்க வேண்டியதும், அதன் ஆலோசனைகளைக் கேட்க வேண்டியதும் இலங்கையின் இக்கட்டான நிலையாகும்.

இந்த நிலையில், தான் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு அல்லது முறியடிப்பு நிபுணர்களின் படையெடுப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பயங்கரவாத முறியடிப்பு என்பது வெறுமனே ஆயுதங்கள், புலனாய்வு, தந்திரோபாயங்களால் மாத்திரம் சாத்தியப்படக் கூடிய ஒன்று அல்ல.

அதற்கு அப்பால், நல்லிணக்கத்துக்கான சூழலை உருவாக்கப்படுவதும் அதற்கான அடிப்படை தான்.

இலங்கை அரசாங்கத்துக்கான சர்வதேச பயங்கரவாத முறியடிப்பு பற்றிய நிபுணத்துவ உதவிகளில் அதுவும் இரு கட்டமாக இருக்கும்.

இதுவரை பொறுப்புக்கூறலை முன்வைத்து நல்லிணக்கத்தை வலியுறுத்திய சர்வதேசம் இனி பயங்கரவாத முறியடிப்பின் ஒரு அங்கமாக அதனை வலியுறுத்தக் கூடும்.

Latest Offers

loading...