மீறப்படும் தேர்தல் சட்டங்கள்

Report Print Gokulan Gokulan in கட்டுரை

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் சட்டத்தை மீறும் சம்பவங்கள் தொடர்பான முறைப்படுகள் குவியத் தொடங்கியிருக்கின்றன என கட்டுரையாளர் என்.கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கட்டுரையில் மேலும்,

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்புகளிடம் சில நாட்களிலேயே நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இவை எல்லாமே பாரதூரமானவை என்றில்லாவிட்டாலும் பாரதூரமான சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சுயாதீன தேர்தல் ஆணைக்குழு உருவாக்கப்பட்ட பின்னர் நடத்தப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது தேர்தல் இது.

இதற்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலும் அதற்கு தேசிய முக்கியத்துவம் அதிகம் கிடையாது. அது தேசிய அரசியலையும் தீர்மானிக்கக் கூடியதன்று. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் அவ்வாறானதல்ல.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலை உரிய சட்ட நடைமுறைகளின் படி நடத்தி முடிப்பது என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடினமான பணி தான்.

அதனால் தான் இந்த முறை தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்யம் போதே “அரசியலமைப்பு விதிகளை மீறக்கூடாது. நெறிமுறை கோட்பாடுகளின்படி செயற்பட வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழுவின் வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும்” உள்ளிட்ட நான்கு அடிப்படை விடயங்களுக்கும் இணங்குவதாக சத்தியக்கடதாசிகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்திருந்தது தேர்தல்கள் ஆணைக்குழு.

அதுபோலவே கடந்த ஆறாம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களை ஒரே மேடையில் கொண்டு வந்த மார்ச் 12 இயக்கத்தின் மக்கள் மேடை நிகழ்விலும் வேட்பாளர்களிடம் ஒரு உறுதி ஆவணத்தில் கையெழுத்து பெறப்பட்டது.

நிகழ்வு முடிய முன்னரே பல வேட்பாளர்கள் புறப்பட்டு சென்று விட்டதாலும் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட பல வேட்பாளர்கள் இதனை புறக்கணித்தாலும் சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட மூன்று வேட்பாளர்கள் மாத்திரமே இந்த உறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

அந்த ஆவணத்தில் முக்கியமாக கூறப்பட்டுள்ள விடயம், தேர்தல் சட்டங்களை மீறாமல் சட்டவிதிகளுக்கு உட்பட்டு பிரச்சாரங்களையும் தேர்தல் நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என்ற உறுதி மொழியாகும்.

தேர்தல் ஒன்றின் போது தேர்தல் சட்டங்கள் முக்கியமானவை. தேர்தல்களை நடத்துவதற்கான விதிமுறைகளை மாத்திரமன்றி தேர்தல்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அதனை பின்பற்றுவதற்கும் அவை அவசியம்.

வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் தேர்தல் சட்டங்களை முறையாகப் பின்பற்றினால் தான் தேர்தல் ஒன்று சுதந்திரமாகவும், சுமூகமாகவும் இடம்பெறும். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் பல தேர்தல்கள் இரத்தக்கறை படித்ததாகவே இடம்பெற்றன.

எனினும் வன்முறைகள் கோலோச்சும் தேர்தல்களில் இருந்து விலகியதாக முன்னுதாரணத்துக்குரிய ஒரு தேர்தலாக கடந்த உள்ளூராட்சித் தேர்தல் பார்க்கப்பட்டது.

அது சுதந்திர தேதர்தல் ஆணைக்குழு உருவாக்கம் மற்றும் அதனைச் சார்ந்து ஜனநாயகத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளின் வெற்றியாக பார்க்கப்படகிறது.

இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிகளவில் குவிந்து வரும் தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் இந்த தேர்தலை அமைதியான ஒன்றாக இடம்பெறுவதற்கு இடமளிக்குமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்த போது கோத்தபாய ராஜபக்ஷ சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும் என்று வாக்குறுதியை அளித்திருந்தார்.

சுவரொட்டிகள் பதாதைகள் இல்லாமல் பிரச்சாரங்களை முன்னெடுக்குமாறும் தமது ஆதரவாளர்களிடம் கோரியிரு்நதார்.

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே மஹரகமவில் கோத்தபாய ராஜபக்ஷவையும், மஹிந்த ராஜபக்ஷவையும் வரவேற்க வைக்கப்பட்டிருந்த பதாதை காற்றில் முறிந்து விழுந்தது.

வீதியால் சென்று கொண்டிருந்த எவரும் அதில் சிக்கிக் கொள்ளாவிடினும் சில வாகனங்கள் அதில் சிக்கி நசுங்கிப் போயின. இந்தச் சம்பவம், கோத்தபாய ராஜபக்ஷவின் வாக்குறுதியை கேள்விக்குள்ளாக்கியிருந்தது.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு பிரதான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதுமே கோத்தபாய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ, அநுர குமார திஸாநாயக்க என்று பிரதான வேட்பாளர்களின் படங்களுடன், பிரச்சார சுவரொட்டிகள் சுவர்களை அசிங்கப்படுத்த ஆரம்பித்து விட்டன.

தேர்தல் சட்டங்களின் படி சுவரொட்டிகளை ஒட்ட முடியாது. பதாதைகளை காட்சிப்படுத்த முடியாது. ஆனால் எந்தவொரு வேட்பாளரும் அதனை கண்டு கொள்வதாக இல்லை.

கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் பொறுப்பாக இருந்தவர். அப்போது கொழும்பு நகரை அழகுப்படுத்தும் திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்திருந்தார்.

ஆனால் அவரது கட்சியினர், அவரது ஆதரவாளர்கள் இப்போது கொழும்பு நகரையும் ஏனைய இடங்களையும் சுவரொட்டிகளால் அசிங்கப்படுத்தி கொண்டிருப்பதை அவர் தடுக்கவில்லை. மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டுகின்றார்கள் என்றால் அதனை தவிர்க்குமாறு ஆலோசனையையோ, கட்டளையையோ பிறப்பிக்க வேண்டியது கட்சிகளின் தலைமைகள், வேட்பாளர்கள் தான்.

எந்தவொரு கட்சியின் தலைமையும் அவ்வாறான கட்டளைகளை பிறப்பித்ததாக தெரியவில்லை. வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின், சுவரொட்டிகளை அகற்றுவதற்கு பொலிஸ் திணைக்கத்திற்கு 450 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியது.

சுவரொட்டிகளை ஒட்டியவர்களுக்கு இந்தளவிற்கு செலவீனம் ஏற்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அதனை அகற்றுவதற்கு அதிக செலவு ஏற்படுகிறது.

இது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஏற்படும் செலவு, சாதாரண மக்களின் வரிப் பணத்தில் செலவிடப்படுகின்ற பணம் இது.

வேட்பாளர்களும் அவர்களை முன்னிறுத்தியுள்ள கட்சிகளும், அவற்றின் ஆதரவாளர்களும் தேர்தல் சட்டத்தை முறையாகப் பின்பற்றுகின்ற உறுதியைக் கடைப்பிடித்தல் இவ்வாறான செலவீனத்தை முற்றாகவே கட்டுப்படுத்தலாம்.

அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்கி தேவையின்றி சுமார் இரண்டரை பில்லியன் ரூபாவை சேலதிகமாக செலவழிக்க வேண்டிய நிலைக்கு நாட்டை தள்ளியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு 450 மில்லியன் ரூபாவை ஒதுக்க வேண்டிய நிலை என்பது இன்னெரு வீண் செலவு தான்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளதாக வாக்குறுதி கொடுத்து விட்டு தேர்தல் சட்டங்களை மீற மாட்டோம் என்று சத்தியக் கடதாசிகளில் கையெழுத்திட்டு கொடுத்து விட்டு எல்லா வேட்பாளர்களுமே அந்த உறுதியை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

சுவரொட்டிகளை நாங்கள் ஒட்டவில்லை, ஆதரவாளர்கள் ஒட்டுகிறார்கள் என்ற சாட்டுப்போக்கை எந்த வேட்பாளரும் கூற முடியாது. தலைமை சொல்வதை தான் ஆதரவாளர்கள் செய்கிறார்கள்.

சாதாரணமாக தமது ஆதரவாளர்கள் ஒரு சுவரொட்டியை ஒட்டுவதை கூட தடுக்க முடியாத தலைமைகள், வேட்பாளர்கள் ஜனாதிபதியாகி எவ்வாறு நாட்டைக் காப்பாற்றுவார்கள் என்ற கேள்வி எழுகிறது.

பொலித்தீன், பிளாஸ்ரிக், சுவரொட்டி இல்லாத தேர்தல் பிரச்சாரங்களுக்கு தயாரில்லாத வேட்பாளர்கள், எவ்வாறு ஆட்சியை கைப்பற்றி சுற்றுச் சூழலைப் பாதிக்காமல் ஆட்சி செய்யப் போகிறார்கள்?

இதைவிட, சேவையில் உள்ள அரச அதிகாரிகள் எவரும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவோ, ஈடுபடுத்தப்படவோ கூடாது. இது மிக முக்கியமான விதிமீறல்.

ஆனால் கோத்தபாய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்களில் சேவையில் உள்ள இராணுவத் தளபதியின் படம், தற்போதைய இராணுவத் தளபதி என்ற குறிப்புடன், கோத்தபாய ராஜபக்ஷவை புகழ்ந்துரைக்கும் அவரது கருத்து பயன்படுத்தப்படிருக்கின்றது.

இது இராணுவத் தளபதிக்கும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இராணுவத் தளபதியின் படம், அவரது கூற்று என்பனவற்றை விளம்பரத்துக்கு பயன்படுத்த முன்னர் அவரிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டியது முக்கியம். அதனை செய்யவில்லை.

தேர்தல் விதிமுறைகளின் படி இராணுவத் தளபதியின் படத்தையோ, குறிப்பையோ வெளியிட்டிருக்கக்கூடாது. அதனையும் கருத்தில் கொள்ளவில்லை.

இந்த பாரதூரமான விதிமுறை மீறல் குறித்து முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இது மோசமான விதிமீறல் என்றும், போர் வெற்றிக்கு உரிமை கோரி எந்தக் கட்சியும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் கூறியிருக்கிறார்.

ஆனாலும் இராணுவத் தளபதியின் படத்துடன் வெளியிடப்பட்ட விளம்பரத்துக்கு எதிராக என்ன நடவடிக்கை எப்படி எடுக்கப்படப் போகிறது? என்பது கேள்வி தான். தேர்தல் சட்டங்கள் என்பது, விதிமீறல்களுக்கான தண்டனைகளையும் உள்ளடக்கியது தான்.

ஆனால் தேர்தல் விதிமீறல்கள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அதற்கான சட்ட நடவடிக்கைள் பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை.

தேர்தல் முடிந்தவுடன் இத்தனை ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்தன என்ற அறிக்கையோடு அடுத்த விதிமீறல்களின் அத்தியாயம் முடிந்து விடும். அடுத்த தேர்தல் ஆரவாரம் தொடங்கும் போது தான் அதுபற்றி பேசத் தொடங்குவார்கள்.

ஆக தேர்தல் சட்ட மீறல்களும் அவை பற்றிய முறைப்பாடுகளும் வெறும் சம்பிரதாயபூர்வமானவையாக இருந்து விடுகின்றன.

தேர்தல் சட்டங்களை கடுமையாக்கினால் அவற்றை மீறுகின்றவர்களை தகுதியிழப்பு செய்வது போன்ற கடுமையான தண்டனைகளை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால் தான் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்களை நடத்த முடியும்.

தேர்தல்கள் ஆணைக்குழு உருவாக்கம் என்பது எந்தளவுக்கு முக்கிமானதொரு படிக்கல்லாக இருக்கிறதோ, தேர்தல் சட்டமீறல்களை சகித்து கொள்ளாத உடனடி நடவடிக்கையை எடுக்கின்ற அதிகாரத்தை கொண்டு வரும், மிக முக்கியமானதொரு படிக்கல்லாகவே இருக்கும்.

அனால், அதனை யார் செய்யப்போகிறார், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருக்கும் அரசியல்வாதிகள் தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப் போடுவார்களா? என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.