இலங்கையின் கடல்பாதுகாப்பும் ஓட்டைகளும்

Report Print Subathra in கட்டுரை

இலங்கையின் கடல் எல்லைகள் பாதுகாப்பனதாக இருக்கின்றனவா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.

ஏனென்றால், பலமான கட்டுக் காவலையும் மீறி, குடியேற்றவாசிகளின் படகு ஒன்று, இங்கிருந்து அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றிருக்கிறது.

அந்தப் படகு கிறிஸ்மஸ் தீவுக்கு அண்மையில் அவுஸ்திரேலிய எல்லைக்காவல் படையினரால் இடைமறிக்கப்பட்டு, அதிலிருந்தவர்கள் சிறப்பு விமானம் மூலம், கொழும்புக்கே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

குடியேற்றவாசிகளை ஏற்றிய மற்றொரு படகு ஜூலை 12ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டதாக தகவல் கிடைத்ததை அடுத்து, ரீயூனியன் தீவுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.

அந்தப் படகு எங்கு செல்கிறது என்ற தெளிவான தகவல் கூட இல்லாத நிலையில், குடியேற்றவாசிகளின் கடல்வழிப் பயண இலக்குகளில் அவுஸ்திரேலியாவை அடுத்துள்ளது. ரீயூனியன் தீவே என்பதால் தான் அதற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குடியேற்றவாசிகள் பிரச்சினை என்பது, இப்போது வளர்ந்த நாடுகள் எதிர்கொள்ளும் பாரிய சிக்கலாக மாறியிருக்கிறது. ஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளின் குடியேற்றவாசிகள், ஐரோப்பிய கண்டத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளனர்.

அதுபோலவே, கடல்வழி குடியேற்றவாசிகள் விடயத்தில் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளும் கடுமையான எச்சரிக்கை நிலையில் இருக்கின்றன, இறுக்கமான போக்கை கடைப்பிடிக்கின்றன.

ஆனாலும், அதையும் தாண்டி குடியேற்றவாசிகள், ஆபத்தான கடல் பயணத்தின் மூலம், அவுஸ்திரேலிய கரையைத் தொட்டு விடும் ஆசையை விட்டபாடில்லை.

குடியேற்றவாசிகள் பிரச்சினை மாத்திரமின்றி, போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல்களும் இப்போது கடல்வழியாக பெருகியிருப்பது, சர்வதேச நாடுகளுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கின்றது.

21/4 தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கைக்கு ஆலோசனைகளை வழங்க கொழும்பு வந்த அமெரிக்க தீவிரவாத எதிர்ப்பு நிபுணர் குழு, அண்மையில் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்திருந்தது.

அப்போது அவர்கள், கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோர காவல்படை இருக்கும், ஒரு நாட்டிற்குள் ஊடுருவ, எந்தவொரு பயங்கரவாதியும் அஞ்சுவர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

கடலோரக் காவல்படையைப் பலப்படுத்தி கடுமையான எல்லைக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்கள், இலங்கைக்குக் கூறிய ஆலோசனை.

இலங்கையிடம் வலுவான ஒரு கடற்படை இருக்கிறது. வளர்ந்து வரும் ஒரு கடலோரக் காவல்படை இருக்கிறது. ஆனாலும், கடல் எல்லைகளைப் பாதுகாப்பதலில் இலங்கை இன்னமும் முழுமையான ஆளுமையைப் பெறவில்லை.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியை தோற்கடித்த கடற்படை, அதற்குப் பின்னர் 10 ஆண்டுகள் கடந்து விட்டபோதும், கடல் எல்லைகளைப் பாதுகாப்பதில் கோட்டை விட்டுக் கொண்டிருக்கின்றது என்பது ஆச்சரியமான விடயம் தான்.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால், இலங்கை கடற்படைக்கு ஆரம்பத்தில் கடுமையான சவால்கள் இருந்தது உண்மை.

வடக்கு, கிழக்கில் நீண்டிருந்த புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பரப்பும், அந்த நிலப்பரப்பில் எங்கிருந்தும் அவர்கள் தமது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு புறப்படக்கூடிய வாய்ப்புகள் இருந்ததும் கடற்படைக்கு சாதகமற்றதாக இருந்தது.

அதைவிட, சர்வதேச கடல் எல்லையில் எங்கிருந்தும், கப்பல்களும் படகுகளும் நுழையக் கூடிய நிலையில் இருந்தன. எனவே, கடற்படை தனது பலத்தை உள்ளும் வெளியிலுமாக இரண்டாக பிரித்து செயற்பட வேண்டியிருந்தது.

