பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு காத்திருந்த செக்

Report Print Subathra in கட்டுரை

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான போரில், விமானப்படை மற்றும் கடற்படைக்குத் தலைமை தாங்கிய எயர் மார்ஷல் றொஷான் குணதிலக்கவுக்கும், அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கும், அதியுயர் பதவிகளை வழங்கியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

திடீரென அவர் இந்த முடிவை எடுத்தியிருப்பது, பாதுகாப்பு வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, அட்மிரல் ஒவ் தி பிளிட் ஆகவும், முன்னாள் விமானப் படைத் தளபதி எயர் மார்ஷல் றொஷான் குணதிலக, மார்ஷல் ஒவ் தி எயர்போர்ஸ் ஆகவும் கௌரவ பதவி உயர்வு பெற்றிருக்கின்றனர்.

இந்த இரண்டு பதவிகளும், இலங்கையில் இதற்கு முன்னர் நடைமுறையில் இருக்கவில்லை. திடீரென இந்தப் பதிவிகளை உருவாக்கி அவர்களை கௌரவிக்கும் முடிவை ஜனாதிபதி எடுத்திருப்பதற்கு சாதாரணமான காரணங்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

இந்த இரண்டு பதவிகளும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் உள்ள பீல்ட் மார்ஷல் பதவிக்கு நிகரானவை.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்காக போரின் போது ஆற்றிய பணிகளுக்காகவே இவர்கள் இந்த உயரிய பதவிகளால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான நாடுகளில் இந்தப் பதவிகள் வழக்கத்தில் இல்லாதவை. மிகச்சிறந்த போர்த் தளபதிகளுக்கே, இவ்வாறான பதவிகள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன.

அல்லது, மிகச் சிறந்த சாதனை படைத்தவர்களை, அவர்களின் காலத்துக்குப் பின்னர், கௌரவிக்கும் வகையிலேயே இந்த உயர்பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பீலட் மார்ஷல் பதவி கொடுக்கப்பட்ட போது, பாதுகாப்புத் துறையினர் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன.

விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் சரத் பொன்சேகாவின் பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

போரின் போது, அவர் அடுத்து என்ன நகர்வு என்பதை யாருக்கும் தெரிவிக்கவில்லை. கோத்தபாய ராஜபக்சவும் கூட அதனை அறிந்திருக்கவில்லை என்பதை சரத் பொன்சேகாவே கூறியிருந்தார்.

பெரும்பலம் கொண்ட ஒரு படையை வைத்திருந்த புலிகளை வீழ்த்திய சரத் பொன்சேகாவுக்கு, பீல்ட் மார்ஷல் பதவியைக் கொடுக்க முயன்ற போதே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அதற்கு அவர் தகுதியானவரா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன.

பீல்ட் மார்ஷல் பதவியும், பாதுகாப்ப அமைச்சர் பதவியும் தனக்குத் தரப்பட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே அவர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தார், அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார் என்றெல்லாம் அப்போது கூறப்பட்டது.

ஆனால் அவருக்கு, பீல்ட் மார்ஷல் பதவி மாத்திரம் கொடுக்கப்பட்டதேயன்றி, பாதுகாப்பு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை.

இந்தியாவில் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டது. பாகிஸ்தானுடனான போரை நடத்திய சாம்மானக்சா என்ற தளபதிக்கு மாத்திரமே. கடற்படையை, விமானப்படையை சேர்ந்த எவருக்கும் அந்த உயர்பதவி அளிக்கப்படவில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த உயர் பதவிகளை தளபதிகளுக்கு வழங்குவதை தவிர்த்து வருகின்றன. ரஷ்யா அண்மைக்காலங்களில் இந்த பதவிகளை வழங்கி வருகிறது.

முடியாட்சி அரசுகள் சில தமது மன்னர்களை கௌரவப்படுத்தும் வகையில் இந்த உயர்பதவிகளை வழங்கி வருகின்றன.

விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர் என்ற வகையில் பீல்ட் மார்ஷல் பதவி சரத் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்டு நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர், முன்னாள் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுக்கும், அதேவிதமான பதவிகள் அளிக்கப்பட்டிருந்தன.

இப்போது இவை கௌரவ பதவிகளாகவே இருந்தாலும், இது இவர்களின் சேவையை கௌரவிப்பதற்காக அளிக்கப்பட்ட பதவி உயர்வா என்ற கேள்வி உள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்ற பின்னர் அடமிரல் கரன்னகொடவுக்கும், எயர் மார்ஷல் றொஷான் குணதிலக்கவுக்கும், சரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவிக்கு இணையான பதவிகள் அளிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

எனினும், அதற்குப் பின்னர் அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் முடிவுக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்ற இந்தச் சூழலில் இந்தப் பதவி உயர்வுகள் அளிக்கப்பட்டிருப்பது கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.

அதுவும், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, 11 பேர் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை பாதுகாப்பு அமைப்புகளில் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களுக்கு பதவி உயர்வுகள், கௌரவங்கள் அளிக்கப்படுவது ஒன்றும் புதிய விடயம் அல்ல.

போர்க்கால மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட தற்போதைய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட பல படை அதிகாரிகள் உயர்பதவிகளை பெற்று வந்திருக்கிறார்கள்.

நாவற்குழியில் 1996இல் 26இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவ லன்ன இன்னமும் இராணுவத்தில் உயர் பதவிகளை பெற்று வருகிறார்.

வெலிவேரியவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன, நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை எதிர் கொண்டிருந்தாலும், மேஜர் ஜெனரலாக பதவி உயர்வையும் வேறு பல சலுகைகளையும் பெற்றிருக்கிறார்.

இது போன்ற ஏராளமான உதாரணங்களை காட்டிக் கொண்டிருக்க முடியும் என்பதால், அட்மிரல் கரன்னகொடவுக்கு எதிராக வழக்கு இருந்த போதும், அவருக்கு இந்த உயர் கௌரவம் அளிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமானதல்ல.

அவர் 2005 தொடக்கம் 2009 வரை கடற்படைத் தளபதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளின் 12 ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் என்ற வகையில் அவருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதுபோலவே விமனாப்படையில் 2006 தொடக்கம் 2011 வரை தளபதியாக இருந்த எயர்மார்ஷல் றொஷான் குணதிலகவுக்கும் அதிஉயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லாத போதும், அவரது பதவிக்காலத்தில் பொதுமக்கள் மீது விமானக் குண்டுவீச்சுக்கள் நிகழ்த்தப்பட்டது பற்றியும், தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியது தொடர்பாகவும் சர்வதேச அளவில் குற்றச்சாட்டுக்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

இவர்கள் இருவருக்கும் தற்போது ஏன் இந்தப் பதவி உயர்வுகளை ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார்?

சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட போதே, இவர்களுக்கும் வழங்கியிருக்கலாம். அப்போது அதனை தவிர்த்துக் கொண்டு, தற்போத மகிந்த ராஜபக்சவுடன் நெருங்கிச் செயற்படும் இவர்களுக்கு இந்த சூழலில் பதவி உயர்வு அளித்திருப்பது ஆச்சரியமானது.

சரத் பொன்சேகாவுக்கு பதவி உயர்வு அளித்த போதே, இவர்களுக்கும் வழங்கியிருக்க வேண்டும். ஒரவஞ்சனையுடன் செயற்பட்டு விட்டதான உணர்வின் அடிப்படையில் ஜனாதிபதி இந்த முடிவை எடுத்தார் என்று கருத முடியவில்லை.

அவ்வாறாயின் அதனை அவர் தனது பதவிக்காலத்தின் கடைசிக் கட்டத்தில் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டியதில்லை.

சரத் பொன்சேகாவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான மோதலின் உச்சக்கட்டத்தில் தான் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது என்பத இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான இரண்டு விடயங்களில் ஒன்று.

2018 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப்பின்னர் ஜனாதிபதியை மிக மோசமாக விமர்சித்தவர்களில் சரத் பொன்சேகா முக்கியமானவர். பைத்தியம் என்ற அளவுக்குப் போய் ஜனாதிபதியை விமர்சித்தார் அவர்.

இதனால் இருவருக்கும் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டன. அதன் விளைவாகவே, மீண்டும் ஐ.தே.க அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவியை ஜனாதிபதியை கொடுக்கவில்லை. பலமுறை முயன்றும், சரத் பொன்சேகாவுக்கு அந்த பதவி கிடைக்கவில்லை.

21/4 தாக்குதல்களுக்குப் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சரத் பொன்சேகா மோசமாக விமர்சித்து வந்தார்.

இதற்குப் பின்னர், தமக்கு பிரதி பாதுகாப்பு அமைச்சர் பதவி தரவும், அமைச்சர் பதவி தரவும் ஜனாதிபதி முன்வந்ததாகவும் ஆனால் அதனை தாம் நிராகரித்து விட்டதாகவும், சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.

தனது வாயை மூடுவதற்கே இந்த பதவிகளை தர முன்வந்ததாகவும், நாடு தற்போதுள்ள நிலையில் அவ்வாறு வாயை மூடிக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் தெரிவுக்குழு விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.

சரத் பொன்சேகா - மைத்திரிபால சிறிசேன முரண்பாடுகள் இன்னமும் உச்சநிலையில் இருக்கின்ற சூழலில் தான், உயர் இராணுவ கௌரவத்தைப் பெறும் சரத் பொன்சேகாவின் தரத்தை தாழ்த்துவதற்கு அவருக்கு சமமான இன்னும் இரண்டு பேரை உருவாக்குவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.

இதன் மூலம் சரத் பொன்சேகாவுக்கு இருந்த முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்து, கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜன முன்னணி களமிறக்கினால், சரத் பொன்சேகாவை போட்டியில் நிறுத்த வேண்டும் என்ற கருத்து ஐ.தே.க.வில் வலுப்பெற்றிருக்கின்ற சூழலிலும் தான் இந்த பதவி உயர்வுகள் அளிக்கப்பட்டன.

பீல்ட் மாரஷல் என்ற பதவியை வைத்து, சரத் பொன்சேகா அரசியல் ஆதாயம் பெற்று விடுவதை தடுப்பது ஜனாதிபதியின் நோக்கமாக இருக்கலாம்.

அதுவும் மகிந்த ராஜபக்சவைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இருவருக்கே இந்த கௌரவம் அளிக்கப்பட்டிருப்பது தான் ஆச்சரியம்.

இது இந்த விவகாரத்தில் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதை புலப்படுத்துகிறது.

இவ்வாறான நிலையில், அட்மிரல் வசந்த கரன்னகொடவும், எயர் மார்ஷல் றொஷான் குணதிலகவும், தமது பணிகளுக்கான கௌரவத்துக்காக இந்த பதவி உயர்வு பெறுகிறார்களா?

அல்லது, பீல்ட் மார்ஷல் சரத்த பொன்சேகாவிகன் பதவித் தரத்தை தாழ்த்தும் நோக்கில் பதவி உயர்த்தப்படுகிறார்களா?

Latest Offers

loading...