ஆட்சியைக் காப்பாற்றினார்கள் ஆனால் சொந்தமக்களை? பொத்துவில் கனகர் கிராமக்களின் கருத்துக்கள்!

Report Print V.T.Sahadevarajah in கட்டுரை

எம்முடன் கடந்த ஒரு வருடமாக பேராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களுள் ஜந்து பேர் தமக்கு காணி கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் மரணத்தைத் தழுவியுள்ளனர் என கனகர் கிராம மீள்குடியேற்ற சங்கத்தலைவி புஞ்சிமாத்தயா றங்கத்தனா தெரிவித்துள்ளார்.

அம்பாறை - அக்கரைப்பற்று, பொத்துவில் கனகர் கிராம தமிழ் மக்களின் காணி மீட்புப் போராட்டம் கடந்த வருடம் 2018.08.14ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

அந்தவகையில் ஆகஸ்ட் 15ஆம் திகதியுடன் 365ஆவது நாளாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்திருந்தது.

அந்தவகையில் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிராம மீள்குடியேற்ற சங்கத்தலைவி மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர்,

அவர்களது ஆத்மா சாந்திக்காக நாம் ஒருவருட பூர்த்தி தினத்தை துக்கதினமாக அனுஷ்டிக்கிறோம்.

இற்றைக்கு 58 வருடங்களுக்கு முன்பு அங்கு வாழ்ந்து வந்த மக்கள், தமது காணிகளைக் கோரி போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.

1960களில் சுமார் 278 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. 1981களில் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் காலத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.சி.கனகரெத்தினத்தின் முயற்சியால் வீடுகட்ட அரை ஏக்கர் நிலமும், பயிர்செய்ய 2 ஏக்கர் நிலமும் தரப்பட்டு 30 வீடுகளைக்கட்டி கொடுக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியாக சேனைப் பயிர்ச்செய்கையுடன் வாழ்ந்து வந்தனர்.

1990களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்களை கடந்த 28 வருடங்களாக அங்கு வனபரிபாலன இலாகா குடியேற அனுமதிக்கவில்லையென்பது பிரதான குற்றச்சாட்டாகும்.

எது எப்படியிருந்த போதிலும் அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடுமண்டிக் காணப்படுகின்றது.

அந்தக்காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30 வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும் தகர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவே உள்ளன.

இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமூக சேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளையும் அளித்துள்ளார்கள்.

வனத்துறை உயரதிகாரியும், பிரதேசசெயலாளரும் இக்காணியை மீள அளிக்க உறுதி கூறியுள்ள நிலையிலும் போராட்டம் தொடர்கிறது.

அரசியல்வாதிகளின் உறுதிமொழிகள் செல்லாக் காசாகவே இருப்பதாகத் தெரிகிறது. பிரதேச செயலாளர் அரசாங்க அதிபர் ஆகியோர் எமது கோரிக்கைக்கு செவிசாய்த்து வருகின்ற போதிலும் வனபரிபாலன திணைக்களமே இடையூறு செய்கிறது.

அத்துடன் அரசாங்க அதிபர் மட்டத்தில் காணிகளுக்கான ஆவணங்கள் பரிசிலிக்கப்பட்டுள்ளதாகவும் பொத்துவில் பிரதேச செயலகத்தால் 172 பேரின் பெயர் பட்டியல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

தாம் இங்கு வாழ்ந்தமைக்கான சகல ஆவணங்களும் இருக்கின்ற போதிலும் பல்வேறுப்பட்ட சாட்டுப் போக்குகளை அரசாங்கம் கூறிக்கொண்டு தம்மை தொடர்ந்தும் அகதிகளாக வீதி ஓரத்தில் வைத்து வேடிக்கைப் பார்க்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தம்பிப்பிப்பிள்ளை பரமேஸ்வரி கருத்து கூறுகையில்,

எமது அரசியல்வாதிகள் அதைப் பெற்றுத்தருவோம். இதைப் பெற்றுத்தருவோம் என்று வீரவசனம் பேசுவார்கள். இறுதியில் அபிவிருத்தியுமில்லை. உரிமையுமில்லை என்ற கையறுநிலைக்குச் சென்றுள்ளமை வேதனைக்குரியது. எமது பிரச்சினையொன்றே போதும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் சிந்திப்பதற்கு இலங்கையின் இன்றைய நிலைமை அதற்கு நல்ல சாட்சி.

