பலம் பெறுகிறார் சவேந்திர சில்வா

Report Print Subathra in கட்டுரை

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போலத் தான், தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் சாதாகமான நிலை ஒன்று உருவாகியிருக்கிறது.

பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில், கடந்த ஓகஸ்ட் மாதம், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை, இராணுவத் தளபதியாக நியமித்திருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

அதற்கு இரண்டு மாதங்கள் முன்னதாகவே, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா 55 வயதை எட்டி, இராணுவத்திலிருந்து ஓய்வுபெற வேண்டிய நிலையை அடைந்திருந்தார்.

எனினும், அவரை ஓய்வுபெறவிடாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இந்த ஆண்டு டிசம்பர் வரை சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. இதன்மூலம், இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கான கதவு திறந்து விடப்பட்டது.

ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில், இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, ஓய்வு பெற்றதை அடுத்து, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரது இந்த நியமனத்தினால், அரசாங்கம் கடுமையான சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகியது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என, பல பக்கங்களில் இருந்தும் இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தில் இறுதி நாட்களில், சர்வதேச சமூகத்துடன், முட்டி மோதிக்கொண்டு எடுத்த முக்கியமானதொரு முடிவாக இந்த நியமனத்தைக் குறிப்பிடலாம்.

இந்த முடிவு இப்போது வரை, கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது.

கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸின், வெளிவிவகாரக் குழுவின், ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான துணைக்குழுவின் அமர்வு இடம்பெற்றது.

இதில், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் ஜி வெல்ஸ் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான, உதவிச் செயலாளர் ரொபர்ட் டெஸ்ரோ ஆகியோர் கொள்கை விளக்க உரைகளை நிகழத்தியிருந்தனர்.

இலங்கை தொடர்பாக அவர்கள் உரையாற்றிய போது, இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜங்கச் செயலாளர், அலிஸ் ஜி வெல்ஸ் உரையாற்றியபோது, “சவேந்திர சில்வா இலங்கை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பாக, அமெரிக்கா ஏமாற்றமடைந்திருப்பது குறித்து, பகிரங்கமாக குரல் கொடுத்திருக்கிறது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அவருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், மோசமானவை.

அமெரிக்க சட்டத்தின் கீழ், பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பைக் குறைப்பதற்கு, இந்தப் பதவி உயர்வு எங்களை கட்டாயப்படுத்துகிறது என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் என்று அவர் கூறியிருந்தார்.

அவரை தொடர்ந்து உரையாற்றிய, இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான, உதவிச் செயலாளர் ரொபேர்ட் டெஸ்ரோ, “நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமானதாக இருக்கும் இந்த நேரத்தில், சவேந்திர சில்வாவின் நியமனம், இலங்கையின் சர்வதேச நற்பெயரையும், நீதி மற்றும் பொறுப்புப்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டையும், குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவுக்கு அளிக்கப்பட்டுள்ள பதவி உயர்வு அமெரிக்க சட்டத்தின் கீழ், இலங்கை இராணுவத்துடனான, இருதரப்பு ஒத்துழைப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று, இலங்கை ஜனாதிபதியிடமும், ஏனைய மூத்த அதிகாரிகளிடமும் நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதுமே, இலங்கையுடனான இராணுவ ஒத்துழைப்பு பாதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஆனால், அதனைக் கண்டுகொள்ளும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கவில்லை.

ஏனென்றால், இந்தத் தலைவலிகளுக்குள் அவர் சிக்கக் கொள்ளப் போவதில்லை. அவர் அடுத்தமாதம், 17ஆம் திகதி வரை தான் ஆட்சியில் இருக்கப் போகிறார்.

எனவே, அடுத்து ஜனாதிபதியாக வரப்போகிறவரும், அரசாங்கத்தை நடத்தப்போகும் பிரதமரும் தான், இந்தச் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டியிருக்கும்.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இந்த ஆண்டு இறுதி வரையுமே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சேவை நீடிப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் அவர் பதவியில் நீடிப்பாரா என்ற கேள்விகள் முன்னர் இருந்தன.

ஏனென்றால், ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க வேட்பாளரான சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால், இராணுவத் தளபதியினால் பதவிநீடிப்பை பெற முடியாமல் போகும், சேவை நீடிப்புக் கிடைக்காமல் அவர் விலகிச் செல்லும் நிலை ஏற்படும் என்றே கருதப்பட்டது.

சர்வதேச சமூகத்துடன் குறிப்பாக, அமெரிக்காவுடன் ஐ.தே.க அரசாங்கம் முட்டிக்கொள்ள விரும்பாது என்பதால், சஜித் பிரேமதாச ஆட்சியமைத்தால், அது இராணுவத் தளபதிக்குச் சாதகமானதாக இருக்காது என்ற கருத்து நிலவியது.

அதேவேளை, கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றியைப் பெற்றால் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இன்னும் சில ஆண்டுகளுக்கு இராணுவத் தளபதியாக இருக்கும் வாய்ப்பைப் பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

ஏனென்றால், கோத்தபாய ராஜபக்ச கட்டளை அதிகாரியாக இருந்த முதலாவது கஜபா ரெஜிமென்ட்டில் ஒரு இளநிலை அதிகாரியாக இருந்தவர் சவேந்திர சில்வா. அவர்களுக்கிடையிலான நெருக்கம், இறுதிப் போர்க்காலத்தில் இன்னும் அதிகரித்திருந்தது.

போர்க்கள நிலைவரங்களை இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இருந்து அறிந்து கொள்வதை தவிர்த்த, கோத்தபாய அறிந்துக் கொள்வதை தவிர்த்த கோத்தபாய ராஜபக்ச, சவேந்திர சில்வா மூலமாகவே, அறிந்து கொண்டிருந்தார்.

அவர்களுக்குள் நேரடித் தொடர்பு இருந்தது. கோத்தபாய ராஜபக்சவின், நேரடியான உத்தரவுக்கமையவும் அவர் செயற்பட்டார் என்று சரத் பொன்சேகா முன்னர் குற்றம்சாட்டியிருந்தார்.

அதற்குப் பிரதி உபகாரமாகவே, சவேந்திர சில்வாவுக்கு, ஐ.நாவில் துணைத் தூதுவர் பதவி வழங்கப்பட்டது.

இவ்வாறான நிலையில், கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால், சவேந்திர சில்வாவுக்கு ராஜயோகம் கிட்டும் என்றே கருதப்படுகிறது.

எனினும், அமெரிக்க காங்கிரஸின், வெளிவிவகாரக் குழுவில் அலிஸ் வெல்ஸ் மற்றும், ரொபேர்ட் டெஸ்ரோ ஆகியோர் நிகழ்த்திய உரையைத் தொடர்ந்து, கோத்தபாய ராஜபக்சவின் பக்கத்தில் இருந்து இராணுவத்தினரை ஈர்க்கும் வகையில் தனது பிரசாரத்தை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார் சஜித் பிரேமதாச.

அவர் அண்மையில் நிவித்திகல, களுத்துரை போன்ற இடங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் உரையாற்றிய போது, எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாப்பேன். அவரே இராணுவத் தளபதியாக தொடருவார் என்று கூறியிருக்கிறார்.

இந்த அறிவிப்பின் மூலம், லெப்.ஜெனரவ் சவேந்திர சில்வாவுக்கு இருந்து வந்த - சஜித் ஆட்சிக்கு வந்தால், வெளியே போக வேண்டிவரும் என்ற அச்சம் நீங்கியிருக்கிறது.

யார் ஆட்சியைப் பிடித்தாலும், அவரே இராணுவத் தளபதியாக நீடிப்பார் என்பது உறுதியாகியிருக்கிறது.

இருந்தாலும், சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவே இராணுவத் தளபதியாக நீடிப்பதில் பலத்த சிக்கல்கள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால், ஏற்கனவே அவர் தாம் ஆட்சிக்கு வந்தால், பாதுகாப்பு அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிப்பேன் என்று பகிரங்கமாக உறுதி அளித்திருக்கிறார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும், ஒத்துவராது. அவர், கோத்தபாய ராஜபக்சவின் நேரடி உத்தரவின் கீழ் செயற்பட்டவர் என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார் சரத் பொன்சேகா.

அதைவிட, இறுதிப் போரில் மீறல்களே நடக்கவில்லை என்று கூறுக்கின்றவர் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா.

ஆனால், இறுதிப்போரில் மீறல்கள் நடந்திருக்கலாம், அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும், அவ்வாறான விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்ற நிலைப்பாட்டில் இருப்பவர் சரத் பொன்சேகா.

எதிரும் புதிருமான நிலையில் இவர்கள் இருக்கின்ற சூழலில், சவேந்திர சில்வாவை தொடர்ந்து இராணுவத் தளபதியாக வைத்திருந்தால், சஜித் பிரேமதாச நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். அது உள்ளக குழப்பங்கள், குழிபறிப்புகள் அரங்கேற வழிவகுக்கும்.

எனவே தான், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவே இராணுவத் தளபதியாக தொடருவார் என்று வாக்குகளுக்காக அவர் வாக்குறுதியைக் கொடுத்தாலும், அதனைச் செயற்படுத்துவது இலகுவானதாக இருக்காது.

இன்னொரு பக்கத்தில், அமெரிக்காவும், ஐ.நாவும் கொடுக்கும் அழுத்தங்களை சஜித் பிரேமதாச எந்தளவுக்கு தாங்கிக் கொள்ளக் கூடியவராக இருப்பார் என்ற கேள்வியும் உள்ளது.

அவரது தந்தை ஆர்.பிரேமதாச இந்திய அரசாங்கத்துடன் முட்டி மோதியவர். அதனால் புதுடெல்லிக்கும், கொழும்புக்குமிடையிலான உறவுகள் பெரிதும் சீர்குலையும் நிலையும் ஏற்பட்டது.

அதுபோல, சஜித் பிரேமதாசவும், அமெரிக்கா, ஐ.நாவுடன் முட்டி மோதுகின்ற வகையில் நடந்து கொள்ளப் போகிறாரா அவ்வாறான முடிவை அவர் எடுத்தால், அது கடுமையான எதிர்விளைவுகளை அவருக்கு ஏற்படுத்தும்.

எவ்வாறாயினும், இப்போதைக்கு சஜித் பிரேமதாச கொடுத்திருக்கும் வாக்குறுதி, சவேந்திர சில்வாவுக்கு நிம்மதியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.