வெளிச்சத்திற்கு வந்த முரண்பாடு! விடுதலைப் புலிகளைக் குறி வைத்ததால் வந்த வினை

Report Print Subathra in கட்டுரை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு இரண்டாவது தடவையாக இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்கவை கடந்த வாரம் சாட்சியமளிக்க அழைத்திருந்தது.

இரண்டாவது சாட்சியத்தின் போது இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க அரச புலனாய்வு பிரிவுகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என்று கூறியிருக்கின்றார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விடுக்கப்பட்ட புலனாய்வு எச்சரிக்கை குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும் அந்த எச்சரிக்கை கடிதம் தமக்கு அனுப்பப்படவில்லை என்றும் அவர் சாட்சியம் அளித்திருக்கின்றார்.

ஏப்ரல் 9ஆம் திகதி அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜயவர்த்தனவினால் தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு அந்த எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால் அந்த எச்சரிக்கை கடிதமும் இராணுவத்திற்கோ, இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கோ அனுப்பப்படவில்லை என்றும் அவ்வாறு அனுப்பியிருந்தால் தாக்குதல்களை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் என்றும் மகேஸ் சேனநாயக்க கூறியிருக்கின்றார்.

அவர் சாட்சியமளிப்பதற்கு முதல்நாள் கொழும்பில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதே குற்றச்சாட்டைத் தான் கூறியிருந்தார்.

பாதுகாப்பு அதிகாரிகள் உரிய நேரத்தில் தன்னை எச்சரிக்கை செய்திருந்தால் தாக்குதல்களைத் தடுத்திருப்பேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேவிதமான கருத்தையே இராணுவத் தளபதியும் கூறியிருக்கின்றார். இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவின் கீழ் 5000இற்கும் அதிகமான புலனாய்வாளர்களைக் கொண்ட பலம்மிக்க இராணுவ புலனாய்வுப் பிரிவு இருந்தபோதும் அவர்களால் இந்த தாக்குதல்களை முன் உணர முடியவில்லை என்பதை அவர் ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை.

2017ஆம் ஆண்டு காத்தான்குடி பகுதியில் சஹ்ரான் மற்றும் அவரது குழுவினர் பிரச்சினைகளை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தனர்.

அப்போது கிழக்குப் பிராந்திய இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் லால் பெரேரா தாம் சஹ்ரான் உள்ளிட்டவர்களை அழைத்து எச்சரித்து அனுப்பியதாக சாட்சியம் அளித்திருக்கின்றார்.

ஆக சஹ்ரான் மற்றும் அவரது குழுவினர் தொடர்பான எச்சரிக்கையை அரச புலனாய்வுச் சேவையோ, தேசிய புலனாய்வுச் சேவையோ, தேசிய புலனாய்வு பணியகமோ அல்லது வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புக்களோ தான் தர வேண்டும் என்று இராணுவ புலனாய்வுப் பிரிவு காத்திருக்க வேண்டியதில்லை.

இராணுவ புலனாய்வுப் பிரிவு பலமிக்கதாக இருந்தபோதும் குறிப்பிட்ட ஒரு விடயத்தை நோக்கியே(விடுதலைப் புலிகள்) அதன் செயற்பாடுகள் மைய நிலைப்படுத்தப்பட்டிருந்தன.

அதனால் வேறு பக்கம் அவர்களால் சிந்திக்கவோ அதுபற்றி ஆராயவோ தெரிந்திருக்கவில்லை.

இது இராணுவத்திற்குள் இருந்த முக்கியமான பிரச்சினை. இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இந்த பலவீனத்தை வேறுவிதமாக சிலர் அடையாளப்படுத்த முனைகின்றனர்.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதால்தான் புலனாய்வுப் பரிவு பலவீனப்பட்டுவிட்டதாக காட்டுவதற்கு பல்வேறு தரப்புக்களும் முயற்சிக்கின்றன.

தற்போதைய அரசாங்கத்தை எதிர்க்கின்ற எல்லாத் தரப்புக்களும் இதனை ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்து வருவதை காண முடிகின்றது.

கடந்தவாரம் கூட முன்னாள் அமைச்சரும் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவருமான விஜேதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இதனைக் கூறியிருந்தார்.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 320 பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும் இதனால் புலனாய்வுக் கட்டமைப்புக்கள் பலவீனமடைந்துள்ளன எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

10 ஆயிரத்திற்கும் அதிகமான புலனாய்வுப் பிரிவினர் இலங்கை அரசாங்கத்தின் கீழ் பணியாற்றுகின்ற நிலையில் அவர்களில் 320 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதால் நாட்டின் பாதுகாப்பு பலவீனப்பட்டு போனதாக கூறுவது வேடிக்கை.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு விட்டனர் என்பது தான் உண்மை.

அதைவிட தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த இராணுவ அதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர் புலனாய்வு பிரிவினர் சிலர் கைது செய்யப்பட்டதால் புலனாய்வுப் பிரிவுகள் பலவீனமடைந்து விட்டதாக கூறப்படுவது தவறு எனக் கூறியிருந்தார்.

அவ்வாறு கூறியவர்களில் தற்போதைய பாதுகாப்பு செயலர் ஜெனரல் சாந்த கோட்டேகொடவும் ஒருவராவார்.