நாம் பூர்வீகமாக வாழ்ந்துவந்த காணியையே கோருகின்றோம். மரணித்தாலும் இந்த இடத்திலேயே மரணிப்போம். தவிர போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம்.

நுளம்புக் கடிக்கு மத்தியிலும், மலைப் பாம்புகளுக்கு மத்தியிலும் உறங்கவேண்டிய துர்ப்பாக்கியநிலை எமக்கு. எனினும், காணி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வைராக்கியத்துடன் இருக்கிறோம்.

நாம் இங்கு பூர்வீகமாக வாழ்ந்து வந்ததற்கு இங்கிருப்பவர்கள் மட்டும் சாட்சியல்ல. இந்த உடைந்து தகர்ந்து கிடக்கும் வீடு வாசல்கள் மட்டும் சாட்சியுமல்ல. மாறாக இந்த மாவட்டத்தில் வாழும் சகோதர சிங்கள முஸ்லிம் மக்களும் சாட்சிகளாக இருக்கிறார்கள்.

யார் என்ன சொன்னாலும் எமக்கு நிரந்தரமான எழுத்துமூல தீர்வு கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டு அகலமாட்டோம் எனக் கூறியுள்ளார்.

இது குறித்து 72 வயதுடைய கந்தையா சதாசிவம் கூறுகையில்,

எமது போராட்டம் 365 நாட்களைத் தாண்டுகின்ற போதிலும் நாம் சற்றும் மனம் தளரவில்லை. இங்கு 278 குடும்பங்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்தோம்.

இந்த 60ஆம் கட்டையில் 1238 ஏக்கர் காணியுண்டு. நாம் இங்கு கேட்பது நாம் வாழ்ந்த காணியையே தவிர வேறொருவரினதுமல்ல.

இங்குள்ள ஒவ்வொருவரும் இரண்டரை ஏக்கர் நிலத்துடன் வாழ்ந்து வந்தவர்கள். 2 ஏக்கர் சேனைப் பயிர்ச்செய்கைக்கும் அரை ஏக்கர் வீட்டிற்குமாக தந்துதான் எம்மை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.சி.கனகரெத்தினம் எம்மை 30 நிரந்தர வீடுகளில் குடியேற்றினார்.

அண்மையில் திருக்கோவிலுக்கு எமது எம்.ஏ.சுமந்திரன், கவீந்திரன் கோடீஸ்வரன் போன்ற தமிழ்த் தலைவர்கள் வந்துபோனதாக கேள்விப்பட்டோம். ஒரு பத்து நிமிடத்தில் இங்குவந்து எம்மைப் பார்த்திருக்கலாம்.

ஆனால், அவர்கள் இந்தப்பக்கமே வராமல் சென்றிருப்பது வேதனையாகவுள்ளது.

ஜனநாயகத்தைக் காப்போற்றுவோம். ஆட்சியைக் காப்பாற்றினோம் என்பார்கள். ஆனால், சொந்த தமிழ் மக்கள் வாழ்ந்த காணியைக் காப்பாற்ற பின்னடிப்பதேனோ? என்று தெரியவில்லை.

நாம் வாக்களித்தவர்கள் கூட ஏன் இவ்வாறு நடக்கிறார்களோ தெரியாது. கண்ணுக்கு முன் நாம் வாழ்ந்த பூமியில் இன்று நாம் வாழ்வதற்கு இப்படி போராடவேண்டிய துர்ப்பாக்கியநிலை என அவர் தெரிவித்துள்ளார்.

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் கருத்து தெரிவிக்கையில்,

கடந்தகால அரசுகள் தமிழ் மக்களுக்கு எந்த உரிமையையும் வழங்கவில்லை. இன்றைய நல்லாட்சியாவது எதையாவது செய்யும் என எதிர்பார்த்தோம்.

ஓடாத மானும் போராடாத இனமும் வாழமுடியாது என்பது கருத்து. எனினும், தாயகத்தில் தொடர்ச்சியாக போராடும் இனமாக தமிழினம் மாறியிருப்பதும் அரசு அதனைக் கண்டுகொள்ளாமலிருப்பதும் அதிர்ச்சியாகவுள்ளது.

