பாதுகாப்பை மையப்படுத்துதல்

Report Print Subathra in கட்டுரை
184Shares

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தல், சமூக, அரசியல், பொருளாதார விடயங்களில் இருந்து விலகி, பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களை முன்னிலைப்படுத்தியதாக அமையும் சாத்தியங்கள் தென்படுகின்றன.

விடுதலைப் புலிகளுடனான 30 ஆண்டு போர்க்காலத்தில் கூட, ஜனாதிபதி தேர்தல்களிலும் வேட்பாளர் தெரிவுகளிலும், பாதுகாப்பு என்ற காரணி முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை.

ஜே.ஆர்.ஜயவர்த்தன தொடங்கி, மைத்திரிபால சிறிசேன வரையிலான, தெரிவு செய்யப்பட்ட எல்லா ஜனாதிபதிகளும், அவர்களுடன் போட்டியிட்ட சரத் பொன்சேகா தவிர்ந்த மற்றெல்லோரும், அரசியல் பின்னணியைக் கொண்டவர்களாகத் தான் இருந்தனர்.

சரத் பொன்சேகா கூட போர் முடிவுக்கு வந்த பின்னர் தான் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

அப்போது ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள், அரசியல் தகைமை, பின்புலம், ஆதரவுத் தளம் என்பனவற்றின் அடிப்படையில் தான் தெரிவு செய்யப்பட்டனர்.

ஜே.ஆரின் காலத்தில் போரை நெறிப்படுத்திய பதில் பாதுகாப்பு மற்றும் தேசிய பந்தோபஸ்து அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியாலேயோ, சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜெனரல் அனுருத்த ரத்வத் தயாவேயோ ஜனாதிபதித் தேர்தல் களத்துக்கு வர முடியவில்லை.

போரில் தமது ஆளுமையை வெளிப்படுத்திய படைத்தளபதிகள் பலர் இருந்தும், அவர்கள் ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இறங்கவில்லை. ஆனால், போர் முடிந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நிலைமை முற்றாக மாறியிருக்கிறது.

பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்பதே இந்த ஜனாதிபதித் தேர்தலில் முதன்மையான விடயமாக மாறியிருக்கிறது. அதனை உறுதிப்படுத்தக் கூடியவரே, ஜனாதிபதியாக வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

கடுமையாகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் கூட, பாதுகாப்பை சரியாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எந்தவொரு ஜனாதிபதி மீதும் விழுந்ததில்லை. ஆயிரக்கணக்கான படையினர் கொல்லப்பட்ட பல மோசமான தோல்விகளைச் சந்தித்த போதும், அவ்வாறான பழியை ஜனாதிபதி சுமக்க நேரிட்டதில்லை.

ஆனால், 21/4 தாக்குதல்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது, அந்தக் குற்றச்சாட்டை சுமக்கும் நிலைக்கு தள்ளியிருக்கின்றன. அது தான், இந்த ஜனாதிபதித் தேர்தலில் பாதுகாப்பு என்ற விவகாரம் முன்னிலைப்படுத்தப்படுவதற்கு முதன்மையான காரணமாக இருக்கிறது.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டதிலும், இந்தக் காரணியே மிகவலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை மறுக்க முடியாது.

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாநாட்டில் உரையாற்றிய கோத்தபாய ராஜபக்ச, தான் இராணுவத்தில் இருந்த போது, பாதுகாப்புச் செயலாளராக இருந்து வெளிப்படுத்திய ஆளுமைகளையே முன்னிலைப்படுத்தியிருந்தார்.

அதுபோல, பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தார். கொடுக்கப்பட்ட வேலைக்கும் அதிகமாகவே பணியாற்றும் திறமையான அதிகாரி என, ஜெனரல் சிறில் ரணதுங்க, தனக்கு வழங்கிய பாராட்டையும், அவர் நினைவுபடுத்த தவறவில்லை.

ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட பின்னர், பாதுகாப்பு நிலவரத்தை கையாளுவதற்கான திறனும் அனுபவமும் உங்களுக்கு மாத்திரமே உள்ளது என்று மல்வத்த பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர், அவருக்கு உசுப்பேற்றி விட்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சஜித் பிரேமதாசவும் கூட, பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன், தீவிரவாதத்துக்கோ, அடிப்படைவாதத்துக்கோ இடமளிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், பொதுஜன ஐக்கிய முன்னணி தமது வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவைத் தெரிவு செய்த விடயத்தில் சரியாக செயற்பட்டிருக்கிறது என்பதே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கணிப்பாக இருக்கிறது.

அவர் ஐ.தே.கவில் இருந்தாலும் கோத்தபாய ராஜபக்சவை முன்னிறுத்த பொதுஜன ஐக்கிய முன்னணி எடுத்த முடிவை வரவேற்றிருக்கிறார்.

ஐ.தே.க தலைவர்கள் பலரும்,கோத்தா தமக்கு சரியான போட்டியாளர் அல்ல என்றும், அவர் இலகுவாகத் தோற்கடிக்கப்படுவார் என்றும் கூறுகின்ற போதும், கோத்தாவை பலவீனமான தெரிவு என்று ஜே.வி.பியும் கூறியுள்ள போதிலும், சரத் பொன்சேகாவின் பார்வை வேறுபட்டதாக இருக்கிறது.

நாட்டின் தேவையை, நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை சரியாக கணித்து எடுக்கப்பட்ட முடிவு தான், இது என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த விடயத்தை ஐ.தே.கவும் சரியாக கணித்து தமது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே சரத் பொன்சேகாவின் நிலைப்பாடாக இருக்கிறது.

சரத் பொன்சேகாவின் பார்வையில், இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதம் முற்றாக அழிக்கப்படவோ, ஒடுக்கப்படவோ இல்லை. அது வெறுமனே கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது அவ்வளவு தான்.

தீவிரவாதத்தை தோற்கடிக்க சரியான வியூகம் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

எனவே, வரும் ஜனாதிபதித் தேர்தலில் இந்த பாதுகாப்புச் சூழலை எதிர்கொள்ளக் கூடிய ஒருவரே, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது சரத் பொன்சேகாவின் நிலைப்பாடாக இருக்கிறது.

கோத்தபாய ராஜபக்சவும், சரத் பொன்சேகாவும் இராணுவப் பின்னணியில் இருந்த வந்தவர்கள் என்ற வகையில், இந்த விடயத்தில் ஒரே விதமான சிந்தனையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்குள் பல்வேறு முரண்பாடுகளும், மோதல்களும் இருந்தாலும் இந்த விடயத்தில் ஒத்த கருத்து இருக்கிறது.

கோத்தபாய ராஜபக்ச மரபுசாரா அரசியல்வாதி ஒருவரே ஜனாதிபதி ஆக வேண்டும் என எந்தளவுக்கு ஒற்றைக்காலில் நின்றாரோ அது போலவே, இராணுவப் பின்னணி கொண்ட ஒருவரே நாட்டை ஆள வேண்டும் என்பதில் சரத் பொன்சேகாவும் இருக்கிறார்.

அவர் தன்னையும் ஒரு வேட்பாளராக கணிக்க வேண்டும், கருத்தில் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போட்டியிட்டு 18 இலட்சம் வாக்குகளால் தோல்வியைத் தழுவிய சரத் பொன்சேகா, அந்த வாக்கு வித்தியாசத்தை மாற்றியமைத்து, வெற்றியைப் பெறுவதற்காக யுக்திகள் ஏதுமில்லாமலே கோத்தாவுக்கு எதிராகப் போட்டியிடுவது பற்றிய மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார். கோத்தா நிறுத்தப்பட்டால் அவருக்கு எதிராக சரத் பொன்சேகாவை நிறுத்த வேண்டும் என்ற கருத்து, சில மாதங்களாகவே ஐ.தே.க.வுக்குள் இருந்து வந்தது.

ஆனால் இப்போது, சஜித் பிரேமதாசவை, பலவீனப்படுத்துவதற்காக, சரத் பொன்சேகா பாதுகாப்பு என்ற விடயத்தை முன்னிலைப்படுத்த ஆரம்பித்திருப்பதாகவே தோன்றுகிறது.