2006இல் போர் தொடங்கிய பின்னர், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் குறையத் தொடங்கியதும், சர்வதேச கடல் வழியான விநியோகங்கள் முடங்கத் தொடங்கியதும், கடற்புலிகளை எதிர்கொள்ளும் விடயத்தில் இலங்கை கடற்படை மேலாதிக்கத்தை பெறத் தொடங்கியது.

அதனால் தான், இறுதிக்கட்டப் போரின் பிற்காலத்தில் கடற்புலிகளால் குறிப்பிடத்தக்க தாக்குதல்களை நடத்த முடியாமல் போனது. 2006இல் தொடங்கிய நான்காவது கட்ட ஈழப்போரில், கடற்புலிகளின் தாக்கு திறன் 2007,2008,2009 ஆம் ஆண்டுகளில் குறைந்து கொண்டே சென்றது.

ஆனால், இப்போது நிலை அப்படியில்லை இலங்கைத் தீவின் முழு கடலோரத்தையும் வெளிப்புறக் கடல் எல்லைகளையும் கண்காணிக்க வேண்டிய நிலை கடற்படைக்கு ஏற்பட்டுள்ளது.

இது கடற்படைக்கு உள்ள சவால் தான். என்றாலும், கடற்படை முன்னரை விட அதிக பலத்துடனும், அதிகளவு போர்க்கலன்களுடனும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அவ்வாறு இருந்தபோதும், சர்வதேச கப்பல் பாதைக்கு அருகிலேயே இலங்கைத் தீவு இருப்பதால், கடற்படையின் கண்காணிப்பையும் மீறி சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.

இலங்கையின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பது, இப்போது இலங்கைக்குத் தேவையாக இருக்கிறதோ இல்லையோ, அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், சீனா என பல நாடுகளுக்குத் தேவையாக இருக்கிறது என்பது தான் உண்மை.

அண்மையில் பேஸ்புக்கில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், இந்தோ பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பில், இலங்கையின் பங்களிப்புக்கு நன்றி பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்கு இலங்கையின் கடல் எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை இருப்பதால் தான், 2004ஆம் ஆண்டில் சாகர என்ற போர்க்கப்பலையும், 2019ஆம் ஆண்டில் கஜபாகு என்ற போர்க்கப்பலையும் இலங்கை கடற்படைக்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது.

இப்போது இலங்கை கடற்படையிடம் உள்ள மிகப்பெரிய போர்க்கப்பல் அமெரிக்கா வழங்கிய “கஜபாகு” தான்.

அதுபோலவே, இந்தியாவுக்கும் இலங்கை கடல் வழியான சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்க வேண்டியிருக்கிறது.

அதற்காகவே இந்தியா சயுரால, சிந்துரால, சயுர, சாகர போன்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வழங்கியிருக்கிறது. இந்த நான்கும் இலங்கை கடற்படையின் பெரும் பலமாக விளங்குபவை.

சீனா, தன்வசம் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்புக்காக, இலங்கை கடற்படை பலமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது.

அதற்காகவே, அண்மையில் சீனாவும் Type 053H2G வகையைச் சேர்ந்த ஒரு பாரிய போர்க்கப்பலை வழங்கியிருக்கிறது.

P625 என இலக்கமிடப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பலுக்கு இன்னமும் பெயரிடப்படவில்லை. கடற்படையில் ஆணையிட்டும் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

சீனா வழங்கிய இந்தப் போர்க்கப்பல், அமெரிக்காவின் கஜபாகுவை விட 3 மீற்றர்களே நீளத்தினால் குறைவானது.

இப்போது கடற்படையிடம் உள்ள இரண்டாவது பெரிய போர்க்கப்பல் இது தான்.

இலங்கை கடற்படையிடம் உள்ள ஏனைய போர்க்கப்பல்களில் இல்லாத பாரிய பீரங்கி இதில் உள்ளது. ஏனைய போர்க்கப்பல்களில் 76 மி.மீ பீரங்கியே பெரியதாக இருந்தது. ஆனால், சீனா அண்மையில் வழங்கிய போர்க் கப்பலில் 100 மி.மீ இரட்டைக் குழல் பீரங்கி பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில், இலங்கையிலிருந்து சட்ட விரோத குடியேற்றவாசிகள் வருவதை தடுப்பதற்கு, இலங்கை கடற்பகுதியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்காக அவுஸ்திரேலியாவும் இரண்டு ஆழ்கடல் ரோந்துப் படகுகளை கடற்படைக்கு கொடுத்திருக்கிறது.

ரத்ன தீப, மிஹிகாத என்ற பெயர்களில் இந்தப் படகுகளை கடற்படை பயன்படுத்தி வருகிறது.

இவை தவிர, மேலும் பல உதவிகளையும் வழங்கத் தயராக இருக்கிறது அவுஸ்திரேலியா.