நீங்கள் யானையோடும், நுளம்போடும், மலைப்பாம்போடும் போராடி இங்கு மழையிலும், வெயிலிலும் கிடந்து துன்பப்படுகிறீர்கள்.

365 நாட்களைக் கடந்தும் தங்களின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு இன்னும் வழங்கப்படவில்லை எனும் போது மிகவும் வேதனையாகவிருக்கிறது.

இந்த நாட்டில் தமிழருக்கு மட்டும் தீர்வு இழுத்தடிக்கப்பட்டு வருவது ஏன்? நான் இங்கு 39ஆவது தடவையாக வந்து உங்களைச் சந்திக்கிறேன். இந்த நாட்டில் ஏனைய இன மக்கள் எதையாவது கோரிப்போராடினால் ஒரிரு நாட்களுள் அரசாங்கம் தீர்வை வழங்கி விடும்.

ஆனால், தமிழ்மக்கள் மட்டும் வருடக்கணக்கில் உய்மையாகப் போராடினாலும் தீர்வு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இது வேதனைக்குரியது.

இதற்கு என்ன காரணம்? அரசாங்கம் திட்டமிட்டு புறக்கணிக்கிறதா? அல்லது தமிழ்த் தலைமைகளின் பொடுபோக்குத்தனமா? என்பது புரியாமலுள்ளது.

அம்பாறை மாவட்டத் தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இவ்வாறு தீர்வு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம், வட்டமடுப் பிரச்சினை, மல்லிகைத்தீவு நச்சுநீர் விவகாரம், தொட்டாச் சுருங்கி வட்டைப் பிரச்சினை, அதேபோல் கனகர்கிராம காணிமீட்புப் போராட்டம் போன்ற எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.

இன்று நாட்டில் ஜனாதிபதி தேர்தல் பற்றி அனல் பறக்கும் கதைகள் தினம் தினம் ஊடகங்களில் வலம் வருகின்றன. மஹிந்தவா? ரணிலா? யாருக்கு வாக்களிப்பது?

ஜ.நா.தீர்வை அமுல்படுத்துபவருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இங்கு தமிழ்ப்பெண்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு போராடிவருவது அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. தாம் பூர்வீகமாக வாழ்ந்த நிலத்தையே கேட்கிறார்கள். தவிர மாற்றான் காணியையோ, அரச காணியையோ கேட்கவில்லை.

இங்கு நீங்கள் சொல்கின்ற கருத்துக்களைக் கேட்கின்ற போது தமிழ்த் தலைமைகள் கூட உங்களை ஏறெடுத்தும் பார்க்காத நிலை இருப்பதாகத் தெரிகிறது.

நேற்று இப்பிரதேசத்திற்கு வந்த தமிழ்த்தலைமைகள் இங்குவரவில்லை என்று ஆதங்கப்பட்டீர்கள். காணியே இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் இங்கு 150 வீடுகளை கட்டப்போகிறார்களாம். என்னசெய்வது தமிழரின் தலைவிதி இவ்வாறான கதைகளெல்லாம் கேட்பதற்கு.

நான் மக்களுக்குச் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன். ஆனால், இப்போது சிந்திக்கிறேன். என்னால் மக்களை ஏமாற்ற முடியாது. இந்த நல்லாட்சியைக் கொண்டுவர தமிழ் மக்களின் பங்களிப்பை அனைவரும் அறிவார்கள்.

மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என தமிழ் மக்கள் நினைத்தார்கள். அதன் பலாபலனே அது. யாரும் சொல்லி வாக்களிக்கும் நிலையில் தமிழ் மக்கள் இன்றில்லை. அதேபோலத் தான் இன்றைய ஜனாதிபதித் தேர்தலிலும் யாரைக்கொண்டு வரவேண்டும் என தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்.

அதன்படி அது நடக்கும். ஒன்றில் பேய் அல்லது பிசாசு. அவ்வளவு தான். நல்லாட்சி ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு செய்த கைங்கரியத்தை நாமறிவோம். எனவே சிந்தித்துச் செயற்படுவோம். இனியும் யாரும் ஏமாற்றாமல் சுயபுத்தியுடன் செயற்படுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாரிக்கு முன்பாக இந்த ஏழைத் தமிழ்மக்களின் வாழ்வில் ஒளியேற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers