தமிழ் தேசியத்தின் குரலை ஓங்கச் செய்ய எழுக தமிழ் பேரணி பலமுற வேண்டும்!

Report Print M.Thirunavukkarasu in கட்டுரை

தமிழ் தேசியத்தின் குரலை உள்நாட்டிலும், உலக அரங்கிலும் உரத்து ஓங்கச் செய்யவும் அவர்களின் இருப்பையும், உரிமைகளையும் உறுதிப்படுத்தவும் "எழுக தமிழ்" பேரணி வெற்றிகரமானதாக அமைய வேண்டியது அவசியம்.

இப்பேரணி பிசுபிசுத்துப் போனால் அது தமிழின எதிரிகளுக்கு பெரும் வாய்ப்பாகவும், ஈழத் தமிழினம் இருந்த அடையாளமே இல்லாது அழிந்து போவதற்கான ஒரு முன்னறிவிப்பாகவும் அமைந்துவிடும்.

ஆதலால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அரசியல் போட்டிகள், கட்சி வேகங்கள் என்பனவற்றை எல்லாம் கடந்து இந்த ''எழுக தமிழ்'' பேரணியை வெற்றிகரமானதாக ஆக்கவேண்டியது ஒவ்வொரு தமிழனினது கடமையும் பொறுப்புமாகும்.

"நான் பெரிது நீ பெரிது" என்று போட்டி போட்டுக் கொண்டிருக்காமல் "எனக்கா உனக்கா முதல் பங்கு" என்று சண்டையிட்டுக் கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் தேசிய இருப்பை நிலைநாட்ட வல்ல அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஆதரிக்கவும் பலப்படுத்தவும் வேண்டும்.

"மன்னாதி மன்னர் எங்கே
மாமணித் துரோனர் எங்கே
என்னுடன் தம்பி எங்கே
இலக்கணகுமாரன் எங்கே
கர்ணனும் தேரும் எங்கே
கரைகொளாச் சேனை எங்கே''
என்று பதினெட்டாம் நாள் போர் முடிவில் துரியோதனன் கதறிய நிலையில் ஈழத் தமிழர்கள் இன்று நிற்கின்றோம்.

2009ஆம் ஆண்டு உலகில் காணப்பட்ட சுமாராக 700 கோடி மக்களின் கண்களின் முன் கேட்பாரின்றி அநாதரவான நிலையில் சுமாராக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகினர்.

1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் மூத்த பெரும் தமிழ் தலைவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று தமிழ் தாயின் தலைப் பேறுகளான புதல்வர்களும் புதல்விகளும் கூடவே தமிழ் மக்களும் போர்க்களம் புகுந்தனர்.

"கரிபால்டி அழைக்கின்றார் இளைஞர்களே எழுங்கள்" என்று 1977ஆம் ஆண்டு தேர்தல் மேடைகளில் முழங்கிய பிரச்சாரப் பீரங்கிகள் இன்று தமிழ் மக்கள மக்களின் முன்னணி தலைவர்களாய் தேரோடும் வீதியிலே சிங்கள இராணுவத்தின் அரவணைப்போடு அகலக் கைவீசிப் பவனி வருகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் இரத்தத்தில் தோணிகள் ஓட்டி விளையாடி தலைவர்களாய் முள்ளிவாய்க்கால் எலும்புக்கூடுகள் நமக்கு மாளிகை கட்டி மகிழ்ந்து வாழும் தலைவர்களாய் இன்றைய முன்னணி தமிழ் தலைவர்கள் காணப்படுகிறார்கள்.

"கரிபால்டி அழைக்கிறார் இளைஞர்களே எழுக" என்றும் "வங்கத்துச் சிங்கங்கள் எழுக" என்றும் 1970களின் மத்தியில் பேசிய மேடைப் பேச்சு வீரத் தமிழ் தலைவர்களின் வீராவேசப் பேச்சின் பின்னணியில் இளைஞர்களும் யுவதிகளும் உடல் - பொருள் - ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து போராட புறப்பட்டனர்.

"சம உடமைத் தன்னாட்சி தமிழீழ விடுதலைக்காக எனது உள்ளம், உயிர், உடல், உடமை அனைத்தையும் ஈர்ந்து உறுதியோடு போராடுவேன்" என்று சத்தியம் செய்து போர்க்களம் புகுந்து ஆகுதியான இளைஞர், யுவதிகளின் அர்ப்பணிப்புகளும் வரலாறும் கண்முன் விரிந்து கிடக்கின்றது.

அப்படியே ஆகுதியான அனைத்துப் போராளிகளையும், மக்களையும், நலன் விரும்பிகளையும் கண்முன் கண்ட பின்பும் ஓடுகாலி அரசியலுக்கு குறைவின்றி தமிழ் மக்களின் வரலாறு துயரகரமாய் நீண்டு செல்கிறது.

வன விலங்கியல் வாழ்வில் தலையாய வேட்டை விலங்குகள், மிச்சம் உண்ணி வேட்டை விலங்குகள், காட்டிக் கொடுக்கும் மற்றும் ஒற்றர் வேலை செய்யும் பறவைகள் என பலமாக வகைப்படுத்துவர்.

உதாரணமாக சிங்கம் மற்றும் புலியினங்கள் என்பன தலையாய வேட்டை விலங்குகள் ஆகும். இவை வேட்டையாடிய மிச்சங்களை உண்ணும் மிச்சமுண்ணி விலங்குகளாக கழுதைப் புலிகள், ஓநாய்கள், காட்டு நாய்கள், நரிகள் என்பன காணப்படுகின்றன.

கழுகுகள், வல்லூறுகள், பருந்துகள் மற்றும் இவற்றையொத்த பறவையினங்கள் என்பன வேட்டையாடப்பட்ட பிராணிகளை இறந்துபோன பிராணிகளை ஏனைய பிராணிகளுக்கு காட்டிக் கொடுக்கும் வகையில் தகவல் வழங்கவல்ல பிராணிகளாக காணப்படுகின்றன.

மிச்சமுண்ணி விலங்குகள் விட்ட சிதலங்களை கழுகுகளும், வல்லூறுகளும், பருந்துகளும் கொத்தி உண்ணும். இந்த மிச்சமுண்ணி பறவைகள் விட்ட துகள்களை வண்டுகளும், பூச்சிகளும் உண்ணும்.

இத்தகைய காட்டு விலங்கு வாழ்விலிருந்து நாட்டு அரசியல் அதிகம் வேறுபட்டதல்ல. ஈழத் தமிழினம் மேற்படி தலையாய வேட்டை விலங்கு அரசியல் மிச்சம் உண்ணி விலங்கு அரசியல் காட்டிக்கொடுக்கும் பறவையின அரசியலென பல்வேறு மூர்க்கமான அரசியல் வலைப்பின்னலுள் சிக்குண்டு தவிக்கின்றார்கள்.

இத்தகைய சூழலில் ஈழத் தமிழ் தாயின் புதல்வர்கள் முன்னும் புதல்விகள் முன்னும் விரிந்து கிடக்கும் பணிகள் மிகவும் கடினமானவை. தமிழ் மக்களின் எதிர்காலம் மிகவும் பலமானவர்கள்.

மேற்படி காட்டு விலங்கு வகை தலைவர்களின் அரசியலிலிருந்து தமிழ் மக்களை தற்காத்து முன்னேறுவதற்கும், தமிழ் மக்களுக்கான இறுதி இலக்கை அடைவதற்கும், அதிக புத்திசாலித்தனமும், அதிக அர்ப்பணிப்பும், அனைவரையும் அரவணைக்கும் பரந்த மனப்பாங்கும், யதார்த்த பூர்வமான உலகக் கண்ணோட்டமும், சாதுரியமான வெளியுறவுக்கொள்கையும் அவசியம்.இதற்கான சரியான புதிய பாதை கொண்ட ஒரு மாற்று தலைமைத்துவம் இன்றி தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்க முடியாது.துணை அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் பின்பு தமிழ் மக்கள் நீதிக்காகவும் சமாதானபூர்வமான அரசியல் திடமுக்காகவும் சர்வதேச அரசுகளிடம் சிங்களத் தலைவர்களிடமும் தமிழ் தலைவர்களிடமும் நம்பிக்கை வைத்து காத்து நின்றனர்.

ஆனால் மேற்படி உள்நாட்டு, வெளிநாட்டுத் தரப்புகளினால் நம்பிக்கை ஊட்டப்பட்ட, வாக்குறுதி அளிக்கப்பட்ட நல்லாட்சி அரசின் பெறுபேறுகள் என்பன இனப்படுகொலையாளிகளைப் பாதுகாப்பதிலும் இனப்படுகொலை அரசை காப்பாற்றுவதிலும் ஒருபுறம் வெற்றி பெற்றதுடன் மறுபுறம் தமிழ் தமிழ் மக்கள் வேண்டி நின்ற நீதியான நியாயமான அரசியல் தீர்வை நிராகரித்துள்ளதுடன் தமிழ் மண்ணை சிங்களக் குடியேற்றங்களால் மேலும் ஆக்கிரமிப்பதிலும், தமிழ் மண்ணை பெரிதும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்துவதிலும் முன்னேறியுள்ளது.