ஆனால் கடந்தவாரம் இராணுவத் தளபதி அளித்துள்ள சாட்சியத்தில் கூறியிருக்கின்ற சில விடயங்கள் புலனாய்வுப் பிரிவினர் மீதான விசாரணைகளுக்கும் பாதுகாப்பு பலவீனத்திற்கும் தொடர்புகள் இருப்பதான கருத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

அதாவது இராணுவ புலனாய்வு பிரிவிற்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கும் இடையில் சரியான புரிந்துணர்வு ஒத்துழைப்பு இருக்கவில்லை.

அவநம்பிக்கையான சூழல் இருந்தது என்பதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். இராணுவப் புலனாய்வு பிரிவு தமக்குக் கிடைக்கும் புலனாய்வு தகவல்களை பொலிஸ், விமானப்படை, கடற்படை, புலனாய்வுப் பிரிவுகள், விசாரணைப் பிரிவுகளுடன் பகிர்ந்து கொண்டதாகவும் பல தகவல்களை அரச புலனாய்வு சேவை, தேசிய புலனாய்வு பிரிவு, பொலிஸ்மா அதிபருக்கு வழங்கியதாகவும் இராணுவத் தளபதி கூறியிருக்கின்றார்.

பல்வேறு வழக்குகள் தொடர்பான இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டதை அடுத்து இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கும் இடையில் அவநம்பிக்கை காணப்பட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டிருக்கின்றார்.

2015இற்குப் பின்னர் கிளிநொச்சியில் தற்கொலைக் குண்டு அங்கிகள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஒத்துழைக்கவில்லை என்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னைய தலைமையுடன் அவநம்பிக்கையான சூழல் இருந்தது எனவும் இப்போது புதிய தலைமையுடன் அவ்வாறான நிலை இல்லை எனவும் அவர் கூறியிருக்கின்றார்.

எல்லா வழக்குகளிலும் இராணுவ புலனாய்வு பிரிவு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு ஒத்துழைத்ததாக இராணுவத் தளபதி கூறியிருந்தாலும் நீதிமன்றங்களில் குற்ற விசாரணைப் பிரிவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவும் அளித்திருந்த அறிக்கைகள் அதற்கு நேர்மாறானவை.

இராணுவத் தலைமையகம் இராணுவப் புலனாய்வுப் பிரிவு என்பன பல்வேறு வழக்குகளை விசாரிப்பதற்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்ற விசாரணைப் பிரிவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவும் நீதிபதிகளுக்கு அறிக்கைகளை அளித்துள்ளன.

இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டால் பல வழக்குகளில் இன்னமும் புலன் விசாரணையை சரியாக முன்னெடுக்க முடியாமல் இருப்பதற்கு அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததே காரணம் என விசாரணையாளர்கள் கூறியிருந்தனர்.

ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்களை இராணுவம் நிராகரித்து வந்தாலும் அந்த வழக்குகளால் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கும் இடையில் அவநம்பிக்கை நிலவியது என்ற உண்மையை இப்போது உடைத்திருக்கின்றார் இராணுவத் தளபதி.

இங்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் குற்ற விசாரணைப் பரிவு என்பனவே குற்றச் செயல்கள் குறித்த விசாரணைகளில் பங்கேற்றிருந்தனவேயன்றி ஏனைய அரச புலனாய்வு அமைப்புக்கள் இந்த விசாரணைகளுடன் தொடர்புபட்டிருக்கவில்லை.

இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் குற்ற விசாரணைப் பிரிவிற்கும் இடையில் தான் புரிதல் குறைபாடு இருந்ததே தவிர அரச புலனாய்வு சேவை தேசிய புலனாய்வு பிரிவு என்பனவற்றுடன் எந்த சிக்கலும் இருக்கவில்லை.

அவ்வாறான நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னெச்சரிக்கை விடயத்தில் ஒத்துழைப்புக் குறைபாடுகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறான குறைபாடுகள் இருந்தன என்று நிறுவ முற்படுவதும் தவறு.

அதைவிட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என ஒரு அரச விசாரணைப் பிரிவு புலனாய்வு விசாரணைகளில் ஈடுபடும் போது அதனை இன்னொரு அரச புலனாய்வுப் பிரிவு சகித்துக் கொள்ளாமல் முரண்படுவதும் அதற்கு ஒத்துழைக்க மறுப்பதும் சிக்கலானதே.

தண்டனை அல்லது விசாரணை வளையத்திலிருந்து தமக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இந்த புலனாய்வு அமைப்புக்கள் அல்லது பாதுகாப்பு அமைப்புக்கள் எதிர்ப்பார்க்கின்றன.

இலங்கையில் தண்டனையில் இருந்து தப்பித்தல் என்பது முக்கியமானதொரு பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது. சர்வதேச அளவில் இந்த விவகாரம் பேசப்படுகின்றது.

ஐ.நாவின் அறிக்கைகளில் தண்டனையில் இருந்து படையினர் தப்பித்தல் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டாலும் அந்த மனோநிலையில் இருந்து இலங்கை படையினர் மாறவில்லை.

இராணுவத் தளபதியின் சாட்சியத்தில் தமது புலனாய்வுப் பிரிவுக்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கும் அவநம்பிக்கை நிலவியது என கூறியிருந்ததானது தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு அவர்கள் உதவவில்லை என்ற காழ்ப்புணர்வில் இருந்து எழுந்த சிக்கல்தான்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முற்கணிப்புக்களை செய்யத்தவறிய புலனாய்வு அமைப்புக்கள் இப்போது பல்வேறு காரணங்களைக் கூறி திசை திருப்ப முற்படுகின்றன. இராணுவத் தளபதியின் சாட்சியமும் அதனைத் தான் நிரூபித்திருக்கின்றது.

Latest Offers