பாதுகாப்பு அனுபவங்கள் உள்ளவர் தான் ஜனாதிபதியாக வேண்டும் என்றால், புலிகளுடன் தீவிர போர் நடந்த காலங்களில் எந்த இராணுவப் பின்னணியும் இல்லாத பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச போன்றவர்கள் ஜனாதிபதி ஆகியிருக்க முடியாது.

இவர்கள், போரை திறமையின்றி வழிநடத்தினார்கள் என்றும் கூற முடியாது.

சந்திரிக்கா குமாரதுங்க தான், போரின் வெற்றிக்கு திறவுகோலை எடுத்துக் கொடுத்தவர், மகிந்த ராஜபக்ச தான் போரை முடித்து வைத்தவர். இவர்கள் பாதுகாப்பு அனுபவமற்றவர்கள்.

ஆனாலும், இப்போதைய சூழ்நிலையில், இரண்டு பிரதான கட்சிகளுமே, பாதுகாப்பு என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தி, அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்ய முனைகின்றன.

அதிலும், சரத் பொன்சேகா, கோத்தபாய போன்றவர்களின் மனோநிலை இன்னும் வேறுபட்டதாக உள்ளது. இவர்களை ஆதரிக்கின்ற முன்னாள் படை அதிகாரிகளும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை வலுப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.

அண்மையில் 21/4 தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன சாட்சியமளித்த போது, அவரது பாதுகாப்பு அறிவை சோதனைக்குட்படுத்தும் வகையில் கேள்விகளை எழுப்பியிருந்தார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட போது, எத்தகைய பாதுகாப்பு அனுபவத்தைக் கொண்டிருந்தீர்கள், என்று ருவன் விஜேவர்த்தனவிடம் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர் எந்த அனுபவமும் இருக்கவில்லை என்றும் போகப் போக பல விடயங்களைத் தெரிந்து கொண்டதாகவும் கூறியிருந்தார்.

அதைவிட தன்னிடம் சட்டம் ஒழுங்கு அமைச்சை தந்திருந்தால் 21/4 தாக்குதல்களை நடக்காமல் தடுத்திருப்பேன் என்றும், இந்த தாக்குதல்களுக்குப் பிறகு தனக்கு பிரதி பாதுகாப்பு அமைச்சர் பதவியை தருவதாக ஜனாதிபதி கூறிய போதும், தான் ஏற்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

அதாவது, பாதுகாப்பு விடயங்களைக் கையாளுவதற்கு தான் சிறந்த தெரிவாக இருக்கிறேன் என்பதை சரத் பொன்சேகா பலமுறை வெட்கத்தை விட்டுக் கூறியிருந்தார்.

குண்டுவெடிப்புக்குப் பின்னர், பிரதமரோ, ஜனாதிபதியோ தன்னிடம் ஆலோசனை கேட்கவில்லை என்றும் அவர் ஊடகங்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

இவையெல்லாம், மீண்டும் பாதுகாப்புச் சார்ந்த விடயங்களைக் கையாள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருப்பதை வெளிப்படுத்தியது.

அதுமாத்திரமன்றி, தன்னிடம் சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி கையளிக்காமல் விட்டதற்கு அவர் கூறிய ஒரு காரணமும் வியப்பானது.

அவ்வாறு நியமித்தால் முதலில் ஜனாதிபதியையும், பிரதமரையும் கைது செய்வேன் என்று அவர்களுக்குப் பயம் என சரத் பொன்சேகா கூறியது விளையாட்டான விடயம் அல்ல.

சர்த பொன்சேகா இப்போது, ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் களமிறங்கும் ஆர்வத்தில் இருக்கிறார். அவரும், கோத்தபாய ராஜபக்சவும் நாட்டு மக்கள் அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகளையும், பாரம்பரியங்களையும் விட்டு விட்டு பாதுகாப்பு நிலையை மட்டுமே கவனத்தில் கொள்வார்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் பாதுகாப்புச் சார்ந்த விடயம் முக்கியமான ஒன்றாக இருந்தாலும், அதனை மட்டுமே வாக்காளர்கள் மனதில் கொண்டு வாக்களிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.