இத்தகைய சூழலில் தமிழ் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சிங்கள ஆட்சியாளர்களின் உற்ற நண்பர்களாக இருக்கும் நிலையில், அவர்களின் கூடைக்குள் இவர்களும் ஒரு பகுதியாக இணைந்துகொண்ட நிலையில் தமிழ் மக்கள் தன்னெழுச்சி கொண்டு ஒரு புதிய பாதையில் , ஜனநாயக வழியில் போராட வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளவர்களாய் காணப்படுகின்றனர்.

மேற்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் திசைமாறிய அரசியலுக்குப் பதிலாக ஒரு புதிய மாற்று அரசியல் தலைமையை உருவாக்க மாற்றுத் தலைமை பேசும் தமிழ் அரசியல் தலைவர்கள் புறப்பட்டனர் அதன்பொருட்டு தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு மக்கள் போராட்ட அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனாலும் அது தனக்குள் மோதிக்கொள்ள நிலைமையில் வீரியமிக்க காணப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை மறுசீரமைப்பு புதிய உத்வேகத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியதைத் தவிர வேறு வழி எதுவும் தமிழ் மக்களுக்கு கிடையாது.

ஆதலால் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கிய அனைத்து மாற்று அரசியல் சக்திகளும் தங்கம் கிடையான பேதங்களை முற்றிலும் மறந்து பிரதான எதிரி உடனடி எதிரி உடனடி பிரச்சினைகள் என்பனவற்றிற்கு முகங்கொடுத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது வரலாற்று கட்டளையாகும்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அபூர்வமாக தமிழ் மக்களுக்கான தலைவிதியை முன்னெடுத்து உழைக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும். இந்நிலையில் எழுத தமிழ் நிகழ்வை மிக வெற்றிகரமாக முன்னெடுக்க அனைத்து தமிழ் மக்களும் பெரிதும் பாடுபடவேண்டும்.

ஈழத்தமிழ் தேசியவாதத்தை மீள் கட்டமைப்பு செய்ய வேண்டும் அதற்காக பண்பாட்டு பணிகள் மூலமாகவும் அடைக்கலமும் முன்னெடுப்புகளை ஆக வேண்டிய அவசர காலம் இது.

இந்நிலையில் எழுக தமிழ் பேரணியை அனைத்து உட்பேதங்களையும் கடந்து முன்னெடுக்க வேண்டியது அவசியம்.கட்சி வேறுபாட்டு பட்டிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் வெள்ளாடுகள் தங்களை மடக்கி வைத்துள்ள ஓநாய்களை தாண்டி, பட்டி வேலிகளையும் தாண்டி எழுக தமிழ் பேரணியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பை கொண்டவர்களாக உள்ளனர்.

மாற்றுத் தலைமையை பற்றி பேசுகின்ற அனைவரும் அத்தகைய அனைத்து கட்சியினரும் முதலில் ஒன்றுபட்டு மக்கள் முன் தமது ஐக்கியத்தை காட்சிப்படுத்துவார்களேயானால் வேறு பட்டிகளுக்ககுள் இருக்கும் வெள்ளாடுகள் அனைத்தும் வேலிகளை தாண்டிவந்து எழுக தமிழ் பேரணியை தாமாக பலப்படுத்தும்.அது ஈழத்தமிழ் தேசியவாதத்தை பலப்படுத்தும்.

அதுவே இப்போது தமிழ் மக்களுக்கு வேண்டியதாகும். இது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தமிழ் மக்களின் குரலையும் பேரம் பேசுவதற்கான அரசியல் பலத்தையும் தமிழ் மக்களுக்கும் மாற்று அரசியல் பேசும் அரசியல் தலைவர்களுக்கும் அளித்தும்.

உள்நாட்டு வெளிநாட்டு அரசில் சக்திகளாலும் தமிழ் தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டு, கைவிடப்பட்டு அனாதரவாக காணப்படும் தமிழ் மக்களுக்கு தற்போது எழுக தமிழ் பேரணி மூலமான தமிழ் தேசிய எழுச்சியை முன் நிறுத்துவதை தவிர வேறு மார்க்கம் எதுவும் கிடையவே கிடையாது.