ஜப்பானைப் பொறுத்தவரையில், இந்தியப் பெருங்கடல் வழியான போக்குவரத்து பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. சீனாவிடமிருந்து அதற்கான அச்சுறுத்தல் வரக் கூடும் என்பது ஜப்பானின் கவலை.

அதனால் இலங்கை கடற்படையைப் பலப்படுத்து, ஜப்பான் தனது வணிக கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எதிர்பார்க்கிறது.

இவ்வாறாக ஒவ்வொரு நாட்டுக்கும் இலங்கையின் கடல் எல்லைகளின் மீது ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த எதிர்பார்ப்புகள் தான் இலங்கை மீதான சர்வதேச கவனத்துக்கு முக்கியமான காரணம்.

இலங்கை கடற்படையைப் பலப்படுத்திக் கொள்வதற்கும், அதற்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும், போர்க்கப்பல்களையும் வழங்கிக் கொண்டிருப்பதற்கும், இது தான் அடிப்படை.

இலங்கையை பொறுத்தவரையில் அதன் கண்காணிப்பையும் மீறி அவுஸ்திரேலியாவுக்கும், ரியூனியன் தீவுக்கும் குடியேற்றவாசிகளின் படகுகள் சென்று கொண்டிருப்பதானது, கடல் எல்லைகளின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்வது என்பதில், சிக்கல்களை எதிர்கொள்கிறது என்பதையே உணர்த்தியிருக்கிறது.

அதுமாத்திரமன்றி, அமெரிக்கா வழங்கிய கஜபாகு போர்க்கப்பல் தனது முதலாவது நடவடிக்கையாக, பாகிஸ்தான் படகு என சந்தேகிக்கப்படும் படகு ஒன்றில் இருந்து 60 கிலோ போதைப்பொருளை கைப்பற்றியது. அதற்கான புலனாய்வுத் தகவலை இந்திய கடற்படைவே வழங்கியிருக்கிறது.

இலங்கைக்கு இப்போது மூன்று விதமான அச்சுறுத்தல்கள் உள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தல் ஒன்று. போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றொன்று. குடியேற்றவாசிகள் பிரச்சினை இன்னொன்று. இந்த மூன்று பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் வகையில் கடற்படையையும், கடலோரக் காவல் படையையும் பலப்படுத்துவது, முக்கியமானதாக உள்ளது.

ஆனால், ஏனைய நாடுகளோ, இலங்கையின் கடல் எல்லையின் பாதுகாப்புக்கும் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையின் பாதுகாப்புக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக கருதுகின்றன.

இலங்கையின் கடல் எல்லைகள் அதன் கட்டுப்பாட்டில் அதன் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற நாடுகள் தான், 2009இல் விடுதலைப் புலிகளின் கடற்படையை இல்லாமல் ஒழிப்பதில் முன்நின்றன.

ஏனென்றால், விடுதலைப் புலிகளின் கடற்படை இருந்தால், சர்வதேச கடல்வழி போக்குவரத்தில் அவர்கள் ஈடுபடுவார்கள். ஆயுதக் கடத்தல்கள் நடக்கும், சர்வதேச பயணங்களிலும் ஈடுபடுவார்கள்.

அது பிற நாடுகளைப் பொறுத்தவரையில் மனித கடத்தல் என்ற வகைக்குள் அடங்கும்.

இவையெல்லாவற்றையும் தடுக்க வேண்டுமாயின் புலிகளின் கடற்படை இருக்கக் கூடாது. அதற்காகவே கடற்புலிகளின் வளங்களையும் பலத்தையும் அழிப்பதற்கு சர்வதேச சக்திகள் துணைபோயின.

அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான, அவுஸ்திரேலியா என்று பல நாடுகளுக்கு இலங்கையும் அதன் கடல் எல்லைகளும் முக்கியமானவை என்பதால் தான், கடற்புலிகளுக்கு சமாதி கட்ட முடிவு செய்தார்கள்.

ஆனால், கடற்புலிகளுக்குச் சமாதி கட்டி 10 ஆண்டுகளுக்குப் பின்னரும், கடற்படை தனது சவால்களில் வெற்றியீட்டவில்லை.

அதனைத் தான், ரீயூனியன் தீவுக்கான பயணங்களும், அவுஸ்திரேலியாவுக்கான பயணங்களும் மாத்திரமின்றி அவ்வப்போது சர்வதேச கடலில் பிடிபடும் போதைப்பொருள் கப்பல்கள், படகுகள், அடிக்கடி சிக்கும் கஞ்சா படகுகள், பொதிகளும் கூட எடுத்துக் காட்டுகின்றன.