மர்மங்கள் நிறைந்த சீன கடற்படை! இந்திய பெருங்கடலில் போர்க்கப்பல்கள்

Report Print Subathra in கட்டுரை

தெற்காசியாவிலேயே மிக உயரமான தாமரைக் கோபுரத்தின் திறப்பு விழா தொடர்பாக இலங்கை ஊடகங்கள் கடந்த திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த போது இந்தியப் பெருங்கடலில் இலங்கைக் கடற்பரப்புக்கு அருகே சீன போர்க்கப்பல்களின் நடமாட்டங்கள் தொடர்பான செய்திகளை இந்திய ஊடகங்கள் பரபரப்புடன் வெளியிட்டுக் கொண்டிருந்தன.

356 மீற்றர் உயரம் கொண்ட தாமரைக் கோபுரத்தை அமைக்கும் பணிகள் 2012ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டிருந்தன.

அப்போது இந்தியாவை கண்காணிக்கவே சீனா இந்த உயரமான கோபுரத்தை அமைக்கின்றது என்றும், இந்தக் கோபுரத்தில் பொருத்தப்படும் கண்காணிப்புக் கருவிகளின் மூலம் தென்னிந்தியாவில் உள்ள இந்தியாவின் கடற்படை விமானப்படைத் தளங்களையும் கேந்திர முக்கியத்தும் வாய்ந்த இடங்களையும் கண்காணிக்க முடியும் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் அத்தகைய கண்காணிப்பு வசதிகள் ஏதும் தாமரைக் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாவிடினும் இந்தக் கோபுரத்தின் மேல் தளத்தில் தொலைத்தொடர்பு சமிக்ஞைகளை பரிமாறிக் கொள்வதற்கான கட்டமைப்புக்கள் தான் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

அவை தொலைக்காட்சிகள், வானொலிகளின் தகவல் தொடர்பாடல் பரிமாற்றங்களுக்கு மாத்திரிமின்றி புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்களுக்கும் பயன்படுத்தக் கூடியவையாக இருக்கக் கூடும். இந்த தாமரைக் கோபுர திறப்பு விழா நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக சீன போர்க்கப்பல்களின் நடமாட்டங்கள் தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்ட தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படத்தியிருந்தன.

இந்தியப் பெருங்கடலில் ஒரே நேரத்தில் சீன கடற்படையின் ஏழு போர்க்கப்பல்களைக் கொண்ட அணி கண்காணிக்கப்பட்டிருக்கின்றது. இதில் மிகப்பெரிய துருப்புக்காவி தரையிறக்க கப்பல் ஒன்று இந்தியாவுக்கு மிக அருகிலேயே காணப்பட்டுள்ளது. அது இலங்கை கடல் எல்லைக்குள்ளே நுழைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சீன போர்க்கப்பல்கள், கண்காணிப்புக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் நடமாடுவது புதிய விடயமல்ல.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியப் பெருங்கடலில் சீன கடற்படைக் கப்பல்கள்க அதிகமாக நடமாடத் தொடங்கி விட்டன. இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்துவது தான் சீனாவின் பிரதான இலக்காக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் சோமாலிய கடற்கொள்ளையரின் அச்சுறுத்தல்கள் ஏடன் வளைகுடாவில் அதிகமாக இருந்தன.

அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஏடன் வளைகுடாவில் சீன கடற்படை 2009 ஜனவரியில் இருந்து இரண்டு போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு விநியோக கப்பல் என மூன்று கடற்படைக் கப்பல்கள் அடங்கிய அணியை கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருகின்றது.

மாறி மாறி, சுழற்சி முறையில் இந்தப் பணிக்காக சீன போர்க்கப்பல்களின் அணி இந்தியப் பெருங்கடலைக் கடந்து செல்வது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளில் 33 கடற்கொள்ளை எதிர்ப்பு அணிகளை ஏடன் வளைகுடாவுக்கு அனுப்பியிருக்கின்றது சீனா.

இதன்மூலம் இதுவரை 65 சீன கடற்படை அணிகள் இந்தியப் பெருங்கடலைக் கடந்து சென்றிருக்கின்றன. இவற்றில் குறைந்தபட்சம், 3 கப்பல்கள் என்று பார்த்தால் 195 போர்க்கப்பல்கள் இருக்கும். இது குறைந்தபட்ச எண்ணிக்கை. அதிகாரபூர்வமாக சீனா இந்தக் கப்பல்களை ஏடன் வளைகுடாவுக்கு அனுப்பினாலும் அதிகாரபூர்வமற்ற வகையில் பாரிய தரையிறக்க துருப்புக்காவி கப்பல்களையும் ஹெலிகொப்டர் தாங்கி கப்பல்களையும் நீர்மூழ்கிகளையும் கூட இரகசியமான முறையில் அனுப்பி வருகின்றது.

2014ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்திற்கு சீன நீர்மூழ்கி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டு முறை வந்து சென்ற போதும் அவை கடற்கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கையில் பங்கேற்க வந்தவையே என்று சீனா கூறியிருந்தது.

ஆனால் சீன கடற்படையின் அதிகாரபூர்வ கடற்கொள்ளை எதிர்ப்பு அணியில் நீர்மூழ்கிகள் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலத்தில் சீனாவில் இருந்து ஏடன் வளைகுடாவிற்கு செல்லும் போதும் அங்கிருந்து திரும்பும் போதும் பெரும்பாலும் சீன போர்க்கப்பல்களின் அணி விநியோகத் தேவைகளுக்காக கொழும்பு துறைமுகத்தை நாடுவது வழக்கம்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும் சீன போர்க்கப்பல்கள் கொழும்பு வந்து சென்றிருந்தன. ஆனால் இப்போது அவற்றின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் சீன நீர்மூழ்கி கப்பல் ஒ்று கொழும்பில் தரித்து செல்வதற்கு அனுமதி கேட்டிருந்தது. அதற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்க மறுத்த நிலையில் சீன போர்க்கப்பல்களின் வருகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஜிபோட்டியில் சீனா ஒரு பாரிய கடற்படைத் தளத்தை அமைத்திருக்கின்றது. கடற்கொள்ளையரிடம் இருந்து தமது கப்பல்களை பாதுகாப்பதற்காக என்றே இந்த தளத்தை சீனா அமைத்தது.

எனவே விநியோகத் தேவைகளுக்காக கொழும்பு அல்லது ஏனைய தெற்காசிய துறைமுகங்களை நாடிச் செல்லாமலேயே சீன போர்க்கப்பல்களினால் இந்திய பெருங்கடைலை கடந்து செல்ல முடியும்.

ஜிபோட்டியில் ஒரு பாரிய தளத்தைக் கொண்டுள்ள போதும் இந்தியப் பெருங்கடலில் சீன போர்க்கப்பல்களின் நடமாட்டம் குறையவில்லை. அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

இதனை இந்தியா தனக்கான அச்சுறுத்தலாகவே பார்த்து வருகின்றது. 2009ஆம் ஆண்டில் இந்தே இந்தியப் பெருங்கடலில் சீனா கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது.

சீனா கட்டி வருகின்ற மூன்றாவது பாரிய விமானந்தாங்கி கப்பலைக் கூட இந்தியப் பெருங்கடலில் நிறுத்தும் திட்டத்தையே கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் மலாக்கா நீரிணையைக் கடந்து இந்தியப் பெருங்கடலில் நுழைகின்ற சீன கப்பல்களையும் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து இந்தியப் பெருங்கடலுக்குள் நுழையும் சீன கப்பல்களையும் இந்தியா தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றது.

இந்த ஆழ்கடல் கண்காணிப்பு வசதிகளை இந்தியா அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கின்றது. அதற்காக அமெரிக்காவிடம் இருந்து பி-8 பொசிடோன் கண்காணிப்பு விமானங்களையும் இந்தியா பெற்றிருக்கின்றது.

இந்தியப் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் தினமும் பயணிக்கின்றன. அவற்றில் வெளிநாடுகளின் போர்க்கப்பல்களும் அடங்குகின்றன. இவற்றைக் கண்காணிப்பதற்காக இந்தியா அண்மையில் ஒரு கண்காணிப்பு கட்டமைப்பை உருவாக்கியது, வருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கடல்சார் தகவல் முகாமைத்துவ பகுப்பாய்வு மையம் என்ற பெயரில் இந்த கட்டமைப்பு குருகிராமை தலைமையகமாக கொண்டு இயங்குகின்றது.

பிராந்திய கடல்பரப்புக்குள் நுழைகின்ற கப்பல்கள் தொடர்பான தகவல்கள் இந்த கட்டமைப்புக்கு சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நட்பு நாடுகளிடம் இருந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்தக் கட்டமைப்புக்களின் மூலம் சீன போர்க்கப்பல்களின் நடமாட்டங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை இந்தியா தொடர்ச்சியாக கண்காணித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை வசதிகளைக் கொண்ட பி-8 கண்காணிப்பு விமானமே சீன கப்பல்களின் அணியை இந்த மாதம் கண்காணித்திருக்கின்றது.

ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கையை முடித்து விட்டுத் திரும்பும் சீன கடற்படையின் 32ஆவது அதிரடிப்படை அணியும் அங்கு பாதுகாப்பு பணியை ஆரம்பிக்கச் செல்லும் 33ஆவது அதிரடிப்படை அணியுமே கண்காணிக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றில் ஆறு கப்பல்கள் உள்ள நியைில் ஏழாவதாக உள்ள கப்பல் பற்றியே இந்திய கடற்படை தரப்பில் அதிக கரிசனை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கடற்படை வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளின் படி, Xian - 32 என்ற 27 ஆயிரம் தொன் எடையைத் தாங்கும் வலிமை கொண்டு துருப்புக்காவி தரையிறக்க கப்பலே (Landing Platform Dock) இது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியக் கடற்படையினால் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள படங்களின் படி இந்தக் கப்பல் சீன கடற்படையிடம் உள்ள ஆறு Type 071 amphibious transport dock வகையைச் சேர்ந்த கப்பல்களில் ஒன்றான 989 என்ற இலக்கமுடையை Changbai Shan என்ற போர்க்கப்பலாக இருக்கலாம் என்றே கருதப்படுகின்றது.

இது நான்கு ஹெலிகொப்டர்களை நிறுத்தி வைக்கும் வசதிகளையும் ஒரே நேரத்தில் இரண்டு ஹெலிகொப்டர்களை தரையிறக்கும் வகையில் இரு இறங்கு தளங்களையும் கொண்டது.

அத்துடன் 600 தொடக்கம் 800 வரையான துருப்புக்களையும் அவர்களுக்கான ஆயுதங்கள் வாகனங்கள் போர்த்தளபாடங்களையும் நகர்த்திச் சென்று தரையிறக்கக் கூடிய எல்லா வசதிகளையும் கொண்டிருக்கின்றது.

சீன கடற்படை மர்மங்கள் நிறைந்தது. அதன் போர்த்தளபாடங்கள் குறித்த எந்த முழுமையான உண்மையான அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடுவதில்லை. பல போர்க்கப்பல்களின் பெயர்களையும் இலக்கங்களையும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடுவது சீனாவின் வழக்கம்.

அதனிடம் எந்த வகையான எத்தனை போர்க்கப்பல்கள் உள்ளன என்ற குழப்பம் இருக்கின்ற நிலையில் இந்திய கடல் எல்லைக்கு அருகே காணப்பட்டதாக இந்திய கடற்படையால் கூறப்பட்ட Xian 32 கப்பல் தொடர்பான சந்தேகங்கள் இருப்பது சாதாரண விடயமே.

இந்தக் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாகவும் கடந்த வாரம் இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. ஆனால் சீன கடற்படை கப்பல் எதுவும் இலங்கை துறைமுகத்துக்கு வந்ததாக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இலங்கை துறைமுகங்கள் பயன்படுத்தாவிடின் இலங்கை கடற்பரப்புக்குள் இவை ஏன் வந்தன. இதற்கு அனுமதியை இலங்கை அரசாங்கம் கொடுத்ததா என்ற கேள்விகள் உளளன.

இந்தக் கப்பலின் நடமாட்டத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணிக்கின்றது. ஏனென்றால் இந்த கப்பல்களின் அணியை கண்டறிவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் இந்தயிப் புலனாய்வு அமைப்புக்கள் ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தன.

இந்தியாவின் கடற்படைத் தளங்கள் மற்றும் இந்தியாவின் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களை கண்காணிக்க சீனா தொடர்ச்சியாக கண்காணிப்பு கப்பல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றது என்ற தகவலே அது.

அண்மையில் Dongdiao வகையைச் சேர்ந்த சீனாவின் பிந்திய புலனாய்வு தகவல் சேகரிப்பு கப்பலான Tianwangxing இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்தக் கப்பல் இந்தியாவின் பொருளாதார கடல் எல்லைக்குள் நுழைந்து சில நாட்கள் தங்கியிருந்துள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகே இந்தியாவின் கிழக்கு கடல் எல்லைக்கு அண்மையாக இந்தக் கப்பல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து இந்தியா இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கின்றது. இவ்வாறான நிலையில் தான் இலங்கை கடற்பரப்புக்குள் சீன கடற்படைக் கப்பல் கண்டறியப்பட்டது. ஏற்கனவே சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டங்களால் தான் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2014இல் விரிசல்கள் ஏற்பட்டிருந்தன.

மீண்டும் இலங்கை கடற்பரப்பை இந்தியாவின் பாதுகாப்பு நிலைகளை கண்காணிக்க சீன போர்க்கப்பல்கள் பயன்படுத்த முனையும் போது அது மீண்டும் இந்திய இலங்கை இடையிலான நம்பிக்கையீம் முரண்பாடுகளுக்கே வழிசமைக்கும்.

அதுவும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்காக சீனா நிதியைக் கொட்டுவதாக வெளியாகிய தகவல்களின் பின்னணியில் இந்தத் தலையீட்டை சாதாரணமான விